Print Version|Feedback
A wave of class struggles in Sri Lanka: Workers must fight for a socialist program to defend their rights
இலங்கையில் வர்க்க போராட்ட அலைகள்: தொழிலாளர்கள் தமது உரிமைகளை பாதுகாக்க சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட வேண்டும்
By Socialist Equality Party
18 February 2017
இலங்கையில் வாழ்க்கை நிலைமைகள் வீழ்ச்சி, வேலை அழிப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக பொது மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றும் தொடர்ச்சியான போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டங்கள் அமெரிக்க சார்பு அரசாங்கத்துக்கும் முழு முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எதிராக வரவிருக்கும் வெகுஜன சமூக எழுச்சிகளுக்கான அடையாளம் ஆகும்.
* அரச தாதியர்கள் தற்போது மறியல் போராட்டம் செய்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் இரண்டு வார காலமாக நீண்ட எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வியாழனன்று, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அபிவிருத்தி சபை ஊழியர்களில் ஒரு பிரிவினரின் மற்றொரு போராட்டம் தொடங்கியது. 13 அரச பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள், பெப்ரவரி 7 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். முதல்நாள், இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) தொழிலாளர்கள் மத்திய கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி மற்றும் ரூபாயின் மதிப்பிறக்கம் காரணமாக வாழ்க்கைச் செலவு சமாளிக்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளதால், இந்த ஊழியர்கள் பிரதானமாக சம்பள உயர்வு கோருகின்றனர்.
* சுமார் 1,100 ஸ்ரீலங்கா டெலிகொம் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் கோரி டிசம்பர் 24 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு மின்சார சபை 1,400 மானிவாசிப்பு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த பின்னர், இதே கோரிக்கையை முன்வைத்து கிட்டத்தட்ட 200 இ.மி.ச. தற்காலிக தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 26 முதல் மூன்று வராங்களாக போராட்டம் நடத்தினர்.
* பிப்ரவரி 3, கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் சுமார் 1,000 பேர் தனியார்மயமாக்கலை எதிர்த்தனர். டிசம்பரில், நிரந்தர வேலை கோரிய அம்பாந்தோட்டை / மாகம்புர துறைமுகத்தின் சுமார் 500 தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தை ஒடுக்க அரசாங்கம் கடற்படையை அனுப்பியது.
* கொழும்பு அருகே, சீதுவையில் உள்ள குளோபல் ஸ்டார் லொஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தினால் வெளியேற்றப்பட்ட 150 தொழிலாளர்கள், தொழிற்சாலைக்கு அருகில் ஜனவரி 13 முதல் மீண்டும் வேலை வழங்கவேண்டுமென கோரி போராடி வருகின்றனர்.
* ஜனவரி மற்றும் பெப்ரவரி தொடக்கத்தில், மத்திய மலையக மாவட்டங்களில் அக்கரப்பத்தனை மற்றும் நானு ஓயா தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் திணிக்கப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சம்பள வெட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.
நாட்டில் சூழ்ந்துள்ள சமூக அமைதியின்மையின் ஆழத்தைக் காட்டும் வகையில், பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி தனியார்மயத்துக்கு எதிரான தமது பிரச்சாரத்தை தீவிரமாக்கியுள்ளனர். கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் வறட்சியினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்டஈடு கோரி ஆர்ப்பாட்டம் செய்ததோடு பெரும் நிறுவனங்களுக்காக நிலத்தை அபகரிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை எதிர்த்தும் போராட்டம் நடத்தினர்.
போரால் நாசமாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள், தற்போது நிலவும் இராணுவ ஆக்கிரமிப்பினால் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதையும், இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படாததையும் போரின் போதும் அதன் பின்னரும் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டதையும் எதிர்த்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளுடன் நேரடி மோதலுக்கு வந்துள்ளன. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டு, கிட்டத்தட்ட அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மீது அதிக வரிகளைச் சுமத்தியுள்ளதுடன் அரச கூட்டுத்தாபனங்களையும் கல்வியையும் தனியார் மயமாக்கி வருகின்றது.
