Print Version|Feedback
Sri Lanka: protest in north against privatize slatterns
இலங்கை: வடக்கில் உப்பளத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
By our correspondents
15 February 2017
சர்வதேச நாணய நிதியம் (IMF) விதித்துள்ள நிபந்தனைகளின் ஒரு பகுதியாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை அமுல்படுத்தும் இலங்கை அரசாங்கம், வடக்கில் ஆனையிறவுக்கு அருகில் அமைந்துள்ள மாந்தை உப்பளத்தை விற்கத் தயாராகி வருகிறது. பண வசதியில்லாத அரசாங்கம், சர்வதேச நாணய நிதிய கட்டளையை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக, இலங்கை விமான சேவையையும் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் விற்கும் முன்னெடுப்புகளை இறுதிப்படுத்தி வருகின்றது.
போரில் சீரழிக்கப்பட்ட ஆனையிறவு குறிஞ்சாத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட மக்கள், உப்பளத்தை விற்கும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து கடந்த டிசம்பரில் பேரணி நடத்தினர். கிராம அபிவிருத்தி சபை, பெண்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புக்கள் போன்ற 15க்கும் மேற்பட்ட அமைப்புகள், உப்பளத்துக்கு அருகே எதிர்ப்பில் பங்குபற்றினர்.
ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளத் தொழிலாளர்கள், மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழேயே சம்பளம் பெறுகின்றனர். வடக்கின் மன்னாரில் மாந்தையில் உள்ள பிரதான உப்பு கூட்டுத்தாபனத் தொழிலாளர்கள் 1,200 ரூபா நாள் சம்பளம் பெறும் அதேவேளை, ஆனையிறவுத் தொழிலாளர்கள் 1,000 ரூபா மட்டுமே பெறுகின்றனர். மன்னார் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு போனஸ் கொடுப்பனவாக 14,000 ரூபா பெற்றுள்ளனர். நிர்வாகம் உற்பத்தியை 1000 டன் வரை அதிகரித்தால் போனஸ் வழங்குவதாக உறுதியளித்திருந்தாலும், இந்த இலக்கை பூர்த்தி செய்த ஆனையிறவு தொழிலாளர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளம் 1938ல் செயல்பாட்டைத் தொடங்கி அரசு நிர்வாகத்தின் கீழ் 1990 வரை இயங்கியது. அந்த நாட்களில், 1,200 தொழிலாளர்கள் உப்பளத்தில் வேலை செய்து வந்தனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பு அரசாங்கத்தின் இனவாத யுத்த காலத்தில், உப்பளம் இயங்க முடியாமல் மூடப்பட்டது. பிரதான இராணுவ முகாம் ஒன்று மூலோபாய இடமான ஆனையிறவில் அமைக்கப்பட்டதுடன் உப்பள தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்து வறுமையில் வாடினர். பின்னர் புலிகள் இந்த முகாமைக் கைப்பற்றி சில ஆண்டுகள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் உப்பளத்தை இயக்கினர். பின்னர் இந்த உப்பளம் கைவிடப்பட்டு மோசமாக அழிந்து போனது.
புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், 2010ல் இந்த உப்பளம் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் பகுதியாக இயங்கத் தொடங்கியது. 21 நிரந்தர தொழிலாளர்கள் 53 தற்காலிக தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்காலிக தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. மழைக்காலம் வரும்போது தற்காலிக தொழிலாளர்கள் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் வரை இடைநிறுத்தப்படுவர்.
நிதியமைச்சர், 2016 நவம்பரில் தமது வரவு-செலவுத் திட்ட உரையில் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார். இது இந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட்டது.
1990க்கு முன்னதாக, ஆனையிறவு உப்பளத்தை சுற்றியுள்ள பகுதியில் இருந்த மக்களே இந்த நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்தனர். யுத்தத்தின் காரணமாக தங்கள் வேலைகளை இழந்த அவர்கள், போருக்கு பின் உப்பளம் செயல்பட தொடங்கிய போது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். அப்பகுதி தொழிலாளர்களும் இளைஞர்களும், தனியார் உரிமையாளர்கள் தங்கள் இலாபத்தை அதிகரிக்க தொழிலாளர்கள் எண்ணிக்கையையும் சம்பளத்தையும் குறைப்பர் என்று நியாயபூர்வமாக அஞ்சுகின்றனர்.
தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட மனு ஒன்றும் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், வர்த்தக வணிக அமைச்சர், வட மாகாண ஆளுநர், வட மாகாண முதலமைச்சர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கும் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு பதிலும் இல்லை.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உப்பளத்தின் உள்கட்டமைப்பை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) உதவியை கோரியுள்ளார். அது உப்பளத்தை விற்பதற்கான ஏவுதளமாக இருக்க முடியும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் வெகுஜனங்களை பிரதிநிதித்துவம் செய்வதாக போலியாக கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்களுக்கு ஒரு மூடி மறைப்பை அளித்து வருகிறது. பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், "உப்பள தனியார்மயத்தை நிறுத்தக்" கோரியும் "அவர்கள் கூட்டுத்தாபன பொறுப்பு கட்டுப்பாட்டின் கீழ் வந்தால் நாம் அவர்களை நன்றாக பராமரிக்க முடியும்" எனக் கூறியும் தனியார்மய பிரச்சினையை மூடி மறைத்தார்.
எனினும், பெரும் வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவித்து வரும் அரசாங்கம், இதுபோன்ற போலி அழைப்புக்களுக்கு செவி சாய்க்க போவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாசாங்கு செய்துகொண்டு அரசாங்கத்துக்கு அதன் முழு பாதுகாப்பையும் வழங்கும் அதேவேளை, அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த தயாரிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்துக்கு வாக்களித்தனர்.
வடக்கில் விற்பனைக்கு சாத்தியமான ஏனைய வளங்களில் பெரும்பாலும் யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலை, காங்கேசன்துறை, காரைநகர் சீமெந்து தொழிற்சாலைகளும் உள்ளன.
வெள்ளைச்சாமி செல்வநாயகம் (59), தான் 1985 ஆம் ஆண்டில் உப்பளத்தில் சேர்ந்து, யுத்தத்தின் காரணமாக வேலையை இழந்ததாக உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறினார். "எனக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். நான் காய்கறி விவசாயத்தின் மூலம் இப்போது பிழைக்கின்றேன். மூன்று பிள்ளைகள் இன்னும் என்னில் தங்கியுள்ளனர். 2004ல் தான் நான் என் ஊழியர் சேமலாப நிதி எனக்கு கிடைத்தது."
"உப்பளம் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட போவதாக தெரிய வந்தது. என் கிராமத்தில் பலர் உப்பளத்தில் வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அது தனியார் மயமாக்கப்பட்டால் சாத்தியமாகாது," என அவர் மேலும் வலியுறுத்தினார்.
உப்பளத்தில் நாட்கூலி வேலை செய்யும் இளைஞனான கருணா (32) தெரிவித்ததாவது: "நான் 10 ஆம் வகுப்பு வரை படித்து பின்னர் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு இரண்டு மாதங்கள் 1,000 ரூபா வழங்கப்பட்டது. மழைக்காலம் தொடங்கிய போது ஏனைய எட்டு பேருடன் ஆட்குறைப்பு செய்யப்பட்டது." மீண்டும் உப்பளம் தன்னை அழைக்கும் வரை காத்திருந்து, தனியார் உரிமையாளரின் கீழ் வந்தால் நிறுவனத்தில் தனது வேலையை தொடர்வது பற்றி அவரது சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதாக அவர் கூறினார்.
ஓய்வுபெற்ற உப்பள தொழிலாளி வி. தியாகராஜா (60), மன்னார் இயக்கச்சியைச் சேர்ந்தவர். அவர் 1975ல் உப்பளத்தில் சேர்ந்து 1990 வரை வேலை பார்த்தார். “போர் தொடங்கிய போது சுமார் 1500 ஊழியர்கள் அங்கு வேலை செய்தனர். உப்பளத்தில் பணிபுரிந்த மன்ஸார் கிராம மக்களில் 60 சதவீதம் பேர், மூடுவிழாவால் தங்கள் வேலைகளை இழந்துவிட்டனர். மீண்டும் உப்பளம் தொடங்கினால் எங்களுக்கு வேலைகள் கிடைக்கும் என்ற கனவுடன் வசித்து வந்தோம். உப்பளம் தனியார் கம்பனிக்கு விற்கப்பட்டால் எங்களது கிராம மக்களின் நம்பிக்கை தகர்ந்து போகும். அதனாலேயே நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்," என அவர் கூறினார்.