Print Version|Feedback
At least 26 dead in garbage dump collapse in Sri Lanka
இலங்கையில் குப்பை மலை சரிந்ததில் குறைந்தபட்சம் 26 பேர் கொல்லப்பட்டனர்
By Vijith Samarasinghe and Wimal Perera
17 April 2017
கொழும்பின் புறநகர் பகுதியில் மீதொடுமுல்லையில் உள்ள பாரிய குப்பை மலையின் பெரும் பகுதி வெள்ளியன்று சரிந்து கொட்டியதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 26 ஆக உயர்ந்தது. ஏழு சிறுவர்கள் மற்றும் ஏனைய 19 பேரது சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. காயமடைந்த மேலும் 12 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 100 பேர் வரை கூட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் பலர் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறினார்.
மீதொடுமுல்லை குப்பை மேடு
கிட்டத்தட்ட 145 வீடுகள் சேதமாகியுள்ளன அல்லது குப்பை மலைக்குள் புதையுண்டு போயுள்ளன. 180 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 645 பேர் இடம்பெயர்ந்து, அடிப்படை வசதிகள் இல்லாமல் அருகில் உள்ள ஆரம்ப பள்ளியிலும் பிற இடங்களிலும் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளனர். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நாள் என்பதால், ஏப்ரல் 14 அன்று வருகை தந்த உறவினர்களும் கூட வீடுகளுக்குள் புதையுண்டு இருக்கலாம். இலங்கை மின்சார சபையானது உயர் மின்னழுத்த கம்பிகளும் சேதமடைந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்களை விடுகளை விட்டு வெளியேறியிருக்குமாறு எச்சரித்துள்ளது.
இந்த துன்பம் ஏற்கனவே நாடு முழுவதும் அதிர்ச்சி மற்றும் சீற்றத்தை தூண்டியுள்ளது. இதனால், அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகள் மீதான பரவலான எதிர்ப்பு மேலும் குவிந்து அதன் அரசியல் நெருக்கடியையும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை அறிவிப்பதன் பேரில் அமைச்சர்கள், இராணுவ தலைவர்கள், அரசாங்க அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த "பேரழிவின் காரணமாக" ஆசியாவுக்கான தனது சுற்றுப்பயணத்தை சுருக்கிக்கொண்டுள்ளார்.
அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், கொழும்பு மாநகர சபையானது 16 ஏக்கர் நிலத்தொகுதியில் ஒரு பிரமாண்டமான குப்பை மேட்டை உருவாக்கியுள்ளது. இது சுமார் 30 மீட்டர் உயரமானதாகும். இந்த குப்பை மேட்டை நிர்வகிப்பவர்கள் அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் உயிர்களை பற்றியோ அல்லது பயன்படுத்தப்பட வேண்டிய விஞ்ஞான முறைகள் பற்றியோ கவலைப்படவில்லை. வெள்ளிக்கிழமை நடந்த சரிவு, அதன் தெற்கு எல்லையில் அனைத்து வீடுகளையும் சேதமாக்கியது.
கொல்லப்பட்டவர்களின் உடல்களை தேடி கொழும்பு தேசிய மருத்துவமனையின் சவக்கிடங்கு அருகே காத்திருப்பவர்கள்
தனது சகோதரர், அவரது மனைவி மற்றும் 12 வயது மகளதும் உடல்கள் வெளியில் எடுக்கப்படும் வரை காத்திருந்த ஒரு பெண், உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும் போது, அனர்த்தத்தின் பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எந்தவொரு அரசாங்க அதிகாரியோ அல்லது மீட்பு படையினரோ தளத்தை வந்தடைந்திருக்கவில்லை என்று கூறினார். "பிரதேசவாசிகள் தாங்களே புதையுண்ட உறவுகளை தேடுவதை தொடங்கினர். பின்னர் கடற்படையும் போலீசும் சில மண்வாரிகளை எடுத்துக்கொண்டு வந்துனர்," என்று அவர் கூறினார்.
