Print Version|Feedback
Trump administration to expand India-US military-strategic alliance
ட்ரம்ப் நிர்வாகம் இந்திய அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டணியை விரிவாக்கம் செய்யும்
By Deepal Jayasekera and Keith Jones
15 February 2017
ட்ரம்ப் நிர்வாகம் இந்திய அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டணியை விரிவாக்கம் செய்யும் நோக்கம் கொண்டுள்ளதாக அறிக்கை விடுத்துள்ளது. இது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல, இருப்பினும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: ஏனென்றால், முதலில் புதிய நிர்வாகத்தின் நோக்கம் சீனாவுடனான மோதலை தொடரக்கூடியதாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது; இரண்டாவதாக, சீனாவிற்கு எதிரான தனது இராணுவ மூலோபாய தாக்குதல்களில் இந்தியாவை பயன்படுத்திக்கொள்ளும் வாஷிங்டனின் உந்துதலினால் இந்த பிராந்தியம் அபாயகரமான முறையில் நிலைகுலைந்துள்ளதுடன், சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான பதட்டங்களையும் எரியூட்டி வருகின்றது.
அமெரிக்க பாதுகாப்பு செயலர், ஜெனரல் ஜேம்ஸ் "Mad Dog" மாட்டிஸ், கடந்த வாரம் அவரது இந்திய சமதரப்பான மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேசினார். பென்டகன் செய்தியை பொறுத்தவரை பிப்ரவரி 8ம் தேதிய அவர்களது உரையாடலில், "சமீபத்திய ஆண்டுகளில்" இந்திய அமெரிக்க "பாதுகாப்பு ஒத்துழைப்பில்" உருவாக்கப்பட்டுள்ள "மிகப்பெரிய முன்னேற்றம்" குறித்து மாட்டிஸ் பாராட்டியதுடன், புதிய நிர்வாகம் இந்த "உத்வேகத்தை நிலைக்க செய்யவும்" மேலும் "அதை கட்டியெழுப்பவும்" ஆர்வமாக உள்ளதென்றும் அவர் கூறினார்.
இருதரப்பு பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சி (Defense Technology and Trade Initiative-DTTI) என்பதன் கீழ் அமெரிக்காவும், இந்தியாவும் நவீன ஆயுத அமைப்புக்களின் இணை அபிவிருத்தியிலும், இணை தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன என்று இந்த செய்தி பிரத்தியேகமாக குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு ஆசிய விஜயத்திற்கு பின்னர், உடனடியாக மாட்டிஸ் பாரிக்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டதுடன், அப்பொழுது ஜப்பான் மற்றும் தெற்கு கொரியா உடனான வாஷிங்டனின் நீண்டகால மூலோபாய கூட்டணிகள் பற்றி அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். பெய்ஜிங் எப்போதும் அச்சுறுத்திவந்த கிழக்கு சீனக் கடல் தீவுகள் (ஜப்பானில் சென்காகு என்றும், சீனாவில் டயோயு என்றும் அறியப்படுகிறது), தற்போது ஜப்பான் வசம் உள்ளதும், சீனாவினால் உரிமை கோரப்படுகின்றதுமான இந்த தீவுகள் குறித்து சீனாவுடனான போரை தொடங்குவது பற்றிய ஒபாமா நிர்வாகத்தின் உறுதிப்பாட்டினை இவரும் வலியுறுத்தினார்.
மாட்டிஸ் இன் தொலைபேசி அழைப்பிற்கு அடுத்த நாள் வாஷிங்டனில் அதிகாரிகள், ஒரு "பெரும் (அமெரிக்க) பாதுகாப்பு பங்குதாரராக" இந்தியாவின் சமீபத்திய பதவியை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து சட்ட மாற்றங்களும் தற்போது செய்துமுடிக்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்தனர். பென்டகனின் போர்விமானங்கள் மற்றும் போர்கப்பல்களின் சேவைக்கு இந்திய இராணுவத் தளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க புது தில்லி ஒப்புகொண்டதற்கு ஒரு பிரதி உபகாரமாக, கடந்த ஆண்டு ஒபாமா நிர்வாகம் இந்தியாவிற்கு "பெரும் பாதுகாப்பு பங்குதாரர்" என்ற அந்தஸ்தை வழங்கியது. இது வாஷிங்டனின் அதிக நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகளுடன் கொண்டுள்ள உடன்பாடுகளுக்கு இணையாக அமெரிக்க ஆயுதங்களை இந்தியா அணுகுவதற்கான அனுமதியையும், மேலும் அமெரிக்க வர்த்தகத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இராணுவ மற்றும் "இரட்டை பயன்பாடு" கொண்ட பொருட்களை இந்திய நிறுவனங்கள் வாங்குவதற்கு முனையும்போது அதற்கான "ஒரு உத்தேச ஒப்புதலையும்" வழங்குகிறது.
21ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல், அமெரிக்க முயற்சிகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவை மிக முக்கியமானதாக கருதி, அவசியம் ஏற்பட்டால் சீனாவின் எழுச்சியை தடைசெய்வதற்கு ஏற்றவாறு, குடியரசு மற்றும் ஜனநாயக நிர்வாகங்கள் ஒன்றுபோல இந்தியா உடனான மூலோபாய கூட்டுக்களை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. இந்தியாவின் அளவு, அதன் பெரும் அணுஆயுதமேந்திய இராணுவம், மற்றும் மூலோபாய இடஅமைவு போன்ற அனைத்து காரணங்களால் பென்டகன், CIA மற்றும் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் சிந்தனை குழுக்களால் இந்தியா ஒரு "மூலோபாய பரிசாக" உருவெடுத்துள்ளதாக எடுத்துக்காட்டப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகளின் நிலைபாட்டிலிருந்து, இந்தியா சீனாவின் மேற்கு அடிவயிற்றுப் பகுதியில் உள்ளது. பெரும்பகுதி சீனாவின் எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்களின் இறக்குமதிகளையும், மேலும் ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு கிட்டத்தட்ட அதன் அனைத்து ஏற்றுமதிகளையும் கொண்டுசேர்க்கும் நிலையில், இந்திய பெருங்கடலுக்கு சற்று வெளியே இருந்துகொண்டு, கடல்மார்க்கங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு பிரதான முகட்டுப் புள்ளியை வழங்குகிறது.
2011ல் ஒபாமா நிர்வாகம் அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" கொள்கையை தொடங்கியதிலிருந்து, மே 2014ல் நரேந்திர மோடியும் அவரது இந்துமத மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியும் (Bharatiya Janata Party - BJP) ஆட்சிக்கு வந்த பின்னர் குறிப்பாக இந்திய உயரடுக்கினரால் உந்தப்பட்டதிலிருந்து, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ மூலோபாய தாக்குதல்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டது.
அவர்கள் பிரிவு உபசார உரையில், பாதுகாப்பு செயலர் ஆஷ்டன் கார்ட்டர், வெளியுறவு செயலர் ஜோன் கெர்ரி இருவரும் மேம்பட்ட இந்திய அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டுக்களை ஒபாமா நிர்வாகத்தின் எட்டு ஆண்டுகால ஜனாதிபதி ஆட்சியின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக குணாம்சப்படுத்தினர்.
மோடியின் கீழ், வாஷிங்டனின் சீன எதிர்ப்பு தாக்குதலில் கண்கூடான வகையில் இந்தியா ஒரு முன்னணி அரசாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக, அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவர் அட்மிரல் ஹாரி ஹாரிஸ் கடந்த மாதம் அவரது கருத்தினை வெளிப்படுத்தியது போன்று இந்தியா அதன் இராணுவ தளங்களை அமெரிக்கா வழக்கமாக பயன்படுத்தும் விதமாக திறந்துவைத்துள்ளது, மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி கப்பல் மற்றும் கப்பல் நடமாட்டங்கள் குறித்து இந்தியா, அமெரிக்க கடற்படையினருடன் உளவுத்துறை தகவல்களை தற்போது பரிமாறிவருகின்றது.
அமெரிக்காவின் நெருங்கிய ஆசிய பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடன் புது தில்லியும் அதன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்புகளை பெருமளவில் அதிகரித்திருக்கின்றது.
