Print Version|Feedback
US drumbeat for action against North Korea
வடகொரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முரசுகொட்டுகிறது
By Peter Symonds
14 February 2017
ஞாயிறன்று வடகொரிய ஆட்சி ஒரு புதிய மத்திய-தூர பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்துப் பார்த்ததை அடுத்து, ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்காலம் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் குறைந்த காலத்தில், வட கொரியா ஒரு முக்கிய மோதல் புள்ளியாக உருவெடுக்கிறது. அமெரிக்காவுக்கும் வடகொரியாவின் கூட்டாளியான சீனாவுக்கும் இடையில், வர்த்தகம் தொடர்பாய், பணமதிப்புக் கொள்கை தொடர்பாய், தைவான் மற்றும் தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல்களிலான பிராந்திய மோதல்கள் ஆகியவை தொடர்பாய் பதட்டங்கள் பெருகி வந்ததன் மத்தியில் இந்த ஏவுகணை சோதனை நடந்திருக்கிறது.
இந்த ஏவுகணை சோதனை, ஃபுளோரிடாவில் ஜனாதிபதியின் Mar-a-Lago மாளிகையில் ட்ரம்பை காணச் சென்றிருந்த ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேயிடம் இருந்து உடனடியான கண்டனத்தைப் பெற்றது. ஞாயிறன்று இரவு நடத்தப்பட்ட ஒரு இணைந்த செய்தியாளர் சந்திப்பில், அபே இந்த ஏவுகணை பரிசோதனையை “முற்றிலும் சகித்துக் கொள்ள முடியாதது” என்று அழைத்தார். அமெரிக்கா, “ஜப்பான் என்ற அதன் மாபெரும் கூட்டாளியின் பின்னால் 100 சதவீதம்” நின்று கொண்டிருப்பதாய் ட்ரம்ப் அறிவித்தார். வட கொரியா பிரச்சினையை விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கூட்ட அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா அழைப்பு விடுத்திருக்கின்றன.
வட கொரியாவுக்கு எதிராக கூடுதல் மூர்க்கமான நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளிடம் இருந்து ட்ரம்புக்கு அழுத்தம் வந்து சேர்ந்திருக்கிறது. “ட்ரம்புக்கு சவால் விடும் விதமாக, வட கொரியா முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை” (நியூ யோர்க் டைம்ஸ்), “வட கொரியா ஏவுகணை சோதனை ட்ரம்புக்கான பரிசோதனையாக அமைகிறது” (வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்), மற்றும் “வடகொரியாவின் அணுஆயுத அபிலாசைகள் ட்ரம்புக்கு தீர்மானகரமான பிரச்சினையாக ஆகவிருக்கின்றன” (புளூம்பேர்க்) ஆகிய தலைப்புச் செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டவாறாய், ஊடகங்கள் பெரும்பாலும் இந்த ஏவுகணை சோதனையை புதிய நிர்வாகத்திற்கான ஒரு முக்கிய சோதனையாய் சித்தரிக்கின்றன.
கடந்த ஆண்டில் 24 ஏவுகணை சோதனைகளையும் இரண்டு அணுஆயுத சோதனைகளையும் நடத்தியிருக்கக் கூடிய வடகொரியாவின் மீதான கவனக்குவிப்பானது கடந்த ஆறுமாத காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ ஸ்தாபகத்திற்குள்ளாக நடைபெற்று வந்திருக்கக் கூடிய தீவிரமான விவாதங்கள் மற்றும் மோதல்களைப் பிரதிபலிக்கிறது. அமெரிக்கக் கண்டத்திற்கு எதிராய் ஒரு அணுஆயுத தாக்குதலை தொடுக்கும் திறனுடைய கண்டம்விட்டுக் கண்டம் தாவும் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை (ICBM) கட்டியெழுப்பும் தூரத்தை வடகொரியா நெருங்கி விட்டிருக்கிறது என்பது அங்கே ஒரு முக்கிய கவலையாக உள்ளது.
