Print Version|Feedback
French ex-president Sarkozy indicted over 2012 campaign finances
பிரெஞ்சு முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசி, 2012 பிரச்சார செலவு விவகார குற்ற வழக்கில் சேர்க்கப்பட்டார்
By Stéphane Hugues
10 February 2017
பழமைவாத முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, 2012 இல் பிரெஞ்சு ஜனாதிபதியாக மறுதேர்வு ஆவதற்கான அவரது தோல்வியடைந்த முயற்சியோடு சம்பந்தப்பட்ட, "சட்டவிரோத தேர்தல் பிரச்சார செலவு" வழக்கில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் "பிக்மாலியோன்" (Bygmalion) மோசடி என்றழைக்கப்படும் விசாரணையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மோசடியில், சார்க்கோசியினது பிரச்சார பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்காக அமர்த்தப்பட்ட, அப்பெயரைக் [பிக்மாலியோன்] கொண்ட அந்நிறுவனம், அப்பிரச்சாரத்தின் கடைசி மாதங்களில் சுமார் 20 மில்லியன் யூரோவை சார்க்கோசியின் கட்சியான UMP (இப்போது இது Les Republicans, LR என்று அழைக்கப்படுகிறது) இடமிருந்து நேரடி கட்டணமாக வசூலித்திருப்பது கண்டறியப்பட்டது.
சார்க்கோசியின் தேர்தல் பிரச்சாரம் அதன் சட்டபூர்வ செலவு வரம்பான 22.5 மில்லியன் யூரோவை எட்டி, அதற்கும் அதிகமாக சென்ற பின்னர் இந்த கட்டண வசூல் தொடங்கி இருந்தது. சார்க்கோசியின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் யதார்த்தத்தில் நடந்தேயிராத வெவ்வேறு தலைப்பிலான கற்பனையான கூட்டங்களுக்காக UMP க்கு கட்டணம் விதித்ததன் மூலமாக, சார்க்கோசி பிரச்சார கணக்கு செலவினங்களாக 20 மில்லியன் யூரோவை சேர்க்க அவர் பிரச்சாரக் குழுவிற்கு சாத்தியமாகி இருந்தது.
செவ்வாயன்று, சார்க்கோசியின் வழக்கறிஞர், Thierry Herzog, இக்குற்றச்சாட்டுக்கள் மீது பல ஆண்டுகளுக்கு இல்லையென்றாலும், பல மாதங்களுக்கு இழுக்கக்கூடிய சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கான பிரேரணையை கொண்டு வந்து, இக்குற்ற வழக்குப்பதிவை செல்லாதாக்கும் நகர்வுகளை தொடங்கினார்.
சார்க்கோசி மீதான குற்ற வழக்குப்பதிவானது, மே 2017 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் LR ஐ சுற்றி தீவிரமடைந்து வரும் மோசடிகள் மற்றும் சட்டபூர்வ உள்கட்சி சண்டைகளது அலையின் பாகமாக உள்ளது. நவம்பரில், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில், LR வேட்பாளர் ஆவதற்காக பிரான்சுவா ஃபிய்யோன், சார்க்கோசி மற்றும் முன்னாள் பிரதம மந்திரி அலன் யூப்பே ஆகிய இரண்டு முன்னணி LR வேட்பாளர்களைத் தோற்கடித்தார். ஆனால், மூன்று வாரங்களுக்கு முன்னர், நையாண்டி வாரயிதழான Le Canard Enchainé, ஃபிய்யோனின் மனைவி மற்றும் பிள்ளைகள் வேலைக்கே வராமல் வேலையில் நியமித்திருந்தார்கள் என்று அம்பலப்படுத்தி, ஒரு குண்டைத் தூக்கி போட்டது. குறிப்பாக, ஃபிய்யோனின் மனைவி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உத்தியோகபூர்வமாக பணியில் அமர்த்தப்பட்டு, சுமார் ஒரு மில்லியன் யூரோவிற்கும் அதிகமாக வருவாய் ஈட்டியிருந்தார். ஃபிய்யோன் மீதான கருத்துக்கணிப்பு முடிவுகள் 35 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக சரிந்துள்ளது, அவர் சட்டபூர்வ விசாரணையின் கீழ் உள்ளார், இது பிரெஞ்சு நாடாளுமன்ற சம்பளங்களில் மோசடி செய்ததற்காக ஒரு குற்றவழக்கு பதிவில் போய் முடியலாம்.
