Print Version|Feedback
US drops largest non-nuclear weapon on Afghanistan: A crime against humanity
ஆப்கானிஸ்தான் மீது அணு-சாராத மிகப்பெரும் குண்டை அமெரிக்கா போடுகிறது: மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றம்
Bill Van Auken and David North
14 April 2017
அமெரிக்க இராணுவம் தனது படைக்கலசாலையில் இருப்பவற்றில் அணு-சாராத மிகப் பெரும் குண்டு வகையை வியாழக்கிழமையன்று ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் போட்டிருப்பதானது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும். அமெரிக்க அரசாங்கமும் வெகுஜன ஊடகங்களும் நச்சு வாயு பிரயோகித்ததாக கண்டித்து சிரியா மற்றும் ரஷ்யா மீது ஒரு பொய்யான பரப்புரைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்து கொண்டிருந்த நிலையில், அமெரிக்க இராணுவமானது மிக அரக்கத்தனமான பாரிய வெடிமருந்து குண்டு வீசப்பட்டமை (Massive Ordnance Air Blast - MOAB) என்னும் ஆயுதத்தை ஆப்கானிஸ்தானில் பயன்படுத்துவதற்காய் நிலைநிறுத்திக் கொண்டிருந்தது.
குண்டுவீச்சின் பாதிப்பு குறித்து பென்டகன் வெகு அரிதான விவரங்களையே வெளியிட்டிருக்கின்றது என்ற போதும் கூட, நடந்ததாகச் சொல்லப்பட்ட சிரிய இரசாயன தாக்குதல் —இது எந்த விதத்திலும் நிச்சயமாக தெரிந்திருக்கவில்லை— உண்மையில் நடந்திருந்ததாகவே கொண்டாலும் கூட அதில் கொல்லப்பட்டவர்களைப் போல பல மடங்கு MOAB வீசப்பட்டதில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதை ஒருவர் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
ஹிரோஷிமா நாகாசாகி நகரங்கள் அணுகுண்டுவீசி அழிக்கப்பட்டு எழுபத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்பூகோளத்தின் மிக இரக்கமற்ற குற்றவியல் சக்தி அமெரிக்கா தான் என்பதை அது மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.
MOAB பயன்பாட்டின் தாக்கம் ஆப்கானிஸ்தானை கடந்து நீண்டு செல்லக் கூடியதாகும். அமெரிக்க இராணுவம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களின் பேரில் செய்யத் துணிந்தவற்றுக்கு அங்கே எந்த தடைகளும் இருக்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது, உண்மையை சொல்லப் போனால், அதைக் காட்டுவது தான் இந்த தாக்குதலின் பிரதான நோக்கமாகவும் இருக்கிறது.
கொரிய தீபகற்பம் தொடங்கி சிரியா மற்றும் கிழக்கு ஐரோப்பா வரையிலும் பதட்டங்கள் பெருகிச் செல்லும் நிலையின் உள்ளடக்கத்தில் இதனை கருதிப் பார்த்தால், ஆப்கானிஸ்தான் மீது மிகப்பெரும் குண்டுவீசி வெடிக்கச் செய்திருப்பதென்பது, ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்கு சவால் விடத் துணிகின்ற எந்தவொரு நாட்டிற்கும் அவற்றின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்து விடத்தக்க வன்முறையின் மட்டத்திற்கு எந்த வரம்புமில்லை என்ற ஒரு எச்சரிக்கை விடுப்பதையே குறித்து நிற்கிறது.
உத்தியோகபூர்வமாக GBU-43/B Massive Ordnance Air Blast என்று அறியப்படுவதும் பென்டகனால் MOAB அல்லது “அத்தனை குண்டுகளுக்கும் தாய்” என்று குறிப்பிடப்படுவதுமான இந்த ஆயுதம் நடுவானில் கிட்டத்தட்ட 20,000 பவுண்டுகள் வெடிமருந்தை வெடிக்கச் செய்து, அந்த காற்றுவெளியை தீப்பற்றச் செய்து, 1,000 யார்கள் (yards) சுற்றுவட்டத்திற்குள்ளாக இருக்கும் எதுவொன்றும் தெரியாவண்ணமான ஒரு பாரிய அதிர்வை உருவாக்குகிறது. இதன் அதிர்ச்சி அலைகள் 1.7 மைல்கள் சுற்றுவட்டம் வரையிலும் மனிதர்களைக் கொல்லும் திறம்படைத்தவையாகும். குறிவைக்கப்படும் மண்டலத்திற்குள் மாட்டிக் கொண்டவர்களுக்கு இந்த வெடிப்பின் பாதிப்பு ஒரு அணுஆயுதம் வெடித்ததற்கு நிகரான பாதிப்பைக் கொண்டிருக்கும்.
