Print Version|Feedback
The bombing of Syria: A new chapter in the US drive for global hegemony
சிரியா மீதான குண்டுவீச்சு: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முனைப்பில் ஒரு புதிய அத்தியாயம்
Bill Van Auken
7 April 2017
சிரியா மீதான கப்பல்தள ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பாய் ஈராக்கின் ஆக்கிரமிப்புடன் அமெரிக்கா தொடங்கியிருந்த உலக மேலாதிக்கத்திற்கான அதன் போரில் அது ஒரு புதிய அத்தியாயத்தை திறந்திருக்கிறது.
இந்தத் தாக்குதல் சிரிய அரசாங்கம் நச்சு வாயுவைப் பயன்படுத்தியதற்கான ஒரு பதிலிறுப்பு என்பதான கூற்று ஒரு அப்பட்டமான பொய் ஆகும். 1999 இல் சேர்பியாவுக்கு எதிரான வான் போரில் போல, 2001 இல் ஆப்கானிஸ்தான் மற்றும் 2003 இல் ஈராக் மீதான படையெடுப்பில் போல, அத்துடன் 2011 இல் லிபியா மீதான தாக்குதலில் போல, மறுபடியும், அமெரிக்கா இன்னொரு நாட்டின் இறையாண்மையை மீறுவதை நியாயப்படுத்துவதற்கு ஒரு சாக்கினை இட்டுக்கட்டியிருக்கிறது.
சிரியா மீதான குண்டுவீச்சு, நடைபெற்று வருகின்ற உள்நாட்டுப் போரில் அமெரிக்காவின் நீண்டகால திட்டமிடல் கொண்ட நேரடி இராணுவத் தலையீட்டை திரும்பப் பெறுவதில் விளைந்த 2013ல் நடந்த ரஷ்யாவுடன் பேசிமுடிக்கப்பட்டிருந்த உடன்பாட்டை அமெரிக்கா ஒருதரப்பாக கைவிட்டிருப்பதாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2013 செப்டம்பரில் எச்சரித்ததை போல, “போரின் தள்ளிவைப்பு ஒரு பெரிய போர் வெடிப்பதன் சாத்தியத்தை, இன்னும் சொன்னால், தவிர்க்கவியலாத தன்மையை, குறைத்து விடவில்லை. அமெரிக்காவில் இருந்து வருகின்ற வம்பிழுப்பான வசனங்கள் தெளிவாக்குவதைப் போல, ‘இராணுவத் தெரிவு’ மேசை மேல் இருக்கவே செய்கிறது. அதேபோல சிரியா மட்டுமே இராணுவத் தாக்குதலுக்கான ஒரே இலக்கும் அல்ல. சிரியாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகள் ஈரானுடனான ஒரு மோதலுக்குக் களம் அமைக்கும். இன்னும் முன்னே சென்று பார்த்தால், உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முனைப்பின் தர்க்கமானது ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரு மோதலுக்கு இட்டுச் செல்கிறது. பெரும் ஏகாதிபத்திய சக்திகளது —உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஜேர்மனி— நலன்களின் இடையிலான மோதல்கள் சில குறிப்பிட்ட நிலைமைகளில் ஆயுத மோதலாக உருமாறக் கூடிய சாத்தியத்தையும் விலக்கி வைத்து விட முடியாது.” [1]
இந்த எச்சரிக்கை ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், இந்தத் தாக்குதல்கள், சென்ற நவம்பரின் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்க அரசின் உயர் அடுக்குகளுக்குள்ளாக கொதித்து வந்திருக்கும் வெளியுறவுக்கொள்கை தொடர்பான கடும் மோதல் குறைந்தபட்சம் பகுதியாகவேனும் தீர்க்கப்பட்டிருப்பதை குறிக்கிறது. பென்டகன் மற்றும் மத்திய உளவு முகமையின் மிக சக்திவாய்ந்த கன்னைகளின் ஆதரவுடன், சிரியாவுக்கு எதிரான போருக்கும் ரஷ்யாவுக்கு எதிராய் தீவிரப்பட்ட மோதலுக்குமான ஜனநாயகக் கட்சியின் கோரிக்கை நடந்தேறியிருக்கிறது. ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகையானது சில நாட்களுக்கு முன்பாக அது பகிரங்கமாக அறிவித்திருந்த ஒரு கொள்கையில் இருந்து ஒரு திடுக்கிடச் செய்யும் தலைகுத்துக்கரண மாற்றத்தை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த அபிவிருத்திகள் எத்தனை வேகமாக கட்டவிழ்ந்திருக்கின்றன என்பதே மிக அசாதாரணமானதாகும். பெரும்பகுதி, அல் கெய்தாவின் சிரிய துணையமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் வடமேற்கு இட்லிப் மாகாணப் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில், சுமார் 70 பேர் நச்சு வாயுவால் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு முதல் செய்தி வெளியான 48 மணி நேரத்திற்குள்ளாக இந்த கப்பல்தள ஏவுகணைகள் சிரியாவுக்கு எதிராக செலுத்தப்பட்டன.
