Print Version|Feedback
US media reports Trump preparing “preemptive strike” on North Korea
வட கொரியா மீதான "முன்கூட்டிய தாக்குதலுக்கு" ட்ரம்ப் தயாரிப்பு செய்து கொண்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவிக்கின்றன
By James Cogan
14 April 2017
வட கொரியா மற்றொரு அணுஆயுத சோதனை நடத்த இருப்பதாக அது கருதும்போது ட்ரம்ப் நிர்வாகம் "வழமையான இராணுவ ஆயுதங்களைக் கொண்டு முன்கூட்டிய தாக்குதல்" ஒன்றை நடத்த தயாராகி வருவதாக அமெரிக்காவின் NBC நியூஸ் ஏப்ரல் 13 அன்று அதன் மாலை செய்தியில் ஒரு "பிரத்யேக" செய்தியை வெளியிட்டது.
“பல மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை" NBC அதன் செய்திக்கு ஆதாரமாக மேற்கோளிட்டது.
வட கொரிய ஆட்சி, சீனா மற்றும் ரஷ்யா இரண்டினது எல்லையை ஒட்டியுள்ள அதன் எல்லை பகுதியான Punggye-ri தளத்தில் ஓர் அணுசக்தி சோதனைக்கான தயாரிப்பில் முன்னேறிய கட்டத்தில் இருப்பதை எடுத்துக்காட்டி குற்றஞ்சாட்டும் செயற்கைகோள் படங்களை அந்த அமெரிக்க ஊடகம் வெளியிட்டது. வட கொரிய ஆட்சி இவ்வாரயிறுதியில் அதன் ஸ்தாபக சர்வாதிகாரி Kim Il-sung இன் பிறந்தநாளை மிகப்பெரும் நிகழ்வுகளுடன் கொண்டாடி வருகிறது. அதுபோன்ற கடந்த கால நிகழ்வுகள், நீண்ட தூர ஏவுகணை பரிசோதனைகள் அல்லது ஓர் அணுசக்தி வெடிப்பைக் கொண்டிருந்தன.
ஆப்கானிஸ்தானில் ஒரு தலைமறைவு வலையமைப்பு என்று கூறப்படும் ஒன்றின் மீது நேற்று வானிலிருந்து பாரிய வெடிமருந்து குண்டு வீசப்பட்டமை (Massive Ordnance Air Blast – MOAB) வெறுமனே அந்த குண்டின் தாக்கம் குறித்து சோதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டதல்ல, மாறாக பதுங்குக்குழி அமைப்புகளைத் தாக்க அமெரிக்க இராணுவம் அணுஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் ஆகும்.
MOAB வீசப்பட்ட பின்னர் வியாழனன்று ட்ரம்ப் குறிப்பிடுகையில், “இது வட கொரியாவுக்கு ஒரு சேதியை அனுப்பி உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. அது அவ்வாறு அனுப்பி இருந்தாலும் இல்லையென்றாலும் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது,” என்றார். வட கொரியா "ஒரு பிரச்சினை — அந்த பிரச்சினை கவனத்தில் எடுக்கப்படும்” என்றவர் அறிவித்தார்.
வட கொரியாவில் ஒரு பாரிய இராணுவ தாக்குதல் நடத்தி, பின்னர் அந்த நடவடிக்கை ஏறத்தாழ நிச்சயமாக தூண்டிவிடக்கூடிய முழு அளவிலான போரை நடத்த அமெரிக்க இராணுவம் அதற்கு அவசியமான சகல படைகளையும் நிலைநிறுத்தி உள்ளது.
நூறாயிரக் கணக்கான தென் கொரிய துருப்புகள் மற்றும் சுமார் 30,000 அமெரிக்கர்களை தயார் செய்வதற்கு வருடாந்தர Foal Eagle பயிற்சிகள் மூடுமறைப்பாக பயன்படுத்தப்பட்டு, அவர்கள் உயர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் உள்ள அமெரிக்க பிரிவுகளுக்கு மத்தியில் 2011 இல் ஒசாமா பின் லாடனை கொன்ற உயரடுக்கு கொலைப்படையும் உள்ளது. வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜொங்-உன் மற்றும் ஏனைய மூத்த ஆட்சி பிரமுகர்களை படுகொலை செய்வதற்கான "இரகசிய கொலை" வேட்டைகள் அமெரிக்க இராணுவ உத்தியோகபூர்வ திட்டமிடலின் பாகமாக உள்ளன.
