Print Version|Feedback
Sweden brings back the draft
ஸ்வீடன் மீண்டும் கட்டாய இராணுவ சேவையை கொண்டு வருகிறது
Johannes Stern
4 March 2017
வியாழனன்று ஸ்வீடன் அரசாங்கம் அந்த கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டங்களை அறிவித்தது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நேரடியாக ஒரு இராணுவ மோதலில் சம்பந்தப்படாத, 10 மில்லியன் மக்களைக் கொண்ட இந்த ஸ்கேன்டினேவிய நாடு ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு தயாராகி வருகிறது.
ரஷ்யாவிற்கு எதிராக சண்டையிட படையினரைத் தயாரிப்பு செய்ய வேண்டும் என்பதில் ஸ்வீடிஷ் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். “[2014 இல்] கிரிமியாவை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்துக் கொண்டமை, உக்ரேன் உடனான மோதல், மற்றும் எங்களது அண்டைநாடுகளில் அதிகரித்த இராணுவ நடவடிக்கை ஆகியவை தான்", 2010 க்குப் பின்னர் முதல்முறையாக கட்டாய இராணுவச் சேவையை மறுஅறிமுகம் செய்வதற்கான "சில காரணங்கள்" என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒரு செய்தி தொடர்பாளர் பிபிசி க்குத் தெரிவித்தார்.
அத்திட்டத்தின் கீழ், 1999 மற்றும் 2000 க்கு இடையே பிறந்த அனைவரும் அடுத்த ஆண்டு கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்படுவர். இந்த வகைப்பாட்டில் விழும் 100,000 ஸ்வீடன் மக்களில், 13,000 பேருக்கு உடல் பரிசோதனை பெற உத்தரவிடப்படுவார்கள், பின்னர் 4,000 இளைஞர்களும் யுவதிகளும் ஜூலை 1 இல் இருந்து பதினொரு மாத இராணுவ சேவையைத் தொடங்க வேண்டியிருக்கும்.
ஸ்வீடிஷ் இடது கட்சி உட்பட ஸ்வீடனில் சகல கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் இந்த அறிவிப்பை, ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களும் இளைஞர்களும் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு பேரழிவுகரமான உலக போர்களுக்குப் பின்னர், சமாதானம் விரும்புவதாக கூறும் ஸ்வீடன் ஆளும் வர்க்கமே கூட மிகப்பெரிய ஒரு புதிய போருக்கான போர்க்கள பலி படைகளை மீண்டும் நியமித்து வருகிறது.
"பாதுகாப்பு நிலைமை மாறியுள்ளதால்," அரசாங்கம் "இன்னும் அதிக ஸ்திரமான நியமன முறையை அறிமுகப்படுத்தவும், மற்றும் நமது இராணுவ தகைமைகளை விரிவாக்கவும் விரும்புகிறது,” என்று ஸ்வீடிஷ் பாதுகாப்பு அமைச்சர் Peter Hultqvist விவரித்தார். “நமது சண்டையிடும் பிரிவுகளை தன்னார்வ அடிப்படையில் நியமிப்பதில் நமக்கு சிரமங்கள் உள்ளன, அதை ஏதேனும் விதத்தில் நாம் தீர்த்தாக வேண்டும்,” என்றார்.
2016 இன் இறுதியில், ஸ்வீடிஷ் உள்நாட்டு பாதுகாப்பு ஆணையம் (MSB), “போர் ஏற்பட்டால்" தயாராக இருக்க அனைத்து நகராட்சிகளுக்கும் அழைப்புவிடுத்தது. அவசரகால முகாம்கள் தயார் செய்திருக்க வேண்டும், வெளியேறுவதற்கான அவசரகால நடைமுறைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு பின்னர், பிரதம மந்திரி Stefan Löfven, ஒரு புதிய பாதுகாப்புத்துறை மூலோபாயம் அறிவித்ததோடு, வரவு-செலவு திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கு அதிகரிப்பையும் அறிவித்தார். “பல ஆண்டுகள் வேறு திசையில் பயணித்துள்ள நிலையில்,” இராணுவம், "பலப்படுத்தப்பட வேண்டும்,” என்றார்.
இதேபோன்ற அபிவிருத்திகள் பிரதான ஏகாதிபத்திய நாடுகள் அனைத்திலும் நடந்து வருகின்றன. ஜேர்மனியில், பாதுகாப்புத்துறை வரவு-செலவுத் திட்டம் அதிகரிக்கப்பட்டு, இராணுவம் விரிவாக்கப்பட்டுள்ளது மற்றும் கட்டாய இராணுவச் சேவையையின் மறுஅறிமுகம் விவாதத்தின் கீழ் உள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “நாம் மீண்டும் போர்கள் வெல்லத் தொடங்க வேண்டும்,” என்ற வார்த்தைகளோடு அமெரிக்க பாதுகாப்புத்துறை வரவு-செலவுத் திட்டத்தில் 10 சதவீத உயர்வை சமீபத்தில் நியாயப்படுத்தி உள்ளார்.