சம்பவம் தெரியவந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே, அமெரிக்க பெருநிறுவன ஊடகங்கள் நடவடிக்கையில் இறங்கின, ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்தின் அரசாங்கமே குற்றவாளி என்று கூறி கண்டனம் செய்தன. நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் பிற முக்கிய செய்தித்தாள்களின் தலையங்க ஆசிரியர்களும், அவர்களுடன் சேர்ந்து தொலைக்காட்சி செய்திநிகழ்ச்சிகளின் தலைமைத் தொகுப்பாளர்களும் அனைவருமே இதே திரைக்கதையை முன்நிறுத்தி, தார்மீக ஆவேசக் குரல்கொடுத்ததோடு அமெரிக்கா பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கோரினர். ஒரு தெளிவான முன்னேற்பாடுடனான போர் பிரச்சார நடவடிக்கை நடத்தப்படுவதற்கு முன்பாக ஊடகங்கள் முன்கூட்டியே பாடம் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையே ஒவ்வொன்றும் சுட்டிக்காட்டுகிறது.
புதன்கிழமையன்று, இந்த ஊடகக் கதையாடலை வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் எதிரொலித்த ட்ரம்ப், “ஆசாத் ஆட்சியின் கொடூர நடவடிக்கைகள் சகித்துக் கொள்ளப்பட முடியாது” என்று அறிவிக்க, அதேநேரத்தில் ஐ.நா.வுக்கான அவரது தூதர், நிக்கி ஹேலி, ஒருதரப்பான அமெரிக்க இராணுவ நடவடிக்கையெனும் பகிரங்க மிரட்டலை விடுத்தார். ட்ரம்ப்பும் இதே நிலைப்பாட்டை வியாழக்கிழமை இரவு தனது Mar-a-Lago உல்லாசவிடுதியில் இருந்து ஊடகங்களுக்கு விடுத்த ஒரு அறிக்கையில் மீண்டும் கூறினார்.
எந்த இரசாயனத் தாக்குதலுக்கும் பொறுப்பாகவில்லை என சிரிய அரசாங்கம் மறுத்திருப்பதை வெள்ளை மாளிகையும் ஊடகங்களும் ஒட்டுமொத்தமாய் நிராகரித்திருக்கின்றன, சிரியாவில் இருக்கும் அல் கெய்தா சக்திகள் இரசாயன ஆயுதங்களது தாக்குதலை நடத்திவிட்டு பழியை அரசாங்கத்தின் மீது தூக்கிப் போடும் செயல்வரலாறுக்கும் இதே நிராகரிப்பு தான்.
