Print Version|Feedback
India: Tamil Nadu police brutally attack Jallikattu protesters
இந்தியா: ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தமிழ்நாட்டு போலீஸ் கொடூரமான தாக்குதல்
By Arun Kumar and Yuvan Darwin,
1 February 2017
ஜனவரி 23 திங்கள் அதிகாலையில் புராதன தமிழ் ஜல்லிக்கட்டு ஆட்டம் (மாடு விரட்டல்) மீது இந்திய உச்சநீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான ஒரு அமைதியான வெகுஜன ஆர்ப்பாட்டத்தின் மீது தமிழ்நாடு போலீஸ் தாக்குதலை நடத்தியது.
இந்திய அதிகார தட்டுக்கள் எதிர்ப்புகளின் வெகுஜனத்தன்மையை கண்டு மிரண்டனர். அவை ஒரு வாரத்திற்கு சற்று முன்னதாக பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு வெளியே வெடித்தெழுந்தது, மற்றும் இந்தியாவின் 6-வது பெரிய மாநிலத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களின் பரந்த பிரிவினரிடமிருந்து வேகமாக ஆதரவைப்பெற்றது.
எதிர்ப்புகள் பரவுவது மற்றும் இந்திய அரசாங்க எதிர்ப்பு சுலோகங்கள் அதிகமாக நிலவுகையில் புதுதில்லி மற்றும் சென்னையிலுள்ள அரசியல் அதிகாரத்துவ தட்டுக்கள் விழிப்படைய தொடங்கினர். முதலாவது மற்றும் முக்கியமானதாக அதற்கு காரணம் தமிழ்நாடு “ஒரு முன்னேறிய மாநிலமாக” அழைக்கப்பட்ட போதிலும் அது பரந்த வேலையின்மை கடுமையான வறுமை மற்றும் மோசமடையும் சமூக சமத்துவமின்மை இவற்றினால் கோபம் பீறிட்டு இருக்கிறது என்பதை நன்கு அறிவார்கள், அதனால் உழைக்கும் மக்களின் பெரும் எண்ணிக்கையினரை ஈடுபடுத்தும் எந்த ஒரு அணிதிரட்டலும் கட்டுக்கடங்காமல் வெடிக்கலாம் என்று அஞ்சினர்.
இந்த எதிர்ப்புகள், தனித்துவ தமிழ் சாயல் கொண்டதாகவும் மற்றும் பெருமளவில் இந்தியாவின் உச்சநீதிமன்ற மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் திருப்பப்பட்டிருப்பதால் அதனை தமிழ் பிராந்திய பேரினவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் சுரண்டக்கூடும் என பாரதிய ஜனதா கட்சி (பா. ஜா. க) மற்றும் இந்திய அரசாங்க அதிகார தட்டுக்கள் கவலையும் அடைந்திருந்தனர்.
எதிர்ப்பு இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக எடுத்த முடிவு, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அஇஅதிமுக அரசாங்கம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பா.ஜ.க வின் மத்திய அரசாங்கம் இணைந்து எடுக்கப்பட்டதாகும். சென்னை மரீனா கடற்கரையில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்கார்கள் மீது போலீசார் வன்முறையான தாக்குதலை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, தமிழ்நாட்டில் “சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு”, மாநில அரசாங்கம் ஆதரவுக்கு வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் மத்திய ஆயுத போலீஸ் படைகளை (சிஏபிஎப்) குவிக்க தயாராக இருப்பதாக உள்நாட்டு அமைச்சகம் அறிவித்தது.
யதார்த்தத்தில் போலீஸ் தான் அவர்களது அரசியல் எஜமானர்களின் கட்டளைப்படி செயற்பட்டு மரீனா கடற்கரையில் அட்டூழியம் செய்தனர்.
ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட போலீஸ் வன்முறையால் கோபமடைந்து பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் தலையீடு செய்தனர். அப்போது போலீசார் அவர்களை மிருகத்தனமாக தாக்கினர். போலீஸ் அருகில் உள்ள மீனவர்கள் வீடுகளின் கதவுகளை உடைத்து சென்று வீட்டு பொருட்களை நாசப்படுத்தியதுடன் ஆண் பெண் மற்றும் குழந்தைகள்மீதும் தாக்குதல் நடத்தினர். பெண்கள் உட்பட மக்களை போலீஸ் அடிக்கும் மற்றும் ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தும் காணொளி காட்சிகள் வைரஸ் போன்று பரவியது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் புகழ்பெற்ற கிராமமான அலங்காநல்லூரில் ஜனவரி 17ல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்ததற்காக பல நூற்றுக்கணக்கான மக்களை போலீசார் கைது செய்ததன் பின்னர் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்ட இயக்கம் காளான் போன்று பரவியது, தமிழ்நாடு முழுவதும் மாநகரம், நகரம் மற்றும் கிராமங்களுக்கும் பரவியது.