ஐரோப்பாவின் பாரிய மீள்ஆயுதமயமாக்கல் பிரதானமாக ரஷ்யாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்டுள்ளதுடன், அது அதிகரித்தளவில் போருக்கான நேரடி தயாரிப்புகளுடன் பிணைந்துள்ளது. நேட்டோ தற்போது கிழக்கு ஐரோப்பாவிற்கு சண்டையிடும் துருப்புகளையும் டாங்கிகளையும் அனுப்பி வருவதுடன், (ஜேர்மனி தலைமையில்) லித்துவேனியா, (இங்கிலாந்து தலைமையில்) எஸ்தோனியா, (கனடா தலைமையில்) லாட்வியா மற்றும் (அமெரிக்கா தலைமையில்) போலாந்து ஆகியவற்றில் சண்டையிடும் குழுக்கள் எனப்படுவதை ஸ்தாபித்து வருகிறது.
நாஜிக்களின் டாங்கிகளில் இரும்பு சிலுவை (Iron Cross) இலச்சினை இழிவுகரமாக பயன்படுத்தப்பட்டிருந்தன என்பதற்கு இடையிலும், அவற்றை நவீன ஜேர்மன் இராணுவத்தின் அடையாளச்சின்னமாக தாங்கிய ஜேர்மன் டாங்கிகள், இந்தாண்டின் தொடக்கத்தில், ரஷ்ய எல்லையிலிருந்து வெறும் ஒருசில நூறு கிலோமீட்டரில் லித்துவேனியாவிற்குள் களமிறக்கப்பட்டன.
முன்னணி நேட்டோ தளபதிகள் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு "பிரமாண்ட மூலோபாயத்திற்கு" அழைப்புவிடுக்கிறார்கள். வியாழனன்று பைனான்சியல் டைம்ஸ் உடனான ஒரு நேர்காணலில், பிரிட்டிஷ் தளபதியும் ஐரோப்பாவில் நேட்டோ துணை கமாண்டருமான சர் அட்ரியன் பிராட்ஷா கூறுகையில், விளாடிமீர் புட்டின் அதிகாரத்தில் இருக்கும் வரையில் ரஷ்யா ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்றார். “தன் கரங்களில் அதிகாரத்தின் அனைத்து நிறைவேற்று சாதனங்களையும்" கொண்டுள்ள ஒரு "போட்டியாளருக்கான" விடையிறுப்பில் மேற்கு ஒன்றுபட்டு இல்லையென்றால், விளைவுகள் "பேரழிவுகரமாக" இருக்கும் என்றார்.
மேலும் வியாழனன்று, கிறிஸ்துவ ஜனநாயக கூட்டணியின் (CDU) ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயன் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேலும், நேட்டோ கூட்டணிக்கான அதன் கடமைப்பாட்டை ஜேர்மனி மதித்து நடக்குமென பால்டிக் அரசுகளுக்கு உறுதியளித்தார்.
எஸ்தோனியாவில் உள்ள Ämari விமானத்தளத்தில் வொன் டெர் லெயன் கூறுகையில், “எஸ்தோனியாவும் மற்றும் கூட்டணியில் உள்ள நமது நண்பர்களும் சமீபத்திய ஆண்டுகளில், ஜேர்மனி மற்றும் அதன் கடமைப்பாடுகள் மீது உறுதியாக நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதோடு, எதிர்காலத்திலும் ஜேர்மனி மீதும் அதன் வாக்குறுதிகள் மீதும் அவர்கள் உறுதியாக நம்பிக்கை வைத்திருப்பார்கள்,” இது "…முக்கியமானதாகும்" என்றார். சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஹிட்லரின் நிர்மூலமாக்கும் போருக்குப் பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட உள்ள முதல் ஜேர்மன் தரைப்படை துருப்புகளின் முன்னால், லிதுவேனியாவின் ரூக்லாவில் உரையாற்றுகையில் காப்ரியேல் கூறினார், “எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியாவின் பாதுகாப்பானது, ஜேர்மன் பாதுகாப்பிற்கு ஒத்ததாகும்.”
காப்ரியேல் மற்றும் வொன் டெர் லெயனின் கருத்துக்கள், ஏகாதிபத்திய சக்திகள் எந்தளவிற்கு செல்ல தயாரிப்பு செய்துள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. “ஒரு நாட்டிற்கு அல்லது அதற்கு அதிகமான" நாட்டிற்கு "எதிரான ஓர் ஆயுதமேந்திய தாக்குதல் என்பது அனைவருக்கும் எதிரான ஒரு தாக்குதலாக கருதப்பட வேண்டும்" என்றும், “அவ்வாறான ஒரு ஆயுத தாக்குதல் நடந்தால், அவர்களில் ஒவ்வொருவரும் … தாக்கப்பட்ட அந்த நாட்டிற்கு அல்லது நாடுகளுக்கு உதவ வருவார்கள் … ஆயுத படைகளைப் பிரயோகிப்பது உள்ளடங்கலாக,” என்று நேட்டோ உடன்படிக்கையின் 5 ஆம் ஷரத்து நிர்ணயித்துள்ளது.
