Print Version|Feedback
German army announces major expansion as tanks roll into Eastern Europe
கிழக்கு ஐரோப்பாவினுள் டாங்கிகளை களமிறக்கையில், ஜேர்மன் இராணுவம் மிகப்பெரும் விரிவாக்கத்தை அறிவிக்கிறது
By Johannes Stern
24 February 2017
ஒரு வாரத்திற்கு முன்னர் Süddeutsche Zeitung பத்திரிகையின் ஒரு கருத்துரையில் ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயென் (CDU) அந்நாட்டின் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் ஒரு பாரிய உயர்வை அறிவித்ததுடன், ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) நடத்தவிருக்கின்ற புதிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்தும் அறிவித்தார். அதற்கடுத்து அவர், ஜேர்மன் இராணுவத்தின் அளவு அடுத்த சில ஆண்டுகளில் ஏறத்தாழ 200,000 க்கு அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தார். இப்போது சேவையிலிருக்கும் மொத்த சிப்பாய்களின் எண்ணிக்கை சுமார் 178,000 ஆகும்.
செவ்வாயன்று பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து வெளியான ஓர் உத்தியோகபூர்வ அறிக்கை, “அடுத்த ஏழு ஆண்டுகளில் இன்னும் கூடுதலாக 5,000 இராணுவ பதவியிடங்கள், 1,000 படைத்துறைசாரா நியமனங்களுக்கும் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இன்னும் கூடுதலாக 500 இடங்களுக்கும் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக" குறிப்பிட்டது. “2024 வரையில் ஜேர்மன் இராணுவத்தின் இலக்கு", “படைத்துறைசாரா பணியாளர்களுக்கான சுமார் 61,400 பதவியிடங்களுடன் மொத்தம் 198,000 சிப்பாய்களாக அதிகரிக்கப்பட்டு" இருக்கும்.
வொன் டெர் லெயென் கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கையில், பணியாளர்களை படிப்படியாக அதிகரிப்பதை உள்ளடக்கிய "ஆளணியில் திருப்புமுனை" (Trend Change of Personnel) என்றழைக்கப்படுவதை அறிவித்தார். அதை தொடர்ந்து டிசம்பர் தொடக்கத்தில் புதிய "ஜேர்மன் இராணுவ சிப்பாய்களுக்கான மூலோபாயம்" (Personnel Strategy of the Bundeswehr) வந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஜேர்மன் அரசாங்கத்தின் மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் போருக்கான கோரிக்கைகளும் அதிகரித்தளவில் ஆக்ரோஷமாக மாறியுள்ளன.
சமீபத்திய அரசு செய்தி வெளியீடு குறிப்பிடுகிறது: “எல்லா காலத்திலும் ஜேர்மன் இராணுவம் உரிய மேலாளுமை கொண்ட வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையை கொண்டு விடையிறுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.” “ஜேர்மன் இராணுவத்தின் ஆற்றலை அதிகரிப்பதும், அதன் தாக்கிப்பிடிக்கும் தன்மையை பலப்படுத்துவதும் மற்றும் முக்கிய எதிர்கால தகைமைகளைக் கட்டமைப்பதுமே, இந்த “ஆளணி திருப்புமுனையின்" நோக்கமாகும்.
ஒட்டுமொத்தமாக "ஜேர்மன் இராணுவத்தின் திறனை அதிகரிக்க 99 வெவ்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.” ஏனையவற்றோடு சேர்ந்து, “புதிய அமைப்புரீதியிலான பகுதிகள், இணையம் மற்றும் தகவல் பரிமாற்ற களத்தில் சிறப்பு நிபுணர்கள், Korvetten K 130 கப்பலுக்கான கப்பற்படையினர், ஆயுதமேந்திய படை தளங்களுக்கான உதவிப்படைகளைப் பலப்படுத்துதல் (தளவாடகள் / ABC பாதுகாப்பு)” மற்றும் "6வது டாங்கி துணைப்படை பிரிவை அமைப்பது" ஆகியவையும் உள்ளடங்கி உள்ளன.
ஜேர்மன் இராணுவம் போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதில் எந்த ஐயமும் கிடையாது. இல்லையென்றால் வேறெதற்காக சிப்பாய்கள் மற்றும் ஆயுத தளவாடங்களில் பாரியளவில் முதலீடு செய்கிறது? “முன்னொருபோதும் இல்லாதளவில் Bundeswehr (ஜேர்மன் இராணுவம்) அவசியப்படுகிறது", ஊர்சுலா வொன் டெர் லெயென் ஒரு பத்திரிகை வெளியீட்டில் குறிப்பிட்டார். “IS பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம், மாலியை ஸ்திரமாக்கல், ஆப்கானிஸ்தானில் ஆதரவைத் தொடர்வது, மத்திய தரைக்கடல் மற்றும் ஏகியனில் மனித கடத்தல்கள், அல்லது பால்டிக் நாடுளில் நேட்டோவில் நமது குறிப்பிடத்தக்க பிரசன்னம்,” ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
குறிப்பிடத்தக்க விதத்தில், அதே நாளில், பாதுகாப்பு அமைச்சகம், கனரக ஆயுதங்கள் மற்றும் ஏனைய தாக்கும் குழுக்களை ரஷ்ய எல்லைகளுக்கு அனுப்புவதாக அறிவித்தது. ஜேர்மன் இராணுவத்தின் உத்தியோகபூர்வ வலைத் தள அறிக்கை ஒன்றின்படி, “20 மார்டன்கள் (Marten) மற்றும் ஆறு லியோபார்ட் (Leopard) போர்க்கள டாங்கிகள் அத்துடன் மூன்று மலையேற்ற டாங்கிகள் லித்துவேனியாவிற்கு சென்று கொண்டிருக்கின்றன.” மொத்தத்தில், ஜனவரி மத்தியில் இருந்து அண்ணளவாக 120 கொள்கலன்களும் (containers) மற்றும் 200 வாகனங்களும் நிரப்பப்பட்டு, மொத்தம் ஒன்பது இரயில்கள் மூலமாக லித்துவேனியாவிற்கு அனுப்பப்பட்டன. இவ்வாரயிறுதியில், மொத்தம் 1,000 பேர் கொண்ட ஒரு நேட்டோ போர்க்குழுவை வழிநடத்த மிகுதியான 450 சிப்பாய்கள் செல்லவிருக்கிறார்கள்.
எஸ்தோனியா (பிரிட்டன் தலைமையின் கீழ்), லாட்வியா (கனடா), மற்றும் போலாந்திற்கு (அமெரிக்கா) கூடுதல் போர்க்குழுக்களை அனுப்புவதுடன் கிழக்கு ஐரோப்பாவிற்கு நேட்டோ துருப்புகள் அனுப்புவது என்பது வார்சோவில் ஜூலை 2016 நேட்டோ உச்சி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டவாறு, ரஷ்யாவுடனான நேட்டோவின் மோதலை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கையின் பாகமாகும். ருமேனியா மற்றும் போலாந்தில் நேட்டோ ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவுவது, 5,000 பேர் கொண்ட பலமான விரைவு அதிரடி படையை உருவாக்குவது மற்றும் நேட்டோ விடையிறுப்பு படை சிப்பாய்களை 13,000 இல் இருந்து குறைந்தபட்சம் 40,000 ஆக உயர்த்துவது ஆகியவை இதில் உள்ளடங்குகிறது.
ஜேர்மன் வாராந்தர பத்திரிகை Der Spiegel போன்ற ஊடக நிறுவனங்கள், “பனிப்போர் முடிந்ததற்குப் பின்னர், கிழக்கில் செய்யப்படும் மிகப் பெரிய இந்த துருப்பு நிலைநிறுத்தலை", மற்றும் இரண்டாம் உலக போரில் சோவியத் ஒன்றியத்தில் Wehrmacht (நாசிசத்தின் கீழ் ஜேர்மன் இராணுவம்) நாசமாக்கப்பட்டதற்குப் பின்னர் முதல் ஜேர்மன் படைப்பிரிவை கிழக்கு ஐரோப்பாவிற்குள் நிலைநிறுத்துவதை, “உக்ரேனிய கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியதற்கான ஒரு எதிர்வினை" என்று நியாயப்படுத்தின.
இது உண்மைகளை தலைகீழாக்குகின்றன. உண்மையில் வலிய சண்டைக்கு இழுப்பது மாஸ்கோ அல்ல, நேட்டோ ஆகும். மார்ச் 2014 இல் ரஷ்யாவிற்குள் கிரிமியா ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்னர், வாஷிங்டனும் பேர்லினும் அதிதீவிர வலதுசாரி சக்திகளது நெருக்கமான கூட்டுறவுடன் ரஷ்ய-சார்பு யானுகோவிச் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பதவிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைத்தன. அதற்குப் பின்னர் இருந்து, நேட்டோ நிலைமையை இன்னும் மோசமாக்க, அதன் படைகளை திட்டமிட்டு அதிகரித்துக் கொள்ளவும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கவும் மாஸ்கோவின் முக்கிய பாதுகாப்பு விடையிறுப்புகளை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தி வந்துள்ளது.
