Print Version|Feedback
WikiLeaks reveals vast CIA spying, cyberwar operation
மிகவிரிந்த சிஐஏ வேவுபார்ப்பையும், இணையப் போர் நடவடிக்கையையும் விக்கிலீக்ஸ் வெளிக்கொண்டுவருகிறது
By Bill Van Auken
8 March 2017
ஒருபக்கத்தில், ட்ரம்ப்புக்கு ஆதரவாக ரஷ்ய இணைய ஊடுருவல் நடைபெற்றதாக ஜனநாயகக் கட்சியின் ஊர்ஜிதமற்ற கூற்றுக்களும், மறுபுறத்தில் தன்னுடைய பிரச்சாரத்திற்கு ஒபாமாவினால் ஊறு விளைவிக்கப்பட்டதாக ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுமாய் அமெரிக்க அரசு எந்திரத்திற்குள்ளும் ஆளும் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளும் நடைபெற்று வந்த கடுமையான உள்போராட்டமானது, செவ்வாயன்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட சிஐஏ ஆவணங்களின் ஒரு பாரிய வெளியீட்டின் முன்பாக மங்கிப் போனது.
”வரலாற்றின் மிகப்பெரும் உளவு வெளியீடு” என்று விக்கிலீக்ஸ் விவரித்திருக்கின்ற ஒன்றில் இடம்பெற்றிருக்கும் 8,761 ஆவணங்கள் அமெரிக்க மற்றும் ஒட்டுமொத்த உலகத்தின் மக்களுக்கு எதிராக செலுத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு, இணைய ஊடுருவல் மற்றும் இணையப் போரின் ஒரு விரிந்த அமைப்புமுறையை தோலுரித்துக் காட்டத் தொடங்கியிருக்கின்றன.
இந்த இரகசிய-விரோத அமைப்பானது முதல் ஆவண சேகரத்தை “இயர் ஜீரோ” (Year Zero) என்று அழைத்தது, “வால்ட் 7” (Vault 7) என்று அழைக்கப்படக் கூடிய ஒரு பெரிய திட்டத்தின் கீழ் மேலதிக சிஐஏ ஆவணங்கள் தொடர்ந்து வர இருக்கின்றன என்று அது தெரிவித்தது.
இந்த கோப்புகள் சிஐஏ முகவர்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் இருதரப்பையும் கொண்ட கிட்டத்தட்ட 5,000 ஊடுருவல் செய்பவர்கள் உள்ளிட்டோர் பணிபுரியும் ஒரு மிகப்பெரிய மற்றும் அதிகம் அறியப்படாத கட்டளையகமான சிஐஏ இன் இணைய உளவு மையத்தில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். 2013 இல் தேசியப் பாதுகாப்பு முகமையின் உலகளாவிய வேவு நடவடிக்கையை அம்பலப்படுத்தும் இரகசிய ஆவணங்களை கசிய விட்ட எட்வார்ட் ஸ்னோவ்டெனின் விவகாரத்தில் போலவே, சிஐஏ இன் ஆவணங்களும் இம்முகமையின் இணையப் போர் நடவடிக்கைகளின் வீச்சு மற்றும் நோக்கம் குறித்துக் கவலை கொண்ட முகமையின் ஒரு முன்னாள் ஊடுருவல்காரர் அல்லது ஒப்பந்ததாரரிடம் இருந்தே வந்திருக்கின்றன என்பது வெளிப்படை.
ஆப்பிள் ஐ போன்கள், கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் (இது 85 சதவீத ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படுகிறது) மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸில் இயங்கும் சாதனங்கள் உள்ளிட அத்தனை சாதனங்களது கட்டுப்பாட்டையும் கைப்பற்ற அனுமதிக்கக் கூடிய ”ஆயிரத்துக்கும் அதிகமான ஊடுருவல் முறைகள், ட்ரோஜான்கள், வைரஸ்கள் மற்ற பிற ‘ஆயுதம்தரித்த’ மால்வேர்களை” சிஐஏ உருவாக்கி வைத்திருப்பதை இந்த ஆவணங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் நிரல்கள் சுட்டிக்காட்டுவதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது. இந்த சாதனங்களை ஊடுருவல் செய்வதன் மூலமாக, வாட்ஸ் அப், சிக்னல், டெலகிராம், வீபோ, கான்ஃபிடே மற்றும் க்ளோக்மேன் போன்ற சமூக ஊடக தளங்களில் என்கிரிப்ட் செய்யப்படுவதற்கு முன்பாக அந்த விபரங்களை சிஐஏ ஆல் மறித்துப் பெற்று விடவும் முடியும்.