மூன்று நாட்களுக்கு பின்னர் ஜனவரி 20ல் தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்ட திமுக, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் ஏனைய எதிர்கட்சிகளுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் அவர்கள் இழந்து வரும் வெகுஜன ஆதரவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு 12 மணிநேர அனுதாப வேலைநிறுத்தத்தை நடத்தினார்கள். இந்த வேலைநிறுத்தம் பொது போக்குவரத்து துறையை பாதித்தது. குறிப்பாக பேருந்து, அத்துடன் ரயில்களும் கூட. பல பள்ளிகளும் கல்லூரிகளும் கூட ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டன.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை முன்னதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காட்சிப்படுத்தியது. எவ்வாறாயினும் மே 2014ல் இந்தியாவின் உச்சநீதிமன்றம் அந்த விளையாட்டை தடை செய்தது, அது ஒரு ”விலங்கு உரிமைகள்” அரசு சாரா தொண்டுநிறுவனமான (என்ஜிஓ) இந்தியாவில் விலங்குகளை நெறிமுறையாக நடத்துவதற்கான மக்கள் அமைப்பு (PETA) தொடுத்த வழக்கிற்கான தீர்ப்பாகும். நீதிமன்றம் அதன் தீர்ப்பை 2011 இல் முன்னைய காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அடிப்படையாக கொண்டிருந்தது, அது காட்சிப்படுத்தும் விலங்குகளாக மாடுகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்தது.
புராதன இந்தியாவில் மாடு மேய்ப்பவர்கள் வரையில் பின்சென்று பார்க்கக்கூடிய வேர்களைக் கொண்ட ஒரு விளையாட்டான ஜல்லிக்கட்டு பொதுவாக தமிழ் நாடு அறுவடை விழாவான தைப்பொங்கலின் போது நான்கு நாட்கள் நடத்தப்படும், அது இந்த வருடம் ஜனவரி 17 இல் முடிவடைந்தது. அது ஆணின் வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு காட்சியாக கருதப்படுகிறது மற்றும் ஒரு மாட்டை அடக்குவதை கொண்டிருக்கிறது. எனினும் அது பாரம்பரிய ஸ்பானிய – பாணியிலான மாட்டுடான மோதலின் இறுதியில் அந்த விலங்கை கொல்வதில் முடிவடைவதில்லை.
ஜல்லிக்கட்டின் தகுதி தரம் எதுவாக இருந்தாலும், அது யாருக்கும் காயம் ஏற்படுத்தும் எண்ணத்துடன் விளையாடப்படுவதில்லை. அதே போன்ற ஏனைய கலாச்சார நடவடிக்கைகளும் முதலாளித்துவ அரசினால் எதேச்சதிகார முறையில் நசுக்கப்படுவதற்கு சோசலிஸ்டுகள் ஆதரவளிக்க மாட்டார்கள் அத்துடன் மக்கள் அவர்களது கலாச்சார மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு உள்ள அவர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பார்கள்.
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான பிரமாண்டமான எதிர்ப்புகள் ஒரு முரண்பாடான தன்மை கொண்டதாக இருந்தது.
சந்தேகத்திற்கு இடமின்றி அது அதிகாரத்துவ தட்டினர் மற்றும் அரசியல் நிறுவனத்தில் இருந்து அந்நியமாதல் வளர்ச்சிகண்டு வருவது மற்றும் அவற்றின் மேலுள்ள கோபம் ஆகியவற்றினால் எரியூட்டப்பட்டதாகவும் மற்றும் அதன் வெளிப்பாடாகவும் இருந்தது. பன்னீர் செல்வம், மோடியுடன் ஆலோசனை செய்த பின் ஜல்லிக்கட்டை சட்டமாக்கும் ஒரு மாநில சட்டத்தை வேகமாக நிறைவேற்றிய பின்னர் அந்த விளையாட்டை மீண்டும் தொடங்கி வைப்பதற்காக அலங்கநல்லூருக்கு சென்றார், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் கிராமத்திற்குள் நுழைவதை தடுத்தனர். ஆர்ப்பாட்டங்களில் இணைய முயன்ற, உக்கிரமான தமிழ் பேரினவாத நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமானும் கூட அலட்சியப்படுத்தப்பட்டார்.
தொலைக்காட்சி நேர்காணலின் போது, பல ஆர்ப்பாட்டக்காரர்கள் வறட்சி, வேலையின்மை, பயிர் நாசமடைதல் மற்றும் அதிகரிக்கும் கடன் ஆகியவற்றின் காரணமாக கிராமப் பகுதிகளில் நிலவும் கடுமையான சமூக நெருக்கடி பற்றி குறிப்பிட்டார்கள். இந்த நெருக்கடியின் ஒரு குறிப்பிட்ட அதிர்ச்சியடைய செய்யும் வெளிப்பாடுதான் விவசாயிகளின் தற்கொலை காட்சிகளாகும். அவை தமிழ் நாட்டில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக டிசம்பரில் ஒரு புதிய உயர் மட்டத்தை எட்டியது, 106 விவசாயிகள் அவர்களது உயிர்களை மாய்த்ததாக செய்தி வெளியிடப்பட்டது.