ஆயினும், தொழிலாளர்கள் மத்தியிலான சீற்றத்தை தணிப்பதற்கே தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், அவை தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் பொருட்டு துறைசார் கோரிக்கைகளுக்கு அவற்றை மட்டுப்படுத்தின. ஒன்றுபட்ட நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் சவாலாக தலைதூக்கும் என்பதையிட்டு தொழிற்சங்கங்கள் பீதியடைந்துள்ளன. இந்த தொழிற்சங்கங்கள் எல்லாமே அமெரிக்க-சார்பு ஜனாதிபதி சிறிசேனவை தேர்வு செய்ய உதவியதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிரான வெகுஜன அதிருப்தியை திசை திருப்ப செயற்பட்டன.
கொழும்பு துறைமுக தொழிலாளர்கள், மின்சாரசபை ஊழியர்கள் மற்றும் தாதிமாரதும் ஆர்ப்பாட்டங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த தொழிற்சங்கங்களே அழைப்பு விடுத்திருந்தன. ஜே.வி.பி.யும் அதன் தொழிற்சங்கங்களும் சிறிசேன அதிகாரத்திற்கு வர உதவியிருந்தன. பரந்த அதிருப்தி அபிவிருத்தியடைகின்ற நிலையில், அவை தொழிலாளர்களின் கோரிக்கைகளை பெறுவதற்காக அரசாங்கத்திற்கு பயனற்ற வேண்டுகோள்களை விடுப்பதற்காகவே ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அரசுக்கு ஆதரவு கொடுக்கும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்களும் இதை ஒத்த மாயைகளையே சுழற்றிவிட்டுள்ளன.
தொழிற்சங்கங்களும் ஐக்கிய சோசலிசக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது குழுக்களும் கூறுவது போல், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளும் தங்கள் கோரிக்கைகளை வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. மற்றொரு போலி-இடது குழுவான நவ சம சமாஜக் கட்சி, நேரடியாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றது.
இரண்டாம் மற்றும் முதலாம் உலக யுத்தங்களுக்கு முன்னர் நிலவிய பொருளாதார வீழ்ச்சிகளுக்கு சமாமான வீழ்ச்சியில் மூழ்கியிருக்கும் உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் பெருகிவரும் நெருக்கடியினாலேயே அரசாங்கம் இத்தகைய தாக்குதல்களுக்கு உந்தப்படுகின்றது.
உலக கொந்தளிப்பின் தீவிர வெளிப்பாடாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகமானது பிற்போக்குத்தனமான தேசிய நிகழ்ச்சி நிரலை முன்வைத்துள்ளது. அது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை உக்கிரமாக்கியுள்ள அதேவேளை, உலகின் மீதான அமெரிக்க மேலாதிக்கத்தை வலியுறுத்தி வருகின்றது. அமெரிக்க ஆளும் உயரடுக்கு, முதலில் தாக்குதல் நடத்த வேண்டிய நாடு எது -ரஷ்யாவா அல்லது சீனாவா- என்பது தொடர்பாக ஒரு ஆக்ரோஷமான மோதலில் ஈடுபட்டுள்ளன. இது பெரும் வல்லரசுகளுக்கு இடையே போர் பதட்டத்தை தீவிரப்படுத்துவதுடன் மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தலையும் விடுக்கின்றது.
இந்த தேசியவாத உந்துதல் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் தலை தூக்குகின்றது. பிரிட்டனின் ஆளும் வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக்கிக்கொண்டது. ஜேர்மன் மற்றும் ஜப்பானிய அரசாங்கங்கள் தங்கள் சொந்த மறு இராணுவமயமாக்கலை தொடங்கி, பூகோள-மூலோபாய பதட்டங்களை உக்கிரமாக்கியுள்ளன. பிராந்திய சக்தியான இந்தியா, சீனாவுக்கு எதிரான அமெரிக்க யுத்த தயாரிப்புகளில் மேலும் மேலும் ஒருங்கிணைந்து வருகின்றது.
