Print Version|Feedback
What is behind the hysterical defence of Baberowski by the Frankfurter Allgemeine Zeitung?
Frankfurter Allgemeine Zeitung பார்பெரோவ்ஸ்கியை மூர்க்கத்தனமாக பாதுகாப்பது ஏன்?
By Christoph Vandreier
31 March 2017
பிரேமன் பல்கலைக்கழக மாணவர் அமைப்பான Asta ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கியை ஒரு வலதுசாரி தீவிரவாதியாக குறிப்பிடலாம் என்று கொலொன் பிராந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவரின் பாதுகாவலர்களிடம் இருந்து மூர்க்கத்தனமான பிரதிபலிப்புகளை தூண்டியுள்ளது. பழமைவாத Frankfurter Allgemeine Zeitung (FAZ) பத்திரிகை வெட்கமின்றி பொய்கள் மற்றும் ஒட்டுமொத்த அவதூறுகளுடன் அவரை விமர்சிப்பவர்களை பழிக்கும் மற்றும் மௌனமாக்கும் நோக்கில் திங்களன்று நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE), "பிரபல" பேராசிரியர் ஒருவரது "குணத்தை இழிவுபடுத்தி" இருப்பதாக FAZ பத்திரிகை வாதிடுகிறது. பார்பெரோவ்ஸ்கிக்கு எதிராக ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர்களை தூண்டிவிடும், "அமெரிக்க நிதியாளர்களாக" கருதப்படுபவர்கள் குறித்த குரூர சதி தத்துவங்கள் மற்றும் கட்டுக்கதைகளில் அந்த எழுத்தாளர், Heike Schmoll, திருப்தி அடைகிறார்.
ஜேர்மனியின் மிகப்பெரிய முதலாளித்துவ வர்க்க பத்திரிகைகளில் ஒன்று மிகவும் அப்பட்டமான மற்றும் ஜோடிக்கப்பட்ட பொய்களின் பின்னால் நிற்கிறது என்ற உண்மையானது, ஆளும் உயரடுக்கு அவர்களது போர் கொள்கைக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பைக் குறித்து எந்தளவிற்கு கவலை கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஆகவே Schmoll, “பல்கலைக்கழகங்களை இராணுவவாதத்தின் சித்தாந்த மையங்களாக மாற்றுவதற்கு" எதிராக போராடி வருகின்றதும், ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர் பாராளுமன்ற தேர்தல்களில் கிறிஸ்துவ ஜனநாயக மாணவர் அமைப்பு, பசுமை கட்சி மற்றும் இடது கட்சியை விட அதிக ஆதரவுடன் ஏழு சதவீத வாக்குகள் பெற்றதுமான "செயலூக்கம் மிகுந்த" ட்ரொட்ஸ்கிச குழுவைக் குறித்து குறை கூறுகிறார்.
சமூக சமத்துவத்திற்கான இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) அதிகரித்து வரும் போர் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு சோசலிச முன்னோக்கை முன்னெடுத்து வருவதால், அதனால் அதன் செல்வாக்கை விரிவாக்க முடிகிறது. IYSSE, ஜனவரியில், “இராணுவவாதம் மற்றும் போர், சமூக சமத்துவமின்மை மற்றும் வலதின் வளர்ச்சிக்கு எதிராக ஒரு இயக்கத்தை கட்டமைக்க" மாணவர் பாராளுமன்றத்தில் ஒரு வேட்பாளர் குழுவை நிறுத்தியது. “முதலாம் மற்றும் இரண்டாம் உலக போரின் போது நடந்ததைப் போல ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தை மீண்டும் வலதுசாரி மற்றும் இராணுவவாத சித்தாந்தவாதிகளின் மையமாக மாற்றுவதை நாங்கள் தடுக்க விரும்புகிறோம்,” என்று அதன் தேர்தல் அறிக்கை குறிப்பிட்டது.
ட்ரம்ப் தேர்வானதுடன், அதிதீவிர வலதின் பிரதிநிதி ஒருவர் அமெரிக்காவில் அதிகாரத்திற்கு வந்துள்ளார், மற்றும் அதன் கொள்கைகள் தவிர்க்கவியலாமல் போருக்கு இட்டுச் செல்லும். ட்ரம்பின் தேர்தல் வெற்றியை ஜேர்மன் உயரடுக்கு "இன்னும் அதிக சுதந்திரமான வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கைக்கான அவர்களது திட்டங்களை ஊக்குவிக்க" ஒரு காரணமாக பயன்படுத்தி வருகின்றது என்பதையும், “இராணுவ வரவு-செலவு திட்டக் கணக்கை இரட்டிப்பாக்குவது, வெளிநாடுகளில் இன்னும் அதிகமாக நடவடிக்கைகளில் இறங்குவது மற்றும் ஆயிரக் கணக்கில் புதிய சிப்பாய்களை நியமிப்பது ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது” என்பதையும் IYSSE குறிப்பிட்டுள்ளது.