ஜனவரி 2015ல், "ஆசிய பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி தொடர்பான இந்திய அமெரிக்க கூட்டு மூலோபாய தொலைநோக்கு," என்பது ஆரம்பிக்கப்பட்டதுடன், சீனாவை ஒரு "ஆக்கிரமிப்பாளராக" சித்தரிக்கும் தென் சீனகடல் சச்சரவு மீதான வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் தன்மையிலான நிலைப்பாட்டை மோடி அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்த நிலைப்பாடு அமெரிக்காவை இன்னும் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதற்கு ஊக்கமளித்துவருகிறது. தற்போது சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள தென் சீனக்கடல் தீவுகளில் அதன் அணுகலை தடைசெய்யும் பொருட்டு ட்ரம்ப் நிர்வாகம் முடிந்தவரை சீனாவை அச்சுறுத்தும் நிலைக்கு சென்றுள்ளதுடன் போர் அறிவிப்பிற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு சட்டத்தினையும் வகுத்துள்ளது.
சீனாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவத்தின் வான்வழி-கடல்வழி போர் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றவிருக்கும் பென்டகனின் ஏழாவது கடற்படை பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ள போர்கப்பல்கள் மற்றும் இதர நீர்மூழ்கி கலன்களின் சேவைக்கும், பழுதுபார்ப்புக்கும் இந்தியாவை ஒரு மையமாக உருவாக்க தீரிமானிக்கப்பட்டுள்ளது என்ற இந்த வார அறிவிப்பில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளில் இந்தியா முடிந்தளவிற்கு அதனை ஒருங்கிணைத்துவருவது குறித்து மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் அதிகார சமநிலையை, மிக நெருக்கமான இந்திய அமெரிக்க கூட்டணி தலைகீழாக்கியுள்ள காரணத்தினால், இந்தியா மற்றும் அதன் முக்கிய போட்டி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இடையில் பூகோள அரசியல் அழுத்தங்கள் அபாயகரமான வகையில் தீவிரமடைவதற்கு இட்டுச்செல்கின்றது. மூன்று நாடுகளும் ஈடுபடுகின்ற ஒரு அணுஆயுத மற்றும் ஏவுகணை மூலம் குண்டுவீசும் ஆயுத போட்டியாக இதன் வெளிப்பாடு உள்ளது.
புது தில்லி, வாஷிங்டன் தன் மீது பொழிந்த பல மூலோபாய "உதவிகள்" காரணமாக துணிச்சல் பெற்று, ஜம்மு-காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு பாகிஸ்தானிடமிருந்து வழங்கப்பட்டுவரும் அனைத்து இராணுவ தளவாட உதவிகளையும் அகற்றுவதற்கு இஸ்லாமாபாத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தம் குறித்த ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக, தெற்கு ஆசியா அதன் மாபெரும் போர் நெருக்கடிக்குள் மூழ்கிவிட்ட நிலையில், கடந்த இலையுதிர்காலத்தில், ஒரு இந்திய இராணுவ தளத்தின் மீது இஸ்லாமிய காஷ்மீர் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானுள்ளே அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டது.
நான்கு தசாப்தத்திற்கும் மேலாக, ஒரு செயல்பூர்வ தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்களையும், எதிர் தாக்குதல்களையும் தூண்டச்செய்வது விரைவில் ஒரு முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும் என்ற பயத்தினால் பாகிஸ்தானுள்ளே தாக்குதல் நடத்தியதை இந்தியா பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. மோடி அரசாங்கம் இந்த கொள்கைக்கு இடைவெளி அளித்துள்ளது. "மூலோபாய கட்டுப்பாடு" எனும் கட்டுக்களை தகர்த்தெறிந்தது போன்று அதிரடித் தாக்குதல்கள் குறித்து அது கொண்டாடியது, மேலும் அணுஆயுதமேந்திய அரசுகளுக்கு இடையே முதலாவது போருக்கு வழிவகுக்கும் என்பதால் பயங்கரவாதத்தை "நிராகரிக்கும்" வரையிலும் பாகிஸ்தானை அது தண்டிக்குமென்றும் சபதம் எடுத்துக்கொண்டது.
வாஷிங்டன் மