Print Version|Feedback
Fillon to continue his French presidential bid despite indictment
குற்றப்பத்திரிகை தாக்கலாகும் நிலையிலும் ஃபிய்யோன் தனது பிரெஞ்சு ஜனாதிபதி வேட்புநிலையை தொடரவிருக்கிறார்
By Alex Lantier
3 March 2017
வலது-சாரி குடியரசுக் கட்சியின் (LR) ஜனாதிபதி வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோன், அவரது மனைவி பெனிலோப்புக்கு பெயரளவில் மட்டுமான வேலைகளை ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கலாகும் நிலையில் இருக்கின்றபோதும், தனது பிரச்சாரத்தை தொடர்ந்தும் நடத்தவிருப்பதாக அறிவிப்பதற்காக புதன்கிழமை மாலையில் ஒரு அவசரகால செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
ஆகஸ்ட் மாதத்தில், LR இன் வேட்பாளர் பரிந்துரைக்கு தன்னுடன் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியை, பல விசாரணைகளை முகம்கொடுத்து நிற்பதற்காக, அவர் விமர்சனம் செய்திருந்தார். “என் மீது குற்றப்பத்திரிகை தாக்கலாகியிருந்தால், நான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்க மாட்டேன், அது அறநெறிப் பிரச்சினையாகும்” என்று அவர் அறிவித்திருந்தார்.
இப்போது LR இன் வேட்பாளர், அவரது மனைவிக்கு நாடாளுமன்ற உதவியாளர் என்ற பேரிலும் Revue des deux mondes சஞ்சிகையின் ஊழியர் என்ற பேரிலும் குறைந்தபட்சம் 900,000 யூரோக்கள் அரசாங்கப் பணம் செல்லும் வகையிலான வருகை அவசியமற்ற வேலைகளைக் கொடுத்ததாக வரிசையான குற்றச்சாட்டுக்களின் பேரில் உடனடி எதிர்காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாக இருக்கும் நிலையிலும் தனது பிரச்சாரத்தை தொடரவிருப்பதாக அறிவிக்கிறார். ஆயினும், இந்த ஊழல் அவரது வேட்புமனு வாய்ப்பை மட்டும் அச்சுறுத்தவில்லை, LR இன் ஒற்றுமையையும் இன்னும் தேர்தல்கள் இயல்பாக நடைபெறக் கூடிய சாத்தியத்தையும் கூட அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
”குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட நான் மார்ச் 15 அன்று அழைக்கப்படலாம் என எனது வழக்கறிஞருக்கு தெரியவந்திருக்கிறது” என்று புதனன்று தனது பிரச்சாரத் தலைமையகத்தில் ஃபிய்யோன் கூறினார். “ஆம், நான் தான் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கப் போகிறேன், இந்த சவால்களில் இருந்து தான்... வெற்றிபெறுவதற்கும் நமது நாட்டை வலுப்படுத்துவதற்கும் தேவையான கூடுதல் ஆற்றலை நாங்கள் பெறவிருக்கிறோம்.”
ஃபிய்யோன் மீதான குற்றப்பத்திரிகையானது, 2017 ஏப்ரல்-மே தேர்தலையொட்டி, பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கத்திற்குள்ளாக நிலவும் கன்னை மோதல்களின் அசாதாரண வீரியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஃபிய்யோன், தனது செய்தியாளர் சந்திப்பில், நீதியமைப்பு முறையின் பாரபட்சமற்ற தன்மை குறித்தும், குற்றப்பத்திரிகை வாசிக்கப்படுவதற்காக சந்தேகமில்லாமல் திரைமறைவில் கணிசமான அழுத்தமளித்திருந்த சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் பாத்திரம் குறித்தும் கேள்வியெழுப்பினார். அவர் அறிவித்தார்: “குடியரசின் அடுத்த ஜனாதிபதியாக யார் இருக்க வேண்டும் என்பதை அனைவரது வாக்குரிமை மட்டுமே தீர்மானிக்க முடியுமே தவிர, தொல்லை கொடுக்கும் நோக்கங்களுக்காக நடத்தப்படும் ஒரு வழக்கு விசாரணை அல்ல.... அதன் முடிவு வரை சென்று பார்ப்பேன், ஏனென்றால் மறுதலிக்கப்பட்டுக் கொண்டிருப்பது நான் மட்டுமல்ல, ஜனநாயகமும் சேர்த்துத் தான்.”
