ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In northern France, Calais mayor bans distribution of meals to migrants  

பிரான்ஸ்:கலே நகர முதல்வர் புலம்பெயர்ந்தவர்களுக்கு உணவு வழங்க தடை விதிக்கிறார்

By Antoine Lerougetel
7 March 2017

ஒரு மனிதாபிமானமற்ற நடவடிக்கையாக, வலதுசாரி குடியரசு கட்சியின் (LR) கலே நகர முதல்வர் Natacha Bouchart, மார்ச் 2 வியாழனன்று புலம்பெயர்ந்தவர்களுக்கு உணவு வழங்குவதை தடுக்கும் ஒரு உத்தரவாணையில் கையெழுத்திட்டார்.

பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்க உத்தரவுகளின்படி கடந்த அக்டோபரில் பொலிஸ், "La Jungle” என்றழைக்கப்படும் முகாமை, மூர்க்கத்தனமான முறையில் கலைத்த பின்னர், மற்றும் இங்கிலாந்திற்குச் செல்ல விரும்பிய சுமார் 6,000 அகதிகளை பிரான்ஸ் எங்கிலும் சிதறடித்த பின்னரும் கூட, குறைந்தபட்சம் 700 பேர் இன்னமும் கலே இல் வருந்தத்தக்க நிலைமைகளில் வாழ்ந்து வருகின்றனர். புதிய புலம்பெயர்ந்தோர் பலர், பெரும்பாலும் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் இந்திய துணைக் கண்டத்திலிருந்து, அன்றாடம் கலே க்கு வந்தடைகின்றனர்.

2016 இல் 85,000 பேர் பிரான்சில் தஞ்சம் கோரினர், இவர்களில் பெரும்பாலானவர்கள் சூடான், ஆப்கானிஸ்தான், ஹைட்டி மற்றும் அல்பானியாவில் இருந்து வந்திருந்த நிலையில், இவர்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் நிஜமான எண்ணிக்கை நிச்சயமாக இன்னும் அதிகமாக இருக்கும்.

புதனன்று சோசலிஸ்ட் கட்சியின் உள்துறை அமைச்சர் Bruno Le Roux கலே க்கு விஜயம் செய்திருந்த போது, Bouchart கூறுகையில், அவர் "புலம்பெயர்ந்தவர்களின் காந்தகளம்" உருவாவதைத் தடுக்க விரும்புவதாகவும், கலே இல் "ஒன்றுகூடும் இடங்கள்" மீண்டும் உருவாவதை தவிர்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்த கருத்துக்களுக்கு Le Roux உடன்பட்டதுடன், “எந்தவித ஒன்றுகூடும் இடங்களையும் உறுதியாக எதிர்க்க" தீர்மானகரமாக இருப்பதைத் தெரிவித்தார். வெறுமனே வார்த்தையளவில், “உணவு வினியோகங்களை நாங்கள் நிறுத்த மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார், இது அதற்கடுத்த நாள் Bouchart அந்த மூர்க்கமான உத்தரவில் கையெழுத்திடுவதில் இருந்து அப்பெண்மணியைத் தடுக்கவில்லை.

Bouchart கூறுகையில், “மனிததன்மையோடு கூறுவதற்கே சிரமமாக இருந்தாலும்,” உணவுகளாக இருக்கட்டும் அல்லது கத்தோலிக்க உதவி அமைப்புகளால் அமைக்கப்பட்ட குளிக்குமிடங்களாக இருக்கட்டும் கலே இல் எந்தவொரு மனிதநேய வகைமுறையையும் "தனிப்பட்டரீதியில் எதிர்ப்பதாக" தெரிவித்தார்.

