Print Version|Feedback
The assault on immigrants and the specter of a US police state
புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலும் அமெரிக்க போலிஸ் அரசின் நிழலுருவும்
By Bill Van Auken
27 February 2017
வெள்ளிக்கிழமையன்று, பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் (CPAC) வழங்கிய வசையுரையின் போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக தனது நிர்வாகம் முன்னெடுத்திருக்கும் ஒடுக்குமுறை குறித்து புளகாங்கிதம் அடைந்ததோடு இந்தப் பிரச்சாரத்தை நடத்தும் ஒடுக்குமுறை சக்திகளை தனது அரசியல் ஆதரவுக்கான முக்கியமான அடித்தளமாக அடையாளம் காட்டினார்.
அவர் அறிவித்தார்: “நமது மாபெரும் எல்லை போலிஸின் உதவி கொண்டு, குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் [Immigration and Customs Enforcement - ICE] இன் உதவி கொண்டு, ஜெனரல் கெல்லி மற்றும் இது விடயத்தில் மிகவும் உணர்ச்சிமிகுதியுடன் இருக்கக் கூடிய அனைவரின் உதவி கொண்டு.... ICE முன்வந்து என்னை வழிமொழிந்தது. அவர்கள் இதற்கு முன்பு ஒரு ஜனாதிபதி வேட்பாளரை வழிமொழிந்தது கிடையாது, அவர்கள் அதற்கு அனுமதிக்கப்படாமல் கூட இருந்திருக்கலாம்.”
ட்ரம்ப் தொடர்ந்தார், “இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், குடியேற்ற அதிகாரிகள் போக்கிலிக் கூட்ட அங்கத்தவர்களையும், போதைமருந்து விநியோகிப்பவர்களையும் மற்றும் குற்றவியல்தனமான அந்நியர்களையும் கண்டறிந்து அவர்களை நமது நாட்டை விட்டு துரத்தியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.”
இந்த வார ஆரம்பத்தில் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான சீன் ஸ்பைசர், நிர்வாகமானது, அடிப்படையில் அமெரிக்காவில் வாழுகின்ற ஒவ்வொரு ஆவணமற்ற புலம்பெயர்ந்தவரையும் குறிவைப்பதாய் இருக்கும் புதிய விதிகளை விநியோகிப்பதில் ICE மற்றும் எல்லை ரோந்து முகவர்களுக்கு இருக்கக் கூடிய “தளைகளை அகற்றியிருக்கிறது” என்று அறிவித்தார்.
தாயகப் பாதுகாப்புத்துறை இந்த அதிரடியான தீவிரப்படுத்தலை உத்தரவிடும் இரண்டு குறிப்புகளை வெளியிட்டது முதலாக இந்த “தளைகள் அகற்ற”த்தினால் விளைந்திருக்கும் மனித உயிர் இழப்புகள் கடற்கரை கடற்கரையாக வெளிப்பட்டு வருகின்றது. ICE முகவர்கள் “குற்றவியல் அந்நியர்”களை -அநேக சந்தர்ப்பங்களில் இவர்கள் குடியேற்ற விதிமீறல்கள், வாகன ஓட்டுதல் குற்றங்கள் மற்றும் சிறுசிறு சட்டமீறல்கள் கொண்டு குற்றம்சாட்டப்பட்டிருந்த தொழிலாளர்களாய் இருந்தனர்- குறிவைத்து நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட வரிசையான திடீர்சோதனைகளை நடத்தினர். குறிவைக்கப்பட்டவர்கள் தவிர “உடன்சேர்ந்த கைது”களில் -திடீர்சோதனைகளின் போது ICE எதிர்கொள்ளக் கூடிய ஆவணமற்றவர்களாக அது சந்தேகிக்கக்கூடிய மற்றவர்களை விவரிக்க அது பயன்படுத்துகின்ற ஒரு வார்த்தைப் பிரயோகம்- மற்றவர்களும் சிக்கிக் கொண்டனர்.