சார்க்கோசியின் வழக்கு மற்றும் LR உடன் சம்பந்தப்பட்ட பல மில்லியன் யூரோ ஏனைய ஊழல் மோசடிகளின் ஓர் அலை போலவே, இந்த வழக்கும், வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் பாரிய பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம் இருந்து முதலாளித்துவ அரசியல்வாதிகளை பிரிக்கும் வர்க்க இடைவெளியை அம்பலப்படுத்தியது.
ஃபிய்யோன் இந்த மோசடியிலிருந்து விடுவித்துக்கொள்ள தற்போது முயன்று வருகிறார் என்றாலும், அவர் மதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது: ஒவ்வொரு நாளும், அவர் பிரச்சாரம் செய்கையில், இடையூறு செய்பவர்களையும் மற்றும் போராட்டக்காரர்களையும் அவர் எதிர்கொள்கிறார். அவர் செல்வாக்கு விகிதம் இப்போதைய இதே மட்டத்தில் இருந்தால், முதல் சுற்றிலேயே அவர் தோற்றுப் போகக்கூடும். அதற்கும் மேலாக, அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டால் —இன்னமும் அதற்கான ஒரு தெளிவான வாய்ப்பு இருக்கின்ற நிலையில்— ஜனாதிபதி போட்டியில் இருந்து அவர் வெளியேறி விடுவதாக ஃபிய்யோன் அவரே ஏற்கனவே அறிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் LR அதன் மதிப்பைப் பேணுவதற்கு போராடி வருகின்ற நிலையில், ஒரு 'மாற்று திட்டத்தை' (Plan B) உருவாக்க LR அரசியல்வாதிகளிடையே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்துவரும் பெரும்பிரயத்தன விவாதங்கள் குறித்து வதந்திகள் நிலவுகின்றன. LR ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு போட்டியில் இரண்டாம் இடத்திற்கு வந்த அலன் யூப்பே, ஃபிய்யோனுக்கு பதிலாக அவர் உள்நுழைய விரும்பவில்லை என்பதை பல முறை குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஏறத்தாழ நிச்சயமான காரணம், 1980 கள் மற்றும் 1990 களில் ஜாக் சிராக் நகரசபை தலைவராக இருந்த போது, பாரீஸ் நகரசபையில் வேலைக்கே வராமல் வேலையில் இருந்ததாக சட்டவிரோதமாக காட்டியதற்காக 2003 இல் ஏற்கனவே குற்றவாளியாக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சார்க்கோசிக்கு எதிரான குற்றவழக்கு பதிவு அச்சுறுத்துகின்ற நிலையில், ஃபிய்யோனும் வெளியேற வேண்டியிருந்தால், அவருக்கு சாத்தியமான பிரதியீடாக மற்றொரு பிரதான LR பிரபலம் என்பது இப்போதைக்கு நீண்டகால சட்ட குழப்பமாகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டுமா என்பது மீதான விவாதமே 4 இல் இருந்து 14 மாதங்கள் எடுக்கும். முதல் மேல்முறையீடு இன்னும் 4 இல் இருந்து 6 மாதங்கள் எடுக்கும். இந்நீதிமன்றத்தில் குற்றவழக்கு பதிவு செய்த முடிவு உறுதி செய்யப்பட்டாலும், Herzog அத்தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யலாம். இரண்டாவது மேல்முறையீடு நடைமுறையானது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Cassation) விசாரணைக்கு வரும், அது 6 இல் இருந்து 8 மாதங்கள் எடுக்கலாம். அந்த நீதிமன்றமும் குற்றவழக்கு பதிவை உறுதிப்படுத்துகிறது என்றால் மட்டுமே, பின்னர் சார்க்கோசி வழக்கிற்குள் இழுக்கப்படுவார்.
சார்க்கோசிக்கு எதிரான வழக்கு நடைமுறைகளில் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் நிர்வாகம் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை சிறிதே சந்தேகிக்க முடியும். நிர்வாகத்துறையிடம் இருந்து நீதித்துறை சுதந்திரம் மிகவும் பலவீனமாக இருப்பதாக பரவலாக அறியப்படும் ஒரு நாட்டில், ஒரு முன்னணி LR அரசியல்வாதியும் மற்றும் ஃபிய்யோனுக்கு சாத்தியமான மாற்றீடாக உள்ளவருமான ஒருவர் நீதிமன்ற களத்தில் இழுத்தடிக்கப்படும் சாத்தியக்கூறை முகங்கொடுக்கிறார் என்பது குறித்து ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) மகிழ்ச்சியின்றி இருக்காது என்பதை ஒருவரால் இடர்பாடின்றி ஊகிக்க முடியும்.
எவ்வாறிருப்பினும் நீதித்துறையால் சார்க்கோசிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்த வழக்கு மிகவும் இரகசியமானது அல்ல. பொது மேலாளர் Éric Cesari மற்றும் பிரச்சாரக்குழுவின் துணை மேலாளர் Jérôme Lavrilleux போன்ற LR தலைவர்கள் மற்றும் பிக்மாலியோன் நிர்வாகிகள் உட்பட ஏற்கனவே பதிமூன்று பேர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கில், மூன்று விசாரணை நீதிபதிகளில் ஒருவரான Serge Tournaire மட்டுமே, சார்க்கோசி மீதான குற்றவழக்கு பதிவில் கையெழுத்திட்டார்.
Tournaire அவரது குற்றப்பத்திரிகையில், நிஜமான பிரச்சார செலவு நிதிகளை மறைப்பதற்காக பொய் கணக்குகளை உருவாக்க சார்க்கோசி LR பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டார் என்றோ, அல்லது அதில் அவர் பங்குபற்றி இருந்தார் என்றோ, அல்லது அந்த மோசடி சூழ்ச்சிகள் அவருக்கு தெரிந்திருந்தது என்றோ வழக்கு விசாரணை ஸ்தாபிக்கவில்லை என்று ஒப்புக் கொள்கிறார். அதற்கு மாறாக, Tournaire வாதிடுகையில், சார்க்கோசி ஏனைய LR மற்றும் பிக்மாலியோன் நிர்வாகிகளது சட்டவிரோத குற்றகர நடவடிக்கைகளில் இருந்து ஆதாயம் அடைந்திருந்தார் என்று வாதிடுகிறார். ஆகவே Tournaire இன் கருத்துப்படி, அவர் [சார்க்கோசி] சட்டப்பூர்வ கடமைபாடுகளுக்கு பொறுப்பாகிறார்.
இந்த விவகாரத்தை நீதிமன்றங்களுக்கு அனுப்புவதா வேண்டாமா என்பதில் நீதிபதிகள் பிளவுபட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரிக்கும் ஏனைய இரண்டு நீதிபதிகள், Renaud Van Ruymbeke மற்றும் Roger Le Loire, அந்த குற்றப்பத்திரிக்கையில் கையெழுத்திடவில்லை. செவ்வாயன்று முன்னெடுக்கப்பட்ட Herzog இன் மேல்முறையீடு, நீதிபதிகள் அனைவரும் கையெழுத்திடவில்லை என்றால் அந்த குற்றப்பத்திரிக்கையைச் சவாலுக்கு உட்படுத்தலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில் உள்ளது.
சார்க்கோசி அவரது 2012 பிரச்சார செலவுகள் மீதான எந்தவொரு குற்றப்பத்திரிக்கையையும் உடனடியாக எதிர்க்கலாம் என்று ஆரம்பத்திலிருந்தே Herzog கூறி வந்தார். சார்க்கோசி நனவுபூர்வமாக அவரது பிரச்சார செலவு அளவைத் தாண்டி செலவு செய்தார் என்பதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதை வழக்கறிஞர்களின் அலுவலகம் எழுத்துபூர்வமாகவே அங்கீகரித்துள்ளது நல்ல செய்தியே என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
எவ்வாறிருப்பினும் LR ஐ பொறுத்த வரையில், இந்த நெருக்கடியும் மற்றும் சார்க்கோசி மீதான ஒரு அச்சுறுத்தலான குற்றவழக்கு பதிவின் தாக்கமும் 2017 தேர்தல்களையும் கடந்து செல்லும்.
ஜனாதிபதி தேர்தல்களை தொடர்ந்து உடனடியாக சட்டமன்ற தேர்தல்கள் வரவிருக்கின்றன, கடந்த காலங்களில், ஜனாதிபதி தேர்தல்களில் நல்ல செயல்பாட்டைக் காட்டிய வேட்பாளர்கள், சட்டமன்றத்தில் கட்சி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சட்டமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தனர். அனைத்திற்கும் மேலாக பிக்மாலியோன் மோசடி, கட்சியை கடனில் மூழ்கடித்துள்ளது என்பதோடு, கட்சியின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு மேற்கொண்டு கடன்கள் வாங்க அதை நிர்பந்திக்கக்கூடும்.