ஜனாதிபதி ஒபாமா, அச்சமயத்தில் ஜனாதிபதியாக தேர்வாகியிருந்த ட்ரம்ப்பிடம் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்திருந்த சமயத்தில், வடகொரியா புதிய நிர்வாகத்தின் திட்டநிரலில் முதல்வரிசையில் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. “மூலோபாய பொறுமை” என்று குறிப்பிடப்பட்ட, தண்டிக்கும் பொருளாதாரத் தடைகள் அவற்றுடன் சேர்த்து வடகொரியாவை சீனா கண்டிப்பான முறையில் அணுஆயுதத்தை கீழேபோடச் செய்யவைக்க அதற்கு அழுத்தமளிப்பது, என்ற வடகொரியாவை நோக்கிய ஒபாமாவின் சொந்தக் கொள்கையே பலனளிக்காத ஒன்றாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்திருக்கிறது.
ட்ரம்ப் வட கொரியாவுக்கு மிகவும் மூர்க்கத்துடன் எதிர்வினையாற்றியிருக்கிறார். வட கொரிய தலைவரான கிம் ஜோங்-உன் ஆண்டின் தொடக்கத்தில் தனது ஆட்சி ICBM ஐ சோதிக்க தயாராகிக் கொண்டிருப்பதாக அறிவித்த சமயத்தில் ட்ரம்ப் ட்வீட் செய்தார்: “அது நடக்காது”. தனது கூட்டாளியை வழிக்குக் கொண்டு வராத சீனாவையும் அவர் கடுமையாக சாடினார்.
நேற்று, கனடா பிரதமருடன் இணைந்து அளித்த ஒரு ஊடக சந்திப்பின் போது, ட்ரம்ப், அவர் “மிக மிக பெரிய பிரச்சினை” என்று வருணித்த வட கொரியாவை “மிக கடுமையான விதத்தில்” கையாளவிருப்பதாக அறிவித்தார். அவரது நிர்வாகம் இப்போது அந்நாட்டை நோக்கிய அமெரிக்க கொள்கையை மீளாய்வு செய்து கொண்டிருக்கிறது, ட்ரம்ப்பின் இராணுவவாத நோக்குநிலைக்கு தக்கவாறு, கூடுதல் பொறுப்பற்ற முறையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் படைவலிமையை பயன்படுத்துவது, அத்துடன் பியோங்கியாங் ஆட்சியை ஸ்திரம்குலைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வது ஆகியவற்றைக் கொண்ட ஒரு கொள்கையாக அநேகமாய் அது மாறவிருக்கிறது.
வடகொரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் எந்தவொரு நடவடிக்கையும் சீனாவுக்கு எதிராகவும் குறி வைப்பதாகும். சீனாவுக்கு எதிரான மோதல்போக்குடைய ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய திருப்பத்தில்” உச்சத்திற்கு வந்திருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான தலைமை அச்சுறுத்தலாக சீனாவையே தான் கருதுவதை ஏற்கனவே தெளிவாக்கி விட்டிருக்கிறது.
அமெரிக்காவின் வரலாற்று வீழ்ச்சியையும் சீனாவின் எழுச்சியையும் தடுத்துநிறுத்துவதற்கான காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது என்பதே அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் கவலையாய் உள்ளது. தேசிய நலன் இதழின் ஜனவரி/பிப்ரவரி பதிப்பில் எழுதிய புஷ் நிர்வாக அதிகாரியான இவான் ஃபைகென்பவும், 1972 இல் சீனாவுடன் நிக்சன் நல்லிணக்கத்தை மேற்கொண்டதன் பின்னர் ட்ரம்புக்கு முன்னால் வந்திருக்கக் கூடிய “எட்டு ஜனாதிபதிகளைக் காட்டிலும் கடுமையானதொரு சவாலை சீனா தொடர்பாக” ட்ரம்ப் முகம்கொடுத்திருந்தார் என்று அறிவித்தார்.