தாய், தந்தையர் அவர்களது குழந்தைகளிடம் இருந்து திடீரென்றும் வன்முறையாகவும் பிரிக்கப்பட்டு அகற்றப்படுகின்ற அச்சுறுத்தலின் கீழ் வாழுகின்ற மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கக் குடும்பங்களுக்கு எதிராக ஒரு பயங்கரத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதே இந்த வேட்டையாடல்களின் மூலம் அவர்கள் எதிர்பார்க்கின்ற விளைவாக இருக்கிறது.
புதிய அமலாக்க உத்தரவுகள் வந்த சில நாட்களிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள், முதலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மீதும், அதன்பின் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதுமான தாக்குதல்களுக்காய் தயார்செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற போலிஸ் அரசு வழிமுறைகளை வரைபடமாக அம்பலப்படுத்தியிருக்கின்றன.
சென்ற புதன்கிழமையின் இரவில் டெக்சாஸ் மாநிலத்தின் ஃபோர்ட் வொர்த் நகரில், ICE இன் முகவர்கள் ஒரு மருத்துவமனையில் திடீரென நுழைந்து அங்கே எல் சல்வடோரில் இருந்து மூளைப் புற்றுநோய்க்கு அவசர அறுவைச்சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டிருந்த உயிராபத்தான நோய்பீடிப்பில் இருந்த 26 வயது பெண்மணி ஒருவரை இழுத்துச் சென்றனர். இரண்டு இளம் பிள்ளைகளுக்கு தாயான சாரா பெல்ட்ரான் ஹெர்னான்டேஸ் என்ற அந்தப் பெண்மணி முகவர்களால் பிடிக்கப்பட்டு கைகால்கள் கட்டப்பட்டு -அவரால் நடக்கமுடியாத நிலையில் ஒரு சக்கரநாற்காலி மூலமாகத் தான் கொண்டுசெல்லப்பட வேண்டியதாய் இருந்தது என்ற நிலையிலும்- கொண்டுசெல்லப்பட்டார்.
ஒரு தனியார், இலாப-நோக்கு தடுப்பு மையத்திற்கு திரும்பவும் அவர் கொண்டுசெல்லப்பட்டார், அங்கு அவருக்கு Tylenol மருந்து மட்டுமே சிகிச்சையாய் கிடைத்தது. தன் சொந்த நாட்டின் வன்முறைக்குத் தப்பி தஞ்சம் தேடும் முயற்சியில், நியூயோர்க்கின் குவீன்ஸ் பகுதியில் சட்டரீதியாக குடியேறி வசித்து வரும் தனது தாயாருடன் ஒன்றுசேரும் நம்பிக்கையில் எல்லை தாண்டியது தான் இந்த இளம் பெண் செய்திருந்த ஒரே “குற்றம்”.
ஒரு வாரம் முன்னதாக வேர்ஜினியாவில், மெதடிஸ்ட் தேவாலயம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த ஆறு புலம்பெயர்ந்தோரை காலையில் வெளியே வரும் சமயத்தில் அவர்களை பிடிக்கும் பொருட்டு ICE முகவர்கள் அந்த தேவாலயத்தை முற்றுகையிட்டிருந்தனர். அவர்கள் ICE முகவர்களால் சூழப்பட்டு, விலங்கிடப்பட்டு ஒரு வெள்ளை வேனுக்குள் தூக்கிப்போடப்பட்டனர். இந்தக் காட்சி ஒரு கடத்தல் சம்பவத்தை ஒத்த வகையில் இருந்ததாக கண்ணால் கண்டவர்கள் விவரித்தனர்.
போலிஸ் அதிகாரங்களது ஒரு உறைய வைக்கும் துஷ்பிரயோகத்தில், பிப்ரவரி 22 அன்று, சான் பிரான்சிஸ்கோவில் இருந்து நியூயோர்க்கின் JFK விமானநிலையத்திற்கு வந்த டெல்டா விமானம் ஒன்றில் இருந்த பயணிகளிடம், அவர்கள் விமானத்தின் கதவைத் தடுத்தபடி நின்றிருந்த எல்லை ரோந்து முகவர்களிடம் தங்களது அடையாள ஆவணங்களை காட்டினாலொழிய விமானத்தை விட்டு இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
திருப்பியனுப்பப்பட உத்தரவைப் பெற்றிருந்த ஒரு புலம்பெயர்ந்த மனிதர் அந்த விமானத்தில் பயணம் செய்ததாக நம்பப்பட்டதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை கூறியது. அந்த மனிதர் அந்த விமானத்தில் பயணம் செய்யவில்லை என பின்னர் அந்த முகமை ஒப்புக்கொண்டது.
