Print Version|Feedback
US aircraft carrier deployed in direct threat to North Korea
வடகொரியாவிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமெரிக்க விமானம்தாங்கி கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன
By Peter Symonds
10 April 2017
ட்ரம்ப் நிர்வாகம், சிரியா மீது குற்றவியல் தனமான வகையில் கடல்மூல ஏவுகணை தாக்குதலை தொடங்கி சில நாட்களுக்கு பின்னர், அமெரிக்க விமானம்தாங்கி கப்பலான Carl Vinson உடன் ஏவுகணை அழிப்பு கப்பல்கள் மற்றும் ஒரு நடுத்தர கடற்படை கப்பலும் சேர்ந்த முழு தாக்குதல் குழுவுடன் இணைந்து கொரிய தீபகற்பத்தின் கடற்பகுதியில் நிலைநிறுத்த ஆத்திரமூட்டும் வகையில் அதிகாரம் அளித்துள்ளது. அமெரிக்க, சீன ஜனாதிபதிகளுக்கு இடையில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முதன்மை திட்ட நிரலில் இருந்த வட கொரியாவிற்கு ஒரு நேரடி இராணுவ அச்சுறுத்தலாக இந்த நகர்வு உள்ளது.
இந்த நிலைநிறுத்துதல் வடிவமைக்கப்பட்டிருந்ததானது ஒரு “படைத்திறனை காட்டுவதற்கானது” என்று Financial Times பத்திரிகைக்கு பெயர் குறிப்பிடப்படாத ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். இந்த விமானம்தாங்கி கப்பல் தாக்குதல் குழுவானது அமெரிக்க - தென் கொரிய கூட்டுடனான போர் பயிற்சிகளில் பங்கெடுத்துகொண்ட பின்னர் ஆஸ்திரேலியாவின் துறைமுகத்தை நோக்கி தெற்குதிசையில் முன்னேறி சென்றுகொண்டுருந்தபோது, சிங்கப்பூரை நோக்கி வடக்கிற்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. “விமானம்தாங்கி கப்பல்களின் நகர்வுகளை முன்கூட்டியே அறிவிப்பதென்பது அரிதான ஒன்றாகும். பொதுவாக அவ்வாறு செய்வது ஒரு தெளிவான செய்தியை அனுப்புவதற்காகவாகும்” என்று Navy Times குறிப்பிட்டது.
“மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் தனது தயார்நிலைமையையும் மற்றும் பிரசன்னத்தையும் பராமரிப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகவே” இந்த முடிவு இருந்ததாக அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் செய்தி தொடர்பாளர் தேவ் பென்ஹாம் அறிவித்தார், பின்னர் வட கொரியாவை அப்பட்டமான முறையில் குற்றம்சாட்டினார். வட கொரியா “அதன் அசட்டைத்தனம், பொறுப்பற்றதன்மை, ஏவுகணை சோதனைகள் மூலமாக நிலைகுலைய செய்யும் திட்டம், மற்றும் அணுஆயுத திறனை அடையும் நாட்டம் ஆகியவற்றின் காரணமாகவே,” “இந்த பிராந்தியத்தில் அச்சுறுத்தலுக்குரிய முதல் நாடாக வட கொரியா இருப்பது தொடர்கிறது” என்று கூறினார்.
“தரை மற்றும் வான்வழி தாக்கும் திறன் கொண்ட Hornets (போர் விமானம்), முன்னெச்சரிக்கை விடுக்கும் ரேடார்கள், மின்னணு போர்நடவடிக்கை செயலாற்றல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களின் பாதுகாப்பிற்காக 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உட்பட ஒரு டன் அளவிலான சுடுதிறனுடன் தாக்குதல் குழு அதனைக் கொண்டு வருகிறது” என்று Navy Times பத்திரிகை இதற்கு மேலும் ஊக்கமளித்தது.
வட கொரியாவை நோக்கிய அமெரிக்க மூலோபாயம் பற்றிய ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு நீண்ட மீளாய்வினை தொடர்ந்து, கொரிய தீபகற்பத்தின் மீதான பதட்டங்களின் ஒரு திட்டவட்டமான விரிவாக்கமாகவே Carl Vinson இன் அனுப்பிவைப்பு உள்ளது. கொரிய தீபகற்பத்திற்கு அமெரிக்க அணுசக்தி ஆயுதங்களை திருப்பியனுப்புவது, வட கொரிய தலைமையை கொல்வதற்கு “செயலிழக்க வைக்கும்” தாக்குதல்களை நடத்துவது, மேலும் அணுஆயுத, இராணுவ மற்றும் தொழில்துறை இலக்குகளை முறியடிக்க வட கொரியாவிற்குள் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகிய மூன்று இராணுவ தெரிவுகள் செயலூக்கமிக்க பரிசீலனையில் இருந்ததாக கடந்த வெள்ளியன்று NBC செய்தி வெளியிட்டது.