Schmoll அவரது கீழ்தரமான பத்திரிகையியல் உடன், அரசாங்கத்தின் போர் கொள்கை மீதான விமர்சனத்தை "குணாம்ச இழிவுபடுத்தலாக" மறுவடிவு கொடுப்பதன் மூலமாக அதை பழித்துரைக்க முயன்று வருகிறார். உண்மையில், IYSSE பிரச்சாரம் ஒருபோதும் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தனிப்பட்ட பேராசிரியர்களுக்கு எதிராக ஒரு தனிப்பட்ட பழி தீர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை, மாறாக அது ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகைக்கு எதிராக போராடி வருகிறது.
பல்கலைக்கழகத்தை புதிய போர்களுக்கான சித்தாந்த தயாரிப்பிற்காக மாற்றுவதில், பார்பெரோவ்ஸ்கி மற்றும் அரசியல் விஞ்ஞானி ஹெர்பிரட் முன்ங்லெர் போன்ற பேராசிரியர்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர். இதைத்தான் IYSSE அதன் துண்டறிக்கைகளிலும், பொது நிகழ்வுகளிலும் மற்றும் கல்வித்தகைமையா அல்லது போர் பிரச்சாரமா? என்ற நூலிலும் எடுத்துக்காட்டி உள்ளது. ஜேர்மனி ஒரு "ஆதிக்க சக்தியாக" மாற வேண்டுமென்றும், உலக அரசியலில் ஒரு முக்கிய பாத்திரம் வகிப்பதற்காக ஐரோப்பாவின் "வழிநடத்துபவராக" மாற வேண்டுமென்றும் முன்ங்லெர் வலியுறுத்துகிறார். அவர் இராணுவ தலையீடுகளை விரிவாக்குவதையும், தாக்கும் டிரோன்களைக் கொள்முதல் செய்வதையும் ஆதரிக்கிறார்.
பார்பெரோவ்ஸ்கி இன்னும் படி மேலே செல்கிறார். இவர் பயங்கரவாதிகளைக் கடுமையாக ஒடுக்குவதற்காக தொடர்ந்து வாதிடுகிறார். “அலட்சியம் என்பது கோழைத்தனத்தின் மற்றொரு வார்த்தை,” என்றவர் Basler Zeitung இல் எழுதினார். “வன்முறையைத் தவிர வேறெந்த மொழியும் விளங்கிக்கொள்ள முடியாதவர்களும் அதை உணர வேண்டியிருக்கிறது,” என்றார். 2016 இன் தொடக்கத்தில், அவர் அரசியல் சஞ்சிகை Cicero க்கு கூறுகையில், “பயங்கரவாதத்தை வன்முறை வழிவகைகளைக் கொண்டு மட்டுமே கையாள முடியும்,” என்றார். பயங்கரவாதிகளே பயங்கரவாதத்தை உணருமாறு செய்ய வேண்டும் என்றார்.
போருக்கு ஆதரவு திரட்டுவதை பார்பெரோவ்ஸ்கி அருவருக்கத்தக்க தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்துடன் இணைக்கிறார். ஜேர்மனிக்குள் பல மில்லியன் பேரை அனுமதித்தது "நமது சமூகத்திற்கு ஸ்திரப்பாடு மற்றும் நிலைப்புத்தன்மையை வழங்கும் நமது பாரம்பரிய தொடர்ச்சியை" தொந்தரவுக்கு உட்படுத்திவிட்டது என்கிறார். தேசிய அரசு மற்றும் அதன் எல்லைகளை பெருமைப்படுத்திய Basler Zeitung இல் வெளியான அவரது சமீபத்திய கட்டுரையை Björn Höcke உடனடியாக வரவேற்றார், இவர் தீவிர வலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) பக்கம் நிற்பவர் ஆவார்.
ஜேர்மனியில் இராணுவவாதம் மற்றும் தேசியவாதத்தின் மீள்வருகை, வரலாற்று அனுபவம் எடுத்துக்காட்டுவதைப் போல, அதிகரித்த எதிர்ப்பைச் சந்திக்கும் என்பதை முன்ங்லெரும் பார்பெரோவ்ஸ்கியும் நனவுபூர்வமாக அறிவார்கள். அதனால்தான் அவர்கள் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை மூடிமறைத்து வரலாற்றை திருத்தி எழுத விரும்புகிறார்கள். “நாம் ஒவ்வொன்றையும் குறை கூற வேண்டுமென்று நீங்கள் கருதினால், ஐரோப்பாவில் ஒரு பொறுப்பான கொள்கையை செயல்படுத்துவது சிரமம் தான். 1914 ஐ பொறுத்த வரையில், அதுவொரு புராணக்கதை ஆகும்,” என்று முன்ங்லெர் Süddeutsche Zeitung இல் ஏற்கனவே 2014 அறிவித்துள்ளார்.