நகரசபை உத்தரவு மீதான சட்டபூர்வ வாதம், அந்நகரின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஒன்றுகூடுவதற்கான தடை மீது அடித்தளமிட்டுள்ளது. "Dunes இன் தொழில்துறை மண்டலம் துஷ்பிரயோகமாக, நீண்டகாலமாக மற்றும் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கும்” அது, புலம்பெயர்ந்தவர்களுக்கான உணவு வினியோகமானது பொது ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் காவலைத் தொந்தரவுபடுத்தக் கூடியதாக "உள்ளது" என்று வலியுறுத்துகிறது.

Utopia56 அறக்கட்டளைக்கான ஒரு தொழிலாளர் Sarah Arrom கூறுகையில், முப்பது இளம் வயதினருக்கு தன்னார்வலர்கள் சிற்றுண்டி வழங்குவதை தடுப்பதற்காக பொலிஸ் வியாழனன்று கண்ணீர் புகைகளை பயன்படுத்தியதாக தெரிவித்தார்: “நாங்கள் உணவு வழங்க முயன்ற போது இதற்கு முன்னர் ஒருபோதும் கண்ணீர் புகைகள் பயன்படுத்தப்பட்டதில்லை,” என்றார்.

அறக்கட்டளைகளின் சில தலைவர்கள் கூறுகையில் Bouchart இன் பிற்போக்குத்தனமான உத்தரவுக்கு அவர்கள் கீழ்படிய போவதில்லை என்று தெரிவித்தனர். “இரண்டு மாதங்களாக நாங்கள் இரவும் பகலும் இருவேளையிலும் உணவு வழங்கி வந்துள்ளோம், மேலும் மக்கள் பசியாக இருக்கிறார்கள் என்ற ஒரேயொரு காரணத்திற்காக இனியும் நாங்கள் தொடர்ந்து அதை செய்வோம்,” என்று Utopia56 இன் Gaël Monzy தெரிவித்தார்.

Refugee Community Kitchen மற்றும் Help Refugees ஆகியவற்றிற்காக வேலை செய்யும் Renke Meuwese ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், கடந்த மாதம் சுமார் 50 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வந்ததோடு ஒப்பிடுகையில் இப்போது சமையலறைகளில் நாளொன்றுக்கு சுமார் 400 பேருக்கு உணவு தயாரிக்கப்படுகிறது,” என்றார்.

Secours Catholique இன் ஒரு அதிகாரியான Vincent de Coninck தெரிவிக்கையில், "குழந்தைகள் குளிப்பாட்டுவதையும் உணவருந்துவதையும் ஓர் அரசியல்வாதி தடுப்பது ஆச்சரியமாக இருப்பதாக" தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், ஜனநாயக உரிமைகள் மீது தீவிரமடைந்து வரும் தாக்குதல்களையும் மற்றும் அகதிகளது மனிதாபிமான நிலைமைகளையும் தடுப்பதில் கலே இன் தன்னார்வ உதவியாளர்கள் சக்தியற்றவர்களாவர். சோசலிஸ்ட் கட்சியின் சுற்றுவட்டத்தில் செயல்பட்டு வரும் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் குட்டி-முதலாளித்துவ சமூக அடுக்குடன் நெருக்கமாக சம்பந்தப்பட்டுள்ள அவர்கள், புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை அணி திரட்டுவதற்கு முயற்சிக்க மாட்டார்கள், அவர்களால் அது முடியவும் முடியாது.

சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினது புலம்பெயர்ந்தவர்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களைக் காணும் அறக்கட்டளைகள், அனைத்திற்கும் மேலாக, அவற்றின் நடவடிக்கைகள் பொலிஸ் மற்றும் சுகாதார அமைப்புகளுக்குப் பொது ஒழுங்கைப் பாதுகாக்க உதவுவதாக வாதிடுகின்றன.

