Print Version|Feedback
Week three of the Trump presidency: A crisis of bourgeois rule and turn toward dictatorship
ட்ரம்ப் ஜனாதிபதிக் காலத்தின் மூன்றாவது வாரம்: முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியும் சர்வாதிகாரத்தை நோக்கிய திருப்பமும்
By Joseph Kishore
9 February 2017
கடந்த பல நாட்களில் நடந்த மூன்று அசாதாரணமான அபிவிருத்திகள் அமெரிக்காவில் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் முறிந்து கிடப்பதை அம்பலப்படுத்தியிருக்கின்றன.
திங்கட்கிழமையன்று ஃபுளோரிடா மாநிலத்தின் டம்பா நகரத்தில் உள்ள மாக்டில் விமானப் படை தளத்தில் ட்ரம்ப் ஒரு அரசியல் உரை நிகழ்த்தினார், அதில் அவர் ஊடகங்கள் மீது தாக்கியதோடு பயங்கரவாதத் தாக்குதல்களை குறித்து செய்திகள் வெளியிடாமல் அவை எதிரிக்கு உதவி செய்வதாகவும் மறைமுகமாய் குறிப்பிட்டார். “அவர்களுக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன, அது உங்களுக்குத் தெரியும்” என்று இராணுவத்திடம் கூறிய ட்ரம்ப் அதன் உதவிக்கு விண்ணப்பம் செய்தார். தனது முஸ்லீம்-விரோத பயணத் தடையை ஆதரித்துப் பேசிய அவர், “நம்மையும் நமது நாட்டையும் அழிக்க விரும்புகிறவர்களை” வெளியில் நிறுத்துகின்றபடியான “வலிமையான வேலைத்திட்டங்கள் நமக்குத் தேவை” என்று கூறினார்.
இரண்டு நாட்களின் பின்னர், புதன்கிழமையன்று, முக்கிய நகரங்களது தலைவர்களது சங்கம் என்ற ஒரு போலிஸ் அமைப்பின் முன்பாக ட்ரம்ப் வழங்கிய ஒரு உரையில் நீதித்துறையை கடுமையாகத் தாக்கினார். அவரது பயணத் தடை தொடர்பாக 9வது அமெரிக்க மேல்முறையீட்டு சுற்றுவட்ட நீதிமன்றத்தின் மூன்று-நீதிபதிகள் குழு ஒன்று முடிவு கூறியிருந்ததன் சமயத்தில் இந்த உரை வந்திருந்தது.
“நமது நாட்டில் பாதுகாப்பு அவசியம்” என்றார் ட்ரம்ப் போலிசிடம். “உங்களுக்குத் தேவையான ஆயுதங்களை உங்களுக்குக் கொடுக்க வேண்டும். இதுதான் [குடியேற்றம் தொடர்பான உத்தரவு] உங்களுக்கு தேவையான ஆயுதம். அவர்கள் [நீதிமன்றங்கள்] அவற்றை உங்களிடம் இருந்து அப்புறப்படுத்த விரும்புகிறார்கள், காரணம் அரசியலாக இருக்கலாம் அல்லது அரசியல் கண்ணோட்டங்களாக இருக்கலாம். நாம் அதனை விடக் கூடாது.”
ஒரு சாதகமற்ற நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்ப்பதற்கு அல்லது மறுப்பதற்கு போலிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி விடுக்கும் அழைப்புக்கு சளைக்காத ஒன்றாய் இது இருக்கிறது. இந்தப் புள்ளியை அடிக்கோடிடும் விதமாய் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகியவையும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று... அவர்கள் நமது ஆயுதங்கள் ஒவ்வொன்றாய் அகற்றிக் கொண்டிருக்கிறார்கள், அதைத் தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.”
