Print Version|Feedback
EU’s post-Brexit plans foresee growing conflict
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய திட்டங்கள் அதிகரித்துவரும் மோதலை முன்கணிக்கின்றன
By Alex Lantier
4 March 2017
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜோன்-குளாட் ஜூங்கர் மார்ச் 1 அன்று ஐரோப்பா குறித்து வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையானது சென்ற ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக பிரிட்டன் எடுத்த எதிர்பாராத வாக்காளிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகிகளால் அளிக்கப்பட்ட மிக முக்கியமான உலகளாவிய கொள்கை பதிலிறுப்பாக முன்வைக்கப்பட்டது.
சென்ற ஆண்டின் ஜூன் மாதத்து பிரெக்ஸிட் வாக்களிப்பானது, ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கிடைத்த வரிசையான அரசியல் அடிகளில் முதலாவதாய் இருந்தது. இத்தாலியின் வாக்காளர்கள் சென்ற இலையுதிர் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு-ஆதரவான அரசியல்சட்ட கருத்துக்கணிப்பு ஒன்றை நிராகரித்தனர்; ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளால் விளைந்திருக்கும் ஆழமான மக்கள் கோபத்தை சுரண்டிக் கொள்கின்ற அதி-வலது, ஐரோப்பிய ஒன்றிய-விரோதக் கட்சிகளின் எழுச்சியால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற தேர்தல்களில் இந்த வசந்த காலத்தில் டச்சு மற்றும் பிரான்சு வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணி அதன் யூரோ-விரோத மற்றும் ஐரோப்பிய ஒன்றிய-விரோத வேலைத்திட்டத்தின் கீழ் அதிகாரத்தைப் பிடிக்குமானால், ஐரோப்பிய ஒன்றியமும் அதன் மையமான பிரான்ஸ்-ஜேர்மன் அச்சும் உருக்குலையும் சாத்தியம் மிக நிஜமானதாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேல், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வானமையும், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமானது மற்ற ஐரோப்பிய நாடுகளை மூச்சுத்திணறச் செய்வதற்கு ஜேர்மனியின் ஒரு கருவியாக இருப்பதாக அவர் கண்டனம் செய்தமையும், ஐரோப்பிய முதலாளித்துவத்தை ஐக்கியப்படுத்துவதற்கான முயற்சிகளின் பிரதான வரலாற்று இயக்கியாக இருந்து வந்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்தில் பிளவுபட்டிருக்கிறது என்பதைக் காட்டியது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒபாமா நிர்வாகமும் ஐரோப்பிய ஒன்றியமும் சிரியா மற்றும் உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடன் மோதல்களை தூண்டிவிட்டுக் கொண்டிருந்த நிலையில், ட்ரம்ப் ஐரோப்பாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சாத்தியத்தை வெளிப்படையாக எழுப்பினார்.
குறிப்பாக ஜேர்மனியுடன் நெருக்கமாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகிகள் குழு, நடப்பு சமூக உருக்குலைவு மற்றும் போரை நோக்கிய செலுத்தத்தை நிவர்த்தி செய்வதற்காய் முன்மொழிவதற்கு எதுவொன்றும் இருக்கவில்லை என்பதையே ஜூங்கரின் ஆவணம் காட்டுகிறது. சூழ்நிலை குறித்து முடிந்த அளவு இயல்பாய் முகத்தை வைத்துக் கொள்வதற்கு அது முயலுகின்ற அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றியம் குறித்த ஒரு உலுக்குகின்ற, ஆழமான அவநம்பிக்கை கொண்ட சித்திரத்தை அது தீட்டியளிக்கிறது. விரிந்த மற்றும் மேலோட்டமான விதத்தில் அது முன்னெதிர்பார்க்கக் கூடிய ஐந்து சூழ்நிலைகளையுமே - இவை ஒவ்வொன்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலவும் எல்லைகளுக்குள்ளாக பிளவுகளும் அரசியல் ஒற்றுமையின்மையும் தீவிரப்படுவதை முன்கணிக்கின்றன- மறுஆயுதபாணியாகலைக் கொண்டு மறைப்பதற்காய் முயலுவதற்கு அது ஆலோசனையளிக்கிறது.
