Print Version|Feedback
German Social Democrats prepare for conflict with the US
ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகள் அமெரிக்காவுடன் மோதலுக்கு தயாராகின்றனர்
By Peter Schwarz
1 February 2017
கடந்த வாரம் ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியின் (SPD) தலைமை பதவி மாற்றங்கள், மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
இந்த இலையுதிர்கால கூட்டாட்சி தேர்தலில் SPD அதன் சான்சிலர் வேட்பாளராக ஐரோப்பிய நாடாளுமன்ற முன்னாள் தலைவர் மார்ட்டின் சூல்ஸை நிறுத்தவிருப்பதாக, ஜனவரி 24 அன்று, ஆச்சரியமூட்டும் விதத்தில் அறிவித்தது. SPD இன் தலைவராக இருக்கும் பொருளாதாரத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியலின் இடத்தை எடுப்பதன் மூலம் சூல்ஸ் SPD இன் தலைவராக ஆகிறார். இதனால் காப்ரியல், பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையரிடம் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியைப் பெறுகிறார். ஸ்ரைன்மையர் கூட்டாட்சி ஜனாதிபதி பதவியை ஏற்கவிருக்கிறார்.
அரசு வட்டாரங்களுக்கு நெருக்கமான இதழாளர்கள் இந்த பதவி மாற்றங்களை காப்ரியலின் தனிப்பட்ட தன்னியல்பான முடிவாக சித்திரிக்க படாதபாடு படுகின்றனர். சூல்ஸ் உட்பட சம்பந்தப்பட்ட ஏனைய அனைவரையும் ஆச்சரியமூட்டும் விதத்தில், சான்சிலர் வேட்பாளர் பதவியைத் துறக்க காப்ரியல் கடந்த சனியன்று தான் முடிவெடுத்தார் என்று Der Spiegel வாதிட்டது. இது போன்ற செய்திகள் உண்மையில் என்ன நடந்து வருகிறதோ அதை மறைக்க நோக்கம் கொண்டுள்ளன.
காப்ரியல் மற்றும் சூல்ஸின் அரசியல் நிலைப்பாடுகளை ஒருவர் ஆராய்வாரானால், மிகவும் வித்தியாசமான சித்திரம் வெளிப்படும். ஜேர்மனியின் ஆளும் வட்டாரங்கள், அவற்றின் நிலைப்பாடுகளை மாற்றி வருகிறது. புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசியவாத கொள்கையை அவை ஓர் அபாயமாக மட்டுமல்ல, மாறாக அவற்றின் சொந்த வல்லரசாகும் அபிலாஷைகளை எட்டுவதற்கு அவற்றிற்குக் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாகவும் பார்க்கின்றன. இதை அடைவதற்கு சமூக ஜனநாயகக் கட்சியே மிக பொருத்தமான கருவி என்பதாக அவை கருதுகின்றன.
இதனால் தான் ஊடகங்கள் சூல்ஸை SPD க்கான "நம்பிக்கை நட்சத்திரமாக" உருக்கொடுத்து, அவருக்கு ஒரு தேர்தல் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கொண்டு செல்கின்றன. உண்மையில் SPD இன் இழிவார்ந்த அரசியலுக்கு, வேறு எவரையும் விட சூல்ஸ் தான் உருவடிவமாக விளங்குகிறார். SPD இன் பழமைவாத Seeheim வட்டாரத்தின் ஒரு நீண்டகால அங்கத்தவராகவும் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒரு பிரமாண்ட கூட்டணிக்கு ஏற்புடைய தலைவராகவும், அவர் அக்கட்சியின் வலது கன்னையை சேர்ந்தவராவார்.
ஜனவரி 24 இல் Handelsblatt பத்திரிகை உடனான ஒரு நீண்ட பேட்டியில் காப்ரியல் SPD இன் திட்டநிரலைத் தெளிவுபடுத்தினார். அவர் கூறினார், ட்ரம்ப் என்றால் "வணிகம் என்று அர்த்தம்,” ஆனால் தயக்கத்திற்கு இது காரணமல்ல. அவர் தொடர்ந்து கூறினார், “ட்ரம்ப் ஆசியா மற்றும் தென் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக போர் தொடங்கினால், அது நமக்கு வாய்ப்புகளைத் திறந்துவிடும்… ஐரோப்பா ஒரு புதிய ஆசிய மூலோபாயத்தின் மீது துரிதமாக செயல்பட வேண்டும். அமெரிக்கா ஏற்படுத்தும் வெற்றிடத்தை இப்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.
