Print Version|Feedback
Hollande invites Le Pen, Macron to funeral of slain Champs-Élysées officer
படுகொலையான Champs-Élysées அதிகாரியின் இறுதி ஊர்வலத்துக்கு லு பென், மக்ரோன் ஆகியோருக்கு ஹாலண்ட் அழைப்பு விடுக்கிறார்
By Alex Lantier
26 April 2017
படுகொலையான போலிஸ்காரர் Xavier Jugelé க்கு நேற்று நடந்த நினைவு ஊர்வலத்திற்கு மே 7 அன்று ஜனாதிபதி பதவிக்கான இறுதிச் சுற்றில் மோதவிருக்கும் வேட்பாளர்கள் இருவருக்கும் -நவ-பாசிச வேட்பாளரான மரின் லு பென் மற்றும் இப்போது ஹாலண்டின் சொந்த சோசலிஸ்ட் கட்சியாலும் ஆதரிக்கப்படுகின்ற இமானுவல் மக்ரோன்- பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அழைப்பு விடுத்தார். பாரிஸில் உள்ள Champs-Élysées அவென்யூ பகுதியில் இஸ்லாமிக் ஸ்டேட் (IS) அமைப்புடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவரால் ஏப்ரல் 20 அன்று Jugelé சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹாலண்டின் சமிக்கையின் முக்கியத்துவம் தெளிவுபட்டதாகும். நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் பிரான்சை ஆட்சி செய்த பாசிச சக்திகளின் வழிவந்த தேசிய முன்னணியுடன் (FN) உள்ளிட “தேசிய ஒற்றுமை”யை ஊக்குவிக்கின்ற வெளிப்பட்ட நோக்கத்துடன் அவர், ஏற்கனவே 2015 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின் இருமுறை லு பென்னை எலிசே மாளிகைக்கு அழைத்திருந்தார். குறிப்பாய் இப்போது லு பென் இரண்டாம் சுற்றை எட்டி, மே 7 அன்று அவர் ஜனாதிபதி பதவியை வெல்லக் கூடிய நிலை கூட எண்ணிப்பார்க்கத்தக்கதாக ஆகியிருக்கும் நிலையில், லு பென்னின் FNக்கான எதிர்ப்பை முறையற்றதாக்கும் தீர்மானத்துடன் ஹாலண்ட் இருக்கிறார்.
சென்ற முறை FN இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய போது -2002 இல் அப்போது PS வேட்பாளரான லியோயனல் ஜோஸ்பன் முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டு மரினின் தந்தையான ஜோன்-மரி லூ பென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார் -மில்லியன் கணக்கான மக்கள் வீதி ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். அதற்கு பதினைந்து ஆண்டுகளின் பின்னர், முதல் சுற்று முடிவுகள் ஞாயிறன்று இரவு வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில் நடந்த ஒரு பாசிச-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது போலிஸ் தாக்குதலில் இறங்கியது. இப்போது லு பென் மற்றும் மக்ரோன் இருவரையுமே குடியரசின் முறையான போட்டியாளர்களாக ஹாலண்ட் நடத்திக் கொண்டிருக்கிறார்.
“நாளை தீர்மானிக்க இருப்பவர்களாக” இரண்டு வேட்பாளர்களையும் குறிப்பிட்ட ஹாலண்ட், 2015 தொடங்கி ஹாலண்ட் திணித்த அவசரகால நிலையின் கீழ் எழுந்திருந்த பாரிய போலிஸ்-அரசு எந்திரத்தை தொடர்ந்து கட்டியெழுப்புவதற்கு லு பென் மற்றும் மக்ரோனுக்கு அழைப்பு விடுத்தார். “சக குடிமக்களை பாதுகாப்பதற்கு தவிர்க்கவியலாதவர்களாக இருக்கும் வீரர்களை எடுப்பதற்கு அவசியப்படுகின்ற நிதிநிலை ஆதாரங்களை” அவர்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், “தம்பட்டம் அடிப்பது மற்றும் திடீர் மாற்றங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் நமது முயற்சிகளில் சீர்மையும், விடாமுயற்சியும், ஒத்திசைவும் இருக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.
பாதுகாப்பு சேவைகளை வலுப்படுத்த சொல்லி ஒரு நவ-பாசிஸ்டிடம் ஹாலண்ட் விண்ணப்பம் செய்வதென்பது அரசியல்ரீதியாக ஒரு அபாயச் சங்காகும், எல்லாவற்றுக்கும் மேல் Jugelé இன் கொலையில் இந்த சேவைகளும் சம்பந்தப்பட்டிருந்தன என்பதில் ஏறக்குறைய எந்த சந்தேகமும் இல்லை. கொல்லப்பட்ட துப்பாக்கிதாரியான கரீம் செயுர்ஃபி, 2001 இல் துப்பாக்கியால் சுட்டு இரண்டு போலிஸ்காரர்களை கிட்டத்தட்ட மரணமடையும் நிலைக்கு கொண்டு சென்றதற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தவராவார், ஆனால் பின்னர் மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். போலிஸ்காரர்களை கொல்வதற்கு ஆயுதங்களை பெற முயற்சி செய்து கொண்டிருப்பதாக அவர் கூறியதை அடுத்து பிப்ரவரியில் கைது செய்யப்பட்டிருந்த அவரை, IS உடன் அவருக்கிருந்த இணையத் தொடர்புகளின் காரணத்தால் பிரான்சின் உளவுத்துறை நெருக்கமாக கண்காணிக்க தொடங்கியிருந்தது.
அத்தகையதொரு மனிதர் அளவுக்கதிகமானவகையில் சுடும் ஆயுதங்களையும் வாள் கத்திகளையும் திரட்ட முடிந்திருந்தது, அவற்றைப் பயன்படுத்தி ஒரு போலிஸ்காரரை கொலை செய்ய முடிந்திருந்தது என்ற உண்மைக்கு எந்த அப்பாவித்தனமான விளக்கமும் இருக்கவில்லை. பாதுகாப்பு சேவைகள் FNக்கு கொண்டிருக்கும் விசுவாசம் நன்கறிந்ததாகும். சிரியா மீதான அமெரிக்க தாக்குதல்களுக்குப் பின்னர் இளைஞர்கள் மத்தியில் பெருகிச் சென்ற போர்-எதிர்ப்பு மனோநிலையை அடிப்படையாக கொண்டு தேர்தலுக்கு முன்பாக நடந்த கருத்துக்கணிப்புகளில் ஜோன்-லூக் மெலென்சோனுக்கு ஆதரவு பெருகிச் சென்றது என்பதைக் கருதிப்பார்த்தால், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் விளையக் கூடிய பாதுகாப்பு வெறிக்கூச்சல் லு பென்னுக்கு சாதகமாக தேர்தலைத் திருப்பும் என்ற காரணத்தால் தான் அது அனுமதிக்கப்பட்டதா என்று ஒருவர் வினவினால் அது மிக நியாயமானதே ஆகும்.
Jugelé இன் நினைவு ஊர்வலத்தில் இருந்து நேராக TF1 தொலைக்காட்சியின் ஸ்டுடியோவுக்கு லு பென் சென்றார், அங்கு அவர் தனது பிரச்சாரம் குறித்து ஒரு நீண்ட மற்றும் மூர்க்கமான நேர்காணலை வழங்கினார். தற்காப்புவாதத்திற்கும், யூரோ நாணயமதிப்பைக் கைவிட்டு பிரெஞ்சு பிராங்கிற்குத் திரும்புவதற்கும், பிரான்சின் இராணுவ செலவினத்தை இரட்டிப்பாக்குவதற்கும் அவர் அழைப்பு விடுத்தார்.இராணுவச் செலவினத்தில் அத்தகையதொரு பாரிய அதிகரிப்புக்கு நிதியாதாரம் திரட்ட வேண்டுமாயின், அதற்கு சமூக வேலைத்திட்டங்களின் மீது நாசகரமான தாக்குதல்கள் தொடுக்க அவசியமாகியிருக்கும். இராணுவம் “எலும்பும் தோலுமாய் ஆக்கப்பட்டிருக்கிறது... அவர்கள் காலாவதியாகி போன சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர், சில சமயங்களில் அவர்கள் சாதனங்களுக்கு தங்கள் சொந்த தொகை செலுத்தும் நிலை இருக்கிறது; இது கண்ணியமற்ற செயல் என்பதோடு பிரெஞ்சு மக்களின் பாதுகாப்பிற்கும் நமது இராணுவப் படைகளுக்கும் மிக அபாயகரமானதாகும்” என்று லு பென் கூறினார். அவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அடுத்த ஆண்டுக்குள்ளாக பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இரண்டு சதவீதமாக உயர்த்துவதற்கும், 2022 இல் தனது முதல் பதவிக்காலம் முடிவதற்குள்ளாக அதை 3 சதவீதமாக உயர்த்துவதற்கும் அவர் வாக்குறுதியளித்தார்.
