Print Version|Feedback
Pentagon chief warns of “arc of instability” at Munich security conference
முனீச் பாதுகாப்பு மாநாட்டில் பென்டகன் தலைவர் "ஸ்திரமின்மையின் வெடிப்பு-" குறித்து எச்சரிக்கிறார்
By Bill Van Auken
18 February 2017
ஓய்வூபெற்ற கடற்படை தளபதியும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலருமான “போர் வெறியர்" (Mad Dog) ஜேம்ஸ் மாட்டிஸ் ஆல் வருடாந்தர முனீச் பாதுகாப்பு மாநாட்டில் வழங்கப்பட்ட ஓர் உரையானது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை அடுத்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏற்பட்டுள்ள கூர்மையான பதட்டங்களைக் சாந்தப்படுத்த வடிவமைக்கப்பட்டதாக தெரிந்தது.
அமெரிக்கா மற்றும் நேட்டோ இராணுவவாதத்தின் கூடுதல் தீவிரமயமாக்கலை நியாயப்படுத்தும் நோக்கில், மாட்டிஸ் அம்மாநாட்டில் ஓர் எச்சரிக்கை விடுத்தார். “நேட்டோவைச் சுற்றியும் மற்றும் அதற்கு அப்பாலும் ஸ்திரமின்மையின் வெடிப்பு கட்டமைந்து வருகின்ற நிலையில், நமது தேசங்களின் சமூகம் பன்முகப்பிலும் அச்சுறுத்தலின் கீழ் இருப்பதை நாம் அனைவரும் காண்கிறோம்,” என்று, சுமார் 70 பாதுகாப்புத்துறை அமைச்சர்களையும், அத்துடன் பல அரசு தலைவர்களையும் ஒருங்கிணைத்திருந்த அம்மாநாட்டில் அவர் தெரித்தார். துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சனியன்று அம்மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
“ஸ்திரமின்மையின் வெடிப்பு" என்ற பதம், மத்திய கிழக்கு, வட ஆபிரிக்காவும், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக அமெரிக்க தாக்குதலுக்கான பல்வேறு இலக்குகளை உள்ளடக்கியதாகும்.
“அமெரிக்க பாதுகாப்பானது எப்போதுமே ஐரோப்பாவின் பாதுகாப்புடன் பிணைந்துள்ளது,” என்று அறிவிக்குமளவிற்குச் சென்ற மாட்டிஸ், “எனக்கு ஐரோப்பாவில் ஜேர்மனியின் தலைமைத்துவம் மீது மிகப்பெரும் மரியாதை உண்டு,” என்றார்.
அதேநேரத்தில், முன்னர் புரூசெல்ஸின் நேட்டோ மாநாட்டில் அவர் கூறிய கருத்துக்களையும் எதிரொலித்தார். கூட்டணியில் உள்ள ஏனைய அங்கத்துவ நாடுகள் அவற்றின் இராணுவச் செலவுகளை அதிகரிக்கவில்லை என்றால் வாஷிங்டனும் கூட்டணிக்கான அதன் ஆதரவை "மிதமாக்கும்" என்றவர் அப்போது எச்சரித்திருந்தார். “உலகின் இந்த சிறந்த கூட்டணியிலிருந்து ஆதாயம் அடைபவர்கள் அனைவரும், அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான செலவுகளில் அவர்களின் விகிதப்படியான பங்கை செலுத்த வேண்டுமென்பது ஒரு நியாயமான கோரிக்கையே,” என்றார்.
பென்டகன் தலைவரது கருத்துக்கள், பெரும்பாலும் முந்தைய நிர்வாகம் பின்பற்றிய அமெரிக்க வெளியுறவு கொள்கையின் தொடர்ச்சியாக தெரிந்தது என்பதோடு, இக்கருத்துக்கள் நேட்டோவை "வழக்கற்று போனதாக" கூறிய ட்ரம்பின் சொந்த வாய்சவடால் தாக்குதல்களுடனும் மற்றும் ஜேர்மனி அதன் சொந்த நலன்களுக்காக பயன்படுத்தும் ஒரு "கூட்டுக்குழுமம்" என்று ஐரோப்பிய ஒன்றியத்தை அவர் முத்திரை குத்தியதுடனும் முரண்பட்டன.
