Print Version|Feedback
Wall Street, media celebrate Trump’s address to Congress
நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் வழங்கிய உரையை வோல் ஸ்ட்ரீட்டும், ஊடகங்களும் கொண்டாடுகின்றன
By Patrick Martin
2 March 2017
நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் செவ்வாயன்று டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய உரையை —இதில் அவர் வணிகங்களுக்கு பாரிய வரி விலக்குகளுக்கும் அரசாங்க நெறிமுறைகளை கிட்டத்தட்ட மொத்தமாய் அகற்றி விடுவதற்கும் வாக்குறுதியளித்தார்— பங்கு விலைகளிலான சாதனை-முறியடிக்கும் அதிகரிப்பைக் கொண்டு வோல் ஸ்ட்ரீட் கொண்டாடியது. அமெரிக்க ஊடகங்களும், தமது பங்காய், “டொனால்டை நேசிக்கக் கற்பது” என விவரிக்கத்தக்க ஒரு கட்டத்திற்குள் நுழைந்தன.
கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாய், முக்கிய ஊடக நிறுவனங்கள் அனைத்துமே —இவற்றில் பலவும் சென்ற வாரத்தில் தான் ட்ரம்ப்பினால் “மக்களின் எதிரிகள்” என கண்டனம் செய்யப்பட்டவை— ட்ரம்ப்பின் உரையை ஒரு தனிச்சிறப்புவாய்ந்த ஒன்றாக, அவரது நிர்வாகத்திற்கு ஒரு “திருப்புமுனை”யைக் குறித்து நின்ற ஒரு உண்மையான “ஜனாதிபதி” உரையாக சித்தரித்தன. அந்த உரையில் ட்ரம்ப் பயன்படுத்திய மொழியும் தொனியும், அவர் தனது வலது-சாரி, பெருநிறுவன ஆதரவு நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதில் மும்முரமாக செயல்படுகிறார் என்பதற்கும், வோல் ஸ்ட்ரீட் பணமழையில் குளிப்பதன் வழியில் கன்னை உள்மோதல் குறுக்கிட அவர் விட மாட்டார் என்பதற்குமான ஒரு சமிக்கையாக பொருள் கொள்ளப்பட்டன.
பங்குச்சந்தை அதற்கு அடியொற்றி எதிர்வினையாற்றியது, டோவ்-ஜோன்ஸ் தொழிற்துறை சராசரி புதனன்று 300க்கும் அதிகமான புள்ளிகள் அதிகரித்து முதன்முறையாய் 21,000 அதிகமான புள்ளிகளில் முடிந்தது. நிதித்துறை பங்குகள் தான் முன்னிலை வகித்தன, ஜேபி மோர்கன் சேஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சிட்டி குரூப் பங்குகள் ஒரேநாளில் 3 சதவீதத்திற்கும் அதிகமான விலையுயர்வைக் கண்டன. எக்ஸான்மொபில் மற்றும் போயிங் 2 சதவீதத்திற்கும் அதிகமாய் அதிகரித்தன, அமெரிக்க எக்ஸ்பிரஸ் மற்றும் ட்ராவலர்ஸ் நிறுவன பங்குகளும் அவ்வாறே விலையதிகரித்தன. விரிந்த S&P குறியீடு, பிரதானமாக தொழில்நுட்ப பங்குகளைக் கொண்ட நாஸ்டாக் கூட்டுக் குறியீடு, மற்றும் சிறிய நிறுவனங்களது ரஸல் 2000 குறியீடு அனைத்துமே சாதனை அளவுகளில் முடிவடைந்தன.
ட்ரம்ப் தனது உரையில் பெருமையடித்ததைப் போல, சென்ற நவம்பரில் அவர் தேர்தலில் வெற்றிபெற்றது முதலாக, அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் பங்குமதிப்பில் சுமார் 3 டிரில்லியன் டாலர் அதிகரிப்பைக் கண்டிருக்கிற ஒரு பங்குச்சந்தை எழுச்சியின் பகுதியாக, டவ் கிட்டத்தட்ட 3,000 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது.
ட்ரம்ப் தனது பெருநிறுவன-ஆதரவு திட்டநிரலை முன்வைக்கும் உரை நிகழ்த்துவதற்கு முன்பாகவே வோல் ஸ்ட்ரீட்டுக்கு கொண்டாட்டத்திற்கு நிறைய காரணங்கள் இருந்தன. ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் ஆறு வாரங்கள், பெருநிறுவன மாசுபடுத்தல் நிறுவனங்களுக்கு, குறிப்பாக மரபுவழி எரிபொருள் துறை நிறுவனங்களுக்கும், அத்துடன் வங்கிகள், துணிகர நிதிகள் மற்றும் 2008 நிதிப் பொறிவுக்கு இட்டுச் சென்ற நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரர்களான பிற சுருட்டல் நிறுவனங்களுக்கும் நெறிமுறைகளைத் தளர்த்துகின்ற வரிசையான நிர்வாக உத்தரவுகளைக் கொண்டதாய் இருந்திருந்தன.