முதலாளித்துவ ஐரோப்பாவை ஒன்றுபடுத்தும் முயற்சிகளைத் தொடக்கிய 1957 ரோம் உடன்படிக்கையின் 60வது ஆண்டுதினத்தை கொண்டாடும் விதமாக, மார்ச் 25 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் ரோம் நகரத்தில் சந்திக்கவிருப்பதாக முகவுரையில் குறிப்பிட்டதன் பின்னர், ”பல தலைமுறைகளாய், ஐரோப்பாதான் எப்போதும் எதிர்காலமாக இருந்து வந்தது” என்று அந்த ஆவணம் தொடங்குகிறது. ஆயினும், இன்று, ஐரோப்பிய ஒன்றியமானது சந்தேகத்திற்கிடமின்றி கடந்த காலமாக ஆகி விட்டது: வெள்ளை அறிக்கை ஒப்புக்கொள்வதைப் போல, அதன் மக்கள் போர் மற்றும் இடைவிடாத சமூக வீழ்ச்சியின் சாத்தியத்திற்கு முகம்கொடுக்கின்றனர்.
"மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலான போர்கள் மற்றும் பயங்கரவாதம்” மற்றும் “நமது கிழக்கு எல்லைகளில் துருப்புகளின் பெருக்கம் நடைபெற்று வருவது” ஆகியவை உள்ளிட பரந்த வெளியுறவு அபாயங்கள் குறித்து ஆவணம் எச்சரிக்கிறது. இந்த அபாயங்களை உருவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி சக்திகள் நேட்டோ கூட்டணிக்குள்ளாக இருந்தபடி பங்கேற்றிருந்தன —ஈராக், லிபியா, சிரியா மற்றும் அவற்றைத் தாண்டி ஆட்சிமாற்றங்களுக்கான பலதசாப்த கால போர்ப் பிரச்சாரங்களை நடத்தின; 2014க்குப் பின்பு உக்ரேனில் ஒரு ரஷ்ய-ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக நேட்டோ-ஆதரவுடனான ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தின, அதன்பின் ரஷ்யாவின் எல்லைகளில் அவை ஒரு பரந்த இராணுவ பெருக்கத்தை தொடக்கின— என்பதை அது சேர்த்துக் கூறவில்லை.
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இன்ன பிற நாடுகள் பல-பில்லியன்-யூரோ இராணுவ செலவில் அதிகரிப்பை செய்திருப்பது, மற்றும் அத்துடன் ஸ்வீடனில் இராணுவ வரைவுக்கு சமீபத்தில் மீண்டும் திரும்பியிருப்பது ஆகியவற்றின் அடியொற்றி, அது பாரிய மறுஆயுதபாணியாகலுக்கும் போர்த் தயாரிப்புகளுக்கும் அப்பட்டமாய் அழைப்பு விடுக்கிறது. அது எழுதுகிறது: “ஐரோப்பா இன்னும் ஏமாளித்தனமாக இருக்க முடியாது, அது தன் சொந்தப் பாதுகாப்பை கவனமாக பார்த்துக் கொண்டாக வேண்டும். படைபலம் நியமங்களை வெல்லக் கூடியதாக இருக்கும் சமயத்தில் ஒரு “மென்மையான சக்தியாக” இருப்பது இனியும் போதுமானதாய் இருக்கப்போவதில்லை.
இந்தப் போர் முனைப்புடன் கைகோர்த்து, தடையில்லா வாணிபத்தின் பொறிவில் வேர்கொண்ட ஒரு புதிய பொருளாதார முறிவு குறித்த தீவிரப்படும் அச்சங்களும் சேர்ந்திருக்கின்றன. “சர்வதேச வர்த்தகம் மற்றும் பன்முகத்தன்மையின் வருங்காலம் குறித்த அச்சங்களை” குறிப்பிடும் இந்த ஆவணம் “சுதந்திரமான மற்றும் முற்போக்கான வர்த்தகத்திற்காக நிற்பதும் உலகமயமாக்கல் அனைவருக்கும் ஆதாயமளிக்கக் கூடியதாக இருக்கும் வகையில் அதனை வடிவமைப்பதும் ஒரு வளரும் நெருக்கடியாக இருக்கும்” என முன்கணிக்கிறது.
2008 பொருளாதார முறிவின் பின்அதிர்வுகளால் விட்டுச் செல்லப்பட்ட சமூக உருக்குலைவு சர்வதேச முதலாளித்துவம் மற்றும் வர்த்தகத்தின் நம்பகத்தன்மையிழப்பு வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாய் இருந்ததாக இந்த வெள்ளை அறிக்கை ஒப்புக் கொள்கிறது. “நீண்டகாலமாக வேலைவாய்ப்பற்றிருக்கும் நிலை முதலாக ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் அரசாங்க மற்றும் தனியார் கடன்களின் மட்டங்கள் மிகப்பெரியதாக இருக்கின்றது வரை, இந்த நெருக்கடியின் மரபை நிவர்த்தி செய்வது அவசரமான முன்னுரிமையாகும். குறிப்பாக இளம் தலைமுறைக்கு இந்த சவால் கூர்மையானதாக இருக்கிறது” என்று அது கூறுகிறது. “இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக, இன்றைய வயதுக்கு வந்த இளைஞர்களது தலைமுறைக்கு, தங்களது பெற்றோரை விடவும் வசதி குறைந்தவர்களாக முடிவடையும் உண்மையானதொரு அபாயம் முன்நிற்கிறது.”
