Print Version|Feedback
Maruti Suzuki workers lead protest demanding freedom for 13 workers jailed for life
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 தொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி மாருதி சுசூகி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றனர்
By a WSWS reporting team
24 March 2017
உலக சோசலிச வலைத் தளம், ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிக்க கோரும் இணையவழி மனுவில் கையெழுத்திட அதன் வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
நேற்று ஹரியானா மாநிலம், மானேசர் பகுதியில் ஜோடிக்கப்பட்ட கொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபடுத்தி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள 13 மாருதி சுசூகி தொழிலாளர்களையும், அத்துடன் அதற்கு சற்று குறைவான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இன்னும் நான்கு தொழிலாளர்களையும் உடனடியாக விடுவிக்ககோரி 8,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் (MSWU) 12 அலுவலக நிர்வாகிகளும் இந்த 13 பேரில் அடங்குவர். ஒரு நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் தொழிற்சங்கத்திற்கு எதிராக மோசமான கூலி வழங்கல், ஒப்பந்த தொழிலாளர் வேலைகள், கடுமையான வேலையிட நிலைமைகள் போன்றவற்றிற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தான் மாருதி சுசூகி மானேசர் வாகன அசெம்பிளி ஆலை தொழிலாளர்கள் MSWU இனை நிறுவினார்கள்.
மானேசர் பேரணியில் மாருதி சுசூகி தொழிலாளர்கள்
MSWU இனை அங்கீகரிக்க மாருதி சுசூகி நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்ட சில மாதங்களுக்கு பின்னர், பொலிஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கத்துடன் கைகோர்த்து செயலாற்றும் ஜப்பானுக்கு சொந்தமான வாகன உற்பத்தியாளர்கள் அவர்களது ஆத்திரமூட்டலை அரங்கேற்றினர். தொழிற்சாலை பிரிவில் நிறுவனத்தினால் தூண்டிவிடப்பட்டு நடந்த கைகலப்பு மற்றும் மர்மமான முறையில் கைகலப்பிற்கு மத்தியில் வெடித்த நெருப்பிடல் சம்பவம் போன்றவற்றையே காரணங்களாக காட்டி தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு நீதிமன்ற சூனிய வேட்டையை அதிகரிக்கவும், தொழிலாளர் பிரிவினரிலிருந்து களையெடுக்கவும் மாருதி சுசூகி நிறுவனம் அவற்றை பற்றிக்கொண்டது.
நேற்று நடந்த ஊர்வலம் மற்றும் பேரணியில் இணைந்துகொள்வதில், மே 14 வரையிலும் மானேசர் தொழிற்துறை அமைந்திருந்த மாவட்டமான குர்கானில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடும் கூட்டத்திற்கு அரசு அதிகாரிகளால் சுமத்தப்பட்டுள்ள ஒரு முற்றுமுழுதான தடையினை தொழிலாளர்கள் புறக்கணித்தனர்.
பகல் வேலை நேரம் முடிவடைந்து, தொழிலாளர்கள் அவரவர் ஆலைகளிலிருந்து மானேசர் பூங்காவினை நோக்கி அவர்களது அணிவகுப்பை தொடங்கியபோது பொலிஸ் ஆரம்பத்தில் தடுக்க முயன்றனர் என்று ஒரு MSWU செய்தி தொடர்பாளர் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார். எனினும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் அளவினை பார்த்தபோது, அதிலும் குறிப்பாக மானேசர் மாருதி சுசூகி ஆலையில் சுமார் 3,000 தொழிலாளர்களின் கூடியிருந்ததை பார்த்ததும், பேரணியினை தொடர அனுமதிக்கவே முடிவுசெய்தனர்.
மானேசர் தெருக்களில் கண்காணிப்புக்கும், தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும் ஐநூறு பொலிஸாரை அரசாங்கம் குவித்திருந்தது. மேலும், கூடுதல் பாதுகாப்பு படைகளின் “இரண்டு பட்டாலியன்களையும்” அருகாமையில் நிலைநிறுத்தி வைத்திருந்தது என்பதும் தெரியவந்தது.
இந்தியாவின் தலைநகரமான தில்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாபெரும் வாகன தயாரிப்பு மற்றும் உற்பத்தி மையமாக விளங்கும் குர்கான்-மானேசர் தொழிற்துறை பகுதியில் உள்ள டஜன் கணக்கான தொழிற்சாலைகளிலிருந்து தொழிலாளர்கள் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராஜஸ்தானில், ஆழ்வார் பகுதி போன்ற தொலைவில் இருப்பதும், தில்லியின் ஏனைய தொழிற்துறை புறநகர் பகுதிகளான நொய்டா மற்றும் ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பிரதிநிதிகள் கூடியிருந்தனர்.