மோடி அரசாங்கத்தின் பணம் செல்லாததாக்குதல் திட்ட நடவடிக்கையின் காரணமாக கிராம மற்றும் நகர்புற உழைக்கும் மக்கள் மீதான அழுத்தங்கள் எரிச்சலூட்டும் வகையில் அதிகரித்தன. ஊழலுக்கு எதிரான ஒரு "நுட்பமான தாக்குதல்" என சொல்லப்பட்டது உண்மையில் உழைக்கும் மக்களின் செலவில் இந்தியாவின் கடனில் மூழ்கி இருக்கும் வங்கிகளுக்கு முட்டுக்கொடுக்கும் முயற்சி ஆகும். இந்தியாவின் 85 சதவிகிதத்திற்கும் கூடுதலான பணம் செல்லாததாக்கப்பட்டதினால் உருவக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களது வேலைகளை இழந்தனர்.
Indian Express வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின்படி, கடந்த ஜுலை மாதம் முதல் நவம்பர் ஊடாக மூன்று மில்லியன் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (NREGA) திட்டத்தில் தினசரி வேலைவாய்ப்பினை பெறுவதற்கு முயன்றனர். பின்னர் டிசம்பரில், பணம் செல்லாததாக்குதலுக்கு பின்னர் முதல் மாதம் முழுவதிலும், தினசரி சராசரியானது 5 மில்லியனுக்கு உயர்ந்தது. இந்த ஆண்டின் முதல் வார இறுதியில், தினசரி சராசரி 8.4 மில்லியன் பேருக்கு என்ற வகையில் அதிகரித்தது, பணம் செல்லாததாக்குதலுக்கு முந்தைய சராசரியைவிட இரண்டரை மடங்கு அளவிற்கு நன்றாக உயர்ந்திருந்தது. (பார்க்க: “இந்தியாவின் பணம் செல்லாததாக்குதல் திட்டம் பரந்த துன்பங்களை விளைவிக்கிறது”)
அவ்வாறு கூறினாலும், எதிர்ப்பு இயக்கம் ஒரு தமிழ் பிராந்தியவாத சாய்வை கொண்டிருந்தது, அதனை மாநில அரசியல் நிறுவனம் மேலும் அதிகமாக வெளிப்படையாக்க முயன்றது.
புது தில்லியில் மோடியை சந்திப்பதற்கு செல்வதற்கு முன்பு, பன்னீர் செல்வம் “தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் இருந்து கொஞ்சம் கூட பின்வாங்க மாட்டேன்” என்று சபதம் செய்தார்.
ஸ்ராலினிச இந்திய கம்யூனிச கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய கம்யூனிச கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் உள்பட எதிர்க்கட்சிகள் ஜல்லிக்கட்டு மீதான உச்ச நீதிமன்றத்தின் எதேச்சாதிகாரமான தடையை அது ஜனநாயக மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மீது திட்டவட்டமான ஒழுங்கு முறையாக தொடுக்கும் தாக்குதலில் இருந்து வேறுபடுத்தும் முயற்சியில் இணைந்தனர், மற்றும் தடையை தமிழ் கலாச்சாரம் மற்றும் “தமிழ் பெருமை” மீதான தனித்த தாக்குதலாக காட்ட முயன்றனர்.
அதன் பங்கிற்கு மாவோயிச குழு வெளியிடும் வினவு.காம், தமிழ் கலாச்சார உரிமைகள் மீது அது ”டெல்லி ஏகாதிபத்தியவாதிகள்” என அழைப்பவை தொடுக்கும் தாக்குதலை கண்டனம் செய்தது, அதேசமயம் “அந்த விளையாட்டு ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதி பிரிவால் விளையாடப்படுகிறது” என்ற அடிப்படையில் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதாகவும் கூறியது. எனினும் எதிர்ப்பு இயக்கம் வலுவடைந்ததும், மாவோயிஸ்டுகள் இசையை மாற்றி தமிழை நிலைநாட்டுவதற்கான ஒரு உதாரணமாக அது இருப்பதாக அதற்கு அவர்களின் முழு ஆதரவை வழங்கினர்.
