Print Version|Feedback
The Trump administration and the crisis of American capitalism
ட்ரம்ப் நிர்வாகமும், அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியும்
Joseph Kishore
28 February 2017
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்றிரவு காங்கிரஸின் இரு சபைகளுக்கும் நிகழ்த்தும் ஒரு உரை அமெரிக்கா முழுவதிலும் நேரடியாக ஒளிபரப்படும். நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்ட உரைக் குறிப்புகளின்படி, அந்த உரை "நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் தொலைநோக்கு பார்வையை வழங்கும்" மற்றும் "எந்த பின்னணியை கொண்டிருந்தாலும் சகல அமெரிக்கர்களும் நமது நாட்டுக்கு ஒரு பலமான, ஒளிமயமான எதிர்காலத்திற்கு சேவையாற்றுவதில் ஒருங்கிணைய அழைப்புவிடுக்கும்.”
ட்ரம்ப் இந்த உரையை வழங்கவிருக்கிறார் என்ற உண்மையே, “ஜனாதிபதியின் வருடாந்திர நாட்டு நிலைமை பற்றிய உரை" நம்பிக்கையளிப்பதாகவும் இருக்காது, ஒளிமயமாகவும் இருக்காது என்பதற்கு சான்றாக உள்ளது. அமெரிக்காவில் அரசியல் கலாச்சாரம் படுமோசமாக வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு ட்ரம்பும் மற்றும் அவர் நிர்வாகத்தின் அரசியல் கையாட்களுமே நிரூபண சான்றாக உள்ளனர். இந்நிர்வாகம் விரைவாக நடைமுறைப்படுத்தி வரும் திட்டநிரலானது, ஒட்டுமொத்த உலகின் தொழிலாள வர்க்கத்திற்கும் முடிவில்லா போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக சீரழிவின் ஒரு எதிர்காலத்தைக் கொண்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முதல் ஐந்து வாரகாலமே, இந்த உண்மையை போதுமானளவில் எடுத்துக்காட்டி உள்ளது. தலைமை செயலதிகாரிகள், பில்லியனர்கள், முன்னாள்-தளபதிகள் மற்றும் கடந்த வாரம் அவரின் தலைமை மூலோபாயவாதி ஸ்டீபன் பானன் குறிப்பிட்டவாறு "அரசு நிர்வாக மறுகட்டமைப்பிற்காக" அர்ப்பணிக்கப்பட்ட தனிநபர்களை கொண்டு அவர் நிர்வாகம் நிரப்பப்பட்டுள்ளது. பொதுக் கல்வி, மக்கள் போக்குவரத்து, வீட்டுவசதி, வேலை பயிற்சிகள், கலை, மாசுக்கட்டுப்பாடு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் என ஒவ்வொன்றிலும் செய்யப்படும் வெட்டுகள் மூலமாக செலுத்தப்படவிருக்கின்ற, இராணுவத்திற்கான செலவுகளை பாரியளவில் 10 சதவீதம் அதிகரிக்க நேற்று வெளியிடப்பட்ட ஒரு கொள்கை வழிகாட்டியில் ட்ரம்ப் நிர்வாகம் அழைப்புவிடுத்தது.
அமெரிக்க சமூகத்தின் அனைத்து ஆதாரவளங்களையும் ஆளும் வர்க்கத்தின் உலக போர் தயாரிப்புகளுக்காக கீழ்படுத்தி, “அரசு நிர்வாகமானது" “இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் அரசைக்" கொண்டு பிரதியீடு செய்யப்பட உள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான ஒரு மூர்க்கமான ஒடுக்குமுறையே, புதிய அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. ஆயிரக் கணக்கானவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர், மேலும் ட்ரம்ப் நிர்வாகம் பாரிய தடுப்புக்காவல் கூடங்களுக்கான கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. யூத சமூக மையங்களுக்கு எதிராக குண்டுவீசும் அச்சுறுத்தல் அலை மற்றும் கடந்த வாரம் கன்சாஸில் இரண்டு இந்தியர்கள் இனவாதரீதியில்-உந்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதில் எடுத்துக்காட்டப்பட்டவாறு, அரசாங்கம் மிகவும் பிற்போக்கான மற்றும் பின்தங்கிய கூறுபாடுகளை ஊக்குவித்து வருகிறது.