ஈராக் மீதான 2003 அமெரிக்க ஆக்கிரமிப்பை ஒட்டி கட்டவிழ்த்து விடப்பட்ட “அதிர்ச்சியில் பிரமிக்கச் செய்யும்” பிரச்சாரத்திற்காய் பயன்படுத்துவதற்கென வடிவமைக்கப்பட்ட இந்த ஆயுதம் 14 வருட காலத்தில் எந்த ஒரு சண்டையிலும் பயன்படுத்தப்படாது இருந்து வந்தது. சுமார் ஒரு மில்லியன் ஈராக்கிய உயிர்களை காவு கொண்ட ஒரு போர் மற்றும் ஆக்கிரமிப்பை பென்டகன் நடத்திய போதிலும் கூட, இந்த ஆயுதமானது அமெரிக்க மூலோபாய நோக்கங்களுக்கு சேவை செய்யக்கூடிய மிக அழிவுகரமான ஆயுதமாக பார்க்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இந்த படுபயங்கர ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான திட்டமிடல் ஒபாமா நிர்வாகத்தின் கீழேயே தொடங்கியது.
பென்டகன் தலைமையகம் கூறுவதன் படி, ISIS உடன் இணைந்த ஆப்கானிய பிரிவுகளால் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட பதுங்குக்குழி அமைப்புகள் மற்றும் சுரங்கப்பாதைகளை உருத்தெரியாமல் ஆக்குவதற்காக ஆப்கானிஸ்தானின் கிழக்கு நாங்கர்ஹார் மாகாணத்திலுள்ள ஒரு மூலையில் உள்ள மாவட்டத்தின் மீது இந்த உண்மையான “பேரழிவு ஆயுதம்” முதன்முறையாக வீசப்பட்டது.
வெறும் ISIS சின்னத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டிருந்த இஸ்லாமியவாத கெரில்லாக்கள் என்னும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஒரு சிறிய மற்றும் அதிக ஆயுதங்களற்ற ஒரு குழுவின் மீது இத்தகையதொரு பாரிய ஆயுதத்தை வீசுமளவுக்கு எந்த உடனடியான நியாயமோ, அதற்கு சளைத்த மூலோபாய நியாயமோ அங்கே ஏதுமில்லை. மாறாய், ஒரு அணு ஆயுத தாக்குதலுக்கு சற்றுக் குறைந்த ஒரு படுபயங்கர தாக்குதலை நடத்த முடிகின்ற அமெரிக்க இராணுவ வலிமையின் ஒரு கணிப்பிடப்பட்ட எடுத்துக்காட்டலுக்கான அத்தனை அடையாளங்களையும் இந்த தாக்குதல் கொண்டிருக்கிறது.
சிரியாவுக்கு எதிராய் அந்நாட்டு அரசாங்கத்தின் வான் தளத்திற்குள் 59 கப்பல்தள ஏவுகணைகளை ஏவி குறைந்தபட்சம் 15 சிரியர்கள் -இவர்களில் பெரும்பான்மையோர் அப்பாவிமக்கள்- கொல்லப்படக் காரணமாக அமைந்த இராணுவ மூர்க்கத்தனத்தின் ஒரு அப்பட்டமான நடவடிக்கையை அமெரிக்கா நடத்தி முடித்து வெறும் ஒரு வார காலம் தள்ளி இந்த குண்டுவீச்சுத் தாக்குதல் வந்திருக்கிறது.
அந்த தாக்குதலானது சிரிய அரசாங்கம் நடத்தியதாக பழிபோடப்பட்ட ஒரு இரசாயன ஆயுதத் தாக்குதலுக்கான பதிலடியாகக் கூறி நியாப்படுத்தப்பட்டது. இதுபோன்ற எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தியதை சிரியா மறுத்தது, மேற்கத்திய ஊடகங்கள் முடிவில்லாமல் பொய்கள் கூறி வந்தாலும், சிஐஏ ஆலும் சிரியாவில் அது ஆதரிக்கும் அல்கெய்தாவுடன் தொடர்புடைய போராளிகளாலும் அரங்கேற்றப்பட்டதாக இருக்கும் ஒரு ஆத்திரமூட்டலாக அது இருப்பதை நோக்கியே புற ஆதாரங்கள் அனைத்தும் கைகாட்டுகின்றன.