இது ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டிடம் இருந்து ஒரு பதிலிறுப்பை தூண்டியது, “நீதியமைப்புமுறைக்கு எதிராய் எவ்வித கேள்வியெழுப்புவதை”யும் அவர் கண்டனம் செய்தார். அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “ஒரு ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதாலேயே, போலிஸ் மற்றும் நீதிபதிகளது வேலையின் மீது சந்தேகத்தை விதைப்பதற்கோ, ஒருவரது பொறுப்புக்கு மாறான வகையில் அவநம்பிக்கையின் ஒரு சூழலை உருவாக்குவதற்கோ, அல்லது இன்னும் மோசமாய், நீதியமைப்புமுறைக்கும், இன்னும் விரிந்து, நமது ஸ்தாபனங்களுக்கும் எதிராக அதிதீவிர குற்றச்சாட்டுகளை செய்வதற்கோ (எத்தொகையும் நிரப்பிக் கொள்ளத்தக்க) வெற்றுக் காசாலையைக் கொடுப்பதாகி விடாது.”
இந்த வழக்கில் ஃபிய்யோனுக்கு எதிரான ஆதாரங்கள் மிகப்பெருமளவில் இருக்கின்றன. 2007 இல் ஃபிய்யோன் சார்க்கோசியின் கீழ் பிரதமராக ஆனபோது, பெனிலோப் ஃபிய்யோன் பிரிட்டன் தினசரியான டெய்லி டெலிகிராபிடம், “நான் ஒருபோதும் அவரது நாடாளுமன்ற உதவியாளராக இருந்ததில்லை” என்றும் “அவரது வெளித் தொடர்புகளையும் நான் கையாண்டது கிடையாது” என்றும் கூறியிருந்தார். ஊடகங்களின் ஆரம்பகட்ட குற்றச்சாட்டுகள் வெளியாகி ஒரு மாத காலமாகியும், பெனிலோப் ஃபிய்யோன் எந்த வேலையும் செய்ததான எந்த உறுதியான சான்றுகளும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற நிலையில், ஃபிய்யோன் தரப்பு தீவிரமான சட்ட சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறது.
ஆயினும் கூட, நீதித்துறை பாரம்பரியமான தேர்தல்காலத்து “குடியரசு சண்டைநிறுத்த” முறையை முறித்து ஃபிய்யோன் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கும்படி செய்திருப்பது, பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் மறுக்கவியலாத ஊழல்நிலையோ, அல்லது அதற்குச் சளைக்காமல் மக்கள் கோபமோ அல்லது ஃபிய்யோனால் மூர்க்கமாகப் பரிந்துரைக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளில் இருந்தான அதன் அந்நியப்படலோ அல்ல. இப்போது, குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வானது முதலாக, மேலெழுந்து வந்து கொண்டிருக்கின்ற நேட்டோ கூட்டணியின் ஏகாதிபத்திய முதலாளித்துவங்களுக்குள்ளான ஆழமான மோதல்கள்தான் ஃபிய்யோன் பிரச்சார நெருக்கடியை இயக்கிக் கொண்டிருப்பவை ஆகும்.
1990கள் மற்றும் 2000களில் வெளிவந்த Elf விவகாரத்தில் போல, ஆபிரிக்காவில் பிரெஞ்சு ஏகாதிபத்திய வலைப்பின்னல்கள் பல தசாப்தங்களாய் சூறையாடி அதிலிருந்து PSக்கும் பிரெஞ்சு வலதுக்கும் கொடுத்திருந்த அளவுடன் ஒப்பிட்டால் பெனிலோப் ஃபிய்யோனுக்குக் கொடுக்கப்பட்ட தொகையெல்லாம் ஒன்றுமேயில்லை என்றாகி விடும். ஆபிரிக்காவில் பிரான்சின் பழைய காலனிய சாம்ராஜ்யத்தில் பிரான்சின் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய பில்லியன் கணக்கான யூரோக்கள் இலாபத்தில் இருந்து உறிஞ்சியிருந்த பெரும் தொகைகளை இந்தக் கட்சிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டிருந்தன — இந்த நிகழ்வுப்போக்கு பிரெஞ்சு வாக்காளர்களின் முதுகுக்குப் பின்னால் தான் நடைபெற்றிருந்தது.