ஞாயிறன்று “Fox News” ஊடகத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் H.R. McMaster பேசுகையில், Carl Vinson ஐ நிலைநிறுத்தியது “ஜாக்கிரதை” ஆனது என நியாயப்படுத்தினார், அத்துடன், “ஒரு போக்கிரி ஆட்சி அது இப்போது ஒரு அணு ஆற்றலையும் கொண்டுள்ளது. அமெரிக்க மக்களையும், இந்த பிராந்தியத்தில் எங்களது கூட்டணி நாடுகளுக்கும், பங்காளிகளுக்கும் இருக்கும் அச்சுறுத்தல்களை நீக்குவதற்கு ஏற்ற முழு அளவிலான தேர்வுகளை வழங்க தயாராக இருக்குமாறு ஜனாதிபதி எங்களை கேட்டுள்ளார்.” என்றும் கூறினார்.
“பென்டகன் மற்றும் அமெரிக்க பசிபிக் கட்டளையகங்கள் வடகொரியா மீதான இராணுவ தாக்குதல்களுக்கான திட்டங்களை கூர்மைபடுத்தி வருவதென்பதை ஒரு தெரிவாக கருதி நிர்வாகம் அந்த நடவடிக்கையை தொடர விரும்புகிறது” என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி Navy Times அறிவித்தது.
மில்லியன் கணக்கிலானவர்களை கொல்லக்கூடியதாக கொரிய தீபகற்பத்தின் மீதான ஒரு பேரழிவுகரமான போரை தூண்டுவதற்கு, இந்த அனைத்து பெரும் ஆத்திரமூட்டும் “தேர்வுகளும்” அச்சுறுத்துகின்றன. “ஒரு ஒட்டுமொத்த பிராந்திய மோதலானது” “அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் மட்டுமல்லாமல், ஒருவேளை சீனாவுடனான நேருக்கு நேரான மோதலை” கொண்டுவரும், அதாவது, உலகத்தின் இரு பெரும் பொருளாதாரங்கள் மற்றும் இரு அணுஆயுதமேந்திய நாடுகளுக்கிடையில் ஒரு மோதலை கொண்டுவருமென்று Navy Times அறிவுறுத்துகிறது.
பியோங்யாங் ஆட்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை வலியுறுத்த வட கொரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையெனும் அச்சுறுத்தலை சந்தேகத்திற்கு இடமின்றி ட்ரம்ப் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார். கடந்தவார இறுதியில் ட்ரம்ப் மற்றும் ஜி இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன், நேற்று CBS இன் “Face the Nation” என்ற நிகழ்ச்சியில் பேசுகையில், “சூழ்நிலை மிகவும் தீவிரமாகியுள்ளது, மேலும் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு அச்சுறுத்தல் ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்துள்ளதை ஜி தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
தற்போது வட கொரியா உடனான எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நிராகரித்துள்ள ரில்லர்சன், “DPRK (வட கொரிய) தலைமையின் மனதிலுள்ள நிபந்தனைகளை மாற்ற சீனாவுடன் இணைந்து நாங்கள் செயலாற்ற முடியும்” என்று மட்டும் கூறுகிறார். ஆனால் வாஷிங்டனின் கோரிக்கைகளை ஏற்பதில் பியோங்யாங் ஐ மிரட்ட பெய்ஜிங் தவறினால், வடகொரியாவிற்கு எதிராக அமரிக்கா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் ரில்லர்சன் இடமளிக்கவில்லை. “வடகொரிய விவகாரத்திற்கு சீனா தீர்வு காண முனையாத பட்சத்தில் நாங்கள் தீர்வு காண்போம்” என்று கடந்த வாரம் ட்ரம்ப் Financial Times இல் அப்பட்டமாக தெரிவித்தார்.
நேற்று ABC இன் “This Week” நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலில், வடகொரியாவினால் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அபிவிருத்தி செய்யப்பட்டது “ஒரு சிவப்பு கோடாக” அமைத்துவிடுமா என்று ரில்லர்சனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இந்த வகையான விநியோக அமைப்பு முறையில் அவர்கள் பூரணத்துவம் பெற்றுள்ளதாக நாங்கள் தீர்மானிக்கும் பட்சத்தில், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சி ஒரு அதிதீவிர கவனத்திற்கு எடுக்கவேண்டிய நிலையாக உருவெடுக்கும்” என்று அச்சுறுத்தும் வகையில் விடையிறுத்தார்.
