Print Version|Feedback
Behind the anti-Semitic and racist attacks in the US
அமெரிக்காவில் யூத-எதிர்ப்பு மற்றும் இனவாத தாக்குதல்களின் பின்னணி
Patrick Martin
1 March 2017
ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரத்திற்கு வந்திருப்பது, அமெரிக்க சமூகத்தில் மிகவும் பிற்போக்குத்தனமான, இனவாத மற்றும் பின்தங்கிய சக்திகளை ஊக்குவித்துள்ளது. நாடெங்கிலும் யூத சமூக மையங்களுக்கு தொலைபேசி ஊடாக அண்ணளவாக 100 வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன, இது வரையில் அவை அனைத்துமே பொய் தகவல்களாக இருக்கின்றன என்றாலும் பரந்தளவில் பீதி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. இரண்டு யூத கல்லறைகள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. மிகச்சமீபத்தில் சனியன்று இரவு பிலடெல்பியாவில் 500 க்கும் அதிகமான கல்லறை கற்கள் இடம்பெயர்த்தப்பட்டிருந்தன அல்லது உடைக்கப்பட்டிருந்தன. இம்முயற்சிக்கு கணிசமானளவிற்கு குற்றகரமான சக்தியும் தீர்மானகரமான முயற்சியும் தேவையாகும்.
கடந்த வாரயிறுதியில், ஒரு புலம்பெயர்ந்த இந்திய மென்பொருள் பொறியாளர் கன்சாஸ் நகரில் படுகொலை செய்யப்பட்டார். ஒரு ஈரானியரைக் கொல்வதாக கருதிய ஒரு வெறித்தனமான முன்னாள் கடற்படையினர், சுடுவதற்கு முன்னதாக, கண்முன்னாலேயே ட்ரம்பின் பிரச்சார வாய்சவடலான "எங்கள் நாட்டிலிருந்து வெளியேறு" என்று கூச்சலிட்டவாறு, அவரை ஒரு மதுபான விடுதியில் வைத்து சுட்டுக் கொன்றார். அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலக்கில் வைத்துள்ள ட்ரம்பின் நிர்வாக உத்தரவாணைகளால் கவரப்பட்டு, புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அச்சுறுத்தல் அலையில் இது மிக மிக வெளிப்படையான ஒரு சம்பவமாகும்.
ட்ரம்ப் செவ்வாயன்று இரவு காங்கிரஸிற்கு வழங்கிய மற்றும் தேசியளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அவர் உரையின் தொடக்கத்தில், இனவாத மற்றும் யூத-எதிர்ப்பு தாக்குதல்கள் குறித்து உதட்டளவில் வருத்தம் தெரிவித்தார். புலம்பெயர்ந்தவர்களை குற்றவாளிகள் என்றும், போதைப்பொருள் வினியோகஸ்தர்கள் மற்றும் குண்டர்கள் குழுக்களின் அங்கத்தவர்கள் என்றும் பூதாகரமாக்கும் அவரது பிரதான பிரச்சார கருப்பொருளுக்கு அவர் திரும்பியபோது, அவரது முதலைக் கண்ணீர் ஏறத்தாழ உடனடியாக பொய்யாகி போனது.
யூத-எதிர்ப்புவாத அலையை நோக்கிய ஜனாதிபதியின் நிஜமான மனோபாவம், அரசு அட்டார்னி ஜெனரல்களின் ஒரு குழுவிற்கு அவர் செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் அளித்த குறிப்புகளில் வெளிப்பட்டது. வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மற்றும் கல்லறைகளைச் சிதைப்பது குறித்து ட்ரம்பிடம் கேட்கபட்டபோது, அவர் பதிலளிக்கையில், “மக்களையும் அல்லது மற்றவர்களையும் மோசமாக காட்டுவதற்காக சிலநேரங்களில் அது தலைகீழாக ஆக்கப்படுகிறது,” என்று அரசு அதிகாரிகளுக்குக் கூறினார்.