இந்த இரண்டு உரைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில், செவ்வாய்கிழமை இரவு, அமெரிக்க செனட்டில் குடியரசுக் கட்சியினர், நாட்டின் தலைமை சட்ட அமலாக்க அதிகாரி பதவியான அட்டர்னி ஜெனரல் பதவிக்கு செனட்டர் ஜெஃப் செசன்ஸ் ஐ பரிந்துரைப்பதற்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் செனட்டரான எலிசபெத் வாரென் ஆற்றிய ஒரு உரையை தடுத்துநிறுத்தும் ஒரு அசாதாரண செயலில் இறங்கினர்.
1986 இல் செசன்ஸ் பெடரல் நீதிபதியாக பரிந்துரைக்கப்படுவதை எதிர்த்து மறைந்த டாக்டர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் மனைவியான கோரெட்டா ஸ்காட் கிங் செனட்டின் நீதித்துறை கமிட்டிக்கு அனுப்பியிருந்த ஒரு கடிதத்தின் பகுதியை வாரென் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது குடியரசுக் கட்சியின் செனட்டர்கள், “ஒரு செனட்டருக்குரிய வகையில் அல்லாத கண்ணியக்குறைவான எந்த நடத்தையை அல்லது நோக்கத்தை” மற்ற செனட்டர்கள் மீது சுமத்துவதில் இருந்து செனட்டர்களைத் தடுக்கும் ஒரு தெளிவற்ற விதியைக் காட்டி, வாரனைக் குறுக்கிட்டனர். வாரன் பேச்சை நிறுத்தி விட்டு இருக்கைக்குத் திரும்பும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வாய்ப்பூட்டு விதியை இழுத்தமையானது அதன் வழியில், உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலத்தில் சட்ட அவைகளின் வளாகங்களுக்குள் அடிமைத்தனம் குறித்துப் பேசுவதில் இருந்து இரண்டு அவை உறுப்பினர்களையும் தடுக்கின்றதான ஒரு விதி நாடாளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டதை நினைவுக்குக் கொண்டுவருகிறது. அடிமைத்தனம் குறித்த பிரச்சினை வெடிப்பானதாக இருந்ததால் அதை விவாதிப்பதற்கான தடை திணிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றுமே முதலாளித்துவ ஜனநாயகத்தின் மிக அடிப்படையான வடிவங்களுடனான ஒரு வன்மையான முறிவின் அறிகுறியாகவே இருக்கின்றன. முதலாவது உரை அரசியல்சட்டத்தின் முதல் திருத்தத்தால் பாதுகாக்கப்பட்டதாய் இருக்கும் ஊடகங்களைக் குறிவைத்தது; இரண்டாவ்து, அரசியல்சட்டத்தின் படி அரசாங்கத்தின் மூன்று “சமநிகர்” கிளைகளில் ஒன்றான நீதித்துறையை குறிவைத்தான ஒரு தாக்குதலாய் இருந்தது; மூன்றாவது நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தினை முடக்கும் ஒரு முயற்சியாக இருந்தது.
இந்த பொருட்சூழலில், ஜனநாயகக் கட்சியின் பதிலிறுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வாரனை அமரக் கூறிய போது, அவர் அதற்கு இணங்கினார், இந்த வாய்ப்பூட்டு உத்தரவை தடுப்பதற்கான எந்த கவனத்துக்குரிய நடவடிக்கையிலும் எந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் இறங்கவில்லை. விவாதம் நாள் முழுவதும் நடந்து புதன்கிழமைக்கு வந்து, உச்சமாய் அடுத்த அட்டர்னி ஜெனரலாக செசன்ஸை ஊர்ஜிதம் செய்யும் 52-47 வாக்களிப்பு நடந்து முடிந்தது.
இராணுவம் மற்றும் போலிசின் முன்பாக ட்ரம்ப் வழங்கிய உரைகளைப் பொறுத்தவரை, அவை தணித்துக் காட்டப்படுகின்றன அல்லது உதாசீனம் செய்யப்படுகின்றன என்பதுடன் அவற்றின் படுபயங்கரமான தாக்கங்கள் மூடிமறைக்கப்படுகின்றன.