ஆயினும் நேட்டோ நாடுகள், சர்வதேச மூலோபாயம் தொடர்பாக, குறிப்பாக ரஷ்யாவுக்கு எதிரான அதன் போர் முனைப்பு தொடர்பாக ஆழமாகப் பிளவுபட்டிருக்கும் நிலையில், PS மற்றும் அதன் சர்வதேச கூட்டாளிகளது ஆதரவுடன் நீதித்துறை, LR இன் பிரச்சாரத்தை உருக்குலைப்பதற்கு “பெனிலோப் ஊழலை” பயன்படுத்துவதற்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த ஊழல் விவகாரம் அம்பலப்படுவதற்கு தொடக்கமளித்த ஜனவரி 25 அன்று நையாண்டி வார இதழான Canard Enchaîné இல் வந்த கட்டுரையின் படி, பத்திரிகையாளர்கள் பெனிலோப் ஃபிய்யோனின் வேலை ஒழுங்கு முறைகேடுகளை நவம்பரில் கண்டறிந்திருந்தனர். அமெரிக்காவில் அதி-வலது ட்ரம்ப்பின் நிர்வாகம் தேர்வானதற்கு பின்னர், பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணி மற்றும் ரஷ்ய-ஆதரவு அனுதாபங்கள் குறித்த சந்தேகம் ஆகியவை தொடர்பில், இவர்கள் ஃபிய்யோனின் இலாபகரமான 2F ஆலோசனை நிறுவனத்தின் ரஷ்ய தொடர்புகளது சாத்தியம் குறித்து தேடிக் கொண்டிருந்தனர். ஜனநாயகக் கட்சியும் அமெரிக்க உளவுத் துறையின் கன்னைகளும், பேர்லின் மற்றும் பாரிசுடன் சேர்ந்து வேலை செய்து, ட்ரம்ப் ரஷ்யாவுடன் மோதுவதற்கு விருப்பமில்லாததாக கூறப்படுவதன் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தன.
ஃபிய்யோன் பேர்லின் பயணம் மேற்கொண்டு, அங்கே புதிய அமெரிக்க நிர்வாகத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா இடையிலான ஒரு கூட்டணிக்கு ஆலோசனை வைத்துத் திரும்பியதற்கு சில நாட்களின் பின்னர் தான் Canard Enchaîné தனது கட்டுரையை பிரசுரித்தது. அமெரிக்காவுக்கும், அத்துடன் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளுக்கும் கூட அடிப்படையாய் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்த ஒரு புவியரசியல் அணிவகுப்பு குறித்த இந்த ஆலோசனைக்கு பின்னர்தான், ஃபிய்யோனுக்கு எதிரான நீதித்துறை மற்றும் ஊடகப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.
இப்போது, புதனன்றான அவரது ஊடக சந்திப்பிற்குப் பின்னர், பிரெஞ்சு வலதில் இருக்கக் கூடிய ஃபிய்யோன் ஆதரவாளர்களின் பரந்த பிரிவுகளும் கூட தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. LR உடன் இணைந்த ஒரு சிறிய கட்சியான UDI (ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சுயேச்சையினரின் ஒன்றியம்) ஃபிய்யோன் பிரச்சாரத்திலான தனது பங்கேற்பை நிறுத்தி விட்டதாக அறிவித்துள்ளது.
தேர்தலில் FN வேட்பாளரான மரின் லு பென் மேலெழுவது குறித்தும், அத்துடன் இறுதிச் சுற்றில் வெற்றிபெற்று லு பென் ஜனாதிபதி பதவியையே கூட பெற்றுவிடக் கூடிய சாத்தியம் குறித்துமான ஆளும் வர்க்கத்தின் கவலை மேலும்மேலும் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், LR இன் ஃபிய்யோன் ஆதரவாளர்கள் பலரும், அவர் சென்ற ஆகஸ்டில் அளித்த தனது வாக்குறுதியை பூர்த்தி செய்யும் விதமாய் தனது வேட்புமனுவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.
ஃபிய்யோன் வேட்பைத் திரும்பப்பெற்றுவிட்டால் என்ன செய்வது என்பது குறித்த தெளிவான மூலோபாயம் எதனையும் LR வகுத்திருக்கவில்லை என்றாலும் கூட, ஐரோப்பிய மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான அதன் பிரதிநிதி Bruno Le Maire, அவர் வேட்பை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறார். “அரசியலின் நம்பகத்தன்மை”க்காக இது “தவிர்க்கமுடியாதது” ஆகும் என்று Le Maire கூறினார்.
LR இன் பிரதிநிதிகளான Sébastien Huyghe, Laure de la Raudière, மற்றும் Pierre Lellouche ஆகியோரும் ஃபிய்யோன் திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு புதிய வேட்பாளரை தேர்ந்தெடுக்க LR க்கு கால அவகாசம் அளிக்கின்ற வகையில், ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைக்கக் கோருவதற்கு அரசியல்சட்ட கவுன்சில் முன்பு ஒரு மனு தாக்கல் செய்ய தான் பரிசீலித்துக் கொண்டிருப்பதாகவும் Lellouche கூறினார்.
பாரிசில் LR இன் கவுன்சில் அங்கத்தவராக இருக்கும் Jérôme Dubus கூறுகையில், ஃபிய்யோன் பிரச்சாரத்தில் இருந்து விலகி முன்னாள் வங்கியாளரும் ஹாலண்டின் கீழ் முன்னாளில் பொருளாதார அமைச்சராக இருந்தவருமான சுயேச்சை வேட்பாளர் (ஆனால் PS ஆதரவு பெற்ற வேட்பாளர்) இம்மானுவல் மக்ரோனை ஆதரிக்கப் போவதாகக் கூறினார்.