Print Version|Feedback
Immigrant arrests up 33 percent since Trump inauguration
ட்ரம்ப் பதவியேற்பிற்கு பின்னர் புலம்பெயர்ந்தோர் மீதான கைதுகள் 33 சதவீதம் அதிகரிப்பு
By Patrick Martin
18 April 2017
சென்ற வருடத்தின் இதே காலத்துடன் ஒப்பிட்டால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதலாக, புலம்பெயர்ந்தோரினரது கைதுகள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உயர்வு கண்டிருக்கிறது. உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு ஜனவரி 20 முதல் மார்ச் மத்தி வரையான காலத்தில் ஆவணமற்ற குடியேற்றவாசிகளாகக் குற்றம்சாட்டி 21,362 பேரைக் கைது செய்திருந்ததாக வாஷிங்டன் போஸ்டுக்கு அளிக்கப்பட்டிருந்த ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது, இது 2016 ஆம் ஆண்டின் இதேகாலகட்டத்தில் 16,104 ஆக இருந்தது.
ஆவணமற்று குடியேறியிருப்பவர்களில் “குற்றமிழைப்பவர்களை” மட்டுமே தான் குறிவைப்பதாக ட்ரம்ப் கூறிக் கொண்டாலும், எந்த வகையான குற்ற வரலாறும் இல்லாத புலம்பெயர்ந்தோர்களிடையேயான கைது நடவடிக்கைகள் இருமடங்குக்கும் அதிகமாகி 5,441 ஆக அதிகரித்திருந்தது. ஏதாவது குற்றம் செய்திருந்த -இருபது வருடங்களுக்கும் முன்பாக குடித்து விட்டு வண்டி ஓட்டிய குற்றம் செய்திருந்தவர்கள் உள்ளிட- புலம்பெயர்ந்தோர் மீதான கைதுகளின் எண்ணிக்கை 13,404 இல் இருந்து 15,921க்கு அதிகரித்திருந்தது, அதாவது 18.7 சதவீத அதிகரிப்பைக் கண்டிருந்தது.
“புது அதிகாரமளிக்கப்பட்டிருக்கின்ற கூட்டரசாங்க முகவர்கள் குற்ற வரலாறுடைய ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை மட்டுமல்லாது சட்டத்தை மதித்து வாழ்கின்றவர்களாய் இருப்பினும் கூட சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கின்ற ஆயிரக்கணக்கானோரையும் கூட தேடும் வேட்டையை தீவிரப்படுத்தியிருப்பதை” போஸ்ட் எழுதியது. எந்த குற்றவியல் வரலாறும் இல்லாத புலம்பெயர்ந்தோர்களது கைதுகளில் இன்னும் பெரிய அதிகரிப்புகள் இருப்பதை சில பிராந்திய ICE அலுவலகங்கள் தெரிவித்தன: பிலடெல்பியா அலுவலகம் இதில் 500 சதவீத அதிகரிப்புடன் மொத்தம் 356 கைதுகளை குறிப்பிட்டிருந்தது, அட்லாண்டா அலுவலகம் 300 சதவீத அதிகரிப்புடன் கிட்டத்தட்ட 700 கைதுகளைக் குறிப்பிட்டிருந்தது.
குடியேற்றக் கைதிகள், உள்ளூர் போலிஸ் முகமைகளும் சிறைச்சாலைகளும் அவர்களிடம் இருக்கும் கைதிகளை கூட்டரசாங்க காவல் மற்றும் நாடுகடத்துவதற்காக மாற்றுவதற்காய் விடுவிக்கின்ற தேதியைக் கடந்து அவர்களை வைத்திருப்பதற்கு ICEயிடம் இருந்தான விண்ணப்பங்கள் எண்ணிக்கையிலும் 75 சதவீதம் அதிகரித்திருந்தது. ட்ரம்ப் பதவியேற்பு முதலாய் மார்ச் மத்தி வரையிலுமான இதன் மொத்த எண்ணிக்கை 22,161 ஆக இருந்தது, இது ICE இன் கைது எண்ணிக்கையை விடவும் அதிகமாகும்.
கைதுகளிலும் கைதிகளிலும் அதிகரிப்பு இருந்தபோதிலும், உண்மையான நாடுகடத்தல்களின் எண்ணிக்கை 1.2 சதவீதம் வீழ்ச்சி கண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்சில் 2016 இன் இதே மாதங்களுடன் ஒப்பிடுகையில் 54,741 ஆக வீழ்ச்சி கண்டது. இதற்குக் காரணம் என்னவென்றால் சமீபத்திய கைதுகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்கனவே நிலுவைகள் நிரம்பிய குடியேற்ற நீதிமன்றங்களில் இன்னும் அதிகமான கைதிகள் வரிசைக்கு வந்திருப்பதை அடுத்து, வழக்கு எண்ணிக்கை அதிகரிப்பால் வழக்குகளை பரிசீலிக்க அவசியமாகும் கால அவகாசம் நீண்டு விட்டிருக்கிறது.
அமெரிக்க அதிகாரிகள் திருப்பியனுப்பக் குறிவைக்கும் குடிமக்களை திரும்ப எடுத்துக் கொள்வதற்கு பலநாடுகளில் இருந்து எதிர்ப்பும் இருக்கிறது, குறிப்பாக சீனா, அதன் வர்த்தக நடைமுறைகளால் தான் “சீரழிக்கப்படுவதாக” குற்றம்சாட்டுகின்ற, அத்துடன் வட கொரியாவுக்கு எதிராக போர்முரசு கொட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டுக்கு எந்த வித நன்மையும் செய்ய முனைவதற்கு எந்தக் காரணமும் காணவியலாததாக இருக்கிறது.
ICE கைதுகளின் மொத்த எண்ணிக்கை இப்போதும் கூட 2014 இன் உச்சமட்டங்களுக்கு கீழே தான் இருக்கிறது, அச்சமயத்தில் அந்த ஆண்டின் முதல் மாதங்களில் ஒபாமா நிர்வாகம் 29,238 புலம்பெயர்ந்தோரை கைது செய்திருந்தது. அகதிகளின் அதிகரிப்புக்கு -இவர்கள் மத்திய அமெரிக்க நாடுகளான குவாத்தமாலா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் ஆகியவற்றில் இருந்து கும்பல்கள் மற்றும் வலது-சாரி அமெரிக்க ஆதரவு ஆட்சிகளிடம் இருந்தான வன்முறைக்கு அஞ்சி தப்பியோடி வந்த, பெரும்பாலும் தாய்மார்களாகவும் தனித்துவந்த சிறுவர்களாகவும் இருந்தனர்- தக்கபடி இந்த எண்ணிக்கை அதிகரித்தது.
2014 நவம்பரில் DHS கொஞ்சம் கொஞ்சமாய் புலம்பெயர்ந்தோரை கைதுசெய்வதைக் குறைத்து, வன்முறைக் குற்றப் பதிவுகள் கொண்டவர்கள் மற்றும் சமீபத்தில் எல்லை கடந்துவந்து குடியேறியவர்கள் ஆகியோருடன் கைதுகளை மட்டுப்படுத்திக் கொண்டது. ஆயினும் ட்ரம்ப்பின் கீழ், DHS, கைதுக்கு குறிவைக்கப்படும் புலம்பெயர்ந்தோரினரது வகைப்பாட்டுப் பட்டியலை மிகப்பெருமளவில் விரிவுபடுத்தியிருக்கிறது.
ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே இருந்த கொள்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் விரிவுபடுத்திக் கொண்டிருந்தது என DHS செயலாளரும், முன்னாள் மரைன் ஜெனரலுமான, ரோபர்ட் கெல்லி “ஊடகங்களுடன் சந்திப்பு” என்ற NBC நிகழ்ச்சியில் தெரிவித்தார். “நியாயமாகச் சொல்வதானால், குற்றவாளி என்பதன் வரையறை மாறி விட்டிருக்கவில்லை, ஆனால் நாங்கள் கையாளுகின்ற குற்றவியல்தனத்தின் விரிவெல்லை மாறிவிட்டிருக்கிறது எனலாம்” என்று அவர் கூறினார். ஒரேயொரு DUI, அது எத்தனை சிறியதாகக் கூட இருந்தாலும், இப்போது ஒரு ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை நாடுதிருப்பியனுப்புதற்கு முன்னுரியமையளிப்பதற்கான முகாந்திரமாக ஆகலாம்” என்றார் அவர்.