எந்த சட்ட முகாந்திரத்தில் எல்லை முகவர்கள் பயணிகளின் ஒரு ஒட்டுமொத்த விமானத்தையுமே விசாரணைக்காய் பிடித்து வைக்க முடிந்தது என்று கேட்கப்பட்ட போது, “அமெரிக்காவிற்குள் நுழைகின்ற அல்லது அங்கிருந்து செல்கின்ற அத்தனை பயணிகளின் பெயர் விவரங்களையும் சேகரிப்பதற்கான அதிகாரத்தை” வழங்குகின்ற ஒரு ஷரத்தை அந்த முகமை மேற்கோளிட்டதாக ரோலிங் ஸ்டோன் பத்திரிகை தெரிவித்தது. ஒரு சர்வதேச எல்லைக்கு அருகிலேயே இல்லாத இரண்டு அமெரிக்க நகரங்களுக்கு இடையிலான விமானம் அது என்பதே அங்கே பிரச்சினை.
“விமான நிலையத்தில் இருந்து காலத்தில் வெளியே செல்வதை துரிதப்படுத்த சட்ட அமலாக்கத் துறையுடன் ஒத்துழைத்துச் செல்வதே சிறந்த வழியாகும்” என்று அந்த முகமையின் ஒரு செய்தித்தொடர்பாளர் மேலும் சேர்த்துக் கொண்டார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தனது அரசியல்சட்ட உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள முயலுகின்ற எவராயிருந்தாலும் சட்டவிரோத கைதை அல்லது துஷ்பிரயோகத்தை எதிர்பார்க்கலாம்.
கெஸ்டோபாவின் ”ஆவணங்களை கொடுங்கள்” (“papers please”) கோரிக்கையை எதிரொலிக்கின்றதான இத்தகைய வழிமுறைகள், ஒட்டுமொத்த மக்களையும் பயமுறுத்தி வைக்கின்ற வகையில் வடிவமைக்கப்படுபவை என்பதோடு, இறுதியில் இவை வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றன.
ஆவணமற்றவர்கள் மீதான இந்த ஒடுக்குமுறையை சொந்த நாட்டில் பிறந்த தொழிலாளர்களின் சார்பாக நடத்தப்படும் ஒன்றாக ட்ரம்ப் நிர்வாகம் வாய்வீச்சுடன் சித்தரித்து வந்திருக்கிறது. “எளிதாக பாதிப்படையும் நிலையிலிருக்கும் அமெரிக்க தொழிலாளர்களுக்கு எதிராக நேரடியாக மோதுகின்ற” புலம்பெயர்ந்தவர்களது ஒரு அடுக்கை வெளியேற்றுவதே தனது நோக்கம் என ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது இப்போது கட்டவிழ்க்கப்பட்டு வருகின்ற போலிஸ் அரசு நடவடிக்கைகள் வெகுவிரைவிலேயே ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராகத் திரும்பவிருக்கிறது என்பதே நிதர்சனமாகும். முதலாளித்துவத்தினால் உருவாக்கப்பட்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு புலம்பெயர்ந்தோரை பலிகடாவாக்குவதும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதுமே, பில்லியனர் நிதிய தன்னலக்குழுக்கள், இராணுவத் தளபதிகள் மற்றும் அப்பட்டமான பாசிஸ்டுகளை கொண்ட ட்ரம்ப்பின் நிர்வாகம், வெளிநாட்டவர் மீதான அச்சம், பொருளாதார தேசியவாதம், மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத வெறிக்கூச்சல் ஆகியவற்றை வளர்த்து விடுவதன் நோக்கமாக இருக்கிறது.
புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலானது, பெருநிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் வரிகளை குறைப்பது, முதலாளித்துவ தொழிற்துறைகள் மற்றும் நிதிச் சந்தைகள் மீதான நெறிமுறைகளை அகற்றுவது, மற்றும் பொதுக் கல்வி தொடங்கி மெடிக்கேர், மெடிக்கேய்ட் மற்றும் சமூகப் பாதுகாப்பு வரை அத்தனை அடிப்படை சமூக சேவைகளையும் அழிப்பது ஆகியவை உள்ளிட ஒரு சமூக எதிர்ப்புரட்சியின் பாகமாகும்.
இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகரீதியாகவோ அல்லது அமைதியான வழியிலோ நடத்தப்பட முடியாது. எந்த மட்டத்திற்கான ஒடுக்குமுறை சிந்திக்கப்பட்டு வருகிறது என்பது இந்த மாதத்தின் ஆரம்பத்தில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, புலம்பெயர்ந்தோர்-விரோத வலைவீச்சில் இணைந்து கொள்வதற்காக 11 மாநிலங்களெங்கும் 100,000 தேசிய காவலர் துருப்புகளின் அணிதிரட்டலை முன்மொழிந்து சுற்றறிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம் வெளியே தெரிந்தது.
இத்தகைய நடவடிக்கைகள் முன்கண்டிராதவை என்ற அதேநேரத்தில், இவை ஒரு நெடிய காலத்தில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சியின் நிர்வாகங்களினாலும் -ஜனாதிபதி பில் கிளின்டனின் கீழ் திருப்பியனுப்புவதை ஒழுங்குபடுத்துவது மற்றும் குடியேறியவர்களின் கைதை கட்டாயமாக்குவது ஆகியவற்றுக்காக 1996 இல் கொண்டுவரப்பட்ட புலம்பெயர்ந்தோர் விரோத சட்டம் முதல் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கீழ் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பேரில் அரசு ஒடுக்குமுறையின் ஒரு பரந்த எந்திரம் உருவாக்கப்பட்டமை மற்றும் அமெரிக்க குடிமக்களை ஆளில்லா விமானம் மூலம் படுகொலை செய்வதை தொடக்கி வைத்தவரும் மற்றும் தனக்கு முந்தைய ஜனாதிபதிகள் அத்தனை பேராலும் திருப்பியனுப்பப்பட்டவர்களை விடவும் அதிகமான எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தவர்களை திருப்பியனுப்பியவருமான பராக் ஒபாமாவின் கீழ் அது விரிவுபடுத்தப்பட்டமை வரை- தயாரிக்கப்பட்டு வந்திருப்பவை ஆகும்.
சர்வாதிகார ஆட்சியின் பகிரங்க வடிவங்களை நோக்கிய இந்த நடவடிக்கைகளிலான பண்புரீதியான தீவிரப்படுத்தலுக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சியானது ட்ரம்ப்புக்கான தனது எதிர்ப்பை, ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ பெருக்கத்தில் இருந்தான எந்த மாற்றத்திற்கும் இராணுவம் மற்றும் உளவு எந்திரத்தின் பெரும் பிரிவுகளில் எழுகின்ற எதிர்ப்பை பிரதிபலிக்கும் விதமாக அவரை கிரெம்ளினின் முகவராக முத்திரை குத்தும் ஒரு பிற்போக்கான பிரச்சாரத்தின் மீது மையப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் தாக்கத்தின் கீழும் சமூக சமத்துவமின்மையின் இடைவிடாத வளர்ச்சியின் கீழும் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் முறிவு காண்பதுதான் இந்த அத்தனை நடவடிக்கைகளின் கீழே அமைந்திருப்பதாகும்.
புலம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பானது, தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் சொந்த நாட்டு தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருடன் சேர்த்து Rio Grande (அமெரிக்க-மெக்சிக்கோ எல்லை) இன் இரு பக்கங்களிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் முறிக்கவியலாத ஐக்கியத்திற்காக போராடுவதன் மூலம் மட்டுமே முன்னெடுத்து நடத்தப்பட முடியும்.
உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வரும் தொழிலாளர்கள் தாங்கள் விரும்பிய நாட்டில் முழுமையான குடியுரிமைகளுடனும் கைது, திருப்பியனுப்பப்படுவது அல்லது ஒடுக்குமுறை ஆகியவற்றின் அச்சமின்றியும் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் கொண்டுள்ள உரிமையை தளர்ச்சியின்றிப் பாதுகாக்கின்ற ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தப் போராட்டம் நடத்தப்பட முடியும்.