Print Version|Feedback
US, South Korea mount massive joint military exercises
அமெரிக்காவும் தென் கொரியாவும் பாரியளவிலான கூட்டு இராணுவ ஒத்திகைகளை நடத்துகின்றன
By Peter Symonds
2 March 2017
அமெரிக்க மற்றும் தென் கொரிய இராணுவங்கள், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையின் மிகப் பெரியளவில் பயிற்சிகளை உள்ளடக்கிய அவற்றின் வருடாந்தர கூட்டு Foal Eagle சாகசங்களை நேற்று தொடங்கின. இதனுடன் தொடர்புபட்ட Key Resolve செயல்பாடு, பெரிதும் கணினி-வழியில் ஒத்திகை பார்க்கப்பட்ட இது, மார்ச் 13 இல் இருந்து 23 வரை நடத்தப்பட உள்ளது.
போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்களுடன் 300,000 தென் கொரிய துருப்புகள் மற்றும் சுமார் 17,000 அமெரிக்க இராணுவத்தினரை உள்ளடக்கி இருந்த கடந்த ஆண்டு போர்பயிற்சிகள், முன்பில்லாதளவில் மிகப்பெரிய ஒன்றாக இருந்தன. உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர் Nikkei Asian Review க்குத் தெரிவிக்கையில் இந்த எண்ணிக்கைகள் இந்தாண்டு அதிகமாக இருக்குமென தெரிவித்தார்.
அமெரிக்க கடற்படை, Foal Eagle பயிற்சிகளில் இணைவதற்காக போர்விமானந்தாங்கி கப்பல் USS Carl Vinson மற்றும் ஏவுகணை-தாங்கிய இரண்டு சிறுபோர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணை-தாங்கிய ஒரு விரைவு போர்க்கப்பலின் ஒரு தாக்கும் குழுவை அனுப்பி உள்ளது. அமெரிக்க கடற்படை பிரிவு முதல்முறையாக ஜப்பானிலிருந்து கொரிய தீபகற்பத்திற்கு அதிநவீன F-35B கண்டறியவியலா போர்விமானங்களை அனுப்புகிறது. தென் கொரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், குவாமில் இருந்து B-52s மற்றும் B-1Bs போன்ற அணுஆயுத தகைமை கொண்ட திட்டமிட்டு தாக்கும் போர்விமானங்கள் அனுப்பப்படக்கூடும் என்று தெரிவித்தார்.
வட கொரியா உடனான போருக்கு வெள்ளோட்டங்களாக உள்ள இந்த வருடாந்தர பயிற்சிகள், கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதட்டங்களை அதிகரித்துள்ளன. ஏற்கனவே வட கொரியாவின் அணுஆயுத பரிசோதனை மற்றும் ஏவுகணை பரிசோதனை மீதும் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் இன் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங்-நம் படுகொலைக்கு அது தான் காரணம் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மீதும் நிலவும் பதட்டமான விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாடுகளுக்கு இடையே, படைபலத்தை எடுத்துக்காட்டும் இந்தாண்டின் இந்த பாரிய நிகழ்வு நடக்கிறது.
அமெரிக்க மற்றும் தென் கொரிய அதிகாரிகள் வழமையாக இந்த வருடாந்தர இராணுவ பயிற்சிகளை தற்காப்புக்கானதாக விவரிக்கின்றனர். ஆனால், 2015 இல் இவ்விரு நாடுகளும் வட கொரியாவுடன் போர் புரிதலைப் பெயரளவில் தற்காப்புக்காக இருந்ததில் இருந்து "முன்கூட்டிய" அல்லது ஆக்ரோஷ போருக்கான அவற்றின் செயல்திட்டமாக மாற்றின. வட கொரிய அணுஆயுத, ஏவுகணை மற்றும் இராணுவ தளங்கள் மீது முன்கூட்டியே தாக்குதல்கள் மற்றும் வட கொரிய தலைவர்களைப் "படுகொலை செய்யும் திடீர்நடவடிக்கைகளை" உள்ளடக்கி இருப்பதாக செய்திகளில் குறிப்பிடப்பட்ட, OPLAN 5015, 2016 கூட்டு ஒத்திகைகளுக்கு அடித்தளமாக இருந்தது, மற்றும் இந்தாண்டிற்கும் அடித்தளமாக இருக்கும். வட கொரியா உடனான போர் சம்பவத்தில், அமெரிக்க இராணுவம் தொன் கொரிய இராணுவ படைகளின் ஒட்டுமொத்த கட்டளையகத்திற்கும் பொறுபேற்கும்.
வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஓர் இராணுவ பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்து விடையிறுத்தார். துருப்புகளது கண்காணிப்புக்காக அவற்றை பாராட்டிய அவர், “எதிரியின் திடீர் வான்வழி தாக்குதலுக்கு எதிராக ஒரு முழுமையான ஈவிரக்கமற்ற எதிர்நடவடிக்கை தாக்குதல்களுக்கு ஏற்பாடாக இருக்க" அவர் உத்தரவிட்டார். வட கொரிய மக்களைப் பாதுகாப்பதிலிருந்து விலகி, அந்த ஆட்சியின் இராணுவவாத பிரகடனங்களும் மற்றும் இராணுவ ஆயத்தப்படுத்தலும் நேரடியாக அமெரிக்காவின் கரங்களில் சாதகமாக்கப்பட்டுள்ளன என்பதுடன், போர் அபாயத்தை உயர்த்தி உள்ளன.
அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் அவரது தென் கொரிய சமபலமான ஹன் மின்-கூ க்கு தெரிவிக்கையில், தென் கொரியாவின் பாதுகாப்பிற்கான "அதன் கடமைப்பாடுகளில்" அமெரிக்கா "உறுதியாக இருப்பதாக" தெரிவித்தார். அமெரிக்கா மீதோ அல்லது அதன் கூட்டாளிகள் மீதோ வட கொரியாவின் எந்தவித தாக்குதலும் தோற்கடிக்கப்படும் மற்றும் ஏதேனும் விதத்தில் அணுஆயுத பிரயோகம் ஒரு "கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நாசகரமான" விடையிறுப்புடன் எதிர்கொள்ளப்படும் என்று எச்சரித்தார்.
தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கொரிய டைம்ஸிற்குப் பின்வருமாறு தெரிவித்தார்: “இந்த ஒத்திகைகளின் போது வட கொரியாவின் அணுஆயுத ஆத்திரமூட்டல்கள் மற்றும் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை ஆத்திரமூட்டல்கள் மீது அதற்கு கூடுதலாக நடைமுறை எச்சரிக்கையை வழங்கவே, இந்த தொலைபேசி உரையாடல் உத்தேசிக்கப்பட்டிருந்தது.” பாதுகாப்பு அமைச்சர் ஹன் "அந்த ஒத்திகைகளைப் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.”
இந்த போர் சாகசங்கள் "தீபகற்பத்தை கூர்மையாக அணுஆயுத போர் விளிம்பிற்கு நெருக்கத்தில் கொண்டு வருமென" கூறி, இவற்றை எதிர்க்க நேற்று டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஒன்றுகூடியதாக Agence France Presse அறிவித்தது.