ரஷ்யாவை நோக்கிய அமெரிக்க கொள்கை மீது அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்திற்குள் கடுமையான உள்பகை சண்டை நடந்து வருவதற்கு இடையே மாட்டிஸின் இந்த பேச்சு வந்தது. ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃபிளின் அவர் பதவியேற்பதற்கு முன்னரே அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதருடன் தொலைபேசியில் உரையாடியதற்காக இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதுடன் அந்த மோதல் முன்னுக்கு வந்திருந்தது.
மாட்டிஸூம் சரி, ஜேர்மனியின் பொண் (Bonn) நகரில் நடக்கவுள்ள ஜி-20 நாடுகளது வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கின்ற முன்னாள் ExxonMobil தலைமை செயலதிகாரி றெக்ஸ் ரில்லர்சனும் சரி, இருவருமே, வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு இடையிலான பதட்டங்களைக் கணிசமானளவிற்கு குறைக்கும் ஒரு உடனடி சமரசத்திற்கு வாய்ப்பில்லை என்பதை சமிக்ஞை செய்துள்ளனர்.
மாட்டிஸ் முனீச்சில் பேசிக் கொண்டிருக்கையிலேயே கூட, அமெரிக்க-நேட்டோவின் கிழக்கு ஐரோப்பிய ஆயத்தப்படுத்தலின் பாகமாக பல்கேரியாவிலும் மற்றும் ரஷ்ய எல்லைகளிலும் அமெரிக்க இராணுவம் நிலைநிறுத்தப்பட்டு கொண்டிருந்தன. இப்போது அவற்றில் 4,000 அமெரிக்க துருப்புகளும் அத்துடன் பிரிட்டன், ஜேர்மனி மற்றும் ஏனைய நேட்டோ கூட்டாளிகளின் படைகளும் உள்ளடங்கி உள்ளன. இந்த ஆயத்தப்படுத்தல், ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்ததற்குப் பின்னர் இருந்து தொடர்ந்து இடைவிடாது நடந்து வருகிறது.
பென்டகன் தலைவரது உரையை தொடர்ந்து அவரின் ஜேர்மன் சகாவான பாதுகாப்புத்துறை அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயெனின் கருத்துக்கள் வந்தன. அது ஐரோப்பா குறித்து ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வரும் வாய்சவாடலை ஓரளவுக்கு குறிவைத்த விமர்சனங்கள் உள்ளடங்கி இருந்தன.
“ஐரோப்பா மற்றும் நேட்டோ பற்றிய உங்கள் குரல், எங்கள் கண்டத்தின் நல்லிணக்கத்தை நேரடியாக பாதிக்கும் என்பது நமது அமெரிக்க நண்பர்களுக்கு நன்கு தெரியும்,” என்று முனீச் பாதுகாப்பு மாநாட்டில் வொன் டெர் லெயென் தெரிவித்தார். ரஷ்யா உடனான சமசரத்தை நோக்கிய வாஷிங்டனின் எந்தவொரு நகர்வுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கும் விதத்தில், அப்பெண்மணி கூறுகையில், “நமது மதிப்புகள், நமது எல்லைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மீது பகிரங்கமாக கேள்வியெழுப்புபவர்களுக்கும் கூட்டாளிகளுக்கும் ஒரே மாதிரியான கொள்கையை ஏற்க முடியாது,” என்றார்.
ஏழு முஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் மீதான ஒரு பயணத் தடையை திணிக்கும், சிதைந்து போன ட்ரம்பின் முயற்சி குறித்து ஒரு மறைமுக தாக்குதலாக இருக்கும் ஒன்றில், ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி அம்மாநாட்டில் கூறுகையில்: “இந்த சண்டை, இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு முகப்பாக மாறிவிடக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், மேற்கொண்டும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை மட்டுமே வளர்த்துவிடும் வகையில், நமக்குநாமே ஒரு ஆழமான சவக்குழியை வெட்டும் அபாயம் ஏற்படும்,” என்றார்.