இவை ஆளும் வர்க்கத்திற்குள்ளான முக்கியமான அரசியல் பிளவுகள் ஆகும், ஆயினும் இவை வெளியுறவுக் கொள்கைப் பிரச்சினைகளில் மையம் கொண்டிருக்கின்றன. வாரன் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப்பின் பல்வேறு அதி-வலது அமைச்சரவை நியமனங்கள் தொடர்பாக வெற்று அலட்டல்களில் ஈடுபட்டு வந்திருக்கிற அதேநேரத்தில், அந்த பரிந்துரைகள் நிறைவேறுவதைத் தடுப்பதற்கு அவர்கள் எதுவொன்றும் செய்திருக்கவில்லை.
ஆயினும் ரஷ்யாவை பூதாகரமாக்கிக் காட்டுவதற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் மிக நெருக்கமாக ட்ரம்ப் இருப்பதைக் கண்டனம் செய்வதற்குமான ஒரு பிரச்சாரத்தை மட்டும் அவர்கள் தளர்ச்சியின்றி செய்து வந்திருக்கின்றனர். இதுதான் புதிய ஜனாதிபதிக்கு எதிரான அவர்களது தாக்குதலின் பிரதான புள்ளியாக இருந்து வந்திருக்கிறது.
பெரும்பாலும் ஒரு மூர்க்கமான ரஷ்ய-விரோதக் கொள்கையில் இருந்து ட்ரம்ப் விலகி விடுவார் என்ற கவலையின் காரணத்தால் ஹிலாரி கிளிண்டனது பிரச்சாரத்தை ஆதரித்திருந்த இராணுவ-உளவு எந்திரத்தின் கன்னைகளுக்காக அவர்கள் பேசுகிறார்கள். புதிய நிர்வாகமானது இப்போதைக்கு தனது போர்க்கூச்சலை சீனா மற்றும் ஈரான் மீதே குவித்திருக்கிறது.
ட்ரம்ப்பின் நச்சுமிழல்களது உடனடி இலக்காக இருப்பது ஸ்தாபகத்திற்குள்ளாக இருக்கிற அவரது விமர்சகர்கள் என்றாலும், மிக அடிப்படையான இலக்காக இருப்பது தொழிலாள வர்க்கம் என்பதோடு, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு எதிராய் தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற வழிமுறைகளும் இன்னும் அதிக வன்முறையானவையாகும். புதனன்றான அவரது உரை, போலிஸ் பலப்பிரயோகம் செய்வதன் மீது இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் அனைத்தையும் அகற்றுவதற்கான ஒரு வாக்குறுதியாக இருந்தது. “வெள்ளை மாளிகையில் உங்களுக்கு ஒரு உண்மையான, உண்மையான நண்பர் இருக்கிறார் என்பதே இன்று நான் சொல்லும் செய்தியாகும்” என்று அவர் பிரகடனம் செய்தார். “நமது போலிசை நான் ஆதரிக்கிறேன். நமது ஷெரீஃப்களை நான் ஆதரிக்கிறேன். சட்ட அமலாக்கத்தின் ஆண்கள் மற்றும் பெண்களை நான் ஆதரிக்கிறேன்.”
ட்ரம்ப் நிர்வாகமானது அமெரிக்க சிலவரடுக்கின் சர்வாதிகாரத்தை அதன் மிகக் கொடூர வடிவத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. பில்லியனர்களாலும் படைத்தளபதிகளாலும் நிரப்பப்பட்டிருக்கின்ற அவரது நிர்வாகமானது, ஒரு பெரும் போருக்கான தயாரிப்பில் இராணுவத்தை பாரிய அளவில் விரிவுபடுத்துவதற்கும் அதேவேளையில் அமெரிக்காவிற்குள்ளாக சமூக எதிர்ப்புரட்சியை தீவிரப்படுத்துவதற்குமாய் தீர்மானத்துடன் இருக்கிறது. மருத்துவ பராமரிப்பை வெட்டுவது, பொதுக் கல்வியை அழிப்பது மற்றும் பெருநிறுவன இலாபங்களுக்கு இருக்கக் கூடிய அத்தனை இடைஞ்சல்களையும் அகற்றுவது ஆகியவையும் இதில் இடம்பெறுகின்றன. இந்த கொள்கையை அமல்படுத்துவதற்கு, மிக அடிப்படையான ஜனநாயக வடிவங்கள் ஓரங்கட்டப்பட வேண்டியதாய் இருக்கிறது.