இதை மூடிமறைக்காமல் கூறுவதானால்: பால்டிக் நாடுகளில் ஒரு அதிதீவிர-தேசியவாத மற்றும் ரஷ்ய-விரோத வெறி கொண்ட அரசாங்கம் ரஷ்யாவுடன் ஒரு எல்லை மோதலைத் தூண்டினால், உலகின் இரண்டாம் மிகப்பெரிய அந்த அணுஆயுத சக்திக்கு எதிராக போருக்குள் இறங்க பேர்லினும் நேட்டோவும் பொறுப்பேற்றுள்ளன.
அதுபோன்றவொரு மோதலில் எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள்? என்று கடந்த மாதம் உலக சோசலிச வலைத் தளம் கேள்வி எழுப்பியது. நிச்சயமாக பில்லியன்களில் இல்லையென்றாலும் ஏறத்தாழ பல மில்லியன்களில் இருக்கும். அணுஆயுத போர் தடுப்புக்கான சர்வதேச இயற்பியலாளர்களின் ஓர் அறிக்கையின்படி, ஒரு "மட்டுப்படுத்தப்பட்ட" அணுஆயுத போரே கூட, பிரதானமாக கடுமையான சுற்றுச்சூழல் கேடுகளினால், ஒரு பில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்லும் என்று குறிப்பிட்டது. விஞ்ஞானங்களுக்கான அமெரிக்க தேசிய பயிலகத்தின் தகவல்படி, ஒரு "முழு அளவிலான அணுஆயுத போர்" நேரடியாக நான்கு பில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் முதலாளித்துவத்தின் "வெற்றி" என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இதுபோன்ற காட்சிகள், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துவரும் பீதியூட்டல்களாக உதறிவிடப்பட்டன. ஆனால் இப்போதோ, முதலாம் மற்றும் இரண்டாம் உலக போருக்கு முன்னர் இருந்ததைப் போலவே, ஆளும் வர்க்கம் ஒரு புதிய மிகப்பெரிய போர் அனேகமாக ஏற்படும் அல்லது தவிர்க்க முடியாதது என்பதாக கூட முடிவு செய்துள்ளதுடன், மிகவும் வெளிப்படையாக அதை கூறி வருகிறது.
“உலகம் அதன் திருப்புமுனை நிகழ்வை முகங்கொடுத்துள்ளது" என்று தலைப்பிட்டு ஜேர்மன் நாளிதழ் Die Welt இல் வெளியான ஒரு தலையங்கத்தில், ஜேர்மன் வரலாற்றாளரும் அரசியல் ஆலோசகருமான Michael Stürmer, “நிறுத்த முடியாத, கட்டுப்பாட்டை இழந்த சம்பவம் இனியும் கருதிப்பார்க்க முடியாததாக இல்லை" என்றும், “உலக ஒழுங்கமைப்பு என்பது பகற்கனவு என்பதைத்தவிர வேறொன்றுமில்லை,” என்றும் எச்சரிக்கிறார். “ஒரு அரை நூற்றாண்டாக, ரஷ்யாவுடனான போர் —தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ— ஒருபோதும் இப்போதைய அளவிற்கு மிக நெருக்கமாக இருந்ததில்லை,” என்றார்.
Stürmer நினைவூட்டும் ஒரு "அழிவுகரமான சூழலின்" அபாயத்தை ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே தடுக்க முடியும். ஓராண்டுக்கு முன்னர், சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்று தலைப்பிட்ட ஒரு அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு அதுபோன்றவொரு இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான அரசியல் அடித்தளத்தை வழங்கியது.
* போருக்கு எதிரான போராட்டமானது, மக்களில் முற்போக்குத்தனமான சகல கூறுபாடுகளையும் தன் பின்னால் ஐக்கியப்படுத்தி, சமூகத்தில் மிகப்பெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
* இராணுவவாதம் மற்றும் போருக்குக்கு அடிப்படை காரணமான இந்த பொருளாதார அமைப்புமுறை மற்றும் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டம் இல்லாமல் போருக்கு எதிரான எந்தவொரு தீவிர போராட்டமும் இருக்க முடியாது என்பதால், இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கம் முதலாளித்துவ-எதிர்ப்புடன் சோசலிசத்திற்காக இருக்க வேண்டும்.
* ஆகவே இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கம், கண்டிப்பாக, முதலாளித்துவ வர்க்கத்தின் சகல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக மற்றும் தயவுதாட்சண்யமின்றி அவற்றிற்கு எதிராக இருக்க வேண்டும்.
* அனைத்திற்கும் மேலாக இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பாரிய சக்தியை ஒன்றுதிரட்டி, அனைத்துலக தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத புதிய தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டமைப்பதே மிகவும் அவசர அரசியல் பணியாகும்.