வளர்ச்சிகண்ட கோபத்தை எதிர்கொண்ட அரசாங்கம், சில மணி நேரம் கழித்து இராணுவத்தின் "மீட்பு படையை" அனுப்பியது. பேரழிவு தளத்தில் பொறுப்பாக இருந்த இராணுவ பிரிகேடியர், 600 பேர் கொண்ட பிரிவு தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் கூறினார்.
படையினரும் மீட்பு குழுவும் சரியான அல்லது பாதுகாப்பான உபகரணங்கள் இல்லாமல் வாடகைக்கு எடுத்த இயந்திரங்களை கொண்டு தளத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இது சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு நிலச்சரிவுகள் நடந்து நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போதிலும், அரசாங்கம் சரியான பேரழிவு தயார்நிலை இல்லை என்பதை காட்டுகிறது. 2004ல் நடந்த ஆசிய சுனாமியில் இலங்கையில் 40,000 பேர்வரை கொல்லப்பட்டனர்.
"நாங்கள் இந்த [குப்பை மலை] சரிந்து விழும் என்று எவ்வளவு காலமாக கூறிவந்துள்ளோம்!" என மற்றொரு பெண் எமது நிருபர்களிடம் கூறினார். ஒரு பல்கலைக்கழக பேராசிரியர், குப்பை மலையில் ஏற்படும் மீத்தேன் வாயுவின் அழுத்தம் காரணமாக அது சரியக்கூடும் என்று கடந்த ஆண்டு எச்சரித்திருந்ததாக அவர் கூறினார். "எங்கள் அழுகுரல்கள் அனைத்தும் அரசாங்கங்கத்துக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகியது! பலர் உயிருடன் புதைக்கப்படும் வரை அவர்கள் எதுவும் செய்யவில்லை,” என உறவினர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்திருந்த ஒருவர் கூறினார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் சகலா ரத்நாயக்க, அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் பார்வையிடச் சென்ற போது, உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்புக்களை சந்தித்தனர்.
"பலர் இறந்த பிறகு வந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, என்று மக்கள் அவர்களிடம் கூறினர். நாங்கள் இங்கே குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிராகப் போராடிய போது எமக்கு கிடைத்தது என்ன, தடியடி தானே" என ஒருவர் எமது நிருபர்களிடம் தெரிவித்தார். "அரசியல்வாதிகள், பௌத்த துறவிகள் அல்லது கத்தோலிக்க பாதிரியார்கள் எவரும் இங்கு தேவை இல்லை."
இப்போது தனது பேரனுடன் தனியாக இருக்கும் மற்றொருவர், இவை மரணங்கள் அல்ல கொலைகள் என்று கோபத்துடன் கூறினார்.
கோபத்தின் கொதிப்பையிட்டு விழிப்படைந்துள்ள அரசாங்கம், அந்த பகுதியில் சிப்பாய்களையும் பொலிஸையும் பெரிய அளவில் நிறுத்தியுள்ளது. "பொதுமக்களின் பாதுகாப்புக்கு” என்ற சாக்குபோக்குகளின் கீழ், முழு பகுதியும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்களால் இன்னமும் தங்கள் வீடுகளிலிருந்து சொத்துக்களை காக்க முடியவில்லை.
கலகம் அடக்கும் பொலிஸ், நீர் பீரங்கி, கண்ணீர்ப்புகை மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதபாணியான படைப் பரிவாரங்கள் அயலில் உள்ள வெல்லம்பிட்டிய மற்றும் கோதடுவ புதிய நகரிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பேரழிவு நடந்து 24 மணி நேரத்திற்கும் பின்னர், உப நிதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இந்த பிரச்சனை 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வந்துள்ளது, அரசாங்கம் இப்போது உடனடியாக அங்கு குப்பைகளைக் கொட்டுவதை நிறுத்த முடிவெடுத்துள்ளது, என்றார் .
