Print Version|Feedback
EU summit reveals sharp divisions within Europe and tensions with US
ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ஐரோப்பாவிற்குள் கூர்மையான பிளவுகளையும், அமெரிக்காவுடனான பதட்டங்களையும் வெளிப்படுத்துகின்றன
By Johannes Stern
10 March 2017
வியாழனன்று தொடங்கிய, 28 ஐரோப்பிய ஒன்றிய அரசாங்க தலைவர்களது வருடாந்தர யூரோ உச்சமாநாடு கூட்டம் அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான கூர்மையான பதட்டங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் ஆழ்ந்த நெருக்கடியால் மேலோங்கி இருந்தது.
அடுத்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் முதல் சந்திப்பு நடக்கவுள்ள நிலையில், ஜேர்மனி மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்தன. திங்களன்று ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவார்ரோ, ஜேர்மனி உடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை ஒரு "தீவிர விடயமாகவும்" மற்றும் அமெரிக்க வர்த்தக கொள்கையின் "மிக சிக்கலான பிரச்சினைகளில் ஒன்றாகவும்" விவரித்தார்.
“அவர்கள் கூறும் வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, பற்றாக்குறையைச் சாத்தியமானளவிற்கு குறைப்பதற்கான வழிகளை நாம் ஜேர்மனியுடன் நேர்மையாக விவாதிப்பது பயனுள்ளதாக இருக்குமென நான் நினைக்கிறேன்,” என்று வாஷிங்டனில் நவார்ரோ தெரிவித்தார்.
ஜேர்மனி, ஐரோப்பாவை அதன் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கவும் மற்றும் Süddeutsche Zeitung பத்திரிகை குறிப்பிட்டதைப் போல "அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக போருக்கு" தயாரிப்பு செய்யவும் முயற்சிப்பதன் மூலமாக, வாஷிங்டனின் அதிகரித்த ஆக்ரோஷ வாய்வீச்சுக்களுக்கு ஜேர்மனி விடையிறுத்துள்ளது.
ஐரோப்பிய சக்திகள் ஆசிய சந்தைகளுக்குள் பொருளாதாரரீதியில் விரிவடைவதற்காக, பசிபிக்கிற்கு இடையிலான பங்காண்மையை (TPP) ட்ரம்ப் இரத்து செய்ததைச் சாதகமாக்க முனைந்து வருகின்றன. “ஐரோப்பா ட்ரம்பை எதிர்கொள்கிறது" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் அந்த உச்சிமாநாட்டிற்கான வரைவு அறிக்கை குறித்து Süddeutsche Zeitung செய்தி வெளியிட்டது: “புரூசெல்ஸில் அவர்களது கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய அரசாங்க தலைவர்கள் ட்ரம்பின் 'அமெரிக்கா முதலில் கொள்கையை' எதிர்த்து நிற்க விரும்புகிறார்கள் … மற்றும் உலக வர்த்தகத்திலிருந்து ட்ரம்ப் பின்வாங்கியதை தொடர்ந்து அமெரிக்கா விட்டு செல்லும் இடத்தை நிரப்ப தீர்மானகரமாக உள்ளார்கள்.”
சீனாவை அடுத்து இரண்டாவது மிகப்பெரிய ஆசிய பொருளாதாரமாக விளங்கும் ஜப்பானுடன் ஒரு வர்த்தக உடன்பாட்டை துரிதமாக முடிவு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி செய்து வருகிறது என்பதுடன், இன்னும் 20 நாடுகளுடன், அவற்றில் சிங்கப்பூர் மற்றும் வியட்நாமும் உள்ளடங்கலாக, உலகெங்கிலும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை தற்போது பேரம்பேசி வருகிறது.
புரூசெல்ஸிற்குப் பயணிப்பதற்கு முன்னதாக, மேர்க்கெல் ஜேர்மன் நாடாளுமன்றத்திற்கு வழங்கிய ஓர் அறிக்கையில், “நேர்மையற்ற மற்றும் பாதுகாப்புவாத வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக ஐரோப்பா ஒருங்கிணைந்து செயல்படும் என்பதோடு, எங்கெல்லாம் எப்போதெல்லாம் இது அவசியப்படுகிறதோ அதன் நலன்களை உறுதியாக பாதுகாக்கும்,” என்றார். அவர் கூறினார், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் "சுதந்திரமாக நெருக்கடி மேலாண்மையை மேற்கொள்ள திறன்" கொண்டிருக்க வேண்டும் என்றார். ஜேர்மனி, “ஒற்றை சந்தையை மட்டுமல்ல, மாறாக உலகளாவிய சந்தைகளையும் அணுகுதலை சார்ந்துள்ளது” என்றார்.