முனீச் மாநாட்டுக்கு முன்னதாக, உக்ரேன் மற்றும் கிரிமியா விவகாரத்தின் தடையாணைகளுக்கு கீழுள்ள அமெரிக்க நிலைப்பாட்டை மீளவலியுறுத்தி மாட்டிஸ் குறிப்பிடுகையில், மாஸ்கோ "அதனை நிரூபித்துக் காட்டாத" வரையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே அங்கே எந்தவித இராணுவ கூட்டுறவும் இருக்காது என்றார்.
ரில்லர்சனும் அதேமாதிரியான ஒரு குறிப்பை வெள்ளியன்று ஒலித்தார், அண்மித்து ஆறாண்டுகளுக்கு முன்னர் சிஐஏ-முடுக்கிவிட்ட ஆட்சி மாற்ற போர் தொடங்கியதற்கு பின்னர் இருந்து, சிரியா சம்பந்தமாக வாஷிங்டன் பின்பற்றிய பொதுவான மூலோபாயத்திலிருந்து எந்தவொரு விலகலையும் அவர் வெளிப்படையாக நிராகரித்தார். இஸ்லாமிய "கிளர்ச்சியாளர்களை" ஆதரிக்கும் பிரான்ஸ், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பிரிட்டன் உட்பட ஏனைய பிரதான ஆதரவு நாடுகளின் அவரது சகாக்களை சந்தித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் வலியுறுத்துகையில், மாஸ்கோ பஷர் அல்-அசாத் அரசாங்கத்திடம் இருந்து தன்னைத்தானே தூர விலக்கிக் கொண்டு, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ஆயுதமேந்த செய்துள்ள மற்றும் ஆதரித்துள்ள அல்-கொய்தா இணைப்பு கொண்ட கிளர்ச்சியாளர்கள் மீதான சட்டஅங்கீகாரத்தை ஏற்காத வரையில், சிரியாவில் ரஷ்யாவுடன் எந்த இராணுவ கூட்டுறவும் இருக்காது என்றார்.
சிரியா குறித்து அடுத்த வியாழனன்று ஜெனீவாவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் அமெரிக்க-தலைமையிலான பேச்சுவார்த்தைகளுக்கும் ரில்லர்சன் அவரது ஆதரவை மீளவலியுறுத்தினார். ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ரஷ்ய அரசாங்கமோ, கஜகிஸ்தான் தலைநகர் அஸ்தானில், ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரானால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்க வாஷிங்டனை அழைத்திருந்தது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் வெறுமனே உள்நாட்டு தூதரை மட்டும் ஒரு பார்வையாளராக அனுப்பியது.
புரூசெல்ஸ், பொண் (Bonn) மற்றும் முனீச்சில் ரில்லர்சன் மற்றும் மாட்டிஸின் தலையீடுகளானது, தெளிவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே அதிகரித்துள்ள பதட்டங்களை தணிவிப்பதை நோக்கமாக கொண்டிருந்தன என்றாலும், வாஷிங்டன் ஆளும் வட்டாரங்களுக்குள் சீறிக் கொண்டிருக்கும் கோபத்தின் கடுமையான தன்மை, அரிஜோனா குடியரசு கட்சியாளரும் மற்றும் செனட் ஆயுத சேவைகள் குழுவின் தலைவருமான செனட்டர் ஜோன் மெக்கெயின் வழங்கிய ஓர் அசாதாரண உரையில் வெளிப்பட்டது. உள்ளே புகைந்து கொண்டிருக்கும் இந்த மோதலுக்கும், பரந்த பெரும்பான்மை மக்களின் ஜனநாயக அல்லது சமூக உரிமைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மாறாக இது எதிர்விரோத அமெரிக்க போர் மூலோபாயங்களால் உந்தப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தை, அவர் கட்சியே மேம்போக்காக ஆதரிக்கின்ற நிலையில், அது “குழப்பத்தில்" இருப்பதாக வர்ணித்த மெக்கெயின், அது "உலகளாவிய மதிப்புகளில் இருந்து அதிகரித்தளவில் விலகி செல்வதன் மற்றும், இரத்தம் மற்றும் இனம் மற்றும் வகுப்புவாதத்தின் பழைய உறவுகளை நோக்கி செல்வதன்" பாகமாக இருப்பதாக தெரிவித்தார்.
ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரது நிர்பந்த இராஜினாமாவைக் குறிப்பிட்டு மெக்கெயின் அவரது முனீச் ஆதரவாளர்களிடையே கூறுகையில், “பல விதங்களில் இந்த நிர்வாகம் குழப்பத்தில் சிக்கியுள்ளது மேலும் அவர்கள் நிறைய வேலை செய்ய செய்ய வேண்டியுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் ஏதோவொன்று ஃபிளின் பிரச்சினையில் வெளிப்படையாக இருப்பதாக நான் நினைக்கிறேன்,” என்றார்.
ட்ரம்பின் "முதலிடத்தில் அமெரிக்கா" வாய்சவடாலுக்கும் மற்றும் அவரது உயர்மட்ட ஆலோசகர்கள் முன்னெடுக்கும் கொள்கைகளுக்கும் இடையிலான ஒரு வேறுபாட்டை வரையறுத்து மெக்கெயின் தொடர்ந்து கூறுகையில், “அமெரிக்கா உலகளாவிய தலைமையின் கவசத்தை இழந்து வருகிறது என்று ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் ஓர் ஆழ்ந்த கவலை நிலவுகிறது என்பது எனக்கு தெரியும். என்னைப் பொறுத்த வரையில் மட்டுமே நான் பேச முடியும், ஆனால் இவ்வாரயிறுதியில் இங்கிருந்து முனீச்சிற்கு பயணிக்க போதுமானளவிற்கு கவனமெடுக்கும் அமெரிக்க தலைவர்கள் அனைவரிடம் இருந்தும் இந்த சேதியை நீங்கள் செவி கொடுக்கலாம் என்று என்னால் நம்பவியலாது. நீங்கள் இன்று இந்த சேதியை பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மாட்டிஸிடம் இருந்து கேட்க முடியாது. துணை ஜனாதிபதி மைக் பென்ஸிடம் இருந்து இந்த சேதியைக் கேட்க முடியாது. உள்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜோன் கெல்லியிடம் இருந்து இச்செய்தியை நீங்கள் செவியுற முடியாது,” என்றார்.
ரஷ்யாவிற்கு எதிரான ஆக்ரோஷத்திற்கு வாஷிங்டனில் உள்ள மிகவும் கூச்சலிடும் ஆலோசகர்களில் ஒருவரான மெக்கெயின் கடந்த மாதம் சர்ச்சை ஒன்றின் மையத்தில் இருந்தார், அதில் அவர் மாஸ்கோ மற்றும் ட்ரம்ப் மற்றும் அவர் பிரச்சாரக்குழுவிற்கு இடையே இரகசிய தொடர்புகள் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆவணங்களை அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்கு அனுப்பினார்.
இத்தகைய நடவடிக்கைகளும், அத்துடன் அவரது சொந்த கட்சியால் அமர்த்தப்பட்ட ஜனாதிபதி மீது முனீச்சின் சர்வதேச மாநாட்டில் பகிரங்க தாக்குதலும், நடைமுறையளவில் முன்னொருபோதும் நடந்திராதது. இவை, ரஷ்யாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்கள் மற்றும் ஆக்ரோஷத்தின் நீடித்த தீவிரப்படலில் இருந்து பின்வாங்குதவற்கான ட்ரம்ப் நிர்வாகத்தினது எந்தவொரு நகர்விற்கு எதிராகவும், அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்குள் நிலவும் ஆழ்ந்த விரோதங்களைப் பிரதிபலிக்கின்றன. ட்ரம்ப் ஒரு மாற்று கொள்கையை முன்னெடுத்துள்ளபோதும், அது உலகளாவிய இராணுவவாதத்திலிருந்து ஒரு பின்வாங்கல் கிடையாது, மாறாக அது முதலில் ஈரானுக்கு எதிரான போருக்குத் தயாரிப்பு செய்வதும் மற்றும் சீனாவுடனான அமெரிக்க மோதலை தீவிரப்படுத்துவதையும் நோக்கிய ஒரு தந்திரோபாய மாற்றமாகும்.