இரசாயனத் தாக்குதலாக சொல்லப்படும் ஒன்றிற்கு யார் பொறுப்பு என்ற வழக்கு, ஒரு வீதிச் சண்டையை புலனாய்வு செய்ய நியூயோர்க் போலிஸ் துறை எடுத்துக் கொள்கின்ற கால நேரத்தை விடவும் குறைவான காலத்தில் “தீர்வு காணப்பட்டுள்ளது”. தீர்ப்பும் வந்து விட்டது தண்டனையும் இப்போது நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த தடயவியல் துரித நடவடிக்கையை ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஜேமனில் வான் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அப்பாவிமக்கள் கொல்லப்படும் போது பயன்படுத்தப்படுகின்ற வழிமுறைகளுடன் ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்றே பென்டகன் வழக்கமாய் சொல்லுகிறது. ஒரு விசாரணையை தவிர்க்கமுடியாது என்று ஆகின்ற சந்தர்ப்பங்களில், அது பொதுவாக பல வாரங்கள் எடுத்துக் கொண்டு அந்தப் படுகொலையை மறைப்பதாக இருக்கிற அல்லது இறந்தோரின் உண்மையான எண்ணிக்கையில் சிறிய துக்கடாவை மட்டுமே செய்தியாக அளிக்கின்ற ஒரு அறிக்கையை அது வெளியிடுகிறது.
இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படும் இடத்திற்கு 200 மைல் கூட மிகாதவொரு தூரத்தில், மொசூல் நகரத்தில், அமெரிக்கா நூற்றுக்கணக்கில் ஈராக்கிய ஆண், பெண், குழந்தைகளை கொன்றுகுவித்திருக்கிறது, வெடிகுண்டுகளையும் ஏவுகணைகளையும் கொண்டு ஒட்டுமொத்தக் குடும்பங்களையும் புதைத்திருக்கிறது, ஒட்டுமொத்த நகரக் கட்டுமானங்களையும் அழித்திருக்கிறது. இந்த தாக்குதல்களுக்கெல்லாம் பின்னர் இறந்தவர்கள் உடல் துண்டாகிக் கிடப்பதையோ உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதையோ குறித்த எந்த செய்திக்காட்சியையும் அமெரிக்க பெருநிறுவன ஊடகங்கள் ஒளிபரப்புவதில்லை என்று சொல்லவும் அவசியமில்லை. சிரியாவில் இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுவது குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கின்ற இந்த தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளர்கள் எவரும் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்பட்டோருக்காக ஒரு துளியேனும் தார்மீகக் கோபத்தை கொண்டுவர முடிந்தது கிடையாது.
அமெரிக்காவின் நீண்டகாலமாய் திட்டமிடப்பட்டு வந்திருக்கும் ஒரு இராணுவத் தலையீட்டை தொடக்குவதற்கான ஒரு இட்டுக்கட்டப்பட்ட சாக்கே சிரிய சம்பவம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிரியாவில் நாச வேலைகளுக்கும் அல்கெய்தாவைச் சுற்றி அமைந்திருக்க கூடிய அமெரிக்க பினாமிப் படைகளுடனான ஒத்துழைப்பிற்கும் பொறுப்பாக இருக்கும் சிஐஏவின் பிரிவு தான், இட்லிப்பில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டுமாயின் புலனாய்வு செய்ய வேண்டிய முதல் இடம் ஆகும்.
உத்தியோகபூர்வ கதையை மறுப்பதற்கு நேரம் அதிகமாய் செலவிட அவசியப்படுவதில்லை என்ற இந்த இடத்திற்கு நாம் முன்னரே பலமுறை வந்தடைந்திருக்கிறோம். 14 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று பேரழிவு ஆயுதங்கள் குறித்த பொய்களைக் கூறி அமெரிக்கா ஈராக் மீது போர் நடத்தி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காவு வாங்கி இன்னும் மில்லியன்கணக்கான மக்களை அகதிகளாக மாற்றிய ஒரு பாரிய படுகொலைக்குக் காரணமாகியது. 2011 இல் லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக வேண்டி நடத்தப்பட்ட அமெரிக்க-நேட்டோ போருக்குமான சாக்கையும் இதேபோன்ற பொய்களே வழங்கின.
இந்த படுபயங்கர முன்னுதாரணங்களை குறித்து ஊடகங்கள் மூச்சு விடுவதில்லை. அதேபோல இந்த புதிய அமெரிக்கப் போரானது அல்கெய்தாவுடன் கூட்டு வைத்துத்தான் நடத்தப்படுகிறது என்பது குறித்தும் கோடு காட்டுவதும் கூட கிடையாது. ஈராக் போரின் போதான “உடனிணைந்த” செய்திசேகரிப்பு நாட்கள் எல்லாம் இப்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்தது போலாகி விட்டது. சுதந்திரமான செய்தி சேகரிப்பு என்பதன் மிகச்சிறிய நடிப்பையும் கூட ஊடகங்கள் விட்டொழித்து விட்டன.