அவரது அரசியல் எதிர்ப்பாளர்கள் அவர் நிர்வாகத்திற்கு தொல்லை கொடுப்பதற்காக யூத-எதிர்ப்பு தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறார்கள் என்று ட்ரம்ப் கூறுவது இது முதல்முறையல்ல. அவரது பெப்ரவரி 16 பத்திரிகையாளர் கூட்டத்தில் தாக்குதல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் பெரிதும் இதையே தான் கூறி இருந்தார், ஆனால் ஏறத்தாழ சுற்றி வளைத்து குழப்பமான பாணியில் தெரிவித்தார். “கோபத்தினால் மறுபக்கத்தினரால் ஒரு பகுதி நிகழ்வுகள் நடாத்தப்பட்டதற்கான சில அறிகுறிகள் உள்ளன,” என்றவர் வாதிட்டார். “அவர்கள் பொருத்தமற்ற அறிகுறிகளையும் சித்திரங்களையும் காட்டுவார்கள். அவர்கள் என் மக்கள் கிடையாது. அவர்கள் உங்களைப் போன்றவர்களைக் கோபமூட்ட மறுபக்கத்திலிருப்பவர்கள்,” என்றார்.
கல்லறைகளை சிதைப்பதற்கு யூதர்கள் தான் பொறுப்பு என்ற கருத்துக்களால் "மறுபக்கத்தில் இருப்பவர்கள்" என்பதை பிரதியீடு செய்து, முன்னாள் KKK தலைவரும் நவ-நாஜியுமான டேவிட் ட்யூக் போன்ற தீவிர-வலது கூறுபாடுகளால் இதேபோன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
யூத குழுக்களின் அதிகாரிகள் ட்ரம்பின் சமீபத்திய இக்கருத்துக்களை விமர்சித்துள்ள போதினும், அவர்களது தொடர்ச்சியான கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளில் எந்தவித ஆழ்ந்த விளக்கமும் இல்லை. ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகளிடையே ஆழமாக நிலவும் யூத-எதிர்ப்புவாத வெளிப்பாடுகளைக் குறித்த கருத்துக்களையே அவர்கள் கொண்டுள்ளனர்.
யூத-இன ஒழிப்பின் நினைவுகூரல்களை உலகெங்கிலும் அனுசரிப்பது குறித்த உத்தியோகப்பூர்வ வெள்ளை மாளிகை அறிக்கை மிகவும் அப்பட்டமாக இருந்தது, அது ஹிட்லரின் "இறுதி தீர்வு" ஆல் பாதிக்கப்பட்ட யூதர்களைக் குறித்து குறிப்பிடவே இல்லை. இதுவொரு இருட்டடிப்பாகும், இது வேண்டுமென்றே கைவிடப்பட்டதாக வெள்ளை மாளிகையில் அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.
வழிந்தோடும் அருவருக்கத்தக்க யூத-எதிர்ப்புவாதம் மற்றும் வெள்ளை இனவாதத்திற்கும் ட்ரம்பிற்கும் இடையிலான தொடர்புகள், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்களில் ட்ரம்பை உணர்ச்சிபூர்வமாக ஆதரித்த ட்யூக்கிடமிருந்து, அவர் எவ்வளவு தொலைவில் முடியுமோ அவ்வளவு தொலைவில் நிறுத்திக் கொள்ளக் கூட தயங்கும் அவரது இழிவார்ந்த தயக்கத்திலேயே எடுத்துக்காட்டப்படுகின்றன.
நடைமுறையளவில் ஒவ்வொரு பகுதியிலும் முன்னணி பாத்திரம் வகித்து வரும் ட்ரம்பின் மிக நெருக்கமான கொள்கை ஆலோசகர், ஸ்டீபன் பானன், வெள்ளை இனவாதம், யூத-எதிர்ப்புவாதம் மற்றும் நவ-நாஜி கூறுபாடுகளுக்கான பிரதான இணைய வடிகால்களில் ஒன்றாக ஆகியுள்ள ப்ரைய்ட்பார்ட் நியூஸின் பாசிசவாத சிந்தனை கொண்ட முன்னாள் தலைவராவார். அவரது அரசியல் கூற்றுக்களில், பானன், கடந்த வாரத்தின் பழமைவாத அரசியல் செயற்கூட்டத்தில் "பெருநிறுவன, பூகோளமயப்பட்ட ஊடகங்களை" அவர் கண்டித்தமை போன்ற மெல்லிய மறைப்பு வசனங்கள் மூலமாக, இராஜாங்கரீதியில் யூத-எதிர்ப்புவாதத்தை வர்ணிக்க "இலைமறை காயாக வசனங்களைப்" (dog whistles) பிரயோகிக்கிறார்.