அதன் சகல நடவடிக்கைகளிலும், புதிய அரசாங்கம் ஒரு தீர்க்கமான அரசியல் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒருவர் "பாசிசம்" என்ற வார்த்தையைப் பிரயோகிக்க தயங்க வேண்டியதே இல்லை. “பெருநிறுவன பூகோளமயப்பட்ட ஊடகம்" என்ற பானனின் கண்டனம், “ஐக்கிய அமெரிக்க அரசுகள் மீதான ஒட்டுமொத்த விசுவாசத்திற்கு" ட்ரம்ப் அழைப்புவிடுப்பது மற்றும் "தேசபக்தர்களின் இரத்தத்தில்" ஸ்தாபிக்கப்பட்ட ஒரு "புதிய தேசிய பெருமிதத்திற்கான" அவரது அழைப்பு —இந்த மொழிகள் முசோலினி மற்றும் ஹிட்லரிடம் இருந்து உள்வாங்கப்பட்ட மொழிகளாகும். அதிகரித்தளவில் அதிதீவிர-நாடாளுமன்றத்திற்கு வெளியிலான வடிவங்களை எடுக்கக்கூடிய ஒரு பாசிசவாத இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக, ட்ரம்ப்-பானன் அரசாங்கம் ஜனாதிபதி பதவியின் பாரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது.
அவர் பிரச்சாரம் நெடுகிலும் மற்றும் அவர் நிர்வாகத்தின் முதல் வாரங்களிலும், ட்ரம்ப் பரந்த மக்கள் பிரிவுகளது அதிருப்தி மற்றும் ஏமாற்றத்திற்கு அவர் வாய்சவடாலை நிலைநிறுத்தினார். “மறக்கப்பட்ட மனிதர்" குறித்து பொய்யுரைத்தும் மற்றும் வெற்று வாய்சவடால்களுடனும், “அமெரிக்காவை மீண்டும் தலையாயதாக ஆக்குவோம்" என்ற சூளுரைகளோடும், அவர் சமூக கோபத்தை வெளிநாட்டு "எதிரிக்கு" எதிராக திருப்பிவிடவும், ஒரு சர்வாதிகார மற்றும் இராணுவவாத திட்டநிரலுக்கான அடித்தளத்தை நிறுவுவவும் முனைந்துள்ளார்.
ட்ரம்புக்கு மக்கள் ஆதரவு கிடையாது. உண்மையில், அவர் ஜனாதிபதி பதவி அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மக்கள் மதிப்பிழந்துள்ளது. புலம்பெய்ர்ந்தோர் மீதான அவரது தாக்குதல் மற்றும் ஏனைய பிற்போக்குத்தனமான நநடவடிக்கைகள் பரந்தளவில் எதிர்க்கப்படுவதை கருத்துக்கணிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. அவர் நிர்வாகத்தின் முதல் வாரங்களில், ட்ரம்ப் அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கானவர்கள் பங்குபற்றிய போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார்.
ஆனால் இந்த கோபத்திற்கு எந்தவித முற்போக்கான அரசியல் வடிகாலும் இல்லாததால், அதிதீவிர வலது இதிலிருந்து ஆதாயமடைந்து வருகிறது. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் உண்மையாகும், அங்கே தீவிர வலது மற்றும் பாசிசவாத அரசியல் இயக்கங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன.
அரசியல் ஸ்தாபகத்திற்குள் உள்ள அவர் விமர்சகர்களின் முதுகெலும்பற்ற மற்றும் பிற்போக்குத்தனமான தன்மை தான் நிர்வாகத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது. மக்கள் எதிர்ப்பை திசைதிருப்ப மற்றும் நோக்குநிலை பிறழச் செய்ய ஜனநாயகக் கட்சியினர் அவர்களால் ஆனமட்டும் ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களில் உள்ள அவர்களது கூட்டாளிகளோடு சேர்ந்து கொண்டு, அவர்கள் ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்யாவை நோக்கி மிகவும் மென்மையாக இருந்து வருவதாக கண்டிக்கும் கண்டனங்கள் மீது ஒரு மெல்லிய நவ-மெக்கார்த்தியிச பிரச்சாரத்தின் மீது ஒருங்குவிந்துள்ளன்னர். அவர்களது மூலோபாயம் இருமுனை மூலோபாயமாகும். அவர்கள் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் செல்வாக்கான பிரிவுகளது கோரிக்கைகளுக்கு இணக்கமான நிலைபாட்டை ஏற்க ட்ரம்புக்கு அழுத்தமளிக்க விரும்புகின்ற அதேவேளையில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கோபத்தை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எந்தவொரு சவாலில் இருந்தும் திசைதிருப்பிவிட விரும்புகிறார்கள்.
அமெரிக்காவில் பொதுவாக "இடது" அரசியல் என்று முன்வைக்கப்படும் ஜனநாயகக் கட்சியே, நிதர்சனமாக, ட்ரம்ப் மேலுயர்ந்ததற்கான பொறுப்பாகும். ட்ரம்ப் நிர்வாகத்திற்கு சற்றும் குறைவில்லாத ஜனநாயகக் கட்சி, வோல் ஸ்ட்ரீட் மற்றும் உளவுத்துறை முகமைகளின் ஓர் அரசியல் கருவியாகும். 2008 பொருளாதார பொறிவதைத் தொடர்ந்து வந்த எட்டாண்டுகால ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள், வோல் ஸ்ட்ரீட்டை மீட்டெடுக்கவும் மற்றும் செழிப்பாக்கவும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. அந்நெருக்கடியை உருவாக்கிய மோசடித்தனத்திற்கும், குற்றத்தன்மைக்கும் நிதியியல் அதிகாரத்தட்டு பொறுப்பு கூறவைக்கப்படாது, அது முன்பினும் அதிக செல்வத்தைக் குவித்துள்ளது. ஒபாமா நிர்வாகம் புஷ் நிர்வாகத்தின் போர்களைத் தொடர்ந்து விரிவாக்கிய அதேவேளையில், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, உளவுத்துறை முகமைகளின் அதிகாரத்தை அதிகரித்துள்ளது.
2016 தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஹிலாரி கிளிண்டன் மக்களின் சமூக அதிருப்தியை ஒப்புக் கொள்ளவும் கூட மறுத்து, வோல் ஸ்ட்ரீட்டின் மற்றும் நடப்பில் இருப்பதைப் பேணுவதற்கான ஒரு வேட்பாளராக போட்டியிட்டார். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளது இடது நோக்கிய நகர்வு, வெர்மாண்ட் செனட்டர் பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்திற்கும் மற்றும் "பில்லியனர் வர்க்கத்திற்கு" எதிரான ஒரு "அரசியல் புரட்சிக்குமான" அவர் அழைப்பிற்கும் கிடைத்த ஆதரவில் எடுத்துக்காட்டப்பட்டது, இந்த கோபத்தை கிளிண்டனுக்கு பின்னால் திருப்பிவிடுவதே சாண்டர்ஸின் பணியாக இருந்தது, இந்நடவடிக்கை ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்த உதவியது. சாண்டர்ஸ் இப்போது செனட்டில் ஜனநாயகக் கட்சி தலைமையின் பாகமாக அவரது புதிய பதவியிலிருந்து இந்த பாத்திரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்.
ஜனநாயகக் கட்சி மற்றும் இனம், பாரம்பரியம் மற்றும் பாலினம் சார்ந்த அடையாள அரசியலின் பல்வேறு வடிவங்களை எதிரொலிக்கும் அரசியல் அமைப்புகளது கொள்கைப்பிடிப்பான தீர்மானம் ட்ரம்பின் கரங்களில் சாதகமாக பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகக் கட்சியினரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும் உயர்மட்ட 10 சதவீதத்தினருக்குள் இன்னும் உடன்பாடானரீதியில் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதை தவிர, சமூக சீர்திருத்தம் மற்றும் பொருளாதார மறுபகிர்வுக்கான கொள்கைகளுடன் சம்பந்தப்பட்ட ட்ரம்புக்கு எதிரான எந்தவொரு இயக்கத்தையும் எதிர்க்கிறார்கள். அதுபோலவே, அவர்கள் பாசிசவாத வலதின் பிற்போக்குத்தனமான பேரினவாதத்தை எதிர்ப்பதற்கான ஒரு நீடித்திருக்கக்கூடிய அடித்தளத்தை முன்னெடுக்கவும் இலாயக்கற்று உள்ளனர்.