அமெரிக்காவின் ஆளும் சிலரணியானது மத்திய கிழக்கிலான தனது மேலாதிக்கத்தை கட்டிக்காக்கவும் தனது பிராந்திய மற்றும் உலக எதிரிகளுக்கு எதிராக, குறிப்பாக ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக, நெருக்கித் தள்ளுவதற்கும் இராணுவ மூர்க்கத்தின் இன்னுமொரு பிரச்சாரத்திற்குக் கோரியது.
ஈராக் படையெடுப்பைப் போலவே, சிரியாவுக்கு எதிரான தலையீடு ஒரு போர்க் குற்றமாகும். ஆசாத் ஆட்சியை கவிழ்த்து அமெரிக்காவின் ஒரு கைப்பாவை ஆட்சியை அமர்த்தும் நோக்கத்துடன் அமெரிக்காவே தூண்டி விட்டு, ஆயுதமளித்து, நிதியாதாரமளித்த ஒரு உள்நாட்டுப் போரில்தான் அது இப்போது தலையீடு செய்து கொண்டிருக்கிறது. இஸ்லாமிய பினாமிப் படைகளைக் கொண்டு இந்த நோக்கங்களை சாதித்துக் கொள்ளும் முயற்சியானது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்களைக் காவுவாங்கி ஐந்து மில்லியன் சிரிய மக்களை அகதிகளாக்கிய பின்னர் தோல்வி கண்டு விட்டிருக்கிறது. அசாத்திற்கு ரஷ்யாவும் ஈரானும் ஆதரவாய் இருந்தது மட்டுமே இந்தத் தோல்விக்குக் காரணமில்லை, மாறாக பெரும்பான்மையான சிரிய மக்கள் அல்கெய்தாவுடன் தொடர்புடைய அமெரிக்க-ஆதரவுக் கூறுகள் விடயத்தில் உணர்ந்த அச்சமும் வெறுப்பும் கூட காரணமாகும்.
ட்ரம்ப் நிர்வாகம் தனது நிலைப்பாட்டில் எடுத்திருக்கும் இந்த ஒரேயடியான மாற்றமானது அமெரிக்க முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்குள்ளாக போருக்கு ஆதரவாக எழுந்திருக்கும் ஒரு தீவிரமான அழுத்தத்தின் அளவுகோலாக இருக்கிறது. கூறப்படும் இந்த சம்பவம் இட்லிப்பில் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, சிரியாவில் ஆசாத்தின் ஆட்சி என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒரு நிதர்சனமாக இருந்ததாக நிர்வாகத்தின் அதிகாரிகள் கூறிக் கொண்டிருந்தனர். ட்ரம்ப்பே கூட சிரியா விவகாரத்திலான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கையில் தனக்கு உடன்பாடில்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தார், அங்கே ISIS உடன் சண்டையிடுவது மட்டுமே அமெரிக்காவின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
ஜனநாயகக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த நியூ யோர்க் டைம்ஸ் போன்ற ஊடகங்களும் துல்லியமாக இந்தப் பிரச்சினை தொடர்பாக, அதாவது சிரிய அரசாங்க விடயத்தில், இன்னும் முக்கியமாய், அதன் பிரதான கூட்டாளியான ரஷ்யா விடயத்தில் மென்மையாக நடந்து கொள்வதாக சொல்லப்படுவது குறித்தே, ட்ரம்புக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வந்திருக்கின்றன.
நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் வென்றிருப்பாராயின், அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அமெரிக்க குண்டுகளும் ஏவுகணைகளும் சிரிய இலக்குகளை நோக்கிப் பாய்ந்திருக்கும் என உறுதியாக அனுமானிக்க முடியும். அத்தகையதொரு நடவடிக்கையை எடுப்பதற்கு ட்ரம்ப் செய்த தாமதம் தான் ரஷ்யாவுடன் அவருக்கு தொடர்புகள் உள்ளதாகக் கூறி அவரைக் கண்டனம் செய்வதில் வோல் ஸ்ட்ரீட், அமெரிக்க இராணுவம் மற்றும் உளவு எந்திரம் ஆகியவற்றின் அரசியல் கருவியான ஜனநாயகக் கட்சி செய்த கூச்சல்குரலின் கீழமைந்திருந்தது.
