Print Version|Feedback
French presidential candidate Mélenchon calls for bringing back the draft
பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் மெலோன்சோன் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர அழைப்பு விடுக்கிறார்
By Kumaran Ira
3 April 2017
இப்போது கட்டுக்கடங்கா பிரான்ஸ் (France insoumise) கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் இடது-முன்னணியின் முன்னாள் தலைவரான ஜோன்-லூக் மெலோன்சோன் தனது இராணுவ வேலைத்திட்டத்தை வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டார். ஒரு தீவிரப்பட்ட ஜனரஞ்சகவாதியாக தன்னைக் காட்டிக் கொள்கின்ற மெலோன்சோன், வெளிநாடுகளிலான முக்கிய போர்களுக்கு பிரெஞ்சு இராணுவத்தை தயாரிப்பு செய்யும் பொருட்டும் அவசரகால நிலையின் பொருட்சூழலில் பிரான்சிலான போலிஸ் தலையீட்டை தீவிரப்படுத்துவதற்கும் கட்டாய இராணுவச் சேவை திரும்பவும் கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.
பிரான்சின் ஆளும் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பெரும் பிரிவுகளால் ஆதரிக்கப்படும் வேட்பாளரான இமானுவல் மக்ரோன், வரவிருக்கும் பெரும்போர்களுக்கு பிரான்சின் இராணுவத்தை தயார்படுத்தும் பொருட்டு பிரான்சில் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர இருப்பதாக அறிவித்து ஒரு வாரம் கூட முடிந்திராத நிலையில் மெலோன்சோனின் அறிவிப்பு வந்திருக்கிறது. கிரீசின் சிரிசா (“தீவிர இடதுகளின் கூட்டணி”) அரசாங்கத்தின் ஒரு கூட்டாளியான மெலோன்சோன் 18 வயது முதல் 25 வயது வரையான அத்தனை ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் 9-12 மாத கால கட்டாய இராணுவ சேவையை திணிக்க விரும்புகிறார்.
ஆரம்பத்தில் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) ஆல் ஆலோசனையளிக்கப்பட்ட ஒரு அலகான “தேசியக் காவற்படை” (Garde Nationale) ஒன்றில் அவர்களைச் சேர்க்க அவர் ஆலோசனை வைக்கிறார்: “ஆகவே ஒரு குடிமக்கள் காவற்படைக்கான அடித்தளமாய் இருக்கக் கூடிய ஒரு கடமைப்பாட்டு தேசிய சேவை ஒன்றை அமைப்பதற்கு நாங்கள் ஆலோசனை வைக்கிறோம். 1997 இல் கட்டாய இராணுவப் பயிற்சி நிறுத்தப்பட்டதால் இராணுவத்திற்கும் தேசத்திற்குமான இணைப்பு அரிக்கப்பட்டதை கையாளுவதற்கு, நாம் தேசத்திற்கு அதன் சொந்த பாதுகாப்புக் கருவிகள் மீதான இறையாண்மையை திரும்பக் கொடுத்தாக வேண்டும்.”
இராணுவ செலவினத்தில் பாரிய அதிகரிப்புகளை தான் ஏற்றுக்கொள்ளவிருப்பதை மெலோன்சோன் சமிக்கை செய்தார்: “மூலோபாயம் தான் உத்தரவிடுகிறதே தவிர, வரவு-செலவு திட்டம் அல்ல”. இது சமூகச் செலவினம் வெட்டப்படுதல் சூழ்ந்ததாய் இருக்கும்.
ஒரு மாத இராணுவ-சேவைக்கு மக்ரோன் வைத்திருக்கும் ஆலோசனையை வலதின் பக்கமாய் இருந்து மெலோன்சோன் விமர்சனமும் செய்தார்: “பிரான்சில் இருக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் ஒரு மாதத்திற்கு இராணுவப் பயிற்சி அளிப்பது என்ற யோசனையை என்னால் முக்கியத்துவமானதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அது கட்டாய இராணுவ சேவையாக இருக்காது, வெறும் விடுமுறைக்கழிப்பாகவே இருக்கும்.”
இத்தகைய கருத்துக்கள் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ முழுவீச்சிலான போருக்கு அச்சுறுத்துகின்ற நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தின் முன்காணாத அளவுக்கான ஒரு உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கு மத்தியில், மெலோன்சோன், இராணுவத்தின் கரங்களில் பாரிய அதிகாரங்களைக் கொடுப்பதற்கும் அதனை மில்லியன் கணக்கானோரைக் கொண்ட ஒரு படையாக விரிவுபடுத்துவதற்கும் ஆலோசனை செய்கிறார்.