இலங்கை அரசாங்கம் வாஷிங்டனுடனான அதன் இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை ஆழப்படுத்தி வரும் அதேவேளை, இராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தொடங்கிய சிக்கன கொள்கைகளை ஈவிரக்கமின்றி தொடர்கின்றது. அதன் நெருக்கடியின் ஆழத்தை குறிக்கும் வகையில், அரசாங்கம் திவாலாவதை தடுப்பதற்காக இந்த ஆண்டு 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்க முயன்று வருகிறது. மத்திய வங்கி ஆளுனர், நாட்டின் பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தின் சிகிச்சையின் கீழ், "மருத்துவமனையில்" அனுமதிக்கப்பட்டுள்ளது என்று குணாம்சப்படுத்தினார்.
அரசாங்கமானது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களை அடக்க இராணுவ-பொலிஸ் வழிமுறைகளை மேலும் மேலும் கட்டவிழ்த்துவிடுகின்றது. அரசாங்கம் "ஊர்வலங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு குறுக்கிட முயற்சிக்கும் தீவிரவாதிகளை தோற்கடிக்கும்" என விக்கிரமசிங்க அண்மையில் எச்சரித்தார். அரசாங்கம் பாதுகாப்பு படைகளை ஆயுதபாணியாக்குவதோடு பயிற்சியும் அளிப்பதுடன் புதிய கொடூரமான "பயங்கரவாத-எதிர்ப்பு" சட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
சமூக அமைதியின்மை பற்றிய கவலையில், இராஜபக்ஷ தலைமையிலான எதிர்ப்புக் குழு, அரசாங்கம் தமிழர்களுக்கு ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதன் மூலம் நாட்டை பிரிக்கப் பார்க்கிறது என்று, ஒரு திட்டமிட்ட பேரினவாத பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. "யுத்த வீரர்கள்" என இராணுவத்துக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், உழைக்கும் மக்களை தாக்குவதற்காக இராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள முயன்று வருகிறார்.
இராஜபக்ஷவின் இனவாத பிரச்சாரத்துக்கு போட்டியாக, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும், வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆக்கிரமிப்பை பேணுவதற்கும் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலை தூக்குவதாக கதை கட்டுகிறது.
போலி இடது குழுக்கள், தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி. மற்றும் தமிழ் கட்சிகளும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தும் ஒரு ஜனநாயக மாற்றீடாக சிறிசேனவை போலியாக சித்தரித்ததாலேயே 2015 ஜனாதிபதித் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்தது.
இந்த போலிக் கூற்றுக்கள் அம்பலத்துக்கு வந்துவிட்டன. சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் மட்டுமே அப்போது பின்வருமாறு விளக்கின: "இராஜபக்ஷ ஒரு எதேச்சதிகார ஆட்சிக்கு தலைமை வகிக்கின்றார். இது புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் மரணங்களுக்கும், அதன் சிக்கனத் திட்டத்தின் மீதான விரோதத்தின் மீது பொலிஸ்-அரச வழிமுறைகளை கட்டவிழ்த்து விட்டமைக்கும் பொறுப்பாளியாகும். எவ்வாறெனினும், சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆளும் வர்க்கத்தின் நலன்களைக் தொடர்ந்து முன்னெடுப்பதில் இராஜபக்ஷவை போலவே ஈவிரக்கமற்றவராக இருப்பார் என்று, சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது. ’பொது வேட்பாளரை’ சூழ்ந்துகொண்டுள்ள அனைத்து எதிர் கட்சியினரும் தங்கள் கைகளில் இரத்தக் கறைகளை கொண்டுள்ளனர்."