நாஜி குற்றங்களை குறைத்துக் காட்டும் பணியை பார்பெரோவ்ஸ்கி எடுத்துள்ளார். பெப்ரவரி 2014 இல், அவர் நாஜி வக்காலத்துவாதி ஏர்ன்ஸ்ட் நோல்ட ஐ Der Spiegel சஞ்சிகையில் பாதுகாத்தார், அதில் அவர், “நோல்ட க்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது, வரலாற்றுரீதியில் பேசினால் அவர் சரியாகவே இருந்தார்,” என்று குறிப்பிட்டார். இந்த கருத்திற்கு ஆதாரமாக அவர் கூறுகையில், “ஹிட்லர் ஒரு மனநோயாளி அல்லர். அவர் வக்கிரமானவரும் அல்லர். தனது மேசையில் யூதர்களை அழிப்பது குறித்து எவரும் பேசுவதை அவர் விரும்பவில்லை,” என்றார். 1918 இல் ரஷ்ய துப்பாக்கிச் சூட்டை யூதஇனப்படுகொலையுடன் தொடர்புபடுத்தி அவர் கூறுகையில், “அடிப்படையில் இதுவும் தொழில்துறை படுகொலையை போன்ற அதே விடயம் தான்" என்றார்.
நாஜிக்களுக்கு வக்காலத்து வாங்கும் இத்தகைய கருத்துக்கள், பார்பெரோவ்ஸ்கியின் படைப்புகள் எங்கிலும் நூலிழையாக ஊடுவியுள்ளன. 2009 இல் அவர் எழுதுகையில், “நீங்கள் அவர்களது போருக்கு முந்தைய வரலாற்றை கூறுகையில்,” ஸ்ராலினிசம் மற்றும் நாஜிசத்திற்கு இடையிலான வித்தியாசங்கள் இல்லாமல்போய்விடும். “ஒரு தார்மீக முன்னோக்கில் இருந்து பார்த்தால், இந்த ஒப்பீடு போல்ஷிவிக்குகளுக்கு ஆதரவாக இல்லை,” என்றார். பார்பெரோவ்ஸ்கி கிழக்கு போர்முனையில் படைத்துறைசாரா மக்களுக்கு எதிராக ஹிட்லரின் இராணுவமான Wehrmacht நடத்திய வன்முறையை, செம்படை நடத்திய போரின் விளைவாக ஏற்பட்டதாக தொடர்ந்து முன்வைக்கின்றார்.
இந்த இயல்புக்கு மீறிய வரலாற்று பொய்களைத் தான் Schmoll விடாப்பிடியாக FAZ இல் பாதுகாக்கிறார். “வரலாற்று உண்மையை முடிவெடுக்கும்" உரிமை இருப்பதாக IYSSE கருதுவதாக பெண்மணி குற்றஞ்சாட்டுகிறார். நாஜிக்கள் அழிக்கும் போருக்கு திட்டமிட்டார்களா என்பது ஒரு வெளிப்படையான கேள்வியா! ஹிட்லர் ஒரு குரூரமான பாரிய படுகொலையாளரா என்பது ஒரு விவாதத்திற்குரிய விடயமா! போன்றவை பற்றி.
IYSSE இன் "பதிலுரைகளை" "தணிக்கை செய்வது" மற்றும் தடை விதிப்பது குறித்து அவர் ஓயாது பேசி வருவதுடன், வலதுசாரி நிலைப்பாடுகள் மீதான விமர்சனங்களை ஒடுக்குவதை விட அதிகமாக ஒன்றையும் Schmoll விரும்பவில்லை. அப்பெண்மணியின் பார்வையில், போர் மற்றும் இராணுவவாதத்திற்கு அழைப்புவிடுப்பதை விமர்சிக்கும் எவரொருவரும் தணிக்கையை நடைமுறைப்படுத்தி வருபவராகிறார். இந்த வலதுசாரி தத்துவவாதியை பொறுத்த வரையில், தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனப்பான்மையை ஏற்க விரும்பாத ஒருவர் கருத்து பரிவர்த்தனைகளை தடுக்க முயல்பவர் ஆகிவிடுகிறார். உண்மையில், இது கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஒரு விடயமே அல்ல, மாறாக எந்தவொரு விமர்சனத்தில் இருந்தும் ஆளும் உயரடுக்கின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகும்.