ட்ரம்ப் நிர்வாகமானது, இல்லாதபட்சத்தில் ஒரு ஆரோக்கியமான சமூகமாக இருந்திருக்கக் கூடிய ஒன்றில் நிகழ்ந்து விட்ட தடம்புரளல் அல்ல. இது அமெரிக்க ஜனநாயகத்தின் நீண்டகால நெருக்கடியினது உச்சநிலையே ஆகும். 2000 ஆவது ஆண்டில், உச்ச நீதிமன்றம் தேர்தலில் தலையீடு செய்து ஃபுளோரிடாவில் வாக்குகள் மீண்டும் எண்ணப்படுவதை நிறுத்தி விட்டு ஜனாதிபதி பதவியை ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கைகளில் ஒப்படைத்த சமயத்தில், உலக சோசலிச வலைத் தளம், நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஜனநாயகக் கட்சியிடம் இருந்து அதற்கு எந்த தீவிர எதிர்ப்பும் இல்லாமலிருப்பதும் ஆளும் வர்க்கத்திற்குள்ளாக ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவான எந்த கணிசமான திரளும் இல்லாமலிருக்கிறது என்பதையே எடுத்துக்காட்டியது எனக் குறிப்பிட்டிருந்தது.
கடந்த பதினாறு ஆண்டுகள் இந்த பகுப்பாய்வையே ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. புஷ்ஷின் கீழாக, 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களானவை “பயங்கரவாதத்தின் மீதான போர்” ஒன்றைப் பிரகடனம் செய்து வெளிநாடுகளில் முடிவற்ற போரையும் அமெரிக்காவிற்குள்ளாக ஜனநாயக உரிமைகள் மீது நீண்டகால பாதிப்புகள் கொண்ட தாக்குதல்களையும் நியாயப்படுத்துவதற்காய் பயன்படுத்தப்பட்டன. ஒபாமா இந்த நிகழ்முறைகளை தலைகீழாக்குவதற்கெல்லாம் வெகு அப்பால், அமெரிக்க குடிமக்களை நீதிமுறைக்கு அப்பாற்பட்ட விதத்தில் படுகொலை செய்வதற்கு உத்தரவிடுவதற்கு ஜனாதிபதி கொண்டுள்ள உரிமையை திட்டவட்டம் செய்வது உள்ளிட, அவற்றை இன்னும் விரிவுபடுத்தினார்.
இப்போது, ட்ரம்ப் அதிகாரத்துக்கு வந்து விட்டிருக்கும் நிலையில், பகிரங்கமான சர்வாதிகார நடவடிக்கைகள் தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு புரட்சிகர சூழ்நிலையும் மரபான ஆட்சி வடிவங்கள் வன்மையான வழியில் முறிந்து நிற்பதில் இருந்து எழுகிறது. ஆளும் வர்க்கம் பழைய வழியில் ஆட்சி செய்வதும் இனி சாத்தியமில்லை, தொழிலாள வர்க்கம் பழைய வழியில் வாழ்க்கையை நடத்துவதும் இனி சாத்தியமில்லை. இந்த இரண்டு நிலைமைகளுமே இருக்கின்றன என்பது மட்டுமல்ல, அவை மிகவும் முன்னேறிய கட்டத்திலுள்ளன.
ஆளும் வர்க்கத்தின் அத்தனை அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிரான விதத்தில், ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பை, போர், சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கின்றதாய், தொழிலாள வர்க்கத்தில் ஒரு சுயாதீனமான புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்புவதே மையமான மூலோபாய பிரச்சினையாகும்.