கடற்படை சிறுபோர்க்கப்பல்களும் மற்றும் எண்ணிக்கையில் தெரியாத அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களும் ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு சிரிய விமானத் தளத்தை தாக்க பயன்படுத்தப்பட்ட அதே டோமாஹாக் எனும் போர்கப்பல் ஏவுகணைகளைக் கொண்டு ஆயுதமயப்படுத்தப்பட்டு, கொரிய கடல்களில் வலம் வருகின்றன. விமானந்தாங்கி போர்க்கப்பல் கார்ல் வின்சன் மற்றும் அதன் தாக்கும் குழு ஆகியவை அவற்றுடன் இணைய அனுப்பப்பட்டுள்ளன. டஜன் கணக்கான அமெரிக்க போர் விமானங்கள் ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் விமானத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டு தாக்கும் B-1 வகை போர் விமானங்கள் பெப்ரவரியில் சத்தமில்லாமல் வடக்கு ஆஸ்திரேலியாவுக்கு நகர்த்தப்பட்டிருந்தன, அங்கிருந்து அவற்றை விரைவாக அந்த தீபகற்பத்திற்கு நகர்த்திக் கொள்ள முடியும்.
தென் கொரியாவைப் போலவே, ஏனைய அமெரிக்க கூட்டாளிகளும் போர் தயாரிப்புகளில் இணைந்துள்ளன. ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அரசாங்கம் கார்ல் வின்சன் தாக்கும் குழுவுடன் இணையுமாறு பல சிறு போர்க்கப்பல்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டோக்கியோ "கூட்டு தற்காப்பு" என்ற சாக்குபோக்கை பயன்படுத்தி வருகிறது, ஆக்ரோஷ இராணுவ நடவடிக்கைகள் மீதான அந்நாட்டின் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அரசியலமைப்பு தடைகளைக் கடந்து வர அபே இந்த கருத்துருவை தான் 2015 இல் ஜப்பானிய நாடாளுமன்றத்தில் நகர்த்தினார்.
மத்திய ஆஸ்திரேலியாவின் Pine Gap தளத்தில் அமைக்கப்பட்டுள்ள முக்கிய அமெரிக்க-ஆஸ்திரேலிய செயற்கைகோள் மற்றும் தொலைதொடர்பு இடைமறிப்பான்கள், அமெரிக்க தாக்குதல்களுக்கு சாத்தியமான இலக்கு பட்டியலை அடையாளங்கண்டு பட்டியலிட வட கொரியா மீது ஒருங்குவிந்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் தொடங்கியதில் இருந்து குறைந்தபட்சம் ஆஸ்திரேலிய போர்க்கப்பல் ஒன்றாவது ஆசியாவில் வழமையான நடவடிக்கைகள் என்ற போலிக்காரணத்தில் அனுப்பட்டுள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, தென் கொரியா, ஜப்பான், குவாம் அல்லது ஏனைய இடங்கள் மீது வட கொரியா அணுஆயுத ஏவுகணைகளை செலுத்தும் சம்பவத்தில், அமெரிக்கா அவற்றை சுட்டு வீழ்த்த கடந்த மாதம் தென் கொரியாவில் நிறுவப்பட்ட Terminal High Altitude Area Defense (THAAD) எனும் அமைப்பைச் சார்ந்துள்ளது. ஒருவேளை வட கொரியா அணு ஆயுதங்களைக் கொண்டு பதிலடி கொடுக்காவிட்டாலோ அல்லது கொடுக்க முடியாவிட்டாலோ கூட, 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தென் கொரிய தலைநகரம் சியோல் 10,000 என மதிப்பிடப்படும் வட கொரிய வெடிகுண்டுகளின் வீச்செல்லைக்குள் உள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 25 ஆண்டுகால தொடர்ச்சியான போர் மற்றும் சதிக்குப் பின்னர், கடந்த வார சம்பவங்கள் கேள்விக்கிடமின்றி பண்புரீதியில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. வாஷிங்டன் துரிதமாக ரஷ்யாவுடன் பதட்டங்களை அதிகரித்து, சிரியாவில் இன்னும் கூடுதலாக தாக்குதல்களுக்கு அச்சுறுத்துகின்ற நிலையில், அது வட கிழக்கு ஆசியாவில் செயலூக்கத்துடன் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது, இது சீனாவுடன் ஒரு நேரடியான மோதலில் போய் முடியக்கூடியதாகும். 1950-53 கொரிய போர் காலத்தில் இருந்து, பெய்ஜிங் அதன் வடக்கில் உள்ள ஸ்ராலினிச அரசை அதன் சொந்த எல்லைகளுக்கும் தெற்கில் உள்ள அமெரிக்க படைகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய இடைத்தடை பகுதியாக காண்கிறது.