பத்தாண்டுகளாக, அதிகமான சுயாட்சி மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் கொள்ளையில் ஒரு பெரும் பங்கு ஆகிய கோரிக்கைகளை நிலைநாட்டுவதற்காக உள்ளூர் முதலாளித்துவ மேல்தட்டினால் தமிழ் பிராந்தியவாதம் வர்க்க ஆட்சியின் ஒரு முக்கியமான பொறிநுட்பமாக பயன்படுத்தப்பட்டு வந்தது, மற்றும் அனைத்துக்கும் மேலாக தமிழ் நாட்டிலுள்ள தொழிலாள வர்க்கத்தை இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர்கள் மற்றும் சகோதரிகளிடம் இருந்து பிரிப்பதற்காகும்.
பெரும் முதலாளித்துவ கட்சிகள் என்று அழைக்கும் காங்கிஸ் மற்றும் பாஜக வை எதிர்ப்பதில் பல்வேறு பிராந்திய அடிப்படையைக் கொண்ட முதலாளித்துவ பிரிவுகள் ஒரு “முற்போக்கு” கூட்டாளிகள் என்று கூறி தமிழ் நாட்டிலும் இந்தியாவின் ஏனைய இடங்களிலும் பிராந்தியவாத அரசியலை ஊக்குவிப்பதில் சிபிஎம் மற்றும் சிபிஐ ஒரு பெரும் பாத்திரத்தை வகித்தது.
இது, காவேரி நீர்வளங்களை பங்கிடுவது தொடர்பாக கர்நாடகாவுடன் பத்தாண்டுகளாக நீடிக்கும் பிற்போக்கான தகராறின் போது தமிழ் நாடு அரசாங்கம் மற்றும் மேல் தட்டுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் மற்றும் கிராம உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதை உள்ளடக்கும்.
அதேபோல், அண்டை மாநிலமான கேரளாவில் ஸ்ராலினிஸ்டுகள் அடிக்கடி மாநில அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார்கள், அங்கே தமிழ் நாட்டுடனான அணை தகராறில் சிபிஎம், அதன் பரம எதிரியாக கருதும் காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து வகையான வலதுசாரி முதலாளித்துவ கட்சிகளுடன் இணைந்து மொழி-கலாச்சார பேரினவாதத்தை ஊக்குவித்தது.
சிபிஎம் மற்றும் சிபிஐ அவற்றின் பாராளுமன்ற சூழ்ச்சிகளின் ஒரு பகுதியாக மத்தியில் ஒரு தொடரான வலதுசாரி அரசாங்கங்களுக்கு ஆதரவளித்தன, அதில் பெரும்பாலானவை 1989 – 2008 க்கு இடையிலான காங்கிரஸ் தலைமையிலானவை ஆகும். தமிழ் நாட்டில் பெரு வணிக திமுக மற்றும் அஇஅதிமுக வுக்கு ஆதரவளிப்பதில் ஸ்ராலினிஸ்டுகள் முன்னும் பின்னுமாக சென்றனர்.
2014 தேசிய தேர்தலுக்கு சற்று முன்னர், அஇஅதிமுக அவர்களை தேர்தல் கூட்டாளிகள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கி தள்ளிய பின்னர், ஸ்ராலினிஸ்டுகள் மற்றொரு வலதுசாரி கூட்டணியை ஒன்று சேர்த்து உருவாக்கினர், அது தோல்வியுற்ற மக்கள் நலக் கூட்டணி ஆகும், அதில் திமுக மற்றும் அஇஅதிமுக இலிருந்து உடைந்து வந்தனவும் ஏனைய பிராந்திய கட்சிகளும் அடங்கும்.
தற்போது தடை நீக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு தொடர்பான திடீர் வெகுஜன எழுச்சி, இந்தியா முழுவதும் கொதித்து எழுந்து வரும் சமூக கோபத்தின் புதிய வெளிப்பாடு தான். கடந்த செப்டம்பரில் சுமார் 100 மில்லியன் (10 கோடி) தொழிலாளர்கள் பாஜக அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளுக்கு எதிராக ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர்.
இந்த எதிர்ப்பானது சாதகமான மற்றும் நீடித்த வெளிப்பாட்டை காண வேண்டுமாயின் ஒரு புதிய தொழிலாள வர்க்க கட்சி கட்டப்பட வேண்டும், அது முதலாளித்துவ ஆட்சியின் முட்டுக்களாக சிபிஎம் மற்றும் சிபிஐ மேலும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களும் இருப்பதை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்துவதன் மூலமாக செய்யப்பட வேண்டும். அவ்வாறான ஒரு கட்சி ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டமான நிரந்தரப் புரட்சியை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்: தொழிலாள வர்க்கம் கிராமப்புற ஏழைகளையும் ஏனைய உழைக்கும் மக்களையும் அதன் பின்னால் அணிதிரட்டி ஒரு சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காக போராட வேண்டும். ஜல்லிக்கட்டு தொடர்பான வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தின் வேராக இருந்த விவசாய நெருக்கடியை முதலாளித்துவ இலாப அமைப்பை ஒழிக்காமல் தீர்க்க முடியாது.