பகுப்பாய்வின் இறுதியில் டொனால்ட் ட்ரம்பின் மேலுயர்வானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த மற்றும் இப்போது இறுதிக்கட்ட நெருக்கடியின் ஒரு வெளிப்பாடாகும். அவர் ஏதோவொருவித ஆரோக்கியமான சமூகத்திற்குள் நுழைந்தவிட்ட ஒருவர் கிடையாது. ஆளும் வர்க்கத்திற்குள் நடக்கும் சச்சரவுகள் எந்தளவிற்கு கடுமையாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்திலும் மற்றும் தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்திலும் ஒன்றுபட்டுள்ளனர். ட்ரம்பின் கீழ், ஆளும் வர்க்கம் இந்த நாசகரமான திட்டத்தின் ஒரு புதிய கட்டத்தில் நிற்கிறது.
இன்றியமையாத அரசியல் தீர்மானங்களை எடுத்தாக வேண்டும். ட்ரம்ப் நிர்வாகத்தை நிறுவியுள்ள சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கமைவு, அதாவது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தை பிரிப்பதென்பது சாத்தியமே இல்லை. ட்ரம்புக்கு எதிராக அணிதிரட்ட வேண்டிய சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும். தொழிலாள வர்க்கத்தில் தான், புதிய நிர்வாகத்திற்கு நிஜமான மற்றும் நீடித்த எதிர்ப்பு அபிவிருத்தி அடையும்.
தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள தலையாய பிரச்சினைகளுக்கு ஒரு நிஜமான தீர்வை வழங்கும் ஓர் அரசியல் வேலைத்திட்டத்துடன் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகிறது. பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் செழுமை மீதான ஒரு முன்னிலை தாக்குதல் மூலமாக மட்டும் தான், தொழிலாள வர்க்கம், ஒரு பாதுகாப்பான மற்றும் கண்ணியமான சம்பளமளிக்கும் வேலை, மருத்துவக் காப்பீடு, வீட்டுவசதி, கல்வி, ஓய்வூதியம் என அதன் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியும். மோசடி மற்றும் ஊகவணிகத்தின் மூலமாக பெரும் பணக்காரர்களால் திரட்டப்பட்ட பாரிய சொத்துக்கள் மீது அது மறுபடி உரிமை கோர வேண்டும். தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய ஜனநாயக கட்டுப்பாட்டில் இருக்குமாறு, மிகப்பெரும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களாக மாற்றுவதன் மூலமாக, நிதியியல் அதிகாரக் குழுவின் இரும்பிப்பிடி உடைக்கப்பட வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள், ஒட்டுமொத்த உலகையும் பேரழிவுகளுடன் அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தேசியம், இனம் மற்றும் பாலினத்தின் தொழிலாளர்களை அவர்களது பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதன் மூலமாக ட்ரம்ப் மற்றும் சர்வதேச அளவில் அதுபோன்ற அரசியல் போக்குகளால் ஊக்குவிக்கப்படும் பிற்போக்குத்தனமான மற்றும் பாசிச தேசியவாதத்தை எதிர்க்க சோசலிச சமத்துவக் கட்சி (SEP) போராடி வருகிறது.
ஒரு புரட்சிகர தலைமையை, அதாவது சோசலிச சமத்துவக் கட்சியை மற்றும் நமது உலகளாவிய அமைப்பான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டியெழுப்புவதே அடிப்படையான மற்றும் அவசர பணியாகும். டரம்ப் நிர்வாகம் ஒரு தெளிவான மற்றும் நிகழ்கால அபாயத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. சோசலிசத்திற்காக போராடும் தொழிலாள வர்க்கத்தின் அமைப்புரீதியிலான நீடித்த மற்றும் அவசர அமைப்பைக் கொண்டு அது எதிர்க்கப்பட வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியில் எவ்வாறு இணைவது குறித்து மேற்கொண்டு விபரங்களுக்கு, https://www.wsws.org/en/special/sepjoin.html சொடுக்கவும்.