1930 களில் "முதலில் அமெரிக்கா" என்ற பெயரைக் கொண்ட குழு, நாஜி அனுதாபி சார்ல்ஸ் லின்ட்பேர்க் தலைமையில் இருந்தது மற்றும் அந்த கோஷம் யூதர்கள் மீதான எதிர்ப்புடன் அடையாளப்பட்டிருந்தது என்ற உண்மைக்கு இடையிலும் அல்லது அத்தகைய உண்மைக்காகவே, அவரது பாசிசவாத பதவியேற்பு உரையின் கருப்பொருளாக ட்ரம்ப் அவரே அந்த பெயரைத் தழுவினார்.
ட்ரம்பின் குடும்பத்தைச் காட்டுவதன் மூலமாக, அதாவது இப்போது ஓர் உயர்மட்ட வெள்ளை மாளிகை அதிகாரியாக உள்ள ஜாரெட் குஷ்னரை திருமணம் செய்தபோது அவர் மகள் ஜூடாயிசத்திற்கு மாறியதையும் மற்றும் நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசின் போன்ற ட்ரம்ப் மந்திரிசபையின் முக்கிய யூத அங்கத்தவர்களை சுட்டிக்காட்டுவதன் மூலமாக, வெள்ளை மாளிகை மீண்டும் மீண்டும் யூத-எதிர்ப்புவாத குற்றச்சாட்டுக்களை மறுத்தளிக்கிறது. இந்த பிரச்சினை அவ்வளவு சுபலமாக தீர்க்கப்படமுடியாது.
புலம்பெயர்வோர்-விரோத இனவாதம் மற்றும் அமெரிக்க தேசியவாதத்தை ட்ரம்ப் ஊக்குவிப்பதானது, ஒரு தீர்க்கமான அரசியல் தர்க்கத்தை கொண்டுள்ளது. அமெரிக்க அரசியல் வாழ்வில் துர்நாற்றம் பரப்பும் மிகவும் பிற்போக்குத்தனமான போக்குகளுடன் அவர் நிர்வாகம் அணி சேர்ந்து வருகிறது. ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஒன்றுகூடிய இத்தகைய கூறுபாடுகள், அவர் தேர்தல் வெற்றி மற்றும் பானன், செபஸ்டீன் கோர்கா (இவர் ஹங்கேரிய நவ-நாஜி குழுவான Order of Vitéz உடன் தொடர்புபட்டவர்) மற்றும் மைக்கல் அன்டன் (இவர் இஸ்லாமை ஒரு “போர்குணமிக்க நம்பிக்கையாக” கண்டிப்பவர்) ஆகியோரை வெள்ளை மாளிகையின் உயர் பதவிகளில் அவர் உயர்த்தியதுடன் சேர்ந்து பலமடைந்தன.
ட்ரம்ப் நிர்வாகம் அது பதவியேற்ற முதல் நாளில் இருந்து இனவாதம் மற்றும் பேரினவாதத்தில் மூழ்கியுள்ளது. கடந்த வாரம் அவர் யூத-எதிர்ப்புவாதத்தை கடமைக்காக கண்டிக்க நிர்பந்திக்கப்பட்டிருந்த நிலையில், ட்ரம்ப் முஸ்லீம்-எதிர்ப்பு அல்லது புலம்பெயர்ந்தோர்-விரோத வன்முறை குறித்து ஒரு வார்த்தையும் உச்சரிக்கவில்லை. அவர் கனடாவின் கியூபெக் நகர மசூதியில் ஒரு அதிதீவிர வலது இனவாதியும் ட்ரம்பை ஆதரிப்பவருமான ஒருவரால் ஐந்து முஸ்லீம்கள் கொல்லப்பட்டமை குறித்து ஒன்றுமே கூறவில்லை.
இக்காலம் நெடுகிலும், புதிய நிர்வாகத்தின் பிரதான கொள்கை முனைவானது, மத்திய கிழக்கில் அமெரிக்க குண்டுவீச்சுக்கள் மற்றும் ஏவுகணைகளில் இருந்து முஸ்லீம் அகதிகள் தப்பியோடி வந்தாலும் சரி, அல்லது அமெரிக்காவில் குறைந்த கூலிக்கும் எளிதில் செய்யவியலாத வேலைகளிலும் வேலை செய்து தங்கள் குடும்பங்களை காப்பாற்றும் மெக்சிகன்வாசிகள் மற்றும் மத்திய அமெரிக்கர்கள் ஆகட்டும், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான ஒரு படுகொலை-பாணியிலான தாக்குதலை தொடங்குவதாகவே இருந்துள்ளது.