“அமெரிக்க பாதுகாப்புவாதம், ஆசியா எங்கிலும் புதிய வாய்ப்புகளை ஐரோப்பாவிற்கு வழங்குகிறது" என்றால், “அந்த ஆதாயத்தை நாம் பற்றிக் கொள்ள வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
ஆசியாவை நோக்கிய இதுபோன்றவொரு திருப்பத்தை சுலபமாக்குவதற்காக, காப்ரியல் ஜேர்மன் தலைமையின் கீழ் ஒரு மைய ஐரோப்பாவிற்காக பெரும்பிரயத்தனம் செய்து வருகிறார். “ஐரோப்பாவைப் பலப்படுத்துவது, ஒரு பொதுவான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையை அபிவிருத்தி செய்வது… மற்றும், அனைத்திற்கும் மேலாக, ஆசியா, இந்தியா மற்றும் சீனாவை நோக்கிய நமது சொந்த மூலோபாயத்தை கட்டமைப்பது" ஆகியவற்றை பிரதான முன்னுரிமைகளாக அவர் பட்டியலிட்டார்.
பிரிட்டன் வெளியேறுவது தீர்க்கமான தூண்டுதலை வழங்கக்கூடும். “பிரிட்டன் வெளியேறுவது மிகவும் தற்காப்பானரீதியில் விவாதிக்கப்பட்டு வருகிறது” என்றார். “ஓர் ஐரோப்பிய ஒன்றிய குழுவின் கூட்டுறவை அதிகரிப்பதற்கும்" மற்றும் "மைய ஐரோப்பாவை மிகப் பெரியளவில் பலப்படுத்துவதற்கும் இது வாய்ப்பளிக்கிறது.”
அந்த பேட்டி வெளியான ஒரு சில மணி நேரங்களில், காப்ரியல் SPD தலைமை பதவி மாற்றங்களை அறிவித்தார். மூன்று நாட்களுக்குப் பின்னர் அவர் வெளியுறவு மந்திரியானார்.
வர்த்தக கொள்கைக்குப் பொறுப்பான ஸ்வீடிஷ் ஐரோப்பிய ஒன்றிய கமிஷனர் Cecilia Malmström, காப்ரியலின் போக்கை ஆதரிக்கிறார். ஜப்பான், மெக்சிக்கோ மற்றும் தென் அமெரிக்க வர்த்தக அணியான மெர்கொசர் (Mercosur) அங்கத்துவ நாடுகள் உட்பட ஒரு நீண்ட பட்டியலில் உள்ள பல நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்த உடன்படிக்கைகளை முடிவு செய்ய விரும்புகிறது என்பதை அப்பெண்மணி அறிவித்தார். இந்நாடுகளில் பல, ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னரில் இருந்தே ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிக தீவிரமாக பேரம்பேசி வருகின்றன.
வியாழனன்று, “ட்ரம்ப் ஐரோப்பாவிற்கான வாய்ப்பாக ஆகலாம்" என்று தலைப்பிட்டு SpiegelOnline அதன் புரூசெல்ஸ் செய்தியாளரின் ஒரு கருத்துரையை பிரசுரித்தது. அவர் ட்ரம்பின் தனிமைப்படலை ஐரோப்பிய வர்த்தகத்திற்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதாக காட்டியதுடன், இன்னும் ஒருபடி அதிகமாக சென்று, “உடனடியாக நிகழவிருக்கின்ற அமெரிக்காவின் தார்மீக தலைமையின் வீழ்ச்சி" “ஐரோப்பாவிற்கான இன்னும் கூடுதலாக நீண்டகால வாய்ப்பாகும்" என்று எழுதுமளவிற்குச் சென்றார். [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது.]
இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு சூல்ஸ் ஏன் ஒரு பொருத்தமான வேட்பாளர் என்பதை இது விளக்குகிறது. ட்ரம்ப்க்கு எதிராக ஒப்பீட்டளவில் தெளிவாக பேசி உள்ள அவர், இப்போது ஜேர்மனியை "மேற்கத்திய மதிப்புகளின்" உருவடிவமாக சித்தரித்து, ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுக்க ட்ரம்பின் இனவாத மற்றும் சர்வாதிகார கொள்கைகள் மீதிருக்கும் பரந்தளவிலான கோபத்தைச் சாதகமாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார்.
முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் சூல்ஸ் உடன் மிக நெருக்கமாக வேலை செய்த சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் ட்ரம்பிடம் இருந்து தன்னைத்தானே தொலைவில் நிறுத்திக் கொண்டுள்ளார், ஆனால் அவரது சொந்த கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU), அகதிகள் மீதான கொள்கை மற்றும் தேசியவாதம் ஆகிய பிரச்சினைகளில் ஆழமாக பிளவுபட்டுள்ளது. அதன் பவேரிய சகோதர கட்சியான கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU), ஹங்கேரியின் Fidesz போன்ற அதிதீவிர தேசியவாத கட்சிகளுடன் கூடி இயங்கி, ட்ரம்ப்க்கு ஒரளவிற்கு ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது.
இழந்துபோன SPD வாக்காளர்களை மீண்டும் வெற்றிகொள்வதற்காக, எதிர்விருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் சூல்ஸ் "சமூக நீதிக்காக" பிரச்சாரம் செய்யவும் மற்றும் "கடினமாக உழைப்பவர்களை" நோக்கி திரும்பவும் விரும்புகிறார். ஆனால் முன்னாள் வோல்ஸ்வாகன் தலைவர் மார்ட்டின் வின்டெர்கோர்ன் போன்ற அதிக சம்பளம் பெறும் நிர்வாகிகள் மற்றும் வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக ஒருசில வாய்சவாடல்களை உந்திதள்ளுவதற்கு அப்பாற்பட்டு, வழங்குவதற்கு அவரிடம் வேறொன்றுமில்லை. இதுபோன்ற வெற்று கண்டனங்களால் அவருக்கு பாதிப்பு ஒன்றும் இருக்கப் போவதில்லை, ஏனெனில் வின்டெர்கோர்ன் இப்போது பதவியிலேயே இல்லை. அதே நேரத்தில், சூல்ஸ் தொழிலாள வர்க்க விரோதமான ஹார்ட்ஸ் சட்டங்களை "அவசியமான சீர்திருத்தங்கள்" என்று நியாயப்படுத்துவதுடன், மனிதன் வாழ்வதற்கே சாத்தியமே இல்லாத வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்தில் ஒரு சிறிய உயர்வுக்கு கூட பொறுப்பேற்க அவர் தயாராக இல்லை.
SPD சான்சிலர் ஹெகார்ட் ஷ்ரோடரின் 2010 திட்டநிரலின் விளைவாக இப்போது மிகக் கடுமையான, குறைந்த-கூலி வேலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான முன்னாள் SPD வாக்காளர்களை மீண்டும் அவர் வென்றெடுப்பதற்கு மிகச் சிறிதளவே வாய்ப்புள்ளது. அவர் முறையீடு எல்லாம், நன்கு சம்பாதிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும் மற்றும் ஒருசில தார்மீகரீதியிலான வார்த்தைகளுக்கு கைமாறாக ஜேர்மனியின் வல்லரசாகும் அபிலாஷைகளுக்குப் பின்னால் வீழ தயாராகி வரும் நடுத்தர வர்க்க பிரிவுகளுக்கும் தான். பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சியின் ஒரு கூட்டணியில் ஆட்சி செய்ய சூல்ஸ் தயாராகக் கூடும்.