பலதரப்பட்ட சாதனங்களில் இருக்கக்கூடிய அடையாளம்காணப்பட்டிராத குறைபாடுகளை, அச்சாதனங்களின் தயாரிப்பாளர் அவற்றைக் கண்டறிந்து சரிசெய்வதற்கு முன்பாக, சுரண்டிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படக் கூடிய “ஜீரோ-டே” ஆபத்துக்கள் என்று சொல்லப்படுவனவற்றை இம்முகமை ஏற்கனவே நிறைய குவித்து வைத்திருக்கிறது என்பது வெளிப்படை. ஒபாமா நிர்வாகத்தின் கீழ் வெள்ளை மாளிகை “குறைபாடுகளை சமப்படுத்தல் நிகழ்முறை” என்ற ஒன்றை நிறுவியதாக சொல்லப்பட்டது, அதன்படி உளவு முகமைகள் பல மென்பொருள் குறைபாடுகள் குறித்து தயாரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் அதேநேரத்தில் அக்குறைபாடுகளில் சிலவற்றை தனக்காய் சுரண்டிக் கொள்ளும். பகுதியாக, இது அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் பங்களிப்பை தொலைப்பதை தடுக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதாக இருந்தது. சிஐஏ ஆயுதக்கிடங்கின் இந்த பரந்த தன்மையானது இந்த வேலைத்திட்டம் தோற்றத்திலேயே ஒரு மோசடி என்பதை நிறுவிக் காட்டுகிறது.
”அழும் தேவதை” என்ற குறியீட்டுப் பெயரில் சிஐஏ உருவாக்கிய நிரல்களில் ஒன்று சாம்சுங்கின் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை 1984 இல் ஜோர்ஜ் ஓர்வெல் கற்பனை செய்த மாதிரியான ஒரு தொழில்நுட்பமாக மாற்றி விட்டிருக்கிறது, அதில் “சிந்தனை போலிஸ்” “தொலைதிரைகளை” கண்காணித்துக் கொண்டிருக்கும், இத்தொலைதிரைகள் “பெரியண்ணன்” உரைகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளாவும் செயல்படும், பார்ப்பவரின் ஒவ்வொரு வார்த்தை மற்றும் செயலையும் கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராக்களாகவும் செயல்படும். இந்த கண்காணிப்பு உத்தியானது குறிவைக்கப்படும் தொலைக்காட்சிகளை “போலியான” அணைப்புநிலையில் வைத்திருக்கும், ஆனால் அந்த அறையில் நடக்கும் உரையாடல்களை இணையத்தின் வழியாக ஒரு இரகசிய சிஐஏ சர்வருக்கு அனுப்பி வைக்கும்.
உண்மையான இணைய ஆயுதங்களுக்கான கணினிக் குறியீடுகள் அத்துடன் ”இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுமையிலும் பத்தாயிரக்கணக்கான சிஐஏ இன் குறிகள் மற்றும் தாக்குதல் எந்திரங்களின்” அடையாளங்கள் ஆகியவை உட்பட கசிந்த ஆவணங்களில் இருந்து ஏராளமான விபரங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்தது.
அமெரிக்காவில் இருக்கும் அந்த “குறிகள்”, முகமையானது அதன் சாசனத்தை மீறிய வகையில் ஒட்டுமொத்தமான உள்நாட்டு வேவுபார்ப்பில் அது ஈடுபட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இந்த நிரல்களை சிஐஏ எம்15 என்ற பிரிட்டிஷ் உளவு முகமையுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறது என்பதையும், ஜேர்மனியின் ஃபிராங்பர்ட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இது ஒரு இரகசியமான இணையப்போர் மையத்தை நடத்தி வருகிறது என்பதையும் கூட இந்த ஆவணங்கள் நிறுவிக் காட்டுகின்றன.
“2014 அக்டோபர் நிலவரப்படி நவீன கார்கள் மற்றும் ட்ரக்குகளால் பயன்படுத்தப்படும் வாகனக் கட்டுப்பாட்டு முறைகளை தொற்றச்செய்வதற்கும் சிஐஏ எதிர்நோக்கியிருந்தது” என்ற ஒரு உறைய வைக்கும் விடயத்தை இந்த ஆவணங்கள் வழங்குவதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது. “இத்தகைய கட்டுப்பாட்டின் நோக்கம் குறிப்பிடப்படவில்லை, ஆனால் இது கிட்டத்தட்ட கண்டறியமுடியாத படுகொலைகளில் ஈடுபடுவதற்கு சிஐஏ ஐ அனுமதிக்கும்.”