ஐரோப்பாவெங்கிலும் போலி-இடது கட்சிகளால், குறிப்பாக மெலோன்சோனின் கிரேக்கக் கூட்டாளியான சிரிசாவின் (“தீவிர இடதுகளின் கூட்டணி”) சிக்கன-நடவடிக்கை அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படுகின்ற வலது நோக்கி தீவிரமாக திரும்பும் முனைப்பில் இறங்கியிருக்கும் மெலோன்சோனுக்கும் தொழிலாளர்களும் இடையில் ஒரு வர்க்கப் பிளவு பிரித்து நிற்கிறது. 2014 இல் வெளியான மக்களின் சகாப்தம் என்ற அவரது புத்தகத்தில், மெலோன்சோன், சோசலிசம், தொழிலாள வர்க்கம், இடதுகள் ஆகியவை முடிந்து போனதாகப் பிரகடனம் செய்ததோடு அதற்குப் பதிலாய் தேசியவாத ஜனரஞ்சகவாதத்திற்கு அழைப்புவிடுத்தார். சோசலிசத்துக்கும் வர்க்கப் போராட்டத்துக்கும் குரோதமான நடுத்தர வர்க்கத்தின் வசதியான மற்றும் பழமைவாத அடுக்குகளுக்காக அவர் பேசுகிறார்.
2002 இல், பிரான்சின் ஜனாதிபதி வேட்பாளருக்கான இறுதிச்சுற்றுக்கு நவ-பாசிச வேட்பாளரான ஜோன்- மரி லு பென்னுக்கும் மற்றும் பழமைவாத வேட்பாளரான ஜாக் சிராக்குக்கும் இடையில் நடைபெற வாய்ப்பு எழுந்ததுக்கு எதிராக வெடித்த பாரிய ஆர்பாட்டங்களை கண்டும், எல்லாவற்றும் மேல் ஈராக் மீதான அமெரிக்காவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு முன்பாக எழுந்த போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கண்டும் அவை மிரண்டு போயின. அப்போது முதலாகவே, அவை போருக்கோ அல்லது FN போன்ற சக்திகளின் வலது-சாரி ஜனரஞ்சகவாதத்திற்கோ ஆன அத்தனை எதிர்ப்புக்களையும் கைவிட்டன. உண்மையில், அவை PS மற்றும் லு பென்னின் தேசிய முன்னணியின் (FN) போலிஸ்-அரசு கொள்கைகளுக்கு, இன்னும் விரிந்த அளவில் சொன்னால், சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகிய கொள்கைகளுக்கு தங்களை தகவமைத்துக் கொண்டன.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், PS ஒன்றரை ஆண்டு கால அவசரகால நிலையை திணித்திருக்கின்ற அதேநேரத்தில், FN இரண்டாவது சுற்றுக்கு போட்டியிடுகின்ற நிலையிலோ அல்லது வெற்றி காண்கிற நிலையிலோ கூட இருக்கிறது. இந்த பிற்போக்கு உள்ளடக்கத்தில், மெலோன்சோனின் பிற்போக்குத்தனமான ஜனரஞ்சகவாத பிரச்சாரமானது, தொழிலாளர்கள் மத்தியிலான இடது-சாரி கோரிக்கைகளை தடுப்பதற்கும் சிதறடிப்பதற்குமான ஒரு பொறிமுறையாக சேவைசெய்வதோடு ஐரோப்பாவில் ஒரு முழு-வீச்சிலான போருக்கும் தயாரிப்பு செய்கிறது.