கடந்த சனியன்று, Der Spiegel இன் அச்சுப் பதிப்பு நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டது, பொருளாதார புள்ளிவிபரங்களைக் கொண்டிருந்த அது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வெளியுறவு கொள்கை நோக்கங்களை அப்பட்டமாக நெறிப்படுத்தியது. அக்கட்டுரை ஜேர்மனி மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அட்லாண்டிக் இடையிலான உறவுகளில் ஒரு "தீவிர உடைவையும்" மற்றும் “அனேகமாக நண்பர் என்பதிலிருந்து எதிரி என்று மாறலாம்" என்றும் அனுமானித்தது. அது "எதிர்நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்ய" மற்றும் "சான்றாக, ஆசியாவில், கூட்டாளிகளைப் பெற முயற்சிக்குமாறு" ஆலோசனை வழங்குமளவிற்குச் சென்றது.
அக்கட்டுரையின்படி, “பசிபிக்கில் வளர்ச்சி பிரதேசங்களை ஜேர்மன் நிறுவனங்கள் அணுக இடமளிக்கும் வகையில்" "சங்கிலி தொடர் போன்ற வர்த்தக உடன்படிக்கைகளுக்கு" மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அக்கட்டுரை குறிப்பாக "சீனாவுடன் நல்லுறவுகளுக்கான" வாய்ப்புகளை வலியுறுத்துகிறது, “ஒரு புதிய பேர்லின்-பெய்ஜிங் அச்சு குறைந்தபட்சம் பகுதியாகவாவது பழைய அட்லாண்டிக் இடையிலான ஒழுங்கமைப்பைப் பிரதியீடு செய்யும்" என்பதையும் அது சேர்த்துக் கொள்கிறது.
இந்த முன்னோக்கு அதிகாரப்பித்து மற்றும் சித்தபிரமையின் ஒரு கலவையாகும். பெரும்பாலான ஜேர்மன் ஊடகங்கள் எடுத்துள்ள போக்குக்கு முரணாக, ட்ரம்பின் கீழ் அமெரிக்கா தனிமைப்படலுக்குள் திரும்ப திட்டமிடவில்லை, மாறாக அப்பட்டமான இராணுவ பலத்துடன் ஏகாதிபத்திய மேலாதிக்க பொருளாதார முறைகளைப் பிரதியீடு செய்ய திட்டமிடுகிறது.
பெண்டகனுக்கு விஜயம் செய்தபோது ட்ரம்ப் புலம்பெயர்வோரை தடுக்கும் ஒரு நிர்வாக ஆணையில் மட்டும் கையெழுத்திடவில்லை, மாறாக "ஆயுத படைகளை மிகப்பெரியளவில் மீள்கட்டுமானம் செய்யும்" ஒரு நிர்வாக ஆணையிலும் கையெழுத்திட்டார் என்ற உண்மையை ஜேர்மன் ஊடகங்கள் அரிதாகவே குறிப்பிட்டன. மொத்தம் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்க அணுஆயுத திட்டங்களை மேம்படுத்துவதென்ற ஒபாமா நிர்வாகத்தின் முடிவையே பின்தொடர்ந்து, ட்ரம்பின் "மீள்கட்டுமானம்" வருடாந்தர இராணுவ செலவுகளை 600 இல் இருந்து 700 பில்லியன் டாலராக உயர்த்தும்.
தென் சீனக் கடல் தீவுகளின் ஒரு முற்றுகையைக் கொண்டு, ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னணி பிரதிநிதிகள் சீனாவை அச்சுறுத்தி உள்ளனர்—இந்நடவடிக்கை ஒரு போர் அறிவிப்புக்குரியதாக இருக்கும். அமெரிக்காவை விலையாக கொடுத்து ஜேர்மனியும் ஐரோப்பாவும் ஆசியாவிற்குள் அதிக ஆக்ரோஷமாக நகர முயன்றால், ட்ரம்ப் அரசாங்கம் சும்மா இருந்துவிடப்போவதில்லை.
காப்ரியல் மற்றும் சூல்ஸ் வரையறுத்த வெளியறவு கொள்கையும் மற்றும் "நண்பர் என்பதிலிருந்து எதிரியாக" அமெரிக்காவின் மாற்றமும், உலகின் மிகப்பெரிய அணுஆயுத சக்திகளுக்கிடையே ஓர் இராணுவ மோதலுக்கான போக்கை அமைக்கும், இவ்விதத்தில் தான் கடந்த நூற்றாண்டின் இரண்டு உலக போர்களில் ஜேர்மனி சண்டையிட்டது.