PS மற்றும் பிரான்சின் “இடது” என்று கூறிக் கடந்து செல்பவை ஆகியவற்றின் வலது-சாரி சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளானவை, பிற்போக்குவாத தற்காப்புவாதம் மற்றும் புலம்பெயர்-விரோத வாய்வீச்சு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரே எதிர்க்கட்சி போக்காக FN தன்னைக் காட்டிக் கொள்வதற்கு அனுமதித்திருக்கின்றன. முதல் சுற்றில், பிரான்சின் 566 தேர்தல் தொகுதிகளில் 216 இல் FN முன்னிலைக் கட்சியாக வந்திருக்கிறது. முக்கியமான நகர்ப்பகுதிகளில் அது தோற்றிருந்த அதே சமயத்தில், வடக்கு, பிக்கார்டி, லோரெய்ன் அத்துடன் சாம்பெயின் மற்றும் பிரான்சின் மத்தியத்தரைக்கடல் கரைப் பகுதியெங்குமான சீரழிக்கப்பட்ட தொழிற்பிராந்தியங்களின் பெரும்பகுதிகள் எங்கிலும் தீர்மானகரமான வித்தியாசத்தில் அது வெற்றி கண்டிருந்தது.
Alsace, Burgundy, Loire Valley, மற்றும் கிழக்கு நார்மண்டி உள்ளிட ஒரு தசாப்தத்திற்கு முன்பாக பிரான்சில் அதன் சுவடு கூட இருந்திராத பல பரந்த பகுதிகளில் சிறிய வித்தியாசங்களில் FN வெற்றி கண்டிருந்தது. ஜூனில் நடைபெறவிருக்கும் தேசிய சட்டமன்றத்திற்கான தேர்தலில் FN 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி காணக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு பரந்த இடதுநோக்கிய நகர்வைக் குறிக்கும் விதமாக, மெலன்சோன் கிட்டத்தட்ட 20 சதவீத வாக்குகளை வென்றிருந்தார், இதில் 24 வயதுக்குக் கீழான வாக்காளர்களின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களும் அடங்குவர். மெலன்சோன் PS இன் ஒரு இடது-சாரி எதிர்ப்பாளராக பிரபலமாக அடையாளம் காணப்படுகிறார். ஆயினும், எதிர்ப்பை அரசியல் ஸ்தாபகத்தின் பின்னால் திருப்புவது தான் மெலன்சோனின் பாத்திரமாக இருந்து வந்திருக்கிறது. மக்ரோனுக்கான ஒரு வழிமொழிவுக்கு மறைப்பை உருவாக்கும் ஒரு சிடுமூஞ்சித்தனமான முயற்சியில், தனது அடிபணியா பிரான்ஸ் இயக்கம் லு பென்னுக்கு எதிராக மக்ரோனை உத்தியோகப்பூர்வமாக ஆதரிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க ஆதரவாளர்களுடன் “கலந்தாலோசனையை” தொடக்க இருப்பதாக செவ்வாய்கிழமையன்று மெலன்சோன் அறிவித்தார்.
PS மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் குறித்த கொள்கைகளுக்கு எதிர்ப்பு பெருகியதற்கு ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும் வலது நோக்கி தீவிரமாக நகர்ந்ததன் மூலம் பதிலிறுத்த நிலையில், நேற்று லு பென் மற்றும் மக்ரோனுக்கு ஹாலண்ட் அழைப்பு விடுத்தமையானது அவரது ஜனாதிபதி பதவிக்காலத்தில் PSக்கும் FNக்கும் இடையில் எழுந்திருக்கக் கூடிய உறவுகளை சுட்டிக்காட்டத்தக்கதாக இருக்கிறது. ஹாலண்ட், அவரது கருத்துக்கணிப்பு மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்த நிலையில், தனது அரசாங்கத்திற்கான ஒரு அரசியல் அடித்தளமாக FN ஐ பயன்படுத்திக் கொண்டார். 2015 இல், அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்திவைக்கின்ற ஒரு அவசரநிலையை -இதனை அது அச்சமயத்தில் PS இன் பிற்போக்கான தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை வன்முறையாக ஒடுக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டது- திணிப்பதற்கு PS தயாரிப்பு செய்தவொரு சமயத்தில் லு பென்னை எலிசே மாளிகையில் சந்தித்துப் பேசுவதற்கு அவர் இரண்டு முறை அழைப்பு விடுத்தார்.