மெலோன்சோன் கருத்துவாக்கெடுப்புகளில் மேலுயர்ந்து செல்கிறார்: முதல் சுற்றில் கிட்டத்தட்ட 15 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் அவர் இருக்கிறார், அதாவது மக்ரோன் மற்றும் FN இன் வேட்பாளரான மரின் லு பென்னுக்கு அடுத்தபடியான மூன்றாவது இடத்தை வலது-சாரி வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோனை முந்தி பிடிக்கும் இடத்திலுள்ளார். PS இன் ஜனாதிபதி வேட்பாளரான பெனுவா அமோனை விடவும் 4.5 சதவீதம் முன்னிலையான இடத்தில் மெலோன்சோன் இருக்கிறார். மெலோன்சோன் “இடதுகளின் சிந்தனைகள் மற்றும் விழுமியங்களின்” மிகச்சிறந்த பிரதிநிதியாக இருப்பார் என்ற நம்பிக்கையிலேயே மெலோன்சோனின் ஆதரவாளர்கள் அவரை ஆதரிப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
உண்மையில், மெலோன்சோன் ஒரு இராணுவவாத, தேசியவாத மற்றும் தொழிலாளர்-விரோத கொள்கைக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார். சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதான தனது தேர்தல் வாக்குறுதிகளை நெரித்து விட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட சமூக வெட்டுக்களைத் திணித்த தனது சக-சிந்தனையாளரான சிரிசா பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸை அவர் பாராட்டினார். சிரிசா அதி-வலது, வெளிநாட்டவர்வெறுப்பு சுதந்திர கிரேக்க கட்சியுடன் (Independent Greeks) கூட்டணி வைத்து கிரீசை ஆட்சிசெய்கிறது.
எல்லாவற்றுக்கும் மேல், முதலாளித்துவத்தின் திவால்நிலையும் PS இன் தோல்வியும் வெளிப்பட்ட நிலையிலிருக்கும் போதும் கூட, தொழிலாள வர்க்கத்திற்கு இடதின் பக்கமிருந்தான எந்த மாற்றும் இல்லை என மெலோன்சோன் வலியுறுத்துகிறார். 2012 தேர்தலில் இடது முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு பின்னர் ஹாலண்டை இவர் ஆதரித்தார் என்ற நிலையில், 2017 இல் “கட்சிகளுக்கு வெளியிலானவராக” “தனிப்பட்டவராக” போட்டியிடும் மெலோன்சோன் பிரெஞ்சு மக்கள் இனியும் அரசியல் கட்சிகளைக் குறித்து கேட்க விரும்பவில்லை என வலியுறுத்துகிறார்.
அதாவது, மெலோன்சோனைப் பொறுத்தவரை, FN வளர்ந்து வருகின்ற நிலையிலும் கூட -இதற்கு அவர் சுலபமாக தன்னை தகவமைத்துக் கொண்டு விட்டிருக்கிறார்- உழைக்கும் மக்களின் புறநிலை நலன்களுக்கு பொருந்தி நிற்கின்ற சமூக சமத்துவம், போருக்கான எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு ஆகிய எந்த அரசியல் வேலைத்திட்டமும் இருக்கமுடியாது.
மக்களின் சகாப்தம் என்ற புத்தகத்தில் இடது என்பது முழுமையாக இறந்துபோய்விட்டது என்கிறார் அவர்: “சமகால உலகத்தை, அதனை காரணரீதியாக ஆராய்வதன் மூலமாகவோ அல்லது அதன் களங்களின் மூலமாகவோ -அது இதுபோன்ற எதனையும் கொண்டிருப்பதாக அனுமானிக்கும் பட்சத்தில்- அதன் எந்த யதார்த்தத்தையும் புரிந்துகொள்ள முடியாது.” அவர் இங்கே PS ஏதோ ஒருவகை சோசலிசத்தை குறிப்பதாக சொல்லப்படுகின்ற மதிப்பிழந்து போன கூற்றுகளை குறிவைக்கவில்லை. மாறாக, என்ன வகையானதாய் இருந்தாலும் சரி, இடது-சாரி அரசியல் அத்தனையுமே மரண வேதனையில் இருப்பதாக அவர் கூறுகிறார்: “நோய் ஒரு முன்னேறிய கட்டத்தில் இருக்கிறது. உண்மையான இடதுகளில் இருந்து போலிகளை எவ்வாறு பிரித்தறிவது என்ற கற்றறிந்த விளக்கங்களின் மூலமாக அது குணப்படுத்தப்பட முடியாது.”
உண்மையில், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் அபாயம் அதிகரித்துச் செல்வதற்கு மத்தியில், கட்டாய இராணுவ சேவைக்கு மெலோன்சோன் அழைப்பு விடுப்பதென்பது மெலோன்சோன் பிரதிநிதித்துவம் செய்கின்ற போர்-ஆதரவு, தொழிலாளர்-விரோத போலி-இடது ஸ்தாபகத்தின் அரசியல் திவால்நிலைக்கு சாட்சியமளிக்கிறது. அவரிடம் தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கென்று ஏதுமில்லை. தொழிலாளர்கள், பிரான்சிலும் மற்றும் அத்தனை ஏகாதிபத்திய நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் போர் முனைப்புக்கு எதிரான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்துக்கு தலைமை கொடுப்பதற்கு அவசியமாக இருக்கும் அரசியல் ஒழுங்கமைப்பை தாங்களே ஏற்பாடு செய்து கொள்வதில் இருந்து அவர்களைத் தடுப்பதற்கு அவர் முனைகிறார்.
ஒரு சில வாய்வீச்சு, தேசியவாத சுலோகங்களைக் கொண்டு தனது போர்-ஆதரவுக் கொள்கைகளுக்கான “தீவிரப்பட்ட” மறைப்பை வழங்குவதற்கு மெலோன்சோன் முனைகிறார். நேட்டோவின் இராணுவக் கூட்டணியை விட்டு விலகுவதன் மூலமாக பிரான்சின் இராணுவ சுதந்திரத்தைக் கட்டிக்காக்க விரும்புவதாக அவர் இப்போது கூறி வருகிறார்: “நேட்டோவை விட்டும், இந்த இராணுவரீதியான கீழ்நோக்கிய பாதையை விட்டும் விலகுவது தான்...பாதுகாப்புத் துறையின் எதிர்காலம், தாயகத்தின் எதிர்காலம் என்பதைச் சொல்வதற்கு அடியேனைத் தவிர்த்து ஐரோப்பாவில் வேறொருவருக்கும் விருப்பமில்லாதிருக்கிறது.”
இது பிற்போக்கான பிரெஞ்சு தேசியவாதத்தை கிளறி விடுவது மட்டுமேயாகும்; அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் ரஷ்யாவுக்கு நிகரான ஒரு முழு சுயாதீனமான கொள்கையை பின்பற்றக் கூடிய அளவுக்கான பொருளாதார வளமோ இராணுவ வலிமையோ பிரான்சிடம் இல்லை. ஒரு சுயாதீனமான பிரான்ஸ்-ரஷ்யா கூட்டணியை முன்மொழியும் அவரது முந்தைய சிந்தனைவிளையாட்டுகளைப் போலவே, மெலோன்சோனின் ஆலோசனைகள் எல்லாவற்றுக்கும் மேல் தேசியவாத மனோநிலையை விசிறி விடுவதையே நோக்கமாய் கொண்டிருக்கின்றன. இவை ஸ்தூலமான எதற்கும் அவரை உறுதியளிக்க தள்ளுவதில்லை.
நேட்டோ ஆதரவுடனும் உக்ரேனின் பாசிச சக்திகளின் தலைமையிலும் கியேவில் 2014 பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர், மெலோன்சோன் சில விமர்சனங்களை செய்ததோடு சில ரஷ்ய-ஆதரவு நிலைப்பாடுகளையும் எடுத்தார். 2016 பிப்ரவரியில், பிரான்ஸ்2 தொலைக்காட்சியில், சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் பொருட்டு தலையீடு செய்ததற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அவர் பாராட்டினார். “அவர் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார்” என்று தான் கருதுவதாகக் கூறிய மெலோன்சோன் “இஸ்லாமிக் அரசை தோற்கடிக்க ஒரு சர்வதேச இராணுவக் கூட்டணி”க்கு அழைப்புவிடும் மட்டத்திற்கு சென்றார்.
இப்போது கருத்துக்கணிப்பு வாக்குகளில் அவர் வளர்ச்சி கண்டுவருகின்ற நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் மிரட்டல்களுக்கு ஆதரவளித்து ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பேரழிவுகரமான உலகப் போருக்கு முன்னேற்பாடுகளை அமைக்கின்ற மக்ரோன் போன்றோர் வரிசையில் மெலோன்சோன் தன்னை நிறுத்திக் கொள்கிறார். மாஸ்கோவில் புட்டினுடன் லு பென் சந்தித்துப் பேசியதை சமீபத்தில் கண்டனம் செய்த மெலோன்சோன் அறிவித்தார்: “புட்டினுடன் கைகுலுக்க எதிர்நோக்க என்னை ஊக்குவிக்கும் வகையில் அந்த மனிதருடன் எனக்கு நட்பும் இல்லை அல்லது பொதுவான புரிதலும் இல்லை, அவரைத் தொடும் எவரும் நம்பகத்தன்மை இழக்கும்படியாகிறது.”