ட்ரம்ப்பின் புலம்பெயர்-விரோத வாய்வீச்சும், அத்துடன் சமீபத்தில் அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸ் எல்லை வலயத்திற்கு சமீபத்தில் விஜயம் செய்ததும், அமெரிக்க மெக்சிகோ எல்லையைக் கடந்து, குறிப்பாக மத்திய அமெரிக்காவில் இருந்து, வருகின்ற பேர்களது எண்ணிக்கையைக் குறைப்பதில் ஒரு பாத்திரத்தை வகித்திருப்பதாக கெல்லி பெருமையடித்துக் கொண்டார். “அது அவர்களது மூளைகளில் போதுமான குழப்பத்தை உண்டுபண்ணிவிட்டிருக்கிறது, அத்துடன் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் காண்பதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று அவர் நிறைவுசெய்தார்.
எந்த குற்றவியல் வரலாறும் இல்லாத ஆவணமற்ற தொழிலாளர்கள், அமெரிக்காவில் நன்கு ஸ்தாபகமான வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் மற்றும் அமெரிக்கக் குடிமக்களாக இருக்கக் கூடிய சிறுவர்கள் ஆகியோர் ICE ஆல் நாடுகடத்தப்பப்படுவதான சம்பவங்கள், நாடெங்கிலும் உள்ளூர் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகளாக வந்திருப்பதை புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கான குழுக்கள் தொகுத்துக் காட்டுகின்றன.
ஃபுளோரிடாவின் நேப்பிள்ஸ் பகுதியில் இருந்தான ஒரு செய்தி குறிப்பிட்டது: “கோலியர் கவுண்டியில் உள்ள ஆவணமற்ற தொழிலாளர்களை பொறுத்தவரை, இப்போதெல்லாம் ஒரு போக்குவரத்துக் குற்றம் செய்தாலே கூட போதும், உடனே க்ரோம் கொண்டுசெல்லப்பட்டு, அங்கே அவர்கள் நாடுகடத்தப்பப்படும் நிலைக்கு முகம்கொடுக்க நேர்வதாக, சமீபத்திய கைது வரலாறுகள் காட்டுகின்றன. நேப்பிள்ஸ் டெய்லி நியூஸ் ஆய்வு செய்த நூற்றுக்கணக்கான கைது பதிவேடுகள் மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் காட்டுவதன் படி, ட்ரம்ப் உத்தரவிட்ட அடுத்த மாதத்தில், குறைந்தபட்சம் 35 பேர் முதல் அதிகப்பட்சம் 48 பேர் வரையில் கொலியர் பிரதிநிதிகளால் கைது செய்யப்பட்டு ICEக்கு அனுப்பப்பட்டனர்.”
அந்த செய்தித்தாள் கண்டறிந்தது: “கைதுப் பதிவேடுகளின் படி இந்த வழக்குகளில் நான்கில் மூன்று பங்கானவை, உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுதல், காலாவதியான உரிமத்துடன் வண்டி ஓட்டுதல் அல்லது தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் உரிமத்தைக் கொண்டு வண்டி ஓட்டுதல் போன்ற சிற்சிறு போக்குவரத்துக் குற்றங்களைக் கொண்டவையாகும். வெறும் மூன்று மட்டுமே சற்றுபெரிய குற்றங்களாய் கூறப்பட்டிருந்தன, அதில் இரண்டில் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு, மூன்றாவதில் அது ஒரு சிறுகுற்றமாக குறைக்கப்பட்டிருந்தது என, நீதிமன்றப் பதிவேடுகள் காண்பிக்கின்றன.”
ஒரு அமெரிக்க பிரஜையை திருமணம் செய்து அமெரிக்கப் பிரஜையாக இருக்கும் மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டிருந்த, இண்டியானாவில் இரண்டு தசாப்தங்களாய் வாழ்ந்து வருகின்ற ஆவணமில்லாத தொழிலாளி ஒருவர் விடுமுறைக்கு நயாகரா நீர்வீழ்ச்சி செல்வதற்காக எல்லைகடந்து கனடாவிற்குள் வந்துவிட்டு, எல்லை வழியாகத் திரும்பும்போது கைது செய்யப்பட்டார். அவர் மெக்சிகோவுக்கு நாடுகடத்தப்பட்டார். ஓஹியோவைச் சேர்ந்த ஒரு பெண்மணி வீட்டு வன்முறைக்கு இலக்காகியிருந்த நிலையில், அவரை மரியாதைக்குறைவாக நடத்தியவருக்கு எதிரான சாட்சியாக அவர் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் நிலையில், நாடுகடத்தப்படும் நிலைக்கு முகம்கொடுத்திருக்கிறார்.
கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்படுபவர்கள், பணிச்சுமைமிகுந்து செல்லும் நீதிமன்ற மற்றும் சிறை அமைப்புகளுக்குள் சிக்கி காணாமல் போகின்றனர். நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 2010 இல் 236,415 ஆக இருந்ததில் இருந்து இந்த ஆண்டில் 508,036 க்கு அதிகரித்திருக்கிறது, குடியேற்ற வழக்கு நீதிபதிகள் 301 பேருக்கும் தலா சுமார் 1,700 வழக்குகள் கூடியிருக்கின்றன. வழக்கு பரிசீலனைக் காலம் நீண்டுவிட்டிருக்கிறது, ஏனென்றால் ட்ரம்ப் பதவியேற்புக்கு பின்னர் அவரால் பிறப்பிக்கப்பட்ட குடியேற்ற உத்தரவுகளின் படி, வழக்காடுநர்கள், நீண்டகாலம் அமெரிக்காவில் இருந்தவர்கள் மற்றும் எந்த குற்ற வரலாறும் இல்லாத குடியேற்றத்தினர் ஆகியோரை ஒதுக்கி வைப்பதை விடுத்து, குடியேற்றம் தொடர்பான ஒவ்வொரு வழக்கையும் நிலுவையில் போடாமல் தொடர்ந்து நடத்துகிறார்கள்.
காவல் மையங்களில் இன்னும் 30,000 படுக்கைகள் சேர்ப்பதற்கான திட்டங்களை ட்ரம்ப் நிர்வாகம் முன் தள்ளிக் கொண்டிருக்கிறது. காவல் மையங்களைக் கையாளுகின்ற மிகப்பெரும் ஒப்பந்த நிறுவனங்களில் ஒன்றான GEO Group, அது டெக்சாஸ் மாநிலத்தின் கொன்ரோவில், ஹூஸ்டனுக்கு வெளியே, 110 மில்லியன் டாலர் செலவில் கிட்டத்தட்ட 1,000 கைதிகள் வரை காவலில் வைக்கும் திறன் கொண்ட ஒரு சிறையைக் கட்ட இருப்பதாக திங்களன்று அறிவித்தது.
ICE காவல் மையங்களில் பராமரிப்பு நிலைமைகள் மோசமடைந்து செல்வதை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக, கலிபோர்னியாவில் அடெலெண்டோ காவல் மையத்தில் வைக்கப்பட்டிருந்த செர்ஜியோ அலோன்ஸோ லோபெஸ் என்ற ஒரு மெக்சிகோ குடியேற்றவாசி ஏப்ரல் 13 அன்று மரணமடைந்தார். இரத்தவாந்தி எடுத்ததன் காரணமாக ஏப்ரல் 1 அன்று விக்டர்வில்லியில் இருக்கும் விக்டர் வேலி குளோபல் மெடிக்கல் சென்டருக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார், ஆனால் அதற்கு 12 நாட்களுக்குப் பின்னர் உள்பாக இரத்தக் கசிவின் காரணத்தால் அவர் மரணமடைந்தார். அவருக்கு அதிக குடிப்பழக்கத்தின் காரணத்தால் உயர் இரத்த அழுத்தமும் குடல்வீக்கமும் இருந்து வந்திருந்தது, அதற்கு சிறையில் அவருக்கு முறையான சிகிச்சை கிடைக்க வழியில்லை.
55 வயது லோபெஸ், அக்டோபர் 1 அன்று தொடங்கிய நடப்பு நிதி ஆண்டில் ICE காவலில் மரணமடைந்த ஆறாவது கைதியாவார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பிப்ரவரி 7 அன்று கைது செய்யப்பட்டார், அங்கு அவர் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் வாழ்ந்து வந்திருந்தார்.