விக்கிலீக்ஸ் குறிப்பாக குறிப்பிடவில்லை என்றபோதும் கூட, 2013 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் பத்திரிகையாளர் மைக்கேல் ஹாஸ்டிங்க்ஸின் உயிரைக் காவுவாங்கிய மரணகரமான கார் விபத்தின் சமயத்தில் இத்தகையதொரு சூழ்ச்சி இருந்திருக்கலாம் என பலர் கூறியிருந்தனர். முன்னதாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் ஸ்டான்லி மெக்கிறிஸ்டல் அவரது பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு இட்டுச் சென்றதான ஒரு கட்டுரையை எழுதியிருந்த ஹாஸ்டிங்ஸ், இறந்த சமயத்தில், ஒபாமாவின் சிஐஏ இயக்குநரான ஜோன் பிரெனன் குறித்த ஒரு விவரிப்புக் கட்டுரையில் வேலைசெய்து கொண்டிருந்தார். அந்த விபத்துக்கு முன்னதாக, ஹாஸ்டிங்ஸ் தான் அரசாங்க கண்காணிப்பின் கீழ் இருப்பதாக தனது சகாக்களிடம் தெரிவித்திருந்தார் என்பதுடன், தனது சொந்த வாகனத்தில் ஏதேனும் சூழ்ச்சி செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் தனது அண்டைவீட்டுக்காரரிடம் காரைக் கேட்டு வாங்கிச் சென்றிருந்தார்.
விக்கிலீக்ஸ் ஆவணங்களில் இருக்கக் கூடிய வெளிக்கொணரல்களில் இருக்கும் இன்னுமொரு முக்கிய அரசியல் அம்சமாக இருப்பது சிஐஏவின் “Umbrage” என்று அழைக்கப்படும் பேரிலான ஒரு திட்டம் குறித்ததாகும்; இது ரஷ்யா உள்ளிட்ட மற்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட மால்வேர்கள் மற்றும் இணையத்தாக்குதல் நுட்பங்களின் ஒரு கணிசமான “நூலகத்தை” கொண்டிருக்கிறது. இந்த “திருடிய” கருவிகளைச் சுரண்டிக் கொண்டு தனது தாக்குதல்களுக்கு மற்ற நாடுகள் மீது பழி போட்டு விட இம்முகமையால் இயலும். இப்படியானதொரு வேலைத்திட்டம் இருப்பதானது ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல்களை ஹேக் செய்து கசியவிட்டதில் ரஷ்யாவுக்குப் பொறுப்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி நடத்தப்படும் வெறிக்கூச்சல் பிரச்சாரத்திற்கு எந்தவிதமான அடித்தளமும் இல்லை என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்தும், புலம்பெயர்ந்த மக்களுக்கும் ஒட்டுமொத்தமாய் தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக ட்ரம்ப்பின் நிர்வாகம் கட்டவிழ்த்து விட்டிருக்கக் கூடிய பிற்போக்குத்தனமான கொள்கைகளைக் காட்டிலும் ரஷ்யாவுடன் அவர் உறவு கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் பிரச்சினையையே ட்ரம்புக்கு எதிரான தமது எதிர்ப்பின் மையமாகக் கொண்டுள்ள வேளையில், சிஐஏ குறித்த விக்கிலீக்ஸின் வெளிக்கொணரல்கள் ஊடகங்களின் பிரிவுகளால் இன்னுமொரு ரஷ்ய சதியாகக் கூறி உதாசீனம் செய்யப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற தொனிவரிசையில், நியூயோர்க் டைம்ஸ் திங்களன்று வெளியிட்ட ஒரு நீளமான கட்டுரையில், ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது தான் ஒட்டுக்கேட்கப்பட்டதாக ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து “ட்ரம்ப்பின் ஜனாதிபதிக்காலத்தை முறியடிக்க வேலைசெய்கின்ற “அரசுக்குள்ளான அரசு” ஒன்றைக் குறித்த சிந்தனையில் வெள்ளை மாளிகை மூழ்கிக் கிடப்பதற்கான அறிகுறிகளாய்” சொல்லப்படுவது குறித்துக் கேலிசெய்தது.
அப்படியானதொரு சொற்பதம் எகிப்து, துருக்கி அல்லது பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாய் இருக்கலாம் என்றும், ஆனால் அமெரிக்காவுக்கு அது பொருத்தமாய் இருக்காது ஏனென்றால் அது “சட்ட மற்றும் தார்மீக நிர்ணயங்கள் ஒதுக்கித் தள்ளப்படுவதான ஒரு ஜனநாயகமற்ற தேசத்தைக் குறிப்பதாகி விடுகிறது” என்றும் டைம்ஸ் வாதிட்டது.