இத்தகைய உலகளாவிய நலன்களை இராணுவரீதியில் பின்தொடர்வதற்காக, ஜேர்மனியும் ஏனைய ஐரோப்பிய சக்திகளும் ஐரோப்பிய இராணுவத்தை ஸ்தாபிக்க முயன்று வருகின்றன. வியாழக்கிழமை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, திங்களன்று ஐரோப்பிய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களது ஒரு கூட்டம் இராணுவ தலையீடுகளுக்கான ஒரு கூட்டு கட்டளை மையம் உருவாக்க உடன்பட்டது. இராஜாங்க அதிகாரிகளை பொறுத்த வரையில், இத்தகைய தலைமையிடங்கள் இந்த மாதமே வேலை செய்ய தொடங்கும் என்பதோடு, ஜூன் வாக்கில் முழுமையாக செயல்பாட்டிற்கும் வரும்.
ஐரோப்பாவின் மேலாளுமை அந்தஸ்தை உயர்த்துவதற்கான ஜேர்மனியின் அபிலாஷைகளும், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இருந்து ஓர் இராணுவ பாதுகாப்பு சக்தியாக மற்றும் மத்தியஸ்தராக ஐரோப்பிய ஒற்றுமையை பாதுகாத்து வந்துள்ள அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் அதன் மோதல்களும், ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கூர்மையான பிளவுகளை தீவிரமாக்கி வருகின்றன.
இது, ஐரோப்பிய கவுன்சில் தலைவராக டொனால்ட் டுஸ்க் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மீதான ஒரு கூர்மையான விவாதத்தில் அம்மாநாட்டில் வெளிப்பாட்டைக் கண்டது. போலந்தின் ஒரு முன்னாள் பிரதம மந்திரியான டஸ்க் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை போலந்து அரசாங்கம் பலமாக எதிர்த்த போதும், அம்மாநாடு அவரது பதவிகாலத்தை நீடித்தது. ஓர் அரசியல்வாதியின் சொந்த அரசாங்கத்தின் விருப்பத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அவர் ஒரு முக்கிய இடத்தில் தேர்ந்தெடுக்கப்படுவது, ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் முன்னொருபோதும் நடந்திராத நிகழ்வாகும். போலந்தின் ஆளும் PiS கட்சியுடன் ஒரு கடுமையாக சர்ச்சையில் ஈடுபட்டுள்ள போலந்தின் மிகப்பெரிய எதிர்கட்சியான Civic Platform (PO) இல் டஸ்க் ஓர் அங்கத்தவராவார்.
அம்மாநாட்டிற்கு முன்னதாக PiS தலைவர் Jaroslaw Kaczyński, டுஸ்க்கை "ஜேர்மனியின் வேட்பாளர்" என்று வர்ணித்தார். போலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் Witold Waszczykowski, டுஸ்க் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னர் பேசுகையில் அதை ஒரு "பேர்லினின் கட்டளை" என்றார். “இது, பேர்லின் இஷ்டப்படி அழைப்புவிடுக்கும் ஓர் ஐரோப்பிய ஒன்றியம் என்பது இப்போது நமக்கு தெரிய வருகிறது,” என்றவர் போலந்து ஊடங்களுக்குத் தெரிவித்தார். போலந்து பிரதிநிதிகள் குழு, அதன் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு அம்மாநாட்டின் அடுத்தடுத்த சகல விவாதங்களையும் முடக்கும் என்று அறிவித்தது.