ஐரோப்பாவின் அமைவிடரீதியான மற்றும் பொருளாதாரரீதியான பலம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு செல்வதையும் இந்த வெள்ளை அறிக்கை முன்கணிக்கிறது: உலக மக்கள்தொகையில் இதன் பங்கு 1990 இல் 25 சதவீதமாக இருந்ததில் இருந்து 2060 இல் 4 சதவீதமாக வீழ்ச்சி காணும் என்றும், அத்துடன் உலகப் பொருளாதாரத்திலான அதன் பங்கும் 2004 இல் 26 சதவீதமாக இருந்ததில் இருந்து 2030 இல் 20 சதவீதத்திற்கும் கீழ் செல்லும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
எஞ்சியிருக்கும் 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் எவ்வாறு ஒன்றாகத் தொடர முயற்சிக்கலாம் என்பதற்கு ஐந்து மேலோட்டமான வரையறை கொண்ட மூலோபாயங்களை இந்த வெள்ளை அறிக்கை பட்டியலிடுகிறது: “தொடர்ந்து முன்செல்வது”, “ஒரே சந்தையை தவிர்த்த வேறொன்றுமில்லை”, “அதிகம் வேண்டுவோர் அதிகம் செய்தல்”, “குறைந்தவற்றை அதிக திறனுடன் செய்தல்” மற்றும் “இன்னும் அதிகமாய் ஒன்றிணைந்து செய்தல்”.
பிரெக்ஸிட்டுக்கு முன்பாக மற்றும் உடனடி பின்னதாக கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கைகளுடன் “தொடர்ந்து முன்செல்லுதல்” என்பது ஐந்து தெரிவுகளில் ஒன்றாக மட்டுமே —அந்த ஒன்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை “முக்கிய மோதல்களின் சமயத்தில் சோதிக்கப்பட” இருப்பதில் இருந்து தடுத்துவிடப் போவதில்லை என்று வெள்ளை அறிக்கை திட்டவட்டம் செய்கிறது— இருக்கிறது என்ற உண்மையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரியளவிலான நொருங்கும் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியமானது வெறும் “ஒற்றைச் சந்தை” சுதந்திர வர்த்தக மண்டலமாக பொறிந்து போகும் தனித்துவமான சாத்தியத்தை வெள்ளை அறிக்கை முன்கணிக்கிறது.
”அதிகம் வேண்டுவோரை” மட்டும் ஐக்கியப்படுத்தி தொடருவதற்கான விண்ணப்பமானது, “மைய” ஐரோப்பிய ஒன்றியம் உருவாவதற்கும் “அதிகம் வேண்டாத” நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாம் நிலை அந்தஸ்துக்கு இயல்பாகத் தள்ளி விடுவதற்கும் இட்டுச் செல்லக் கூடும் என்பதை ஊடக மற்றும் அரசியல் வருணனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஹங்கேரியின் பொருளாதார அமைச்சரான மிஹாலி வர்கா இந்த சாத்தியத்தை வெளிப்படையாக கண்டனம் செய்தார், “வலிமையானவர்கள்” மற்றவர்களை ஓரங்கட்ட முயல்வது ஓரங்கட்டப்படும் நாடுகளில் “சமூக அமைதியின்மை”யை உருவாக்கும் என்று அவர் எச்சரித்தார். “இரட்டை வேக ஐரோப்பாவை ஆதரிப்பவர்கள், யூரோ பகுதியில் இருப்பவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றும், யூரோ பகுதிக்கு வெளியில் இருப்பவர்கள் இல்லை என்றும் கூறக் கூடிய ஒரு நிஜமான அச்சுறுத்தல் அங்கே இருக்கவே செய்கிறது” என்று அவர் அறிவித்தார்.
அதேவேளையில், யூரோ மண்டலத்தின் முக்கியமான உறுப்பு நாடுகள் யூரோ நாணயமதிப்பைக் கைகழுவ முடிவெடுக்கக் கூடும் என்பதற்கான அறிகுறிகள் பெருகிச் செல்கின்றன. பிரான்சில் FN ஜனாதிபதி பதவியைக் கைப்பற்ற ஒரு சாத்தியம் இருக்கிறது என்பதைத் தவிர, டச்சு நாடாளுமன்றம் நெதர்லாந்துக்கு யூரோவின் நன்மைதீமைகள் குறித்து மதிப்பீடு செய்கின்ற ஒரு அறிக்கையை ஏற்பாடு செய்திருக்கிறது, அத்துடன் இத்தாலியின் வங்கியான Mediobanca, ஜனவரியில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், யூரோவில் இருந்து இத்தாலி வெளியேறுவதால் இத்தாலியின் பொதுக் கடன் சேவை பாதிக்கப்படாது என்று கூறியது.
