Print Version|Feedback
ශ්රී ලංකා නාවික හමුදාවේ වෙඩි තැබීමකින් ඉන්දියානු ධීවරයෙකු මිය යයි
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் இந்திய மீனவர் உயிரிழந்தார்
By W.A. Sunil
12 March 2017
கடல் ரோந்தில் ஈடுபட்ட இலங்கை கடற்படை சிப்பாய்களால் கடந்த திங்களன்று இந்திய மீனவப் படகு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் உயிரிழந்த தோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கச்சதீவுக்கு அருகில் தாக்குதலுக்கு உள்ளான படகில் மீனவர்கள் ஆறு பேர் இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர் தமிழ் நாட்டின் இராமேஸ்வரம் பிரதேசத்தின் தங்கச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த கே. பிரிட்சோ என்ற 20 வயது இளைஞராவார்.
கொலைக்கு எதிராக தமிழ் நாட்டில் மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு அலை தோன்றியுள்ளது. இலங்கை மீனவர்களும் தொழிலாளர்களும் இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடூரத் தாக்குதலை கண்டனம் செய்ய வேண்டும்.
குற்றச்சாட்டை நிராகரித்து கடற்படை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “அத்தகைய துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை” என்றும் இலங்கை கடல் எல்லையை மீறுபவர்களை “கைது செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது, சுடுவதற்கு அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக “விசாரணை” ஒன்றை நடத்துவதாக அது கூறுகின்றது. குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றை மூடி மறைப்பது சம்பந்தமாகவும் இலங்கை கடற்படை உட்பட பாதுகாப்பு படை பேர் போனதாகும்.
தமிழ் நாட்டு மீனவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அது சம்பந்தமாக “விசாரணை” ஒன்றை நடத்துவதாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளன. கடற்படை “சம்பவத்துடன் தொடர்புபடவில்லை” என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் இந்திய மீனவர் கொல்லப்பட்டமை பற்றி “இந்திய அரசாங்கம் மிகவும் கவனத்தில் எடுக்கின்றது” என இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. இந்த வாக்குறுதிகள் வெறுமனே சம்பவம் பற்றி தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியில் தோன்றியுள்ள ஆத்திரத்தையும் எதிர்ப்பையும் தணிப்பதற்கான கண்கட்டி அறிக்கைகள் மட்டுமே.
இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல. 2011 ஜனவரி மாதமும் இந்திய மீவர்கள் இருவரை சுட்டுக் கொன்றதாக இலங்கை கடற்படை மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடற்படை அந்த குற்றச்சாட்டுகளையும் நிராகரித்ததோடு “விசாரணை” நடத்துவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பவத்தை பாரியதாக எடுத்துக்கொள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டாலும், அவர் இந்திய தந்தி தொலைக்காட்சிக்கு 2015 மார்ச் 7 அன்று வழங்கிய பேட்டியில், இந்திய மீனவர்களைச் சுடுவதை கொடூரமான முறையில் பாதுகாத்து கடற்படையின் தாக்குதலை நியாயப்படுத்தினார். இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழையும் போது துப்பாக்கிச் சூடு நடத்துவதில் இலங்கை கடற்படை சட்டத்தின் படியே செயற்படுகின்றது என விக்கிரமசிங்க அங்கு கூறினார். “ஒருவர் என் வீட்டுக்குள் பலாத்காரமாக உள்நுழைய முயற்சித்தால் நான் அவரைச் சுட முடியும். அதனால் அவர் உயிரிழந்தால் அவ்வாறு செய்வதற்கு எனக்கு சட்டம் இடம் கொடுக்கும்” என அவர் அறிவித்தார்.
பிரச்சினைக்கு “நியாயமான” தீர்வு இருக்க வேண்டும் என்றாலும் அது “வடக்கில் மீனவர்களின் ஜீவனோபாயத்தை பிணையாக வைப்பதாக” இருக்கக் கூடாது, என அவர் மேலும் குறிப்பிட்டார். விக்கிரமசிங்கவுக்கு, அவரது அரசாங்கத்துக்கு அல்லது முன்னர் இருந்த முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு வடக்கில் மீனவர்கள் பற்றி எந்தவொரு கவலையும் கிடையாது. இந்தியாவில் போலவே இலங்கையில் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்கள், நீண்டகாலமாகவும் நிரந்தரமாகவும் கடற்படையின் கைதுகள் மற்றும் தாக்குதல்கள் உட்பட துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வடக்கு-கிழக்கில் மீனவர்கள் கடற்படையின் கொடூரமான துன்பங்களுக்கும் கொலைகளுக்கும் இறையானதோடு அந்த குற்றங்களில் சில புலிகளின் தலையில் சுமத்தப்பட்டதோடு ஏனையவர்கள் “புலி பயங்கரவாதிகளாக” முத்திரை குத்தப்பட்டு அதன் மூலம் சித்தரவதைகள் மற்றும் கொலைகளும் நியாயப்படுத்தப்பட்டன.
இந்திய-இலங்கை அரசாங்கங்கள் கடந்த ஆண்டு நியமித்த மீனவர் செயற்பாடு பற்றிய ஒன்றிணைந்த நடவடிக்கை குழுவின்படி, 2016 டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டு மீனவர்களின் 111 படகுகளும் 51 மீனவர்களும் இலங்கையில் வடக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மார்ச் 5 அன்று, இந்திய மீனவ படகுகள் நான்கும் 24 மீனவர்களும் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.
இலங்கை கடற்படையின் தொந்தரவுகள் மற்றும் தாக்குதல்களை இந்திய மீனவர்கள் எதர்கொள்ளவதோடு இலங்கை மீனவர்கள் இந்திய கடற் பாதுகாப்பு படையின் தாக்குதல்கள் மற்றும் கைதுகளுக்கும் முகங்கொடுக்கின்றனர்.
இந்த வாரத்தில் மட்டும் 12 இலங்கை மீனவர்களும் அவர்களின் படகுகளும் இந்திய கடற்கறை பாதுகாப்பு படையினால் கைது செய்யப்பட்டனர்.
மீன் பிடி குறைவடைவதால் கடல் எல்லைகளை தாண்டுவதற்கு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் நெருக்கப்படுவது பிரதான காரணியாகும். மீன்பிடி உபகரணங்கள் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பினால், உற்பத்திக்கான செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமையினால் அவர்களது வாழ்க்கை நிலைமைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு மீனவர்களதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்லது அவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை நிறுத்துவதற்கான உண்மையான குறிக்கோள் இந்திய அல்லது இலங்கை அரசாங்கங்களுக்கு கிடையாது. அதற்கு மாறாக இரு நாட்டு முதலாளித்துவ அரசாங்கங்களும் பேரினவாத அரசியல் சக்திகளும் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் இனவாதத்தையும் பிற்போக்கு உணர்வுகளையும் தூண்டி விட்டு தமது கபடத்தனமான அரசியல் தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்திக்கொள்கின்றன.
இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் மீதான தாக்குதல்களையும், பிற்போக்கு தேசிய அரசுகளாக பிரிந்துள்ள நில மற்றும் கடல் எல்லை வரையறுப்புக்குள் மற்றும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்குள் தீர்க்க முடியாது. தேசிய அரச மற்றும் இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கியெறியாமல் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்லது தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்கு முடியாது. சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்துக்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே அதை தீர்த்துக்கொள்ள முடியும்.