”சீனா இப்போது கூடுதல் பலமானதாக, உலகெங்கிலும் கூடுதல் செல்வாக்கு கொண்டதாக, அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்து நிற்க அல்லது அதற்குப் பதிலடி கொடுக்க மேம்பட்ட திறம்கொண்டதாக இருக்கிறது என்பதுடன், முன்னெப்போதினும் பெரிய அளவில் பொருளாதார வலிமையின் கூடுதலான கருவிகளும் இராணுவ வலிமையும் அதனிடம் இருக்கிறது. இதன் அர்த்தம் யாதெனின் சீனா மற்றும் ஆசியா இரண்டின் தொடர்பான அணுகுமுறையிலும் அமெரிக்கா வெறும் எதிர்வினையாற்றுவதாக இருக்கின்ற நிலையில் இருந்து முந்திச் செயல்படும் நிலைக்கு நகர வேண்டிய தேவை இருக்கிறது” என்று ஃபைகென்பவும் அறிவுறுத்தினார்.
சீனாவுக்கு எதிரான தாக்குதல்போக்கில் ஏற்கனவே ட்ரம்ப் இறங்கி விட்டிருக்கிறார், வர்த்தகப் போர் நடவடிக்கைகளில் இறங்க எச்சரித்திருக்கிறார், அமெரிக்க சீன இராஜதந்திர உறவுகளின் அடித்தளமாக இருக்கும் “ஒரே சீனா” கொள்கையை தூக்கிப்போடுவதற்கு மிரட்டியிருக்கிறார், அத்துடன் தென் சீனக் கடலில் உரிமை மோதலுக்குள்ளாகியிருக்கும் தீவுத்திட்டுகள் தொடர்பாக ஜப்பான் சீனாவுடன் ஒரு போரில் இறங்கினால் அதனை அமெரிக்கா ஆதரிக்கும் என்று மறுஉறுதியளித்திருக்கிறார். வெளியுறவுச் செயலரான றெக்ஸ் ரில்லர்சன் தென் சீனக் கடலில் இருக்கும் தீவுகளுக்கான சீனாவின் அணுகலை அமெரிக்கா தடை செய்யும் என்று அறிவித்தார், அத்தகையதொரு நடவடிக்கை ஒரு போர் நடவடிக்கையாக கருதப்படக் கூடிய ஒன்றாகும்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மாட்டிஸ் பியோங்கியாங்கிற்கு இரத்தம்உறையச் செய்யும் ஒரு எச்சரிக்கையை விடுத்தார், அமெரிக்கா அல்லது அதன் கூட்டாளிகளுக்கு எதிராக வட கொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துமேயானால் அது “திறம்பட்ட மற்றும் அதனை மிதமிஞ்சும் ஒரு பதிலடியை” கொண்டு எதிர்கொள்ளப்படும் என்று அவர் அறிவித்தார். இந்த வசனமானது, வடகொரியா ஆட்சியையும், அதன் இராணுவ மற்றும் தொழிற்துறை திறனையும் துச்சமென ஆக்கிவிடத்தக்க மிக உயர்ந்த அமெரிக்க இராணுவ வலிமையை மட்டும் அடிக்கோடிடவில்லை, மற்ற சக்திகளையும் குறிப்பாக சீனாவையும் தவிர்க்கவியலாமல் உள்ளே இழுக்கத்தக்க ஒரு பேரழிவுகரமான போரில் அந்த இராணுவ வலிமையை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா கொண்டிருக்கும் விருப்பத்தையும் அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு எதேச்சாதிகார, அதி-தேசியவாத வடகொரிய ஆட்சியின் பதிலிறுப்பு முற்றிலும் பிற்போக்குத்தனமானதாய் இருக்கிறது. ஒரு பக்கத்தில், வடகொரியா, உலகப் பொருளாதாரத்திற்கான ஒரு மலிவு உழைப்புக் களமாக நாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் அதன் மீதான பல தசாப்த கால தனிமைப்படுத்தலையும் பொருளாதார முற்றுகையையும் முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் கெஞ்சுகிறது. இன்னொரு பக்கத்தில், அதன் வம்பிழுப்பு வசனங்களும் அணு ஆயுதங்களுக்காக முனைவதும் போரின் அபாயத்தையே அதிகரித்திருப்பதோடு வடகொரியாவில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருக்கின்ற அதன் வர்க்க சகோதர சகோதரிகளுக்கும் இடையில் பிளவுண்டாக்கும் ஒரு ஆப்பைச் செருகுவதாய் இருக்கிறது.