இந்த எச்சரிக்கை நிரூபிக்கப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள் அரசியல் பிரச்சினைகளை கிரகித்துக்கொண்டு தங்கள் உரிமைகளுக்காக போராட நனவுபூர்வமாக தயாராக வேண்டும். அதே தொழிற்சங்கங்கள், போலி இடதுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், அரசாங்கம் ஒரு "ஜனநாயக அரசியலமைப்பை" தயார் செய்வதாகவும் அதற்காக மக்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறி வேறு அரசியல் பொறிகளை அமைக்க முயன்று வருகின்றன. அதே சமயம், போலி இடதுகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக "இடது கூட்டணிகளை" அமைக்க முயன்று வருகின்றன. தொழிலாளர்கள் இந்த மோசடிகளை நிராகரிக்க வேண்டும்.
* தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்தை எந்தவொரு ஆளும் வர்க்கத்தின் மற்றும் அரசாங்க-சார்பு மற்றும் தொழிற்சங்கங்களின் பிரிவினருக்கும் அடிபணியச் செய்ய முடியாது. அவர்கள் தொழிலாளர்களின் மற்றும் ஏழைகளின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை.
தொழிலாளர் போராட்டங்களை மட்டுப்படுத்தும் மற்றும் நசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அதிகாரத்துவங்களுக்கும் எதிர்ப்பு பெருகி வருகின்றது. பல தேயிலை தோட்டங்களில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊதிய உயர்வு கோரி தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை மீறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோசலிச சமத்துவக் கட்சியின் உதவியுடன் தங்கள் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்ய, டீசைட் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர் பிரிவினர் தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக ஒரு நடவடிக்கை குழுவை ஸ்தாபித்தனர்.
தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக, ஜனநாயக முறையில் தங்களாகவே தேர்ந்தெடுக்கும், நடவடிக்கை குழுக்களின் வடிவிலான புதிய அமைப்புக்களை வேலைத் தளங்கள் மற்றும் தோட்டங்களிலும் கட்டியெழுப்ப வேண்டும். இவை, தொழிற்சங்கங்களால் திணிக்கப்பட்ட துறைசார் தடைகளை நிராகரித்து, ஒவ்வொரு பிரிவு தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதன் மூலம், வர்க்க போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முடிவுகளை எடுக்க வேண்டும்.
* முதலாளித்துவ வர்க்கங்களால் திணிக்கப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்துள்ளன. இலங்கை தொழிலாளர்கள், உலகப் போர் அச்சுறுத்தலுக்கு எதிராக மற்றும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துக்காக உலகம் பூராவுமுள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் பங்குபற்றலுடன், வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சியை, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட ஏகாதிபத்திய மையங்களிலும் சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷிலும் காணக்கூடியதாக உள்ளது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஏனைய பல நாடுகளிலும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதலை எதிர்க்க வீதிக்கு வந்துள்ளனர்.
* வாழ்க்கை நிலைமைகள், தொழில்கள் மற்றும் கல்வி, சுகாதாரம், விலை மானியங்கள் போன்ற சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் எதிர்த்துப் போராட, தொழிலாளர்களுக்கு ஒரு அரசியல் வேலைத்திட்டம் தேவை.
முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு முடிவுகட்டி, சமூகத்தின் பரந்த பெரும்பான்மையினரின் நன்மைக்காக பொருளாதாரத்தை ஒழுங்கமைக்கும் பொருட்டு, பெரும் வணிகங்கள், தோட்டங்கள் மற்றும் வங்கிகளும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்படுவதோடு வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவது மறுக்கப்பட வேண்டும். முதலாளித்துவத்திற்கு எதிரான ஐக்கியப்பட்ட போராட்டத்துக்கு, மாணவர்கள் உட்பட விவசாயிகள், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு தொழிலாள வர்க்கம் தலைமை வகிக்க வேண்டும்.
இந்த பணிகளை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசின் வடிவில் ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிச சர்வதேசிய வாதத்துக்காக போராடுவதற்காக, தொழிலாள வர்க்கத்துக்குள் ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவது அவசியமாகும். நாம், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கை வாசித்து, அதை சோசலிச புரட்சிக்கான வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்ப இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வர்க்க உணர்வுடைய புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.