மானேசர் பேரணி
பேரணியில் உரையாற்றிய, MSWU இன் இடைக்கால செயற்குழு உறுப்பினர் ராம் நிவாஸ், “நாம் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறோம், ஆனால் அதற்காக நாம் பலவீனமாக இருக்கிறோம் என்று அர்த்தமில்லை. ஏப்ரல் 4 அன்று நாம் அரசாங்கம் மற்றும் மாருதி நிர்வாகத்திற்கு எதிராக ஒரு அனைத்து இந்திய ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டும் என்பதுடன் நமது 13 சகோதரர்களுக்கு நீதி வழங்கப்படும் வரையிலும் இந்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடைபெறச்செய்யவேண்டும்” என்று கூறினார்.
மாருதி சுசூகி மனிதவள (HR) மேலாளர் மூச்சுதிணறி இறந்தது தொடர்பாக 13 தொழிலாளர்கள் மீது போடப்பட்ட அரக்கத்தனமான ஜோடிப்பு வழக்கினையும், 150க்கும் அண்ணளவான ஏனைய தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தபட்டு இருப்பதையும், மேலும் 2012 ஜுலை 18ம் தேதிய கைகலப்புக்கு பின்னர் மாருதி சுசூகி நிறுவனம் 500 க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களையும், 1,800 ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்ததையும் குறித்து நிவாஸ் கண்டனம் தெரிவித்தார்.
“மனிதவள மேலாளரின் இறப்பிற்கு பின்னணியில் நெருப்பின் காரணமாகவே அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது என்று பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றபோது, தொழிலாளர்கள் மீது எப்படி கொலை குற்றம்சாட்டப்பட்டது?” என்று நிவாஸ் கேட்டார். “அவர்கள், தொழிலாளர்களுக்கு வேலையின்மை நிலையை உருவாக்கியதன் மூலம் நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்க்கையை அழித்துவிட்டனர், கூடவே தற்போது இந்த 13 தொழிலாளர்களின் வாழ்க்கையையும் முடித்துவிட்டனர். இந்த நிலையில், நாம் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்களுடன் தொடர்புகொண்டு ஆதரவு திரட்டவேண்டும்.” என்றும் கூறினார்.
மாருதி உத்யோக், தொழிலாளர்கள் சங்கத்தின் பொது செயலாளரான குல்தீப் ஜங்கு, பேரணியின்போது, “இந்த குற்றவாளிகள் அப்பாவிகளாக உள்ளனர், எனவே நாம் பஞ்சாபில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பினையும், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். நீதிமன்றமே உண்மையை வெளிப்படுத்துவதற்காக, நாம் ஒரு நீதிவிசாரணையை நடத்துமாறு அதனிடம் வேண்டிக்கேட்டுகொள்வோம். அனைத்து 13 தொழிலாளர்களும் கொலை குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.” என்று தெரிவித்தார்.
பேரணியில் பேச்சாளர்களும் தொழிலாளர்களும் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், 2012 நிகழ்வுகள் குறித்த பொலிஸ் சிறப்பு புலனாய்வு குழுவின் “விசாரணை” ஒரு வெட்கக்கேடானது என்றே கண்டனம் செய்தனர். 13 தொழிலாளர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கூட, பொலிஸ் நிர்வாகத்துக்கு உடந்தையாக இருந்ததுடன் ஆதாரங்களை இட்டுக்கட்டி தயார்செய்துள்ளனர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது என்பதை குறிப்பிட்டனர். மேலும் தொழிலாளர்களிடமிருந்து போலியான வாக்குமூலங்களை கறக்கும் நோக்கம் கொண்டே பொலிஸ் 148 தொழிலாளர்களுள் பலரை அடித்தும், சித்திரவதை செய்தும் உள்ளனர் என்பது போன்ற மறுக்கமுடியாத ஆதாரங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
MSWU இன் இடைக்கால செயற்குழுவின் தலைவரான குஷி ராம், நிர்வாகம் தனது ஆகஸ்ட் 2012 தொழிலாளர்கள் களையெடுப்பின்போது பணிநீக்கம் செய்த அனைத்து 546 நிரந்தர தொழிலாளர்களையும் மீண்டும் பணியிலமர்த்தவேண்டும் என்று தொழிற்சங்கம் போராடிக்கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும், “அவர்கள் 546 தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளனர்,” என்றாலும், “சிறப்பு புலனாய்வு குழு தனது அறிக்கையில் அவர்களுள் 214 பேரின் பெயர்களை மட்டுமே குறிப்பிடுகின்றனர். தற்போது, (மாவட்ட) நீதிமன்றம் கூட இந்த வழக்குடன் சம்பந்தப்பட்டிருந்தவர்களில் 117 பேரை விடுதலை செய்துவிட்டது. நிறுவனம் தற்போது அவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.” என்று ராம் கூறினார்.