ட்ரம்ப் இப்போது வழிக்குக் கொண்டுவரப்பட்டு விட்டார். இந்தக் கொள்கைமாற்றத்துடன் கைகோர்த்து வெள்ளை மாளிகை ஊழியர்களிலான ஒரு மாற்றியமைப்பும் நடந்திருக்கிறது. இராணுவம் தனது அதிகாரத்தை மேலதிகமாய் திட்டவட்டம் செய்ததன் மத்தியில் ஸ்டீபன் பானன் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறார்.
இது முழுக்க எதிர்பார்க்கப்பட்ட பாதைமாற்றமாகும். சென்ற டிசம்பரில், ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் தலைமைப் பதவிகளுக்கு அடுத்தடுத்து இராணுவத்தின் மூத்த அதிகாரிகளின் பெயரை அறிவித்த சமயத்தில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு கருத்திட்டது: “ட்ரம்ப் முன்னாள் தளபதிகளை தேர்வு செய்வதை பொறுத்தமட்டில், இறுதியில் தாங்கள்தான் கொள்கையை உத்தரவிடும் நிலையில் இருப்போம் என்ற நம்பிக்கையுடன் அந்த தளபதிகளே அவரது நிர்வாகத்தில் இணைவதற்கு தெரிவு செய்யலாம்.”
அதன் பங்காக, ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கையானது, ஜனாதிபதிகள் மாறுவதால் புதிய மற்றும் முன்னினும் பெரிய போர்களை நோக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான முனைப்பு மாறிவிடும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அரசாங்கத்தில் அப்பாவித்தனமாய் நம்பிக் கொண்டிருந்தவர்களது தவறான முன்னோக்கை அம்பலப்படுத்தி, நொருங்கிக் கிடக்கிறது.
சிரியாவுக்கு எதிரான போருக்கு மக்கள் ஆதரவு கிடையாது. அமெரிக்காவிலான அரசியல் உலுக்கலும் புதுப்பித்த இராணுவ மூர்க்கத்தனத்திற்கான தயாரிப்புகளும் அமெரிக்க மக்களின் முதுகிற்குப் பின்னால் கட்டவிழ்ந்திருக்கின்றன. மக்களின் மனோநிலைக்கு ஆளும் ஸ்தாபகம் காட்டுகின்ற அலட்சியமானது இந்த புதிய வலிந்துதாக்கும் போர் குறித்து ஒரு கருத்துக்கணிப்பு கூட இல்லாத நிலையில் பிரதிபலிக்கின்றது.
நாடாளுமன்றத்திலும் சரி அல்லது ஊடகங்களிலும் சரி போருக்கு எதிராக எந்த விமர்சனக் குரல்களும் எழுவதில்லை. ஒரு விவாதத்தின் நடிப்பும் கூட அங்கே இருக்கவில்லை. நேற்று வரை ட்ரம்ப்பைக் கண்டனம் செய்த ஜனநாயகக் கட்சியினர் இப்போது தங்களது “தலைமை படைத்தளபதி” மற்றும் இராணுவத்திற்கு இருகட்சியும் ஆதரவளிப்பதைக் காட்ட அணிவகுத்து வருகின்றனர். இதில் சிறந்த உதாரணமாய் அடிக்கடி ட்ரம்ப்பை விமர்சனம் செய்பவரான நாடாளுமன்றவாதி ஆடம் ஸ்கிஃபை (ஜனநாயகக் கட்சி, கலிபோர்னியா) கூறலாம், “ட்ரம்ப், ஜெனரல் மாட்டிஸ் மற்றும் ஜெனரல் மெக்மாஸ்டரைச் சார்ந்திருந்தார் என்பதை அறிவது கூடுதல் நிம்மதியான உணர்வைக் கொடுக்கிறது” என அவர் ஒப்புக் கொண்டார்.
ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், “ஜனநாயக சோசலிசவாதி” என்று சுய-விவரிப்பு செய்து கொண்டவரும், கட்சியின் “முற்போக்கு” அணியாக சொல்லப்படுவதன் தலைவருமான பேர்னி சாண்டர்ஸ் இந்த போர்த் திட்டங்கள் குறித்து வாயே திறக்கவில்லை, ஏனென்றால் அவர் அவற்றை ஆதரித்தார்.
ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சி காட்டிய ஒட்டுமொத்த எதிர்ப்புமே இந்தப் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ட்ரம்ப் புலம்பெயர்ந்தவர்களை வேட்டையாடுவது, திருப்பியனுப்புதல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான மொத்தமான தாக்குதல்கள் ஆகியவை குறித்த அத்தனை பேச்சுக்களுமே போர் பிரச்சினையில் ஒன்றுபடும் நலனின் பேரில் விரைவாக மறைந்து போய் விடும்.
சிரியா மீதான ஒரு தாக்குதலானது ஒரு இன்னும் விரிந்த போராக மற்றும் உலகப் பேரழிவுப் போரின் சாத்தியமாக விரிவடையும் ஒரு நேரடி அச்சுறுத்தலை தன்னில் தாங்கி நிற்கிறது. அணுஆயுத சக்தியான ரஷ்யாவின் இராணுவ வீரர்கள் சிரிய மண்ணில் அமெரிக்க ஏவுகணைகளால் கொல்லப்படும் பட்சத்தில் அந்நாட்டின் எதிர்வினை என்னவாக இருக்கக் கூடும்?
ஆபத்தில் இறங்க அமெரிக்க ஆளும் வர்க்கம் விருப்பத்துடன் இருக்கிறது. உலகப் பொருளாதாரத்தின் மீது ஒருகாலத்தில் தான் கொண்டிருந்த சவாலற்ற மேலாதிக்கம் நாளடைவில் வீழ்ச்சி கண்டிருக்கும் நிலைக்கு முகம்கொடுக்கின்ற அது, தனது உலக மேலாதிக்கத்தை திட்டவட்டம் செய்வதற்கான வழிமுறையாக மேலும் மேலும் தனது இராணுவ வலிமையை நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகையதொரு பாதை தவிர்க்கவியலாமல் மனிதகுலத்தின் உயிர்வாழ்க்கைக்கே அச்சுறுத்தலாகத்தக்க ஒரு புதிய உலகப் போருக்கு இட்டுச்செல்கிறது என்பதைக் கொண்டு அதன் வழியை அது மாற்றிக் கொள்வதாக இல்லை.
அமெரிக்காவின் சிலரதிகார அணியின் நடவடிக்கைகள், “கண்ணை மூடிக் கொண்டு பொருளாதார மற்றும் இராணுவ பேரழிவை நோக்கி துரிதவேகத்தில் செல்கிறார்கள்” என்று இரண்டாம் உலகப் போரை ஒட்டி உலக முதலாளித்துவம் குறித்த ட்ரொட்ஸ்கியின் வருணனையையே மிகவும் நினைவில் கொண்டுவருவதாய் இருக்கிறது.
வெடித்திருக்கும் மோதல் டோமாஹாக் ஏவுகணைகளுடன் முடிந்து விடப் போவதில்லை. உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முனைப்பு என்பது, முந்தையதை விடவும் பொறுப்பற்றதாய் அடுத்தது என முடிவில்லாமல் அடுத்தடுத்த இராணுவ அதிகரிப்புகள் இறுதியில் ஒரு பேரழிவுக்கு இட்டுச் செல்வதற்கு வெளியில் தீர்க்கப்படவியலாது.
தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பப்படுவதன், மற்றும், போரின் மூல காரணமான முதலாளித்துவ சமூக ஒழுங்கை ஒழிப்பதை அது தனது நோக்கமாகக் கொள்வதன் எரியும் அவசியத்தையே இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
[1] David North, A Quarter Century of War: The US Drive for Global Hegemony 1990 -2016