சிரியாவில் இட்டுக்கட்டப்பட்ட “இரசாயன ஆயுத” தாக்குதல் குறித்து அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் இடைவிடாது போர்ப்பிரச்சாரத்தை கக்கிக் கொண்டிருந்த நிலையிலும் கூட, அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தனது மிகப்பெரும் அணு-சாரா ஆயுதத்தை பிரயோகிப்பதற்காய் தயாரிப்பு செய்து கொண்டிருந்தது.
“இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாவதை தவிர்ப்பதற்கான ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை”யையும் தான் எடுத்ததாக பென்டகன் கூறியுள்ளது. மத்திய கிழக்கெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூறப்படுவதான இத்தகைய வாக்குறுதிகள் கொஞ்சமும் பயனற்றவையாகும். ஆரம்பகட்ட செய்திகளின் படி, குறி வைக்கப்பட்ட பகுதியின் அருகில் பல கிராமங்கள் உள்ளன, கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை பாரிய அளவில் இருப்பதற்கு அத்தனை சாத்தியங்களும் உள்ளன.
இத்தருணத்தில், இந்தத் தாக்குதலில் விளைந்த உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை என்ன என்பது ஒருவருக்கும் தெரியவில்லை, அமெரிக்க ஊடகங்களிடம் விட்டால், அது ஒருவருக்கும் சொல்லப்படாமலேயே போய் விடும். நியூ யோர்க் டைம்ஸ் போன்ற சிஐஏ தரப்பு அங்கங்களது தலையங்க ஆசிரியர்களும் சிரியாவில் இரசாயன ஆயுத ஆத்திரமூட்டல் விடயத்தில் அசாத் ஆட்சியின் மீதான அரசின் கண்டனங்களை அப்படியே ஒப்பித்த தொலைக்காட்சி செய்தி அலசல் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் ஆப்கானிஸ்தானில் பாரிய அமெரிக்க குண்டு வீசப்பட்டதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி முழுமையாக அலட்சியமாக இருக்கின்றனர்.
இதேபோல, ஈராக் மற்றும் சிரியாவின் மக்கள் மீது அமெரிக்காவின் குண்டுகளும் ஏவுகணைகளும் நிகழ்த்துகின்ற படுகொலைகளையும் ஊடகங்கள் பெரும்பாலும் உதாசீனம் செய்கின்றன. புதன்கிழமையன்று, மேற்கு மொசூலில் நடந்த அமெரிக்காவின் ஒரு வான்தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர், இவர்களில் பலர் படுகாயமடைந்திருந்தனர். அதே நாளில், ஈராக் நகரத்தின் மீதான அமெரிக்காவின் முற்றுகையால் ஏற்பட்டிருந்த ஒரு நாசத்தை ஐ.நா முகமை ஒன்று விவரித்திருந்தது, ஆயிரக்கணக்கில் இல்லையேல் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கிலேனும் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் மரணமடைந்திருக்கின்றனர்: “வீடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளும் சுகாதார மையங்களும் சேதப்பட்டுள்ளன, மின்சாரம் தண்ணீர் நிலையங்கள் உள்ளிட முக்கியமான பொது உள்கட்டமைப்புகள் நாசப்படுத்தப்பட்டுள்ளன” என்கிறது அந்தச் செய்தி. இந்த அழிவு 300,000 க்கும் அதிகமான மக்களை வீடிழந்த அகதிகளாக மாற்றியிருக்கிறது.
இதனிடையே, வடக்கு சிரியாவில், அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய “சொந்த அணியில் இருந்தான” வான்தாக்குதலில் 18 குர்து போராளிகள் கொல்லப்பட்டனர், அதேநேரத்தில் அமெரிக்க குண்டு ஒன்று அல் கெய்தாவின் ஆயுதக் கிடங்கு ஒன்றை தாக்கியதில் இரசாயனப் பொருட்கள் பரவி நூற்றுக்கணக்கிலான அப்பாவி மக்கள் அதில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிரிய அரசாங்கம் தெரிவித்தது. இந்த சம்பவங்கள் எதற்குமே எந்த முக்கியத்துவமான செய்திக்கவனமும் கொடுக்கப்படவில்லை, மாறாக சிரிய அரசாங்கத்தை சிக்க வைக்கின்ற இரசாயனத் தாக்குதலாக சொல்லப்படும் ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பவர்களது அறவியல் சீற்றத்தை தூண்டி விடும் வேலையை அவை சளைக்காது செய்கின்றன.
“மனித உரிமைகள்” குறித்து எவரொருவருக்கும் பாடமெடுப்பதற்கோ, அதற்கும் சற்றுக் குறைந்து “பயங்கரவாத”த்தின் எதிரிகளாக காட்டிக் கொள்வதற்கோ இவர்கள் யார்? அமெரிக்க ஏகாதிபத்தியம், தானே சர்வதேச சட்டப்படியான, அதற்கடுத்து சற்றுக் குறைவாய் தார்மீகரீதியான, எந்த கடப்பாடுகளுக்கும் முற்றிலும் ஆட்படக் கூடியதில்லை என்பதை மீண்டுமொருமுறை உலகத்திற்கு எடுத்துக்காட்டியிருக்கிறது. உலக அரங்கில் அதன் வன்முறையான மற்றும் கொள்ளையிடும் நடவடிக்கைகளானவை அமெரிக்க முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் குற்றவியல்தனமான மற்றும் ஒட்டுண்ணித்தனமான தன்மையின் -இது டொனால்ட் ட்ரம்ப் என்ற வெறுப்புக்குரிய ஆளுமையில் உருவடிவம் பெற்றுள்ளது- நேரடி வெளிப்பாடாகும்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, அங்கே தலிபான் அரசாங்கத்தைக் கவிழ்த்து, தனது சொந்த கைப்பாவை ஆட்சியை அமர்த்தி, அதுமுதலாய் இரத்தம்பாய்ந்த போர் மற்றும் ஆக்கிரமிப்பினை தொடர்ந்து நடத்தி வந்திருப்பதற்கு பதினைந்தரை ஆண்டுகளுக்குப் பின்னராக இந்த சமீபத்திய அட்டூழியம் வந்து சேர்ந்திருக்கிறது. வழமை முறையிலான மதிப்பீடுகள் 2001 முதலாக ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 200,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பிடுகின்றன, இன்னும் நூறாயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றனர், மில்லியன் கணக்கானோர் அகதிகளாகி இருக்கின்றனர். ஆப்கான் மக்களை அரைக்காலனித்துவ அமெரிக்க மேலாதிக்கத்திற்கு ஆட்படுத்துவதும் மத்திய ஆசியாவின் எரிசக்தி வளம் செறிந்த பிராந்தியத்தின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முனைப்பை முன்செலுத்துவதுமே ஆரம்பத்தில் இருந்தே இந்தத் தலையீட்டின் நோக்கமாய் இருந்து வந்திருக்கிறது.
இந்தக் குண்டுவீச்சுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சமயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆப்கானிஸ்தானில் அமைதித் தீர்வு ஒன்றுக்கு ஏப்ரல் 14 அன்று மாஸ்கோவில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையொட்டி இது நடந்திருக்கிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் இணைந்து இந்த கூட்டத்திற்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது, இந்தியா மற்றும் ஈரான் உள்ளிட ஒன்பது பிற நாடுகளும் பங்கேற்க யோசனை வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் தாங்களும் கலந்து கொள்ளக் கூடும் என தலிபான்கள் சைகை காட்டியிருந்தனர். அழைப்பு விடுக்கப்பட்டபோது பங்கேற்பை உறுதிசெய்ய அமெரிக்கா தவறியது என்பதோடு, தலிபான்களுக்கு ரஷ்யா ஆதரவளிப்பதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்க இராணுவத் தளபதிகள் தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர்.
சிரியாவின் வான்பகுதியிலோ, வட கொரியாவுக்கு எதிரான இராணுவ தாக்குதலின்போதோ அல்லது ரஷ்யாவின் மேற்கு எல்லைகள் மீதான ஒரு ஆத்திரமூட்டலின் போதோ அமெரிக்க மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் இடையே ஒரு ஆயுத மோதல் நடைபெறுமாயின், ஆப்கானிஸ்தானில் விழுந்த ஆயுதத்திற்கு அடுத்த படியாக, ஒரு அணு ஆயுதப் பிரயோகம் தான் இருக்கப் போகிறது.
அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவம் இந்த பூகோளத்தை ஒரு மூன்றாவது, அணு ஆயுத உலகப்போரினால் சூழச் செய்வதை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த திகிலூட்டும் நிகழ்வுகளுக்கு முழுத் தீவிரத்துடனும் மன உறுதியுடனும் பதிலிறுப்பு செய்ய வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் ஒரு வெகுஜன போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் பகுதியாக ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக்கில் சமீபத்தில் அமெரிக்கா நடத்தி வருகின்ற அட்டூழியங்களுக்கு எதிராக அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டாக வேண்டும். உலக ஏகாதிபத்தியத்தை அரசியல்ரீதியாக தொடர்ச்சியாக எதிர்த்து வரும் சோசலிச சமத்துவக் கட்சியையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக கட்டியெழுப்புவதற்கான அவசியம் இந்தப் போராட்டத்தின் மையக்கருவாக அமைந்திருக்கிறது.