Print Version|Feedback
White House issues war threat against Iran
ஈரானுக்கு எதிராக வெள்ளை மாளிகை போர் அச்சுறுத்தல் விடுக்கிறது
By Peter Symonds
2 February 2017
புதனன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃபிளின் வெளியிட்ட ஒரு அசாதாரண ஆத்திரமூட்டும் அறிக்கையில், "மத்திய கிழக்கு முழுவதிலும் ஸ்திரத்தன்மையை குலைக்கின்றதாக" ஈரான் மீது குற்றஞ்சாட்டினார், மேலும் "இன்று நாங்கள் ஈரான் மீது உத்தியோகபூர்வமாக கவனத்தில் கொள்வதாக," எச்சரித்தார்.
ஞாயிறன்று தெஹ்ரான் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அவர் கண்டனம் தெரிவித்ததுடன், திங்களன்று யேமனில் ஹௌத்தி (Houthi) கிளர்ச்சியாளர்கள் ஒரு சவூதி அரேபிய போர்க்கப்பலின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்தவித ஆதாரமுமின்றி ஈரானிய ஆட்சியை பொறுப்பாக்கி குற்றஞ்சாட்டினார்.
வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஃபிளின் தோன்றி தான் ஒரு அறிக்கைவிட இருப்பதாக எந்தவித முன்னறிவிப்புமின்றி ஒரு அறிக்கை விட்டார். வெள்ளை மாளிகை பத்திரிக்கை செயலர் சீன் ஸ்பைசரால் ஈரானுக்கு எதிராக ஒரு தூற்றல்மிக்க கண்டனத்தை தெரிவிப்பதற்கு மட்டுமன்றி, ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராகவும் தான் இவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் வெளியேறினார்.
ஈரானுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வருகின்ற அமெரிக்க நடவடிக்கைகள் குறித்து ஃபிளின் எந்தவொரு சமிக்ஞையும் காட்டவில்லை. சிலமணிநேரம் கழித்து, ஈரானின் ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்கா அதன் மீது "தகுந்த நடவடிக்கை" எடுக்க நோக்கம் கொண்டிருப்பதாக மூத்த நிர்வாக அதிகாரிகள் ஒரு மூடிய கதவுகளுக்கு பின்னால் ஊடகங்களுக்கு அறிவித்தனர். மேலும், ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை இல்லை என்பதை மறுத்து, "நாங்கள் ஒரு முழு அளவில் சாத்தியப்பாடுகளை பரிசீலித்து வருகிறோம்," என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
ஞாயிறன்று "ஆத்திரமூட்டும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவியதற்கு" ஃபிளின் கண்டனம் தெரிவித்ததுடன், 'இதுபோன்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான அறிமுகம் உட்பட, அணுஆயுதங்களை தாங்கிச்செல்லும் திறன்கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையினை வடிவமைப்பது பற்றிய எந்தவொரு நடவடிக்கையையும் ஈரான் எடுக்கக்கூடாதென' அதற்கு அழைப்பு விடுக்கின்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானம் 2231 இனை மீறுவதாகவே" இது உள்ளது என்றும் கூறுகிறார்.
ஈரான் அதன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அணுஆயுதங்களை தாங்கிச்செல்ல முடியும் என்பதை திரும்ப திரும்ப மறுத்துள்ளது. தீர்மானம் 2231 இனை கண்காணிப்பதற்கு பொறுப்பாளியான சர்வதேச அணுசக்தி அமைப்பு இதை உறுதி செய்துள்ளது. ஏவுகணை சோதனைகள் ஈரானின் சுயபாதுகாப்புக்கான "ஒரு முழுமையான உள்ளடக்கமாகும்" என்று ஒரு ஈரானிய வெளியுறவு அமைச்சரகத்தின் அறிக்கை அறிவித்தது, மேலும் இவை "ஈரான் ஏவுகணை திட்டம் பற்றிய அரசியல்ரீதியான நோக்கம்கொண்ட கருத்துக்களையும்" மறுத்தும் உள்ளது.
ஏவுகணை சோதனை குறித்தோ அல்லது சவூதி கப்பல் தாக்குதல் மீதான குற்றச்சாட்டு குறித்த ஃபிளினின் கூற்றுக்களுக்கு பின்புல ஆதாரம் எதையும் அவர் வழங்கவில்லை.
