Print Version|Feedback
From the archives of the Revolution
The Petrograd Soviet’s “Order No. 1”
புரட்சியின் ஆவணக்காப்பகத்திலிருந்து
பெட்ரோகிராட் சோவியத்துகளின் “ஆணை எண்1”
தொழிலாளரினதும் படையினரினதும் பிரிதிநிதிகளின் பெட்ரோகிராட் சோவியத்தால் வழங்கப்பட்டது
13 March 2017
மார்ச் 14 (March 1, O.S.) அன்று படையினரினது கோரிக்கையின் பேரில், பெட்ரோகிராட் சோவியத்தானது “ஆணை எண் 1” ஐ வழங்கியது, அதனை ட்ரொட்ஸ்கி “பிப்ரவரி புரட்சியின் மதிப்புவாய்ந்த தனியொரு ஆவணம்” என விவரித்தார்.
பெட்ரோகிராட் பிராந்திய படைக் கொத்தளத்திற்கு, காவலர், இராணுவம், பீரங்கிப்படை மற்றும் கடற்படையின் அனைத்துப் படையினரே, உங்களது உடனடியான மற்றும் துல்லியமான நிறைவேற்றுதலுக்காக; பெட்ரோகிராட் தொழிலாளர்களே உங்கள் அறிதலுக்காக.
தொழிலாளர் படைவீரர் சோவியத்தின் முக்கிய பணியாளர்கள் இதன் மூலம் ஆணையிடுவதாவது:
1) அனைத்து படைப்பிரிவுகளும், பட்டாலியன்களும், ரெஜிமென்ட்டுகளும் பீரங்கிப் படைப்பிரிவும் குழுக்கள், ஸ்குவாட்ரன்கள் மற்றும் பல்வேறு இராணுவ சேவைகளுக்கான படைப்பிரிவுகளும், கடற்படைக் கப்பல்களில் உள்ளோரும் படைப்பிரிவுகளின் கீழ் அணிகளில் இருந்து உடனடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட குழுக்களை தேர்வு செய்க.
2) தொழிலாளர்களின் முக்கிய பணியாளர் சோவியத்திற்கு தங்களது பிரதிநிதிகளை இன்னும் தேர்வு செய்திராத இரணுவப் படை அலகுகள் அனைத்தும் ஒவ்வொரு படைப்பிரிவுகளிலிருந்தும் ஒரு பிரதிநிதியைத் தேர்வு செய்ய வேண்டும் – அவர் தகுந்த நற்சான்றுகளுடன் மார்ச் 2 ஆம் தேதி, காலை 10 மணி அளவில் அரசு டூமா கட்டிடத்திற்கு வரவேண்டும்.
3) ஒவ்வொரு இராணுவ அலகும் அதன் அரசியல் நடவடிக்கையில் தொழிலாளர் படையினரின் சோவியத்துக்கும் அதன் குழுக்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
4) அரசு டூமாவின் இராணுவ ஆணைக் குழுவிலிருந்து (அதாவது தற்காலிக அரசாங்கம்) வரும் ஆணைகளானவை, தொழிலாளர் படையினர் முக்கிய பணியாளர் சோவியத்தின் ஆணைகளுக்கும் முடிவுகளுக்கும் முரண்படாது இருந்தால் மட்டுமே அவை நிறைவேற்றப்படும்.
5) துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள், கவச வாகனங்கள் போன்ற அனைத்து வகையான ஆயுதங்களும் படைப்பிரிவுகள் மற்றும் பட்டாலியன் குழுக்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவேண்டும்; ஒப்படைக்கப்படல் வேண்டும், அதிகாரிகளுக்கு, அவர்கள் கேட்டால் கூட எந்த வகையிலும் அவை வழங்கப்படக் கூடாது.
6) படையினர் கடமையில் இருக்கும் போதும் தங்களது தொழில்முறை ரீதியான கடப்பாடுகளை ஆற்றுகையிலும் கடும் இராணுவ ஒழுங்கைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், ஆனால் அதேவேளை தாங்கள் பணியில் இல்லாத பொழுது, தங்களின் அரசியல், பொது மற்றும் தனிப்பட்ட வாழ்வில், அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ள உரிமைகளை எந்த வகையிலும் மறுக்கக் கூடாது.
குறிப்பாக, பணியில் இல்லாத வேளையில் அசையாது நிற்பது, மரியாதை செலுத்துவது (அட்டென்சனில் நிற்பது, சல்யூட் அடிப்பது), ஒழிக்கப்படுகின்றன.
7) அதேபோல அதிகாரிகளின் பட்டங்களாகிய மேதகு, மாண்புமிகு முதலியன இல்லாமல் செய்யப்பட்டு திரு. தளபதி, திரு. கர்னல் என்றவற்றால் பதிலீடு செய்யப்படுகின்றன.
அனைத்து இராணுவ அணிகளிலும் உள்ள படையினர் முரட்டுத்தனமாக நடத்தல், குறிப்பாக, அவர்களுக்கு கூறும்பொழுது (நட்பார்ந்த, பழகிய சூழ்நிலைக்குரிய முன்னிலைப் பெயருரிச் சொல்லை) “ஏய்” எனும் சொல்லைப் பயன்படுத்தல் தடைசெய்யப்படுகிறது மற்றும் இது தொடர்பான எந்த மீறலும், அதேபோல அதிகாரிகளுக்கும் படையினருக்கும் இடையிலான அனைத்துவிதமான தவறானபுரிதல்களும் படைப்பிரிவின் குழுக்களுக்கு கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும்.
பெட்ரோகிராட் தொழிலாளர் படையினரது சோவியத்தின் பிரதிநிகளின் பேரில்.