ஆசியாவில் சீனா ஒரு போட்டி மூலோபாய மற்றும் பொருளாதார அதிகார மையமாக மாறுவதைத் தடுப்பதே அமெரிக்க ஆளும் உயரடுக்கின் உறுதியான தீர்மானமே வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவுக்குப் பின்னால் உள்ள நிஜமான உந்துதல் என்பது சீன ஆட்சிக்கு நன்றாகவே தெரியும்.
வட கொரியா மீதான சாத்தியமான அமெரிக்க தாக்குதலுக்கு சீனாவின் விடையிறுப்பு, இந்த நிலைமையில் மிகவும் அனுமானிக்கவியலாத அம்சங்களில் ஒன்றாகும்.
Global Times மற்றும் People’s Daily போன்ற சீன அரசுக்கு சொந்தமான பத்திரிகைகளது தலையங்கங்களும் கருத்துரைகளும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன இராணுவம், குறைந்தபட்சம், வட கொரியாவிற்குள் அவற்றின் சொந்த தலையீட்டை பரிசீலித்து வருவதாக குறிப்பிடுகின்றன. ஏப்ரல் 10 இல் வெளியான Global Times தலையங்கம் ஒன்று, குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ், “மக்கள் விடுதலை படை (PLA) DPRK [வட கொரிய] அணுசக்தி ஆலைகள் மீது அதன் சொந்த தாக்குதல்களைத் தொடங்கும்,” என்று குறிப்பிட்டது.
ஏப்ரல் 13 இல் வெளியான Global Times இன் மற்றொரு தலையங்கம், வட கொரியா அதன் அணுஆயுத திட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தியது. அது குறிப்பிட்டது: “DPRK மீது அமெரிக்கா இராணுவ தாக்குதல்களை தொடங்கவில்லை என்றாலும், நீண்டகால தடையாணைகளுக்கு DPRK ஆல் தாக்குபிடித்து இருக்க முடியாது. DPRK ஏற்கனவே உலகின் மிகவும் தனிமைப்பட்ட நாடாக மாறி உள்ளது மற்றும் ஏறத்தாழ 'முழுமையாக முற்றுகையிடப்பட்டுள்ளது.' நவீன நாடுகளில் எதுவொன்றும் இவ்விதத்தில் நீடித்திருக்க முடியாது.” வட கொரியாவிற்கு அவசியமான சகல பாதுகாப்பையும் சீனாவினால் வழங்க முடியும் என்றது அறிவித்தது.
வட கொரியாவின் ஒருசில ஏற்றுமதிகளில் ஒன்றும் மற்றும் வெளிநாட்டு செலாவணிக்கான ஆதாரங்களில் ஒன்றுமான அதன் நிலக்கரி கொள்முதல்கள் அனைத்தையும் இரத்து செய்து, பெய்ஜிங் பியொங்யாங் மீது பொருளாதார அழுத்தத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது. சீன துறைமுகங்களில் இருந்து வட கொரிய கப்பல்கள் இந்த வாரம் திருப்பி அனுப்பப்பட்டன.
வட கொரிய எல்லையில் சுமார் 150,000 சீன துருப்புகள் திரட்டப்பட்டிருப்பதாக வந்த செய்திகளை சீன அரசாங்கம் "கட்டுக்கதைகள்" என்று உதறிவிட்ட போதினும், அதுபோன்ற வாதங்கள் தொடர்ந்து கசிந்து கொண்டிருக்கின்றன.
நிச்சயமாக இருப்பது என்னவென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் நலிந்து வரும் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பேணும் ஈவிரக்கமற்ற மற்றும் முன்பினும் அதிக பொறுப்பற்ற முயற்சிகளின் காரணமாக, பத்து மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அபாயத்தில் உள்ளது.