ஈரானால் பயிற்சியளிக்கப்பட்டு ஆயுதஉதவி பெற்ற ஹௌத்தி படையினர் கடந்த ஆறு மாதங்களாக எமிரேட் மற்றும் சவூதி கப்பல்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றது போன்றதான ஒரு தொடர் சம்பவங்களில் ஒன்றாகவே சவூதி கப்பற்படை கப்பல் திங்களன்று தாக்கப்பட்டது என்றும், மேலும் செங்கடல் ஊடாக செல்லும் அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களை அச்சுறுத்தியுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவித்தார். இந்த பிராந்தியத்தில் அமெரிக்க நட்பு மற்றும் கூட்டு நாடுகளை அச்சுறுத்துவதற்கு ஈரான் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடருகிறது.”என்றார்.
ட்ரம்ப் நிர்வாகத்தில் ஃபிளினோ அல்லது வேறு எவருமோ ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பயற்சியளித்து ஆயுத உதவி செய்கிறதென்பதை நிரூபிக்கவில்லை. எது தெளிவாக உள்ளது என்றால், யேமனில் ஹௌத்தி தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக சவூதி அரேபியா, அமெரிக்கா மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளுடன் சேர்ந்து ஒரு இரத்தக்களரியான போர் தொடுத்துவருவதுடன், 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க ஆயுதப் படைகளின் ஆதரவுகொண்ட சவூதி போர் விமானங்களால், மருத்துவமனைகள் மற்றும் இராணுவமல்லாத பிற மையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
வாஷிங்டன் இன் கோரிக்கையின்படி ஈரானின் ஏவுகணை சோதனை குறித்து செவ்வாய்கிழமையன்று நடத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஒரு அவசர கூட்டத்திற்கு பின்னர், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி இன் ஆத்திரமூட்டும் கருத்துக்களையே ஃபிளின் இன் குறிப்புக்கள் பின்பற்றுகின்றன. ஹேலி, இந்த ஏவுகணை சோதனை "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று முத்திரை குத்துவதுடன், "நாங்கள் செயல்பட போகிறோம். நாங்கள் வலுவாக இருக்கப்போகிறோம். நாங்கள் மிகுந்த பலமாக இருக்கப்போகிறோம் மேலும் அமெரிக்க மக்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களையும் பாதுகாக்க என்ன தேவைப்பட்டாலும் அதனை நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம்." என்றும் அறிவித்தார்.
ஈரான் உட்பட முஸ்லீம் பெரும்பான்மையாக வாழும் ஏழு நாடுகள் மீது ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள குடிவரவு தடை குறித்து ஏற்கனவே தெஹ்ரான் வாஷிங்டன் உடன் மோதலில் உள்ளது. செவ்வாய்கிழமையன்று தெஹ்ரான், ஈரானுக்கு பயணிக்கின்ற அமெரிக்க குடிமக்களுக்கு தடைகளை விதித்து இதற்கு பதிலடி கொடுத்தது.
2015ல் ஒபாமா நிர்வாகத்தின் மூலமாக பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஈரானுடன் உருவாக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் தான் ட்ரம்ப் நிர்வாகத்தின் உடனடி இலக்காக உள்ளது. இந்த ஒப்பந்தம், ஐ.நா. தீர்மானம் 2231 இல் நெறிப்படுத்தப்பட்டு, ஈரான் மீதான முடக்கும் பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை மூடிவிடவேண்டும் என்றும் ஊடுருவும் பரிசோதனைகளுக்கு இடமளிக்கவேண்டும் என்பதில் அது முடிவடைந்தது.
"தெஹ்ரானின் கெடுதல் விளைவிக்கும் நடவடிக்கைகளை போதுமான அளவு எதிர்கொள்ள" ஒபாமா நிர்வாகம் தவறிவிட்டதற்கு ஃபிளின் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர், "ஈரான் மற்றும் ஒபாமா நிர்வாகம், அத்துடன் ஐ.நா.வுக்கும் இடையே அடையப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் பலவீனமானதாகவும், பயனற்றதாகவும் உள்ளன என்று ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்." என்றும் கூறினார்.