நாஜி ஆக்கிரமிப்பின் சமயத்தில் பிரெஞ்சு எதிர்ப்புப்படையின் தலைவர்களை சட்டவிரோதமாக்குவதற்கும் யூதர்களை மரண முகாம்களுக்குத் திருப்பியனுப்புவதற்குமான சட்ட அடிப்படையாக அமைந்த, குடியுரிமைப் பறிப்புக் கோட்பாட்டை பிரான்சின் அரசியல் சட்டத்தில் கொண்டு வருவதற்கும் PS முயற்சி செய்தது. ஏதேனும் வலது-சாரி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்ததில், சோசலிஸ்ட் கட்சியானது (PS) FN ஐ பிரதான அரசியல் நீரோட்டத்தின் பகுதியாக முறைப்படி அங்கீகரிக்க முயற்சி எடுத்தது மட்டுமல்லாது, பரந்த தொழிலாளர்கள் மத்தியில் தன்னைத் தானே மதிப்பிழக்கச் செய்து கொண்டது.
இதன் ஒரு விளைவாய், PS ஒரு வரலாற்றுத் தோல்வியை சந்தித்திருக்கிறது, ஞாயிறன்றான வாக்களிப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே பெற்றது.
பிரதானமாக பிரான்சில் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து முறித்துக் கொண்ட பல்வேறு அமைப்புகளும் வகித்த பாத்திரத்தின் மூலமாகவே FN பிரான்சின் முன்னணி எதிர்க்கட்சியாக, “அமைப்புமுறை-எதிர்ப்பு” கட்சியாக காட்டிக் கொள்ள முடிகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக, இரண்டாம் சுற்றுக்கு FN கொண்டு வரப்பட்டமைக்கு எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த சமயத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இரண்டாம் சுற்று தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு அழைப்பு விடுத்தது. ஜோன்-மேரி லு பென்னின் போட்டியாளரான, ஜாக் சிராக் அமல்படுத்தவிருந்த இராணுவவாத மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பு செய்கின்ற நோக்கத்தை அது கொண்டிருந்தது.
இந்தக் கட்சிகள் —தொழிலாளர்கள் போராட்டம் (LO), புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR, இன்று புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி, NPA), மற்றும் தொழிலாளர்கள் கட்சி (PT, இன்று சுதந்திர ஜனநாயக தொழிலாளர்கள் கட்சி) ஆகியவை— அந்த அழைப்பை நிராகரித்தன. அவை மூன்று மில்லியன் வாக்குகளைப் பெற்றன. ஆயினும் ஜோஸ்பன் மற்றும் PSக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியை கட்டியெழுப்புவதற்கு அவை குரோதமாய் செயல்பட்டன. சிராக்குக்கு வாக்களிக்க PS விடுத்த அழைப்பின் பின்னால் அவை அணிவகுத்ததன் மூலம், அரசியல் எதிர்ப்பு கோலை அவை FN வசம் ஒப்படைத்திருந்தன.
இந்த முடிவுகளின் நாசகரமான மற்றும் ஆழமான பிற்போக்கான பின்விளைவுகளை 2017 தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்துகின்றன. முதலாளித்துவ ஸ்தாபகத்தில் FN இன்று அதிகாரத்திற்கான ஒரு முக்கியமான போட்டியாளராக ஆகியிருக்கிறது.
எவ்வாறாயினும், 2002 இல் மில்லியன் கணக்கான மக்களை வீதிக்குத் தள்ளிய சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் இருந்த பாரிய எதிர்ப்பானது மறைந்து விடவில்லை. 25 சதவீத இளைஞர்கள் உள்ளிட மில்லியன் கணக்கான மக்கள் வேலைவாய்ப்பற்று இருக்கின்ற நிலையில், வர்க்கப் பதட்டங்கள் உண்மையில் 2002 இல் இருந்ததை விடவும் மிக அதிக வெடிப்பான நிலையில் இருக்கின்றன. ஆயினும் 2012 இல் ஹாலண்டுக்கு வாக்களிப்பதை வழிமொழிந்த, சிரியப் போரை ஆதரித்த, அத்துடன் சிதைந்து செல்லும் PS உடன் இப்போதும் ஆயிரக்கணக்கான இழைகளின் மூலமாக கட்டப்பட்டிருப்பதான NPA போன்ற நடுத்தர வர்க்கக் கட்சிகளின் மூலமாக தொழிலாள வர்க்கத்திலான எதிர்ப்பு முறையான வெளிப்பாட்டைக் காணவியலாது.
தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் தலைமையாக ICFI இன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியை (Parti de l'égalité socialiste) கட்டியெழுப்புவதே இப்போதைய அவசரப் பணியாகும். ஆளும் வர்க்கத்தின் ஏதோவொரு கன்னையை ஆதரிப்பதல்ல விடயம், மாறாக போருக்கும், சர்வாதிகாரத்திற்கும், வேலைவாய்ப்பின்மைக்கும், சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை, மக்களின் பரந்த பெரும்பான்மையை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதே இன்றியமையாததாகும். இதற்கு ஐரோப்பா முழுமையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டம் அவசியமாய் உள்ளது