அமெரிக்க பெருநிறுவனங்களுக்கும் வசதியான தனிநபர்களுக்கும் பெரும் வரி வெட்டுகளுக்கு ட்ரம்ப் தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தம் செய்திருக்கிறார். மிகப்பெரும் பாதுகாப்புத் துறை ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஆதாயமளிக்கக் கூடிய வகையில் இராணுவச் செலவினங்களிலான ஒரு அதிகரிப்புக்கும் அத்துடன் நூறு பில்லியன் கணக்கில் தனியார் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கேட்டர்பில்லர் போன்ற தயாரிப்பு நிறுவனங்களது கல்லாவை நிரப்பக் கூடிய ஒரு உள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்கும் கூட அவர் வாக்குறுதியளித்திருக்கிறார்.
குடியரசுக் கட்சியினரிடம் இருந்து பொதுவான உற்சாகத்தையும், ஊடகங்களில் இருந்து கிட்டத்தட்ட ஒருமித்தான பாராட்டையும் அத்துடன் நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து கணிசமான ஆதரவையும் பெறுகின்றவிதமாய், செவ்வாயன்று இரவு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ட்ரம்ப் வழங்கிய உரையில் இந்த கருத்தம்சங்கள் எடுத்துவைக்கப்பட்டன. பொதுக் கல்விக்கு எதிராக போர் நடத்துவது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல்களை தீவிரப்படுத்துவது, சமூக வேலைத்திட்டங்களை வெட்டுவது மற்றும் நிதிக்குவிப்பின் தலைமையில் இருக்கும் ஒருசிலவரணிக்கு செல்வத்தை இன்னும் அதிகமாய் விநியோகிப்பது ஆகியவற்றுக்கும் கூட ட்ரம்ப் வாக்குறுதியளித்தார்.
ஊடகங்களை பொறுத்தவரை, உரைக்கான ஒருமனதான எதிர்வினை என்பது உரை முடிந்த ஒரு சில விநாடிகளுக்குள்ளேயே உருப்பெற்று விட்டிருந்ததாய் தென்பட்டது.
CNN -சென்ற வாரத்தில் வெள்ளை மாளிகை செய்தி விவரிப்பு ஒன்றில் இருந்து திட்டமிட்டு தடுக்கப்பட்டிருந்த பல ஊடக நிறுவனங்களில் இதுவும் ஒன்று- இல் ஒவ்வொரு தொகுப்பாளருமே இந்த உரையை குறைந்தபட்சம் ஒப்பீட்டளவிலான வெற்றியாகவேனும் அறிவித்தனர். வான் ஜோன்ஸ் -இவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் முன்பு உதவியாளராக இருந்திருந்தவர் என்பதுடன் பேர்னி சாண்டர்ஸின் ஆதரவாளரும் ஆவார்- ட்ரம்ப் தனது உரையின் நிறைவுப் பகுதியில், Navy SEAL வில்லியம் ஓவன்ஸ் இன் மரணத்தை கனமாக சுரண்டிக் கொண்டதானது, ”அமெரிக்க அரசியலில் நீங்கள் கண்டிருக்கக் கூடியவற்றில் மிக அசாதாரண தருணங்களில் ஒன்று, அவ்வளவு தான்” என்றும் அந்த தருணம் ட்ரம்ப் “அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகிய” தருணமாக இருந்தது என்றும் அறிவித்தார். ஊடகங்களின் விடயத்தில் ட்ரம்ப்பின் முன்னாலான அவலட்சணமான சரணாகதியாக மட்டுமே இது இருந்தது.
அவையிலும் சரி அதன்பின்னரும் சரி, ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சி அளித்த பதிலிறுப்பானது, எதிர்க் கட்சியாக சொல்லப்படுவதன் பிற்போக்குத்தனமான மற்றும் அரசியல் திவால்நிலையான தன்மை குறித்து பக்கம்பக்கமாய் பேசக் கூடியதாய் இருந்தது. செனட்டர் மாற்றி செனட்டர் இந்த உரையை வியந்து பாராட்டினர்: பொருளாதார தேசியவாதத்தை ட்ரம்ப் உபதேசித்ததற்கு பேர்னி சாண்டர்ஸ் கைதட்டினார்; டாமி பால்ட்வின் அவரது மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் பற்றி ட்ரம்ப் குறிப்பிட்டபோது உற்சாகப்படுத்தினார்; வாகன உற்பத்தித் துறைக்கான ட்ரம்ப்பின் ஆதரவை டெபி ஸ்டபினவ் பாராட்டினார்; பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விலையைக் குறைக்க அவர் அளித்த வாக்குறுதியை ஆமி குளோபுசார் புகழ்ந்தார்.