சமீபத்திய ஆண்டுகளில் தென் கொரிய-அமெரிக்க ஒத்திகைகளின் விரிவாக்கம், பிரதானமாக வட கொரியாவிற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதல்ல. அது சீனாவிற்கு எதிராக அப்பிராந்தியம் எங்கிலுமான அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தலின் பாகமாக உள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" கீழ் தொடங்கி இது, பெய்ஜிங்கிற்கு எதிராக வர்த்தக போர் நடவடிக்கைகளைக் கொண்டும் மற்றும் தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டும் அச்சுறுத்திய ட்ரம்பின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
மாட்டிஸ் அவர் தொலைபேசி உரையாடலின் போது, செவ்வாயன்று தென் கொரிய அரசாங்கத்துடன் எட்டப்பட்ட ஒரு நில-ஒப்படைப்பு உடன்படிக்கையை (land-swap) வரவேற்றதுடன், கொரிய தீபகற்பத்தில் Terminal High Altitude Area Defence (THAAD) எனும் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவுவதற்கு வழிவகுத்து கொடுத்த Lotte Group கூட்டமைப்பையும் பாராட்டினார். மே மாதத்திற்கு முன்னரே கூட நிறைவடையலாம் என்ற அனுமானங்களைத் தூண்டிவிடும் அளவிற்கு, அந்த நிலைநிறுத்தலை "உரிய காலத்திற்குள்" முடிக்க மாட்டிஸ் மற்றும் ஹன் உடன்பட்டனர்.
தென் கொரியாவில் THAAD அமைப்பு நிறுவுவது, பெயரளவில் வட கொரியாவை இலக்கில் வைக்கும் ஒரு பரந்த அமெரிக்க ஏவுகணை-தடுப்பு அமைப்புமுறையின் பாகமாக இருந்தாலும், யதார்த்தத்தில் அது சீனாவுடனான ஒரு அணுஆயுத போருக்கு தயாரிப்பு செய்வதை நோக்கமாக கொண்டதாகும். முதலில் அணுஆயுத தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஒருபோதும் மறுக்கவில்லை என்பதுடன், THAAD அமைப்புமுறை சீன அணுஆயுத பதிலடியைச் செயலிழக்கச் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் எத்தனையோ முறை THAAD நிறுவுதலை எதிர்த்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் இந்த வாரம் கூட அறிவிக்கையில், இந்த ஏவுகணை-தடுப்பு அமைப்பு அப்பிராந்தியத்தில் "மூலோபாய பாதுகாப்பு நலன்களைச் சிக்கலுக்கு உள்ளாக்குவதாக" குறிப்பிட்டதுடன், சியோல் மற்றும் வாஷிங்டன் இதை தொடர்ந்து முன்னெடுத்தால் "விளைவுகளைக்" குறித்து எச்சரித்தார்.
சீன அரசுடைமை ஊடக நிறுவனங்கள் தென் கொரிய பண்டங்களைப் புறக்கணிக்க அச்சுறுத்தி உள்ளன. செவ்வாயன்று Global Times இல் வந்த ஒரு தலையங்கம், “சீனாவிற்கான தென் கொரிய கலாச்சார பண்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு ஏற்றுமதிகள் மீது தடைகளை விரிவாக்கி, அவசியப்படும் போது அவற்றை முற்றிலும் தடுப்பதில்" சீன சமூகம் "தானே முன்வந்து ஒத்துழைக்க வேண்டுமென" முன்மொழிந்தது. சீன நுகர்வோர் Lotte Group ஐ இலக்கில் வைக்க வேண்டுமென உத்தியோகப்பூர்வ Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்தது.
எவ்வாறிருப்பினும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பின்வாங்கும் நோக்கம் இல்லை. நிர்வாகத்தின் ஒரு மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாயன்று செய்தியாளர்களுக்குக் கூறுகையில், ட்ரம்ப் வட கொரியாவை மற்றும் அதன் அணுஆயுத திட்டத்தை அமெரிக்காவிற்கான "மிகப்பெரும் உடனடி அச்சுறுத்தலாக" கருத்துவதாக தெரிவித்தார். சீன அரசு கவுன்சிலர் Yang Jiechi ஐ திங்களன்று சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி, வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணை திட்டத்தை நிறுத்துமாறு செய்ய அதை நிர்பந்திப்பதற்கு பெய்ஜிங் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் கோரினார்.