“ரஷ்யாவிற்கு எதிராக அணுஆயுதங்கள்: ஜேர்மனிக்கும் அணுஆயுதங்கள் அவசியம்" என்று தலைப்பிட்டு Tagesspiegel இன் சமீபத்திய ஒரு கருத்துரை, ஜேர்மன் உயரடுக்குகளின் பிரிவுகள் எந்தளவிற்குச் செல்ல தயாரிப்பு செய்கின்றன என்பதை தெளிவுபடுத்தியது. ஹாகன் பல்கலைக்கழகத்தின் ஓர் அரசியல் விஞ்ஞானியும் பாதுகாப்பு அமைச்சகத்தில் முன்னாள் பாதுகாப்பு கொள்கை ஆலோசகருமான மாக்சிமில்லியன் ரெயர்ஹல (Maximilian Terhalle) பின்வருமாறு கூறினார்: “நமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கையை பராமரிக்க இடமளிக்கும் ஒரு சுதந்திர ஐரோப்பாவை பேணுவதற்காக புட்டினின் ரஷ்ய அதிகாரத்தை மட்டுப்படுத்த விரும்பும்… ஒரு ஜேர்மனி அதை இராணுவரீதியில் செய்ய வேண்டும், அதனால் அதை அணுஆயுதங்களுடனும் செய்யவேண்டும்,” என்றார்.
ட்ரம்பின் "ரஷ்ய-ஆதரவு போக்கை" சுட்டிக்காட்டுவதன் மூலமாகவும் மற்றும் "பாதுகாப்பு குழுவில் உள்ள இரண்டு அங்கத்துவ நாடுகளான" பிரான்ஸூம் பிரிட்டனும் போதிய அணுவாயுதங்களை கொண்டிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி ரெயர்ஹல, அவரது அணுஆயுத வல்லரசு கனவுகளை நியாயப்படுத்துகிறார். அவ்விரண்டினதும் ஆயுதங்கள் "மிகவும் சிறிய, மிகவும் தந்திரோபாயரீதியானவையும், ஓரளவிற்கு பாவனைக்கு உதவாதவை என்பதோடு, இவற்றால் “ஒரு பரந்த அச்சுறுத்தலை வழங்க" முடியாது. அனைத்திற்கும் மேலாக, ஒரு அவசரகால நிகழ்வில், பலமான பங்காளி (சான்றாக ஐக்கிய இராஜ்ஜியம்) [ஜேர்மனிக்கு] அணுஆயுத (பாதுகாப்பு) உத்தரவாதமளிக்கும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அணுஆயுத தாக்குதலை நடத்தும் என்ற இந்த உண்மையை ஒருவர் சார்ந்திருக்க முடியாது.” “மோசமான சூழலில்", ஜேர்மனி "அதன் காலில் அது நிற்க கூடியதாக இருக்க வேண்டும்.” அது தான் "அதன் மக்களுக்கு அது செய்யக்கூடியது,” என்கிறார்.
ரெயர்ஹல போன்றவர்களுக்கு மதிகெட்டுவிட்டதா என்று ஒருவர் வேண்டுமானால் ஆச்சரியப்படலாம். ஒரு "மோசமான சூழல்", அதாவது ரஷ்யாவுடனான ஒரு அணுஆயுத போர், ஜேர்மன் மக்களை மட்டும் நிர்மூலமாக்காது, மாறாக ஒட்டுமொத்த மனிதயினத்தையே வேரூடன் களைந்தெறியும் என்பது குறித்து ஒரு “பாதுகாப்பு ஆலோசகர்" எனக்கூறிக்கொள்ளும் ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டும். தொழிலாளர்களும் இளைஞர்களும் இதுபோன்ற கருத்துக்களை ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டாம் உலக போர் முடிந்து எழுபத்தைந்தாண்டுகளுக்கு பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கம் உலகெங்கிலும் அதன் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைத் திணிப்பதற்காக கொடூரமான குற்றங்களைப் புரிய மீண்டும் தயாரிப்பு செய்து வருகிறது.