இதனிடையே, உள்ளூர் போலிஸ் படைகளை ICE மற்றும் DHS இன் கிளைகளாய் மாற்றுவதற்கு மறுக்கின்ற நகரங்கள் மற்றும் கவுண்டிக்களுக்கு (புகலிட நகரங்கள் என்பதாய் சொல்லப்படுபவை) கூட்டரசாங்க நிதிகளை நிறுத்தி வைக்கின்ற ட்ரம்ப்பின் நிர்வாக உத்தரவுக்கு எதிராக சான்பிரான்சிஸ்கோ மற்றும் சான்டா கிளாரா (சான் ஜோஸ்) ஆகிய இரண்டு பெரும் மெட்ரோபொலிட்டன் கவுண்டிக்கள் தாக்கல் செய்திருந்த மனு மீது கலிபோர்னியாவில் வெள்ளிக்கிழமையன்று ஒரு கூட்டரசாங்க நீதிபதி நீதிவிசாரணையைத் தொடக்கினார்.
ட்ரம்பின் நிர்வாக உத்தரவு “நிர்வாகஎல்லைகளுக்கு அனைத்து நிதியையும் இரத்து செய்வதற்குரிய ஒரு ஆயுதம்” என்று வருணித்து, இது கூட்டரசாங்கத்திற்கும் மாநில மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வை உறுதிசெய்கின்ற அமெரிக்க அரசியல்சட்டத்தின் 10வது திருத்தத்தை மீறிய செயல் என்று கூறி அதற்கெதிரான ஒரு தேசிய அளவிலான அடிப்படையான உத்தரவை இந்த இரண்டு கவுண்டிகளும் கோருகின்றன.
இந்த நிர்வாக உத்தரவு நீதித்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறையால் வழங்கப்படும் உதவிகளுடன் மட்டுப்பட்டதேயன்றி, அத்தனை கூட்டரசாங்க நிதிகளுக்கும் அல்ல என்று நீதித்துறையின் வழக்கறிஞரான சாட் ரீட்லர் கூறி, ட்ரம்ப்பின் உத்தரவின் விரிவெல்லையை கூர்மையாக வெட்டிக் குறைத்தார். சான்டா கிளாரா கவுண்டி பெறும் 1 பில்லியன் டாலர் கூட்டரசாங்க நிதியில் வெறும் 1 மில்லியன் டாலர் அளவுக்குத் தான் பாதிக்கப்படும் என்றும் சான்பிரான்சிஸ்கோவுக்குச் செல்லும் 1.2 பில்லியன் டாலர் நிதியில் கொஞ்சமும் பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
”உண்மையில் எந்த அமலாக்க நடவடிக்கையும் மேசையில் இல்லை அல்லது எதுவும் உத்தியோகபூர்வ அச்சுறுத்தலில் இல்லை” என்றும் கூறிய அவர் இரண்டு கவுண்டிகளும் நிர்வாக உத்தரவுக்கு “சாத்தியமான மிக விரிந்த வாசிப்பை” வழங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்.
கூட்டரசாங்க கடன் வரம்பை அதிகரிப்பதற்கும் நடப்பு நிதியாண்டின் முடிவு வரையிலும் கூட்டரசாங்க முகமைகளுக்கான நிதியாதாரத்தை நீட்டிப்பதற்கும் ஏப்ரல் முடிவதற்குள்ளாக நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சட்டமசோதாவில், கூட்டரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கைகளை எதிர்க்கின்ற நகரங்களுக்கு கூட்டரசாங்கத்தின் நிதிகளைத் தடுக்கின்ற வார்த்தையாடலை செருகுவதற்கு ட்ரம்ப்பின் நிதிநிலை ஆலோசகரான மிக் முல்வானே முனைந்ததற்குப் பின்னர், புகலிட நகரப் பிரச்சினை வாஷிங்டனில் ஒரு முக்கிய சட்டப் பிரச்சினையாக ஆகியிருக்கிறது.
புகலிட நகரங்களுக்கு நிதிகளை தடுக்காத எந்த நிதிநிலைச் சட்டத்தையும் ட்ரம்ப் தனது அதிகாரத்தைக் கொண்டு நிறுத்திவைப்பார் என்றும் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையெங்கிலும் ஒரு சுவர் எழுப்புவதற்கு ஆரம்ப நிதியை அவர் வழங்குவார் என்றும் முல்வானே கூறினார்.