FAZ ஏற்கனவே 1980 களில் ஏர்ன்ஸ்ட் நோல்ட க்கு ஒரு களம் வழங்கி இருந்ததுடன், அவ்விதத்தில் வரலாற்றாளர்களின் விவாதத்தைத் (Historikerstreit) தொடங்கி வைத்தது. இப்போது அது அவரது பிற்போக்குத்தனமான ஆய்வு பொருள்களுக்கு புனர்வாழ்வளிக்கவும், அதிதீவிர வலதுசாரி மற்றும் இராணுவவாத நிலைப்பாடுகளை ஏற்புடையதாக ஆக்கவும் முயன்று வருகிறது. இந்த FAZ பத்திரிகையில் தான் பார்பெரோவ்ஸ்கி அகதிகளுக்கு எதிராக வெறுப்பை உமிழ்கிறார், முன்ங்லெர் தாக்கும் ட்ரோன்களுக்கு அழைப்புவிடுக்கிறார். இந்த பத்திரிகை மாணவர்களது விமர்சனத்திற்கு எதிராக அவ்விருவரையும் பாதுகாத்து வருகிறது.
இதற்கு காரணம் என்னவென்றால் FAZ அந்த பேராசிரியர்களின் கண்ணோட்டங்களை பகிர்ந்து கொள்கிறது என்பதுடன், அது ஜேர்மன் இராணுவவாதத்தின் உந்துசக்திகளில் ஒன்றாக விளங்குகிறது. இராணுவ செலவினங்களில் ஒரு பாரிய அதிகரிப்பு குறித்த அறிவிப்புமே கூட அப்பத்திரிகைக்கு போதுமானதாக இல்லை.
கடந்த நவம்பரில், FAZ இன் இணை-பதிப்பாசிரியர் Berthold Kohler அணு ஆயுதங்கள் கொள்முதல் செய்வதற்கு ஜேர்மனிக்கு அழைப்புவிடுத்தார். நவம்பர் 28 இல், ட்ரம்ப் தேர்வானதற்கான விடையிறுப்பில், அவர் "பாதுகாப்புத்துறை செலவினங்களின் அதிகரிப்பு, கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டு வருவதற்கு அழைப்புவிட்டு, முற்றிலும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விதத்தில், ஒருவரின் சொந்த அணுசக்தியுடனான அச்சுறுத்தும் தன்மை மீதான கேள்வி, ஜேர்மன் மூளைகளால் சிந்திக்கமுடியாதளவிற்கு சிவப்பு கோடுகளால் வரையப்பட்டுள்ளது" என்றார்.
இதுபோன்ற ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை FAZ இல் ஏறத்தாழ நாளாந்தம் காணலாம், மேலும் அவை இப்போது ஜேர்மன் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வேலைத்திட்டமாக உள்ளன. சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் இராணுவ வரவு-செலவு திட்டத்தை இரட்டிப்பாக்க அழைப்புவிடுக்கின்ற அதேவேளையில், வெளியுறவு மந்திரி சிக்மார் காப்ரியல் (சமூக ஜனநாயகக் கட்சி) ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளே மற்றும் வெளியே இராணுவ தகைமையை அதிகரிக்க கோருகிறார். முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி ஒவ்வொரு இடத்திலும் முந்தைய பிசாசுகளை மீண்டும் இழுத்து வந்து கொண்டிருக்கின்றன.
Schmoll இன் கருத்துரைகளில் உள்ள பொய்கள் மற்றும் நேர்மையின்மையின் மட்டம், சமூக முரண்பாடுகள் எந்தளவிற்கு ஆழமடைந்து உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஆளும் உயரடுக்குகள் ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புனர்வாழ்வளிக்க தீர்மானகரமாக இருக்கின்ற நிலையில், தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த மடத்தனத்தை நிராகரிக்கின்றனர். ஆளும் வர்க்கம் பொய்கள் மற்றும் வன்முறை மூலமாக அதன் கொள்கையை நிறைவேற்றுவதைத் தவிர அதற்கு வேறெந்த வழியும் இல்லை.
ஆகவே FAZ இன் இந்த எரிச்சலூட்டும் கட்டுரையை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கம் எந்த வழிவகையாவது பயன்படுத்தி மற்றும் சகல வழிவகைகளையும் பிரயோகித்து மக்களுக்கு எதிராக அதன் திட்டநிரலை திணிக்க விரும்புகிறது. தொழிலாளர்கள் அவர்களின் பங்கிற்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவாக சோசலிச சமத்துவக் கட்சியைக் (SGP) கட்டமைப்பதன் மூலமாக இந்த மோதலுக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும்.
கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:
ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி: ஒரு அதிதீவிர வலதுசாரி பேராசிரியர்
[29 March 2017]