அப்பாவி மக்கள் மீது மிகப் பெரியளவில் பகிரங்கமான வேட்டையாடல்கள், சுற்றி வளைப்புகள் மற்றும் பாரியளவிலான சிறையடைப்புகளும், அமெரிக்காவில் ஒவ்வொரு இனவாத குண்டர்களுக்கும் பச்சை விளக்கு காட்டுவதற்கு சேவையாற்றுகிறது. யூத-எதிர்ப்புவாதம் மற்றும் இனவாதத்தின் மேலேழுச்சிக்கு தார்மீகரீதியிலும் மற்றும் அரசியல்ரீதியிலும் ட்ரம்ப் நிர்வாகமே பொறுப்பாகும். இதற்கு அதை பொறுப்புகூற வைக்கப்படவேண்டும்.
ஆனாலும் ட்ரம்ப் நிர்வாகம் ஓர் ஆழ்ந்த நோயின் வெளிப்பாடாகும். மற்றும் இது ட்ரம்ப் மற்றும் பானன் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்ததில் இருந்து தொடங்கவில்லை. பொதுவாக தீவிர வலது தேசியவாதம் மற்றும் குறிப்பாக யூத-எதிர்ப்புவாதம் எப்போதுமே சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்துடன் பிணைந்துள்ளது. இது மக்கள் கோபத்தை திசைதிருப்பவும் மற்றும் போருக்கான சித்தாந்தரீதியிலான அடித்தளத்தை உருவாக்கவும் ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படுவதாகும்.
1930 களில் ஐரோப்பாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் காட்டுமிராண்டித்தனமான யூத-எதிர்ப்புவாத வளர்ச்சி கண்டது. தெற்கில் இனவாத தான்தோன்றித்தனத்தின் ஒரு காலகட்டமாகவும் இருந்த அது, அதைத் தொடர்ந்து இரண்டாம் உலக போரின் போது ரூஸ்வெல்ட் நிர்வாகம் கட்டளையிட்ட ஜப்பானிய அமெரிக்கர்களின் பாரிய சிறையடைப்புகள் வந்தன.
அந்த தேசியவாத துர்நாற்றம் அனைத்தும் மீண்டும் மீளெழுந்து வருகின்றன. யூத-இன ஒழிப்பு மறுப்பு, யூத-எதிர்ப்புவாதம், புலம்பெயர்ந்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்களை ஊக்குவிக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து, பொலிஸ் மற்றும் இராணுவ ஆயத்தப்படுத்தல்கள் நிகழ்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய குற்றங்களுக்கு பொறுப்பான பாசிசவாத சக்திகள் ஐரோப்பா எங்கிலும் மேலுயர்ந்து வருகின்றன.
ஒவ்வொரு நாடாக, ஆளும் வர்க்கம் தேசியவாதம் மற்றும் மதவாத வெறித்தனத்தின் படுமோசமான வடிவங்களை முன்னுக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. நேட்டோ ஆதரவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது மத்திய கிழக்கு போர் கொள்கைகள், பத்து மில்லியன் கணக்கானவர்களை அவர்களது வீடுகளை விட்டு வெளியே விரட்டியுள்ளது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள், பாதுகாப்பு மற்றும் ஒரு கண்ணியமான எதிர்காலத்திற்காக ஐரோப்பாவை நோக்கி வர திரும்பியுள்ளனர். ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையும் மற்றும் ஐரோப்பாவில் அதன் சக-சிந்தனையாளர்களின் கொள்கையும், ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்பட்டவர்களை "பயங்கரவாதிகள்" என்று முத்திரை குத்தி, அவர்களுக்கு உள்நுழைய தடைவிதிக்கிறது.
இறுதி ஆய்வுகளில், ட்ரம்ப் நிர்வாகத்தால் வாரியிறைக்கப்பட்டுள்ள இந்த பாசிசவாத பிற்போக்குத்தன கலவையானது, முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடி மற்றும் நிலைமுறிவின் ஒரு விளைபொருளாகும்.