சிரியா மீதான கடந்த வார தாக்குதலுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தி பேசுகையில், ரில்லர்சன், “இது எந்தவொரு நாட்டிற்கும் பொருத்தமானது. நீங்கள் சர்வதேச விதிமுறைகளை மீறினால், நீங்கள் சர்வதேச ஒப்பந்தங்களை மீறினால், நீங்கள் கடமைப்பாடுகளுக்கு உட்பட்டு வாழ தவறினால், நீங்கள் சில சமயங்களில் ஏனையோருக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்தால், அதுகுறித்து ஒரு புள்ளியில் ஒரு விடையிறுப்பை காட்ட வேண்டும் என்பதே செய்தியாகும்” என்று கூறினார்.
சிரியா மீதான அமெரிக்க ஏவுகணை தாக்குதல்கள் “ஒரு மன்னிக்கமுடியாத ஆக்கிரமிப்பு செயலாகவே” உள்ளது என்று வடகொரிய ஆட்சி கண்டனம் தெரிவித்துள்ளதுடன், “அணுஆயுதங்களை கொண்டிராத நாடுகளை மட்டுமே அமெரிக்கா பொறுக்கியெடுத்து வருவதாகவும்” வட கொரிய ஆட்சி கண்டித்தது. மேலும், “நாங்கள் சக்தியுடன் சக்தியை எதிர்த்து நிற்கவேண்டுமென்றும், எங்களது நடவடிக்கை எங்களது அணுசக்தி தடுப்புமுறை ஒன்றே சரியான ஒன்றாக இருந்து வருகிறது என்பதை வலுப்படுத்துவதாக ஒரு மில்லியன் தடவைகள் நிரூபிக்கின்றதாகவும் இன்றைய உண்மை நிலைமை காட்டுகிறது” என்று அதன் செய்திதொடர்பாளர் அறிவித்தார்.
உண்மையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் ஒரு பாரியளவிலான இராணுவ படைகளை கட்டியெழுப்புவதற்கான ஒரு சாக்குப்போக்கையே பியோங்யாங்கின் மட்டுப்படுத்தப்பட்ட அணுஆயுத கிடங்கு வழங்குகின்றது. இது முக்கியமாக வடகொரியாவுக்கு எதிராக இல்லை மாறாக சீனாவிற்கு எதிராகவும் இயக்கப்படுவதாகும். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தொடரும் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிபடுத்தும் ஒரு முயற்சியாக, ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” கொள்கையை ட்ரம்ப் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறார்.
சிரியாவை போல வட கொரியா இல்லாதபோதும், அதன் மூலோபாய நோக்கங்களை தொடர்வதற்கு பியோங்யாங்கிற்கு எதிராக இராணுவ படையை பயன்படுத்த அமெரிக்கா தயங்காது. வடகொரியா அதன் அணுஆயுதங்களை பயன்படுத்தும் எந்தவொரு முயற்சியினையும் எடுக்கும் பட்சத்தில் “செயல்திறன் மிக்க மற்றும் பாரிய விடையிறுப்பை” சந்திக்க நேரிடுமென அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஏற்கனவே அதனை எச்சரித்துள்ளார். வட கொரிய தொழிற்துறையையும், இராணுவ திறன்களையும் அழிப்பதற்கு போதுமான அளவு அணுஆயுதங்களை தாங்கிசென்று ஏவிவிடும் திறனை Carl Vinson தாக்குதல் குழு மட்டுமே கொண்டுள்ளது.
மேலும், சிரியா மீதான தாக்குதல்கள் வடகொரியா மீதான அமெரிக்க தாக்குதலை தவிர்க்க வழி செய்யுமென யாரும் முடிவிற்குவர முடியாது. ரஷ்யாவையும், சீனாவையும் அடிபணியசெய்வதற்கான, அதன்மூலம் யூரேசிய நிலப்பகுதிகளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கு இலக்காக்கும் ஒரு மிகப்பரந்த மூலோபாயத்தின் வெறும் பினாமி இலக்குகளாகவே டமாஸ்கஸும், பியோங்யாங்கும் உள்ளன. முதலில் மாஸ்கோவுடன் மோதவேண்டுமா அல்லது பெய்ஜிங் உடனா என்பது பற்றிய தந்திரோபாயங்கள் குறித்து அமெரிக்க அரசியல், இராணுவ மற்றும் புலனாய்வு அமைப்புக்குள் கசப்பான உள்மோதல்கள் நிகழ்கின்ற நிலையிலும், மனித இனத்திற்கு பேரழிவுகரமான விளைவுகளை தரும் சிரியா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகள் மீதான தாக்குதல்களையும் ஒதுக்கிவிடமுடியாது.