ஐரோப்பிய முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு மத்தியில், பல தசாப்த காலங்களில் கட்டப்பட்டிருந்த ஸ்தாபனங்கள் —சென்ற நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களைப் போன்று ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான ஒரு புதிய போரைத் தவிர்ப்பதற்கு தான் அவை கட்டியெழுப்பப்பட்டன என்பது வெளிப்படை— பொறிந்து வருகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக முதலாம் உலகப் போர் மற்றும் 1917 புரட்சியின் சமயத்தில் சர்வதேச புரட்சிகரப் போராட்டங்களுக்கு தூண்டுதலளிக்கக் கூடியதாக மகத்தான மார்க்சிஸ்டுகள் விளக்கியிருந்த முதலாளித்துவத்தின் மாபெரும் முரண்பாடுகள் —எல்லாவற்றுக்கும் மேல் உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடுகள்— மீண்டும் திரும்பியிருக்கின்றன.
வெள்ளை அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய ஊடகங்கள் ஐரோப்பாவில் நிலவும் ஆழமான பிளவுகளையும் தேர்தல் நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டின; ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கூடுதல் திட்டவட்டமான அல்லது வெற்றிவேட்கையுடனான எதனையும் ஆலோசனையளிப்பதில் இருந்து அவை ஜூங்கரை தடுத்து விட்டிருந்ததாக முடிவு கூறின.
வெள்ளை அறிக்கையின் மூலமாக ஜூங்கர், “பல மாதங்களாக ஆபத்தான கடல்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கப்பலை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டுவர” நம்பிக்கை கொண்டிருப்பதாக Le Monde எழுதியது. “கூட்டரசாங்கவாதி ஒரு யதார்த்தவாதியாக ஆவதற்கு நெருக்கப்பட்டிருக்கிறார் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்”.
ஆபத்தான செயல்பாடுகளுக்கான ஆலோசனை நிறுவனமான யூராசியா குழுமத்தின் முஜ்தபா ரஹ்மான் கூறினார், “ஜூங்கரின் ஆலோசனைகள் குறிப்பாக வெற்றிவேட்கை மிகுந்தவையாக இருக்கப் போவதில்லை. யூரோமண்டலம் குறித்து என்ன செய்வது என்பது குறித்து ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில் உடன்பாடு இல்லை, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் நாடுகள் பிரெக்ஸிட்டை தொடர்ந்து புரூசெல்ஸில் இருந்து திரும்புவதற்கு கூடுதல் அதிகாரங்களை விரும்புகின்றன. ஜூங்கரின் திட்டம் என்ன சாதிக்க முடியும் என்பதில் இது தெளிவான வரையறைகளை அமைத்து விடுகிறது.”
இத்தாலியின் ஆலோசனை நிறுவனமான MacroGeo, “பிரெக்ஸிட் மற்றும் ட்ரம்ப் சகாப்தத்தில் ஐரோப்பா: சிதறலும் மறுகுழுவாதலும்” என்ற தலைப்பில் வழங்கியிருந்த ஒரு அறிக்கையை லண்டனின் ஃபைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டது.
“பிரான்சின் சுயேச்சையான மத்தியவாதி இமானுவல் மக்ரோன், ஜேர்மன் சமூக ஜனநாயகவாதியான மார்ட்டின் ஷூல்ஸ் போன்ற ஒருங்கிணைப்பு-ஆதரவு பிரமுகர்கள் இந்தத் தேர்தலில் வென்றாலுமே கூட, ஐரோப்பிய ஒன்றியமானது அதன் இப்போதைய வடிவத்தில் அநேகமாக சிதறவே போகிறது” என்பதை அந்த அறிக்கை திட்டவட்டமாகக் கூறுவதாக ஃபைனான்சியல் டைம்ஸ் எழுதியது. ”‘2021-22 தேர்தல் சுற்றிற்கு முன்பாக, ஐரோப்பிய ஒன்றியமானது அதன் ‘உண்மையான’ இருப்பின் இறுதி ஐந்தாண்டுகளுக்குள் நுழைந்து விடக் கூடும்’ என்று அந்த அறிக்கை கூறுகிறது.”