அத்தனையையும் கண்டுகளித்துக் கொண்டிருந்த வோல் ஸ்டீரிட், கண்டதில் மகிழ்ந்தது. செனட்டின் ஜனநாயகக் கட்சி தலைவர் சார்லஸ் சூமர் -பிரச்சாரத்திற்கான வோல் ஸ்ட்ரீட்டின் நிதிப்பங்களிப்பை தனிமனிதராய் மிக அதிகமாகப் பெற்றிருந்தவர்- இன் வரவேற்பின் மீது தாங்கள் நம்பிக்கை வைக்க முடியும் என்பதை பங்குச் சந்தை வெகுகாலமாய் அறிந்து வைத்திருக்கிறது. ட்ரம்ப் கையிலெடுத்திருக்கும் புதிய ஒத்துழைப்பான “தொனி”யும் அதற்கு ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து கிட்டியிருக்கக் கூடிய இணக்கமான பதிலிறுப்பும் நிதி மூலதனத்தைப் பொறுத்தவரை மிகப்பெரும் முக்கியத்துவமானவை ஆகும், ஏனென்றால் ட்ரம்ப் வாக்குறுதியளித்திருக்கும் மிக முக்கியமான கொள்கை மாற்றங்களில் சில, குறிப்பாக வணிகங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான வரி வெட்டுகள் ஆகியவை, கணிசமான ஜனநாயகக் கட்சி ஆதரவை அவசியமாகக் கோருகின்றன.
ஆளும் வர்க்கத்திற்குள்ளாக, வெளியுறவுக் கொள்கையை மையமாகக் கொண்டு பிளவுகள் தொடரவே செய்கின்றன. ஜனநாயகக் கட்சியின் ஒரு ஊதுகுழலான நியூ யோர்க் டைம்ஸ், உரை குறித்து கருத்து தெரிவிக்கும் ஒரு தலையங்கத்தில், “அமெரிக்காவுக்கான முதல் இட அச்சுறுத்தலாக பென்டகன் கருதுகின்ற மூர்க்கம் பெருகிச் செல்கிற ரஷ்யாவை, அல்லது தென்சீனக் கடலில் கூடுதல் திட்டவட்டம் காட்டுவதாய் ஆகிவந்திருக்கின்ற சீனாவை, கையாளக் கூடியதான” ஒரு கொள்கையை உரைக்க ட்ரம்ப் தவறியதன் மீது விமர்சனத்தை மையப்படுத்தியிருந்தது. புட்டினை நோக்கி கூடுதல் இணக்கமான மனோபாவமாக இராணுவ-உளவு எந்திரத்தின் செல்வாக்கான பகுதிகளில் கருதப்பட்டு வருவதனை விளக்கமாய் வைக்கும் விதமாய், ட்ரம்ப்பின் ”ரஷ்ய்வுடனான மர்மமான உறவுகள்” என்று அது அழைத்த ஒன்றை இந்த செய்தித்தாள் மீண்டும் முன்தள்ளியது.
ஆயினும் கூட, ஆளும் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதாக இருந்த ஒன்றைக் கொண்டாடுவது தான், டைம்ஸ் உள்ளிட்ட அத்தனையிலும் பிரதான தொனியாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் ஒரு பெரிய தவறைச் செய்து விட்டிருந்தோம் என்பது தான் நிதிப் பிரபுத்துவத்தின் முன்னோக்காய் இருக்கிறது. முதலில் 1917 ரஷ்ய புரட்சி, அதன்பின் 1930களிலான தொழிலாளர் இயக்கத்தின் மேலெழுச்சி, அதன்பின் 1960களில் குடியுரிமைகள் மற்றும் சமூக ஈட்டங்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட போராட்டங்கள் ஆகியவற்றால் தூண்டப்பட்ட அச்சங்களின் காரணத்தால் பெருநிறுவன அமெரிக்கா உழைக்கும் மக்களுக்கு சலுகைகள் அளிக்கும்படியாய் தள்ளப்பட்டிருந்தது. இந்த சலுகைகள் அத்தனையும் பிற்போக்குத்தனத்தின் ஒரு வெறியாட்டத்தில் திரும்பப் பெறப்பட்டாக வேண்டும், அமெரிக்க பெருநிறுவனங்கள் தாங்கள் விரும்பிய எதையும் செய்ய முடியும் என்பது தான் அதன் தாரகமந்திரமாக இருக்க வேண்டும்.
கடவுள்கள் அழிப்பதற்கு முன்னால் கிறுக்கர்களாக்குகின்றனர் என்பர். அமெரிக்க நிதிப் பிரபுத்துவமானது, தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பு குலைப்பதற்கும் நோக்குநிலை பிறழச் செய்வதற்கும் ஜனநாயகக் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் பிற கருவிகளது பாத்திரத்தை துணையாகக் கொண்டு, எந்த விலையும் கொடுக்காமலேயே வரலாற்றின் பின்நோக்கிப் பயணித்து விடலாம் என்ற ஒரு பிரமையால் பீடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கமானது, அதன் சமூக ஈட்டங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் அத்தனைக்குமான ஒரு மரணகர அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்திருக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் தான் ட்ரம்ப் நிர்வாகத்திற்கான தாக்குப்பிடித்து நிற்கத்தக்க மற்றும் உண்மையான எதிர்ப்பு அபிவிருத்தி காண முடியும். ஜனநாயகக் கட்சியில் இருந்து சுயாதீனப்பட்டும் அதற்கு எதிரானதாகவும், அத்துடன் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கே ஒவ்வொரு முயற்சியும் அர்ப்பணிக்கப்பட வேண்டும்.