இதேபோல, சீன கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருபக்கத்தில் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு விழைவது மற்றும் மறுபக்கத்தில் ஒரு பெரும் இராணுவ விரிவாக்கத்திற்கும் தனது சொந்த புஜபலத்தைக் காட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் இடையில் ஊசலாடிச் செல்கிறது. CCP தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக 1978க்குப் பிந்தைய முதலாளித்துவ மீட்சியால் விதைக்கப்பட்டிருக்கும் அதி-வலது சிலவரதிகாரத்தையே பிரதிநிதித்துவம் செய்கிறது.
ஆசியாவில் அமெரிக்காவின் இராணுவப் பெருக்கத்திற்கான பதிலடியாக, சீனா தென் சீனக் கடலில் இருக்கும் தனது தீவுகள் பலவற்றையும், இராணுவத் தளங்களது சாத்தியம் கொண்டவையாக மாற்றியிருப்பதோடு அந்த பகுதிகளில் பென்டகனின் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிகராய் தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளை நடத்தத் தொடங்குகிறது. சர்ச்சைக்குரிய சென்காகு/டையோயு தீவுகளைச் சுற்றிலும் ஜப்பானிய இராணுவ மற்றும் கடலோரப் படையுடன் சீனா தொடர்ந்து ஆபத்தான மோதல்போக்குகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. தவிரவும், அணுஆயுத வல்லமை கொண்ட வடகொரியா, வட கிழக்கு ஆசியாவில் ஒரு ஆயுதப் போட்டியை தூண்டி விடக் கூடிய சாத்தியத்தைக் குறித்து கவலை நிலவுகின்ற நிலையிலும், சீனா வடகொரியாவைக் கட்டுப்படுத்துவதற்கு எதுவும் செய்யவில்லை.
இவை அனைத்துமே, ஜனாதிபதி ட்ரம்ப் அமர்த்தப்பட்டதன் மூலம் உலகம் முழுவதும் குறிப்பாக ஆசியாவில் எரியூட்டப்பட்டிருக்கின்ற பெரும் ஆபத்தான மற்றும் கணிக்கமுடியாத சூழ்நிலைக்குள் மேலும் எண்ணெய் வார்ப்பதாக இருக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் பரந்த நெருக்கடியை பிரதிபலிக்கும் விதமாக ட்ரம்ப்பின் நிர்வாகம் ஏற்கனவே வெளியுறவுக் கொள்கை விடயத்தில் பிளவுபட்டுக் கிடக்கிறது. ட்ரம்ப்பின் பிற்போக்குத்தனமான உள்நாட்டு அரசியலுக்கு அரசியல் எதிர்ப்பு ஆழமடைந்து செல்வதன் மத்தியில், அவரது “முதலில் அமெரிக்கா” வாய்வீச்சானது சமூகப் பதட்டங்களை ஒரு வெளிப்புற எதிரியை நோக்கித் திருப்பி விடுவதை இலக்காகக் கொண்டுள்ளது, இது ஒரு சிறு சம்பவமும் கூட ஒரு பெரும் பற்றியெரிதலை தூண்டிவிடக் கூடிய அபாயத்தை மேலும் தீவிரப்படுத்தும்.
உலகப் போரின் பெருகும் அபாயமானது, 1930களில் போலவே, தேசியரீதியான குரோதங்களுக்கும் இராணுவவாதத்தின் வளர்ச்சிக்கும் எரியூட்டிக் கொண்டிருக்கிற முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கமுடியாத நெருக்கடியில் தான் அது வேர்கொண்டிருக்கிறது என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் மட்டுமே எதிர்கொள்ளப்பட்ட முடியும். சோசலிசப் புரட்சி தான் முதலாளித்துவ நெருக்கடி மற்றும் போருக்கான பதில் ஆகும். ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்குகள் மற்றும் வட கொரியாவிலும் சீனாவிலும் உள்ளது போன்ற பிற்போக்குத்தனமான முதலாளித்துவ ஆட்சிகள் இரண்டுக்குமே எதிராக அணிதிரட்டப்படுகின்ற சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே இந்தப் பணியை முன்னெடுத்து நடத்தும் திறம்படைத்த ஒரேயொரு சக்தியாகும்.