வலதுசாரி, ரஷ்ய-விரோத போலந்து அரசாங்கத்தைப் பதவியில் இருத்தும் ஒரு முயற்சியில், பேர்லின் ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் அதிக கடுமையான தொனியை ஏற்றுள்ளது. இதை எடுத்துக்காட்டும் விதமாக, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் (SPD) மாஸ்கோவிற்கான ஒரு விஜயத்தின் போது வழியிலேயே வார்சோவில் தரித்துச் சென்றார். டாங்கிகள் மற்றும் ஏனைய கனரக ஆயுதங்களுடன், 4,000 இராணுவப் படையினரை நிலைநிறுத்தும் நேட்டோவின் நடைமுறை நடந்து வரும் மூன்று பால்டிக் அரசுகளுடன் சேர்ந்து, போலாந்து, நான்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. காப்ரியேல் கடந்த வாரம் லித்துவேனியாவில் ஜேர்மன் இராணுவ தலைமையில் உள்ள படைப்பிரிவை பார்வையிட்டார்.
மாஸ்கோவில் பேசுகையில், நாஜிக்களின் கீழ் தொடங்கப்பட்ட இனப்படுகொலை போருக்குப் பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் முதன்முதலாக ஜேர்மன் துருப்புக்கள் நிலைநிறுத்தப்படுவதை அவர் நியாயப்படுத்தியதோடு, “ஐரோப்பாவின் மத்தியில் நடக்கும் எல்லைமீறல்களுக்கு" ரஷ்யா மீது பழிசுமத்தினார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி சேர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், அவரது நாடு நேட்டோவின் கிழக்கு அங்கத்துவ நாடுகளால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக கூறி, காப்ரியேலின் குற்றச்சாட்டை நிராகரித்தார். “அவ்விடயத்தில் எங்களிடம் வேறுவேறு புள்ளிவிபரங்கள் உள்ளன,” என்றவர் அறிவித்தார். உண்மையில் ரஷ்யா, “நேட்டோ ஆயுதங்கள், நேட்டோ படைப்பிரிவுகளால் சுற்றி" வளைக்கப்பட்டு வருகிறது, “... ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் துருப்புகள் உட்பட, நேட்டோ தரைப்படை துருப்புகள் எங்கள் எல்லைகளில் தென்படுகின்றன.”
பால்கன்களில் தீவிரமடைந்து வரும் நெருக்கடியும், ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் திட்டநிரலில் இருந்தது. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் பெடெரிக்கா மொஹெரீனி புரூசெல்ஸில், “முன்பில்லாதளவில் மிக அதிகமாக" அப்பகுதி "சவால்கள் மற்றும் பதட்டங்களுக்கு" உள்ளாக்கப்பட்டு வருவதாக எச்சரித்தார். பால்கன் நாடுகள் அதிகரித்தளவில் "வல்லரசு விளையாட்டுக்களின் ஒரு சதுரங்க பலகையாக" மாறிக் கொண்டிருப்பதாக அப்பெண்மணி எச்சரித்தார்.
அப்பிராந்தியத்தில் பதட்டங்களை தூண்டுவதாக பிரிட்டன் இவ்வார தொடக்கத்தில் ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டியது. மாஸ்கோ “மேற்கு பால்கன் நாடுகளைப் பலவீனப்படுத்துவதில்" ஈடுபட்டுள்ளது, இதை "முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாது,” என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் போரீஸ் ஜோன்சன் தெரிவித்தார். உண்மையில் மேற்கத்திய சக்திகள் தான் பால்கன் நாடுகளில் மோதலைத் தூண்டிவிட்டு வருகிறார்கள். 1990 களில், அவை யூகோஸ்லாவியா மீது குண்டுவீசி அதை துண்டுதுண்டாக சிதறடித்தார்கள். ஓராண்டுக்கும் குறைந்த காலத்திற்கு முன்னர், ரஷ்ய எச்சரிக்கைகளுக்கு இடையிலும், நேட்டோ அந்த இராணுவ கூட்டணியின் ஒரு புதிய அங்கத்துவ நாடாக மொன்டெனேக்ரோவை ஏற்றது.
பால்கன்களில் அதிகரித்துவரும் பதட்டங்கள், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் உலக போருக்கு முன்னர் ஐரோப்பாவில் நிலவிய சமாந்தரங்களின் மிகவும் கண்கூடான வெளிப்பாடுகள் மட்டுமேயாகும். உலக முதலாளித்துவம் ஒவ்வொரு நாட்டிலும் முன்பினும் ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவிற்குள் பிளவுகளும், மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிளவுகளும், இராணுவ பலத்தின் அச்சுறுத்தல் மற்றும் மீள்ஆயுதமயமாக்கலுடன், அதிகரித்தளவில் பாதுகாப்புவாத வடிவத்தை எடுத்துள்ளன.