“திருட்டு மற்றும் சாத்தியமான தாக்குதல்களைத் தவிர்த்து, கலே மக்களின் பாதுகாப்பை" உறுதிப்படுத்துவதை, “வீதிகளில் இறப்புகளைத் தடுப்பத்தை", மற்றும் "குறிப்பாக சாத்தியமானளவிற்கு தொற்று நோய்கள் பரவும் மருத்துவ பிரச்சினைகளை அடையாளம் காண்பதையும்" உணவு வினியோகங்கள் சாத்தியமாக்குவதாக அவை வலியுறுத்துகின்றன. “மாநில மற்றும் பொதுத்துறை அமைப்புகள் சட்டரீதியிலும் மற்றும் மனிநேயரீதியிலும் இரண்டு விதத்திலும் அவற்றின் கடமைப்பாடுகளைச் செய்ய தவறுவதாலேயே அறக்கட்டளைகள் இப்பணியைச் செய்வதாகவும்" அவை சுட்டிக் காட்டுகின்றனர்.

ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களைப் பரந்தளவிலும் மற்றும் அரசியல்ரீதியிலும் சுயாதீனமாக ஒன்றுதிரட்டுவதன் மூலமாக மட்டுமே அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்களின் தீவிரப்பாட்டை தடுத்து நிறுத்த முடியும்.

நவம்பர் 23 அன்று, Nice Sophia Antipolis பல்கலைக்கழகத்தின் ஒரு ஆசிரியரும்-ஆய்வாளருமான Pierre-Alain Mannoni, காயமடைந்திருந்த மூன்று எரித்திரிய (Eritrean) நாட்டு பெண்களை மருத்துவரிடம் காட்ட அவர் காரில் ஏற்றிச் சென்றதற்காக வழக்கில் இழுக்கப்பட்டார். பிரான்கோ-இத்தாலிய எல்லைக்கு அருகில் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவியதற்காக விவசாயி Cédric Herrou க்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு மாதகால சிறை தண்டனையை ஜனவரி 4 அன்று நீஸ் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் இரத்து செய்தார்.

அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள், 15 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க மக்களின் நாடுகளை நாசமாக்கியுள்ள ஏகாதிபத்திய போர்களில் இருந்து தப்பியோடிவரும் அம்மக்களை அதைரியப்படுத்துவதற்காக சகல ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களது ஒரு பரந்த மூலோபாயத்தின் பாகமாக உள்ளன. தேசிய முன்னணியின் நிலைப்பாடுகளுடன் அடையாளம் காணக்கூடிய அதிதீவிர வலதுசாரி மனோபாவங்களை எடுத்துக்காட்டும் அவை, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியலின் பிரதான போக்குகளில் பொதுவிடத்தைப் பெற்றுள்ளன.

அரசியல் சூழலை நஞ்சூட்டவும் மற்றும் தொழிலாளர்களை இனரீதியில் மற்றும் மதவாத அடித்தளத்தில் பிளவுபடுத்தவும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகளும் மற்றும் ஊடகங்களும் நீண்டகாலமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

“Jungle” முகாமைக் கலைக்க அழைப்புவிடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 5 அன்று ஸ்ராலினிச CGT தொழிற்சங்க கூட்டமைப்பு அதிதீவிர வலதுசாரிகளின் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியது. வரவிருக்கும் ஏப்ரல் மாத பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்களது புலம்பெயர்வோர்-விரோத கொள்கைகளை தீவிரப்படுத்துவதில் அது அதன் பங்கை வகிக்கிறது.

உண்மையில், CGT உம் மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகளும், புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியும் (NPA) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் இடது முன்னணி கூட்டணியும் மற்றும் ஜோன்-லூக் மெலென்சோனின் இடது கட்சியும், இஸ்லாமிய சக்திகளின் உதவியோடு சிரியா மற்றும் லிபியாவில் நடத்தப்படும் பினாமி போர்களையும் மற்றும் 2012 இல் சோசலிஸ்ட் கட்சி தேர்ந்தெடுக்கப்பட அவை உதவியிருந்த நிலையில், அக்கட்சியின் புலம்பெயர்வோர்-விரோத கொள்கைகளையும் பாதுகாக்கின்றன.