நேற்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிடுகையில், வட கொரியாவை நோக்கிய அமெரிக்காவின் மூலோபாயம் பற்றிய வெள்ளை மாளிகையின் உள்அலுவலக மீளாய்வு ஒன்று அணுஆயுத அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டுடன் சம்பந்தப்படுத்தி "சாத்தியமான இராணுவ பலத்தையோ அல்லது ஆட்சி மாற்றத்தையோ உள்ளடக்கி உள்ளது.” “பேச்சுவார்த்தைகளில் பரிச்சயமானவர்களின் கருத்துப்படி, அமெரிக்க அதிகாரிகள் கூட்டாளிகளுடனான சமீபத்திய விவாதங்களில் அவர்கள் உருவாக்கி வரும் மூலோபாயத்தின் சாத்தியமான இராணுவ பரிமாணங்களை அவர்கள் எடுத்துக்காட்டியிருப்பதாக" அக்கட்டுரை சேர்த்துக் கொண்டது.
மலேயி அதிகாரிகள் இன்னும் அவர்கள் விசாரணையை முடிக்கவில்லை என்ற உண்மைக்கு இடையிலும், மார்ச் 12 இல் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கிம் ஜோங்-நம் இன் படுகொலை வட கொரியாவிற்கு எதிரான பீதியூட்டும் பிரச்சாரத்தை அதிகரிப்பதற்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விடையில்லா கேள்விகள் பல இன்னமும் இருக்கின்றன நிலையில், அமெரிக்காவின் ஆதரவுடன் தென் கொரியா, கிம் ஐ படுகொலை செய்ய வட கொரியா "பாரிய பேரழிவுகரமான ஆயுதத்தை"—VX நறும்பு மருந்து— பயன்படுத்தியதாக வாதிட்டு வருகிறது.
பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் Asia Times க்கு கூறுகையில், அமெரிக்கா வட கொரியாவின் அணுஆயுத தளவாடங்கள் மீது தான் ஒருங்குவிந்துள்ளது, அதன் இரசாயன மற்றும் உயிரி ஆயுதங்கள் மீது போதுமானளவிற்கு கவனம் செலுத்தவில்லை என்பது குறித்து அவர்கள் கவலை கொண்டிருப்பதாக தெரிவித்தார். வட கொரியா அதன் இருப்பே அச்சுறுத்தப்பட்டிருப்பதாக எப்போதேனும் உணர்ந்தால், “ஆசியாவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சியோல், டோக்கியோ அல்லது அமெரிக்க படைகள் மீது நடத்தப்படக்கூடிய ஒரு திடீர் தாக்குதல்" குறித்து அவர் மிகவும் அஞ்சுவதாக ஒரு மூத்த பென்டகன் அதிகாரி தெரிவித்தார். “அந்த புள்ளியில், நாங்கள் வெறுமனே அணுஆயுதங்கள் குறித்து மட்டுமல்ல மாறாக நிறைய மக்களை, மில்லியன் கணக்கானவர்களைக் கூட கொல்லக்கூடிய மிகப்பெரும் வெவ்வேறு ஆயுதங்களைக் குறித்தும் கவலைப்படாமல் இருக்க முடியாது. நாங்கள் தயாராக இருக்க வேண்டும்,” என்றார்.
அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச ஊடகங்களிலும் வட கொரியா குறித்து அதிகரித்துவரும் விஷமப் பிரச்சாரம், பியொங்யாங்கின் அணுஆயுத மற்றும் ஏவுகணை தளங்களுக்கு எதிராக முன்கூட்டிய இராணுவ தாக்குதல்கள் உட்பட அதற்கு எதிரான ஈவிரக்கமற்ற நகர்வுகளின் சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. தென் கொரியாவில் நடக்கும் இந்த மிகப் பெரியளவிலான இராணுவ பயிற்சிகள், ஏதோவொரு சம்பவமோ அல்லது ஆத்திரமூட்டலோ கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடிய அபாயத்தை மட்டுமே உயர்த்துகிறது.