நிதர்சனம் என்னவென்றால் அமெரிக்காவில் இருக்கக் கூடிய “அரசுக்குள்ளான அரசு” உலகில் வேறெங்கு இருக்கக்கூடியதை விடவும் மிகப் பெரியது சக்திவாய்ந்தது என்பதோடு எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் போன்ற இதேபோன்ற இராணுவ-உளவு கட்டமைப்புகளுக்கான அரவணைப்பாளராகவும் இருக்கிறது. “சட்ட மற்றும் தார்மீக நிர்ணயங்கள்” விடயத்தை பொறுத்தவரை, நீண்டகாலத்திற்கு முன்பாகவே கொலை நிறுவனமாக விவரிக்கப்பட்ட சிஐஏ குறித்த சமீபத்திய வெளிக்கொணரல்கள் அமெரிக்க அரசின் உண்மையான வழிமுறைகள் குறித்த ஒரு வெளிச்சத்தை அளிக்கின்றன.
இராணுவ-உளவு எந்திரத்தின் நடவடிக்கைகள் மற்றும் செல்வாக்கு குறித்த கவலைகளை நிராகரிக்க டைம்ஸ் முயற்சிப்பதானது சிஐஏ, பென்டகன் மற்றும் பிற முகமைகளுடன் மிக நெருங்கிய தொடர்புடைய இந்த “அரசுக்குள்ளான அரசின்” ஒரு பிரச்சார அங்கமாகவும் சித்தாந்த சாதனமாகவும் அதன் பாத்திரத்தையே நிறுவிக் காட்டுவதாய் இருக்கிறது.
விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணங்கள், புஷ்ஷின் கீழ் தொடங்கப்பட்ட போர்கள் தொடர்வதற்கும் பரவுவதற்கும், அமெரிக்க உளவு முகமையின் சக்தி மிகப்பெருமளவில் விரிவுபடுத்தப்படுவதற்கும் அதற்கேற்ப ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கும் தலைமையில் இருந்த ஒபாமா நிர்வாகத்தின் கடைசி ஆண்டுகளான 2013 முதல் 2016 வரையான காலத்தில் நடந்தவையாக இருக்கின்றன. அமெரிக்கக் குடிமக்களை சட்டத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் கொல்ல உத்தரவிடுவதற்கான அதிகாரத்தை வெள்ளை மாளிகை உரிமைகோரும் விதமாய் ஒரு சர்வதேச ஆளில்லா விமான படுகொலைத் திட்டத்தை ஒழுங்கமைத்ததும் இதில் அடங்கும்.
போர், ஒடுக்குமுறை மற்றும் பாரிய கண்காணிப்பின் இந்த பரந்த எந்திரமானது இப்போது, வெளிநாட்டில் போரைத் தீவிரப்படுத்துவதற்கும் சொந்த நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது முன்கண்டிராத தாக்குதல்களை நடத்துவதற்கும் தீர்மானத்துடன் இருக்கிற பில்லியனர்கள், முன்னாள் படைத்தளபதிகள் மற்றும் அப்பட்டமான பாசிஸ்டுகளைக் கொண்ட அரசாங்கமான, டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க தேர்தலில் ரஷ்யா “தலையீடு” செய்ததாக சொல்லப்படுவது குறித்து ஒரு சிறப்பு விசாரணைக்கு ஜனநாயகக் கட்சி அழைக்கிறது -இது ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர்முனைப்பை தொடர்ந்து பராமரிப்பதற்கும் ட்ரம்புக்கான வெகுஜன எதிர்ப்பை பிற்போக்கு பாதைகளுக்குள்ளாக மாற்றுவதற்கும் நோக்கம்கொண்ட ஒரு கோரிக்கையாக இருந்தது- ட்ரம்ப்போ தனது தகவல்பரிவர்த்தனைகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுவது குறித்த ஒரு விசாரணைக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற அதேவேளையில், சிஐஏ இன் வேவுபார்ப்பு நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த இரண்டு தரப்புமே எந்த அழைப்பும் விடவில்லை. நெருக்கடியில் சிக்கி மாட்டியிருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையை தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிசப் புரட்சி அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால் இத்தகைய போலிஸ்-அரசு நடவடிக்கைகள் அவசியமாக இருக்கின்றன என்பதில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டுமே உடன்பாடு கொண்டுள்ளன.