Print Version|Feedback
Mélenchon refuses to take a position in French presidential runoff
பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க மெலோன்சோன் மறுக்கிறார்
By Alex Lantier
29 April 2017
அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் (France insoumise - FI) தலைவரும் முதல் சுற்றில் தோல்வியடைந்த ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளருமான ஜோன் லூக் மெலோன்சோன் வெள்ளிக்கிழமையன்று அவரது வலைப் பதிவில் பதிவிட்டிருந்த ஒரு 30 நிமிட காணொளியில், நவ-பாசிச வேட்பாளரான மரின் லு பென்னுக்கும் முன்னாள் வங்கியாளரான இம்மானுவல் மக்ரோனுக்கும் இடையில் மே 7 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதி பதவிக்கான மோதலில் தான் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கப்போவதில்லை என முடிவெடுத்திருந்தார்.
இது கோழைத்தனமான விதத்தில் அரசியல்பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாகும். மெலோன்சோன் கிட்டத்தட்ட 20 சதவீத வாக்குகளை வென்றிருந்தார் என்பதுடன் மார்சைய், தூலுஸ், லீல் மற்றும் பாரிஸின் தொழிலாள வர்க்க வடக்கு புறநகர்ப் பகுதிகள் உள்ளிட்டவற்றில் அவர் வெற்றி கண்டிருந்தார். ஒரு நவ-பாசிஸ்டுக்கும் அவசரகாலநிலை, ஆழமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கட்டாய இராணுவ சேவைக்கு மீண்டும் திரும்புதல் ஆகியவற்றை ஆதரிக்கின்ற இப்போதைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் ஒரு முன்னாள் அமைச்சருக்கும் இடையிலான ஒரு தேர்தலின் முட்டுச்சந்து தன்மையை எதிர்த்து பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்த நிலையில் அவர் நேற்று பேசினார்.
இந்த நிலைமைகளின் கீழ், இந்தப் போட்டியில் எந்த பிற்போக்கு வேட்பாளர் ஜெயித்தாலும் அவருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் எழவிருக்கும் வெடிப்புமிக்க அரசியல் எதிர்ப்பையும் சமூக கோபத்தையும் அணிதிரட்டும் பொருட்டு இத்தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு PES (Parti de l’égalité socialiste) அழைப்பு விடுத்துள்ளது.
ஆயினும் மே 7 வாக்களிப்பில் தான் பங்குபெறவிருப்பதை தெளிவுபடுத்திய மெலோன்சோன், அதேநேரத்தில், தன்னுடைய முடிவால் FI இயக்கத்தின் இணைய அங்கத்தினர்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணரக்கூடாது என்பதற்காக, தனது வாக்கு யாருக்கு என்பதை இரகசியமாக வைத்திருக்கப் போவதாக வலியுறுத்தினார். அவர் லு பென்னுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்பதை மட்டும் சுட்டிக் காட்டினார்.
“நான் வாக்களிக்கப் போகிறேன்” என்ற அவர் தொடர்ந்தார்: “ஆனால் நான் யாருக்கு வாக்களிக்கப் போகிறேன் என்பதை உங்களிடம் சொல்லப் போவதில்லை. நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைக் கண்டுகொள்ள நீங்கள் மாபெரும் அறிவாளியாக இருக்க அவசியமில்லை. ஆனாலும் நான் ஏன் உங்களிடம் சொல்லக் கூடாது? அப்போது தான் நீங்கள் ஒன்றாகவே இருக்க முடியும்... அப்போது தான் நீங்கள் என்ன முடிவு எடுக்கின்ற போதும், எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர் என்ற விதத்தில் சவுகரியமாக உணர முடியும், உங்களது வாக்கை நினைத்து பெருமை கொள்ள முடியும், தனது வேட்பாளரால் வஞ்சிக்கப்படவில்லை என்ற உணர்வைப் பெற முடியும்.”
மக்ரோனைப் போலவே முன்னாளில் PS இன் அமைச்சராக இருந்திருந்தவரான மெலோன்சோன், மேலும் கூறுகையில், FI அங்கத்தவர்களில் நீண்டகால அரசியல் கூட்டாளிகள் இருக்கின்றனர், தான் செய்யவிருப்பதை அவர்களிடம் சொல்லியிருக்க முடியும் என்றார். ஆனாலும் கூட, FI இன் வாக்காளர்கள் மக்ரோனுக்கு வாக்களிக்க ஆதரவளிப்பவர்களாகவும் மக்ரோன் லு பென் இருவருக்குமே எதிரான சக்திகளாகவும் பிளவுபட்டிருப்பதால், தனது இயக்கத்தில் பிளவு ஏற்படாமல் ஒரு முடிவை தன்னால் எடுக்க முடியவில்லை என்று மெலோன்சோன் தெரிவித்தார்.