குர்கான்-மானேசர் தொழிற்துறை பகுதியில் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு ஒரு நிறுவனம் மற்றும் அரசின் சதி வேட்டை நோக்கம் கொண்டிருந்ததனாலும், மேலும் முதலீட்டாளர்களுக்கு மாபெரும் இலாபங்களை தரக்கூடிய மலிவுகூலி உழைப்பு மீதான தொழிலாளர் எதிர்ப்பை இரக்கமின்றி நசுக்க இந்திய அரசியல் ஸ்தாபகம் முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கின்றதாலுமே, மாருதி சுசூகி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 17ம் தேதிய தண்டனை விசாரணையின்போது, நீதிமன்றம் 13 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கவேண்டுமென்று வாதி தரப்பு வாதிடுகையில், மலிவு உழைப்புக்காக அந்நிய முதலீட்டாளர்களை சீனாவிலிருந்து இந்தியா நோக்கி திரும்பசெய்யும் வகையில் அவர்களை கவரும் நோக்கம்கொண்டுள்ள இந்திய அரசாங்கத்தின் “இந்தியாவில் உற்பத்திசெய்யுங்கள்” கொள்கையை சுட்டிக்காட்டியது.
மாருதி சுசூகி தொழிலாளர்களின் உடனடி விடுதலைக்கு கோரிக்கை விடுப்பதற்கும், அவர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் இல்லாதொழிப்பதற்கும், மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் பணியிலமர்த்த செய்வதற்கும், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும், தொழிலாளர்களையும், ஜனநாயக உரிமைகள் மீது மதிப்புவைத்திருக்கும் அனைவரையும் அணிதிரட்டுவதனை உடனடியாக செய்யவேண்டும்.
117 தொழிலாளர்கள் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிகாரிகளை வலியுறுத்தவும், மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களை இன்னும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்துவதற்கு முனையவும் விரும்புவதாக ஜப்பானுக்கு சொந்தமான வாகன தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களது மிகக் கொடூரமான சுரண்டல் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுவதே 13 பேர் செய்த ஒரே “குற்றம்” என்பதையும் அது வலியுறுத்துகிறது.
மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கொடூரமான “வர்க்க நீதி” குறித்து குர்கான்-மானேசர் தொழிற்துறை பகுதி மற்றும் இந்தியா முழுவதிலும், தொழிலாளர்களுக்கு மத்தியில் உக்கிரமான கோபம் உள்ளது. இருப்பினும், இரட்டை ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது (CPM) போன்றவை உள்ளிட்ட பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகள், மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு உள்ள போராட்டத்தை பிடிவாதமாக எதிர்த்துள்ளனர். CPI அல்லது CPM எதுவுமே மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது மார்ச் 10ல் குற்றம் ஊர்ஜிதபடுத்தபடுதல், அல்லது மார்ச் 17ல் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுதல் போன்ற எதற்கும் கண்டனம் தெரிவித்து செய்தி குறிப்பு எதனையும் வெளியிடவில்லை.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக மாருதி சுசூகி தொழிலாளர்கள் ஒரு நிறுவனம் மற்றும் அரசின் ஜோடிப்பு வழக்கை எதிர்த்து போராடிக்கொண்டே இருக்கின்ற நிலையில், ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவ நீதிமன்றங்களுக்கும், பெரு வணிக அரசியல் ஸ்தாபகங்களுக்கும் “நீதிக்காக” மேல்முறையீடு செய்வது குறித்து அதன் முயற்சிகளை குவிமையப்படுத்த MSWU மீது மேலோங்கியிருக்க அவர்களது செல்வாக்கை பயன்படுத்தினர்.
மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிக்க கோரி போராடுவதற்கு இந்தியாவின் சுயாதீனமான வலிமையையும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவதற்கு அழைப்பு விடுக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் இந்திய ஆதரவாளர்கள் நேற்று சென்னையில் நடந்த ஒரு பேரணியில் தலையிட்டனர்.
ஒரு புரட்சிகர பயங்கரவாதியான பகத் சிங்கிற்கு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி மூலம் மார்ச் 23, 1931ல் மரணதண்டனை விதிக்கப்பட்டதை நினைவுகூரும் விதமாக இந்திய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி (Maoist Communist Party of India-Marxist Leninist-CPI-ML) உடன் இணைந்த தொழிற்சங்கங்களின் அனைத்து இந்திய மத்திய குழு (All India Central Council of Trade Unions-AICCTU) இந்த பேரணிக்கு அழைப்புவிடுத்திருந்தது.
“ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்!” என்ற வாசகமிட்ட ICFI இன் அறிக்கை நகல்களை அதன் ஆதரவாளர்கள் விநியோகித்தனர், மேலும் கிட்டத்தட்ட 300 தொழிலாளர்கள் கலந்துகொண்ட இந்த பேரணியில், அவர்களுடனான கலந்துரையாடல்களை தடைசெய்யும் வகையில் AICCTU தலைவர்கள் முயற்சிகள் மேற்கொண்டபோதும், அவர்களில் பெரும்பாலோரிடமிருந்து இந்த அறிக்கைக்கு ஒரு ஆர்வம்மிக்க பிரதிபலிப்பு கிடைத்தது.
27 வயதான ஒரு ரெனால்ட்-நிசான் தொழிலாளியான நடராஜ், “நானும் கார் தயாரிக்கும் ஒரு உலகளாவிய நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறேன். இந்த சர்வதேச பிரச்சாரத்தின் மூலமாக உலகளவிலான வாகன தொழிலாளர்களுடனான கலந்துரையாடலை நாம் அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதை நான் முக்கியமானது என்று நம்புகிறேன். மாருதி சுசூகி நிறுவனமும் ஒரு உலகளாவிய நிறுவனமாக இருப்பதால், இதற்கு சவாலாக சர்வதேச தொழிலாளர்களை அணிதிரட்டுவது அவசியமாகும்” என்று கூறினார்.
ஒரு ஓட்டுநரான ஆனந்தன் பின்வருமாறு தெரிவித்தார்: “மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்க இந்த சர்வதேச பிரச்சாரம் முக்கியமானதாக உள்ளது. ஒரு தொழிற்சங்கம் அமைப்பது மற்றும் ஊதிய உயர்வு கோருவது போன்ற நியாயமான உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்களை பிணை அனுமதியின்றி நான்கு ஆண்டுகளுக்கு சிறையில் அடைத்திருப்பது என்பது நீதிமன்றங்கள் தொழிலாளர்களுக்காக இல்லை என்பதையே காட்டுகிறது. சேகர் ரெட்டி போன்ற பணக்கார மக்கள் கொலையே செய்திருந்தபோதும் ஒரு வாரத்திற்குள் பிணையில் சிறையிலிருந்து வெளிவர முடியும்… சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் எப்படி துயரமடைந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்த்தால் வேதனையாக உள்ளது. தற்போது 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பங்களும் தெருக்களில் தூக்கியெறியப்பட்டுவிடும்.”
வெங்கடேஷ் மற்றும் சண்முகம்
“இந்தியாவில் மலிவு உழைப்பு ஒப்பந்த அமைப்பானது பொது தொழிற்துறைகள் உட்பட அனைத்து தொழிற்துறைகளிலும் தாக்கத்தை கொண்டிருகின்றன. அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களிலும் கூட வேலைக்கு பாதுகாப்பின்மையே நிலவுகிறது. நிறுவனம், பொலிஸ் மற்றும் அரசாங்கத்தின் உடந்தையுடனேயே மாருதி சுசூகி தொழிலாளர்கள் ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்கின்றன. தொழிலாளர்களும், மக்களும் இந்த கட்சிகள் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக எதையும் பெறுவதில்லை. எனவே, இந்த சர்வதேச பிரச்சாரம் பயனுள்ளதாக இருக்கும்” என்று வெங்கடேசன் கூறினார்.
சுரேந்தர் மற்றும் ஸ்ரீதர்
மற்றொரு தொழிலாளியான சுரேந்தர் பின்வருமாறு கூறினார், “நான் கடுமையாக இந்த தீர்ப்பினை கண்டனம் செய்கிறேன். மாருதி சுசூகி தொழிலாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். உலகளாவிய நிறுவனங்கள் அவர்களது பணத்தைக்கொண்டு எதையும் சாதித்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், சர்வதேச தொழிலாளர்களின் ஐக்கியம் அதனைக்காட்டிலும் மிகுந்த சக்திவாய்ந்தது. நாங்கள் தயங்கவில்லை. மேலும், எங்களது கருத்துகளும், புகைப்படங்களும் வெளியிடப்படவேண்டும் என்றே விரும்புகிறோம். இது தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்தினை பிரதிபலிக்கும், மேலும் இளம் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலமாக ஒரு மாற்றத்தினை உருவாக்க முடியும்.”