பாதிக்கப்பட்டவர்களையே குற்றஞ்சாட்டிய டி சில்வா, குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தும் அப்பகுதியில் இருந்து நகர மறுத்ததாலேயே இந்த சோகம் ஏற்பட்டது, என்று கூறினார். எனினும், ஒரு மீள்குடியேற்ற வேலைத்திட்டம் இருக்கவில்லை, மாறாக, வாய்மொழி வாக்குறுதிகளே வழங்கப்பட்டன, அதிகாரிகள் வாடகைக்கு அல்லது ஒரு மாற்று இடத்தில் வீடு கட்டுவதற்கு அற்பத்தனமான இழப்பீடுகளை முன்வைத்தனர், என்று எமது நிருபர்களிடம் ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு குடும்பத்தின் ஆறு சடலங்கள்
மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள், கொழும்பை ஒரு சர்வதேச நிதி மற்றும் வர்த்தக மையமாக மாற்றும் நோக்கில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முந்தைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்படும் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன. அரசாங்கம் இப்போது மக்களை அப்புறப்படுத்துவதை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த பேரழிவை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.
நீண்ட காலமாக இந்த பகுதி குப்பை கொட்டுவதற்கான இடமாகப் பயன்படுத்தப்பட்டது. எனினும், 2009ல் கொழும்பின் பிரதான குப்பை கொட்டும் இடமாக அது ஆனபோதே ஆபத்தான நிலைமை உருவாக்கப்பட்டது. மக்கள் கடந்த சில ஆண்டுகளாக பல சந்தர்ப்பங்களில் பேரழிவுகளின் சாத்தியத்தை எச்சரித்து போராட்டம் நடத்தினர். 2014ன் தொடக்கத்தில், மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம், குப்பை கொட்டுவதை தடுப்பதற்காக பல நாட்கள் மறியலில் ஈடுபட்ட குடியிருப்பாளர்களை வன்முறையான பொலிஸ் தாக்குதலைக் கொண்டு அடக்கியது.
2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அந்தப் பகுதிக்கு சென்று, குப்பை கொட்டும் பிரச்சனை விரைவில் மைத்திரிபால சிறிசேன தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் தீர்க்கப்படும் என்று குடியிருப்பாளர்களிடம் தெரிவித்தார். நேற்று அவர் பாசாங்குத்தனமான ஒரு இரங்கல் செய்தியை அனுப்பியதுடன், அரசாங்கம் குப்பை கொட்டும் சிக்கலைத் தீர்க்கும் நிலையில் உள்ளது என்று வஞ்சத்தனமாகக் கூறினார். உண்மையில், அவரது அரசாங்கமானது 2015 மே மற்றும் டிசம்பர் மாதங்களில் குடியிருப்பாளர்கள் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தை கொடூரமான பொலிஸ் தாக்குதல்கள் நடத்திய கலைத்ததோடு பலரைக் கைது செய்தது.
மீதொடுமுல்ல குப்பைக் கிடங்கு பேரழிவானது அடுத்தடுத்து ஆட்சிக்குவந்த அரசாங்கங்களாலும் இலாப உந்துதலாலும் உருவாக்கப்பட்ட மற்றொரு துன்பமாகும். இது முதலாளித்துவ முறைமையின் கீழ், மக்களை எதிர்கொள்ளும் மிக அடிப்படை பிரச்சினைகள் கூட தீர்க்கப்பட முடியாது என்பதை நிரூபிக்கிறது. ஜனாதிபதி சிறிசேன, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களையும் அப் பகுதியில் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவையும் அறிவித்திருப்பதன் உண்மையான குறிக்கோள், அரசாங்கத்திற்கு எதிரான சீற்றம் வளர்ச்சியைடவதில் இருந்து அவதானத்தை திசை திருப்புவதே அன்றி, பேரழிவுகளை தடுப்பது அல்ல.