அவர் அறிவித்தார், “ஒருவேளை நாம் பத்து வருடங்கள் அரசியலில் ஒன்றாகச் செலவிட்டிருந்தோமாயின், 15 வருடங்கள் இயக்கத்தில் ஒன்றாகச் செலவிட்டிருந்தோமாயின், அப்போது ஒருவேளை ‘நண்பர்களே, இதைத் தான் நான் செய்யப் போகிறேன்’ என்று நான் சொல்லியிருக்கலாம், உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து உங்களிடம் கூற முடியுமளவுக்கு, ஏதோவொரு விதத்தில், நாம் ஒருவருக்கொருவர் நெருக்கமானவராய் இருந்திருப்போம், ஆனால் இப்போது நான் அதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால், நான் உங்களைப் பிளவுபடுத்திக் கொண்டிருப்பேன்.”
மெலோன்சோனுக்கு எந்த சுதந்திரமான அரசியல் நிலைப்பாடும் இல்லை என்பதே மெலோன்சோனின் கருத்துகளில் இருந்து தவிர்க்கமுடியாமல் எழுவதாக இருக்கிறது.
வாக்குச் சாவடியில் அவரது நோக்கம் மக்ரோனுக்கு வாக்களிப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஒரு வெற்று வாக்கை அளிப்பதாக இருந்தாலும் சரி, அவரது மவுனம் திவாலடைந்ததாகும். அவர் PS இன் தலைமையில் இருக்கக் கூடிய தனது முன்னாள் தோழர்களைப் போல, மக்ரோனுக்கு ஆதரவளிக்கப் போகிறார் என்றால், சுதந்திர சந்தைக் கொள்கைகளையும் இராணுவவாதத்தையும் எதிர்க்கவிருப்பதாக அவர் கொடுத்த பிரச்சார வாக்குறுதிகள் மற்ற பல அரசியல் பொய்களைப் போலவே அம்பலப்படுவதாய் இருக்கும். இல்லாமல் உண்மையில், லு பென் மற்றும் மக்ரோன் இருவருக்குமே எதிரானவராக தன்னைக் கருதிக் கொண்டு ஒரு வெற்று வாக்கை ஓசையின்றி வாக்களித்து வருவதற்கு நோக்கம் கொண்டுள்ளாரென்றால், இது அரசியல்ரீதியான கையாலாகாத்தனத்தின் ஒரு ஒப்புதலாகும்.
தேர்தல் புறக்கணிப்புக்கும் இரண்டு வேட்பாளர்களையும் எதிர்ப்பதற்கும் PES விடுத்திருக்கும் அழைப்பின் பொருள், எந்த வேட்பாளர் ஜெயித்தாலும் அவருக்கெதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெகுஜன அரசியல் இயக்கத்தை ஒழுங்கமைப்பதற்காகப் போராடுவது என்பதாகும். சிக்கன நடவடிக்கைக்கு தொழிலாள வர்க்கத்தில் இருக்கும் ஆழமான சமூக எதிர்ப்புக்கு விண்ணப்பம் செய்வது, PS இன் தொழிலாளர் சட்டத்தை எதிர்த்த மற்றும் இப்போது லு பென் மற்றும் மக்ரோனுக்கு இடையிலான தெரிவுக்கு எதிராய் நிற்கின்ற மக்களின் 70 சதவீத பெரும்பான்மையினரை நோக்கித் திரும்புவது என்பதே இதன் பொருளாகும். மக்ரோனுக்கு இடதுசாரிகளிடம் இருந்து வருகின்ற எதிர்ப்பை, அது நவ-பாசிஸ்டுகளுடன் தொடர்புடையது எனக் கூறி மதிப்பிழக்கச் செய்ய முனைகின்ற ஊடகங்களிலான முடிவற்ற பொய்பித்தலாட்டங்களையும் அரசியல் அச்சுறுத்தல்களையும் நிராகரித்து, அம்பலப்படுத்துவது என்பது இதன் பொருளாகும்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த நிலைப்பாட்டிற்காக PES போராடுகிறது, அத்தகையதொரு தாக்குதலானது பிரான்சிலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கத்தில் தூண்டக் கூடிய இரக்கமற்ற எதிர்த்தாக்குதலுக்கு எதிரானதொரு போராட்டத்திற்கு ஒரு புரட்சிகர, சோசலிச, சர்வதேசிய முன்னோக்கு அவசியமாக இருக்கிறது என அது விளக்குகிறது.