கடந்த மார்ச் இல், அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரங்களுக்கான குழுவான சியோனிச செல்வாக்கு குழுவுடன் பேசுகையில், ட்ரம்ப் பின்வருமாறு அறிவித்தார்: "ஈரான் உடனான பேரழிவு ஒப்பந்தத்தை அகற்றுவதே எனது முதல் முன்னுரிமை பெற்ற நடவடிக்கையாகும்... இந்த ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், மற்றும் மொத்த மத்திய கிழக்கு பகுதிக்கும் பேரழிவுகரமானது." இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவினை அச்சுறுத்துவதற்கு உரிமைகோருகின்ற ஈரானின் இந்த ஏவுகணை திட்டத்தை நிறுத்துவதற்கு அவர் சபதமிட்டார். "அது நடப்பதற்கு நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை," என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் வாஷிங்டனின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல், அமெரிக்க நிதிஉதவி மற்றும் ஆயுத உதவிகளைப் பெற்று முற்றுமுழுதாக ஆயுதமயப்படுத்தி வைத்திருப்பதுடன், அதன் சொந்த அணுஆயுத தளவாடங்களையும் கணிசமான அளவிற்கு உருவாக்கி வைத்துள்ளது. 2015 அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை கசப்புடன் எதிர்த்த இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, உடனடியாக திங்களன்று ஈரான் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்தார். இந்த மாதம் வாஷிங்டனுக்கு அவர் விஜயம் செய்யும்போது தெஹ்ரான் மீதான பொருளாதார தடைகளை புதுப்பிக்க வேண்டுமென்று ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அவர் அழுத்தம் கொடுக்கவிருப்பதாக தெரிவித்தார்.
ட்ரம்ப் நிர்வாகம், ஈரானை கடுமையாக எதிர்க்கின்றவர்களான அவரது மருமகன் மற்றும் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்நெர் போன்ற சியோனிச ஆதரவு பிரமுகர்களையும், அத்துடன் அரசியல்வாதிகளையும், ஜெனரல்களையும் உள்ளடக்கியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள CIA தலைவர் மைக் பொம்ப்பியோ ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை தடுக்க 2015 இல் காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு தலைமை வகித்தார்.
ஃபிளின், அவரது பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பு (DIA) இயக்குநர் பதவியிலிருந்து நீக்கத்திற்கு பங்களிப்பு செய்த அவரது முஸ்லீம் எதிர்ப்பு இனவெறி மற்றும் மனநோய் கொண்ட பார்வைக்கு பேர்போனவராக உள்ளார். 2012 இல் லிபியாவில் பெங்காசியில் நடந்த அமெரிக்க தூதரக கட்டிடங்கள் மீதான தாக்குதல் குறித்த ஒரு வழக்கினை நியூ யோர்க் டைம்ஸ் உதாரணமான காட்டியது. ஃபிளின் ஈரானை குற்றஞ்சாட்டி, அவரது DIA கீழ்மட்ட ஊழியர்கள் அவர் சரியாக இருந்தார் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை கண்டுபிடிக்க வலியுறுத்தினார். ஆனால் அவ்வாறான ஆதாரங்கள் எதுவுமில்லை.
"ஈரானில் ஆட்சி மாற்றம்" என்பது ஈரானின் அணுஆயுத திட்டங்களை முறியடிப்பதற்கான மிகச்சிறந்த வழிமுறையாக இருந்ததென்று 2015 இல் வெளியுறவு விவகார குழு சபைக்கு ஃபிளின் தெரிவித்தார். சண்டைக்களம் தீவிர இஸ்லாமியம் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான உலகளாவிய போரை நாம் எப்படி வெல்லமுடியும், (The Field of Fight: How We can Win the Global War Against Radical Islam and Its Allies) என்ற புத்தகத்தில், அவரும், ஈரான் எதிர்ப்புகொண்ட யுத்த வெறியருமான மைக்கல் லெடீனும் ஈரானுக்கு எதிராக ஒரு போர் செயல்திட்டத்தை தீட்டினர். அமெரிக்கா மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு கவனம் குவிக்கின்ற தேசிய அரசுகளினதும் பயங்கரவாத குழுக்களினதும் ஒரு கூட்டணிக்கு "அச்சாணி" போன்றதுதான் ஈரான் என்று அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், 2015 அணுஆயுத ஒப்பந்தங்களை கிழித்தெறிவதற்கு ட்ரம்ப் நிர்வாகத்துக்குள் பிளவுகள் உள்ளன. அது ஒரு முக்கிய ஐரோப்பிய நட்பு நாடுகளுடனான ஒரு பெரும் பிளவினை உருவாக்கும், மற்றும் ஈரானிய சந்தை மீதும், பாரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் மீதும் ஒரு கண் வைத்துள்ள அமெரிக்க பெருநிறுவனங்கள் உட்பட அதன் வர்த்தக வாய்ப்புகளை இல்லாதொழித்துவிடும்.
கடந்த மாதம் செனெட் சபையில் அவரது உறுதிப்படுத்துதலை கேட்டபோது, அணு உடன்பாடு "ஒரு நிறைவற்ற ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தமாக" இருந்தது, ஆனால் அமெரிக்கா உடன்பாட்டிற்கு கட்டுப்பட்டு அதனை தொடர வேண்டியிருந்தது என்று பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் அறிவித்தார். மாட்டிஸை பொறுத்தவரையில், அந்த விவகாரம் ஒரு தந்திரோபாயமான ஒன்றாகும், சீனாவை எதிர்கொள்ள ட்ரம்ப் தயாராகையில் ஈரானுடனான ஒரு மோதல் உயர் முன்னுரிமை பெற்றதாக இருக்கவேண்டியதில்லை. அவரது முதல் வெளிநாட்டு பயணத்தின்போது, கிழக்கு ஆசிய பாதை ஊடாக பயணிக்கின்றபோது அமெரிக்காவின் இரு நட்பு நாடுகளான தென் கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் மாட்டிஸ் விஜயம் செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறார்.
ஈரானுக்கு எதிராக ஒரு போருக்கு கொள்கையளவில் மாட்டிஸ் எதிர்ப்பவராக இல்லை என்பதையே அது தெரிவித்தது. அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தலைவராக அவர் இருந்த காலத்தில், ஈரானிய ஆட்சியினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் எனப்பட்டவை தொடர்பாக கவனம் செலுத்தியிருந்தார். ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீதான ஈரானிய ஆதரவு பெற்ற போராளிகளின் தாக்குதல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடியாகத்தான் 2011ல் ஒபாமா நிர்வாகம் ஈரானுள்ளே இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அவர் அதிகாரபூரவமாக ஆலோசனை வழங்கினார். ஈரானுடனான போர் தயாரிப்பில் பாரசீக வளைகுடாவில் ஒரு மூன்றாவது விமானந்தாங்கி போர்க்கப்பல் குழுவினை நிலைநிறுத்துவதற்கு வலியுறுத்தியதை தொடர்ந்து அவர் அவரது பதவியை விட்டு நீக்கப்பட்டார்.
ஈரானுடனான உக்கிரமடைந்துவருகின்ற போர் என்ற வார்த்தையாடல்கள் அதன் சொந்த தர்க்கத்தை கொண்டுள்ளன. அது பூசல்களுக்கும், மோதல்களுக்கும் இட்டுச்செல்வதற்கு வழிவகுப்பதுடன் மத்திய கிழக்கினையும் சர்வதேசரீதியாக மற்ற நாடுகளையும் அம்மோதலிலுள் உள்ளிளுக்கும் வாய்ப்புள்ளது. ட்ரம்பின் தலைமை மூலோபாயவாதி, பாசிச ஸ்டீபன் பானன் உட்பட, முன்னாள் தளபதிகள் மற்றும் தீவிர வலதுசாரி பிரமுகர்கள் அடங்கிய ஒரு குழுவான ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு சபையிலிருந்து வரும் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மிகக்கூரிய எச்சரிக்கும் தன்மைகள் கொண்டவை.
அலுவலக பொறுப்பில் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே கடந்த நிலையில், அது பிரதிநிதித்துவப்படுத்தும் அதீத செல்வந்த அடுக்கிற்கான எந்தவொரு தடைகளையும் அகற்றுவதற்கான போருக்கும் மற்றும் ஒரு இராணுவவாத ஆட்சியாக ட்ரம்பின் நிர்வாகம் விரைவாக எழுச்சி பெற்று வருகிறது.