மறுபக்கத்தில், மெலோன்சோனின் ஆலோசனைகளோ தீர்க்கவியலாத முரண்பாடுகள் நிரம்பியதாக இருக்கின்றன. மக்ரோனின் பிரச்சாரத்தின் மீது ஒரு நிலைப்பாடு எடுக்கும் விடயத்திலேயே கூட FI ஆழமாய் பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டு விட்ட பின்னர், அவர் மறுபக்கமாய் திரும்பி இது ஒரு “ஸ்திரமான மற்றும் ஐக்கியமான சக்தி” என்றும் ஜூன் சட்டமன்றத் தேர்தலில் நல்ல நிலையைப் பிடிக்கும் என்றும் பிரான்சில் ஒரு கலங்கரை விளக்கமாக சேவை செய்யும் என்றும் கூறிக் கொண்டார்.
“நாம் இப்போது அதீத பதட்ட நிலைமையில் இருக்கிறோம், வன்முறை நம் அநேகர் மீது மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றார் அவர். “இந்த வன்முறையில் இருந்து, ஒரு ஸ்திர நிலை தோன்ற முடியாது, ஏனென்றால் இரண்டாம் சுற்றின் கதாநாயகர்களது தன்மையிலேயே அத்தகைய ஸ்திரத்தன்மை எனும் அம்சம் அடிபட்டுப் போகிறது: ஒருவர் அதீத நிதிப்பிரிவு, இன்னொருவர் அதீத வலது.”
ஆகவே "FI நமது நாட்டுக்கு ஒரு செல்வமாகும், ஏனென்றால் இரண்டாம் சுற்றில் யார் வென்றாலுமே, அனைவரையும் பிளவுபடுத்தி இந்த நாட்டில் நம்பமுடியாத அளவுக்கான குழப்பநிலையை உருவாக்கவிருக்கும் வேலைத்திட்டத்தை கொண்ட ஒருவரையே நாம் கையாளவிருக்கிறோம்” என்று அவர் அறிவித்தார்.
முன்னாளில் PS இன் ஒரு அமைச்சராக இருந்தவரும் 1980களில் PS ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் ஒரு உயர்நிலை உதவியாளராக இருந்த காலம் தொடங்கி உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் விரிவான தொடர்புகள் கொண்டவராக இருந்து வந்திருப்பவருமான மெலோன்சோனுக்கு, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் வெடிப்பான சமூக நிலைமை இருப்பது நன்கு தெரியும். எப்படியிருந்தாலும், அவர் ஆலோசனையளிப்பது, போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு இடது-சாரிக் கொள்கையை அல்ல. மாறாக, பிரான்சின் சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதிப் பதவியை எந்த பிற்போக்குவாதி கைப்பற்றி விட்டாலும், அதனை, UF ம் பகுதியாக இருக்கக் கூடிய நாடாளுமன்றக் கலவைகளைக் கொண்டு ஏதோவொரு வழியில் சமாளிக்கலாம் என்பதான மேலோட்டமான, நப்பாசையான நம்பிக்கைகளையே அவர் முன்தள்ளிக் கொண்டிருக்கிறார்.
மக்ரோன் மற்றும் லு பென் இருவருக்குமான ஒரு இடது-சாரி எதிர்ப்பைக் கட்டியெழுப்ப முனையும் எவரொருவரும், மக்ரோனின் ஜனாதிபதி பதவி உரிமைகோரல் மீது ஒரு நிலைப்பாட்டைக் கூட எடுக்க முடியாத அளவுக்கு மிகவும் பிளவுபட்டதாகவும், உத்தியோகபூர்வ பொதுக் கருத்தை நம்பி இருக்கின்ற ஒரு அமைப்புக்குள் சிக்குப்பட்டவராக இருந்தாக வேண்டும் என்று சொல்வதற்கு ஒப்பானதாகவே அவரது ஆலோசனைமொழிவு அமைந்திருக்கிறது. இந்த கையாலாகாத்தனத்தின் காட்சிவெளிப்பாடானது, லு பென்னின் ஜனரஞ்சகவாத வாய்வீச்சுக்கு ஒரு திறப்பை மட்டுமே வழங்கும், மே 7 போட்டியில் FI வாக்காளர்கள் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று கூறி நேற்றே அவர் தனது சொந்த காணொளி விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார்.
மக்ரோன் குறித்து திட்டமிட்டுக் குழப்பும் தனது மூலோபாயத்தை, FI மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பொதுவான நிலைப்பாடாக வருணித்த மெலோன்சோன், CGT, FO மற்றும் ஆதரவு தொழிற் சங்கங்களும் இதே அணுகுமுறையையே கொண்டிருப்பதாக குறிப்பிட்டு நிறைவுசெய்தார். ஜனாதிபதிப் போட்டியில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கு FI இன் இணைய அங்கத்தவர்களது கலந்தாலோசனை வாக்களிப்பு குறித்து விவாதித்த அவர், இந்த வாக்களிப்பில் எந்த உண்மையான முக்கியத்துவமும் இல்லை என்பதை தெளிவாக்குவதற்கே அதனைச் செய்திருந்தார்.
“கலந்தாலோசனை வாக்கு, ஒரு முடிவின் கனத்தைக் கொண்டிருக்காது” என்றார் அவர். “நாங்கள் ஒரு சித்திரத்தைக் கொடுப்போம், FI அங்கத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கூறுவோம். உங்களில் பலரும் வாக்களிக்கப் போவீர்கள் என்று நம்புகிறேன். FI அங்கத்தவர்கள் சிந்தனை இதோ என்று கூறுவோம். பெரும்பான்மை ஒன்று இருக்கிறது, சிறுபான்மை ஒன்று இருக்கிறது, ஒன்றை இன்னொன்று விஞ்சி விட்டது என்றெல்லாம் நாங்கள் சொல்ல மாட்டோம், ஏனென்றால் நாங்கள் ஒரு கட்சி கிடையாது.”
இதை எளிய மொழியில் கூறுவதானால், FI அங்கத்தவர்கள் தங்கள் எண்ணம் போல வாக்களிக்கலாம், ஆனால் மெலோன்சோனும் FI இன் தலைமையும் எந்த ஒரு போராட்டத்தையும் கையிலெடுக்கப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் இருக்கிறார்கள் என்ற பொருளே கிடைக்கும். சோசலிசத்தின், தொழிலாள வர்க்கத்தினுடைய ஒரு அரசியல் சுயாதீனமான பாத்திரத்தின், இடதுகளின், மற்றும் அரசியல் கட்சிகளின் சகாப்தம் முடிந்து விட்டது என்பதாக மெலோன்சோன் தனது மக்களின் சகாப்தம் என்ற புத்தகத்தில் முன்னெடுத்த பின்நவீனத்துவ கருத்துக்களது பிற்போக்கான தாக்கங்களையே இத்தகைய கருத்துக்கள் சுட்டிக்காடுவதாய் இருக்கின்றன. PES எச்சரித்திருப்பதைப் போல, இந்த கருத்துக்கள் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு மெலோன்சோன் காட்டுகின்ற அடிப்படைக் குரோதத்தையே சுட்டிக்காட்டுகின்றன.
இடது நோக்கித் திரும்புகின்ற தொழிலாளர்களும் மாணவர்களும், ஒரு கட்டுகோப்பான முன்னணிப் படைக் கட்சியாக அரசியல்ரீதியாக ஒழுங்கமைக்கப்படுவதற்குப் பதிலாக, பயிற்சிபெற்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளின் தலைமையிலான தளர்வான, பாதி-அராஜகவாத மற்றும் கையாலாகாத குழுவாக்கங்களுக்குள் சிக்கவைக்கப்பட இருக்கின்றனர். இந்த முன்னோக்கு சோசலிசப் போராட்டத்திற்கு முன்னோக்கிய ஒரு பாதையைத் திறப்பதில்லை, மாறாக அதனை கழுத்துநெரிப்பதையே செய்கிறது என்பதைத் தான் இன்று மெலோன்சோனின் அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மக்ரோனுக்கும் லு பென்னுக்கும் எதிராகப் போராடுவதற்கு ஒரு வழியை எதிர்நோக்கியிருக்கும் பரந்த மக்களைப் பொறுத்தவரை மெலோன்சோன் ஒரு மாற்றீடு அல்ல, மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவாகவும் பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் ட்ரொட்ஸ்கிச முன்னணிப் படையாகவும் சோசலிச சமத்துவக் கட்சியை (PES) கட்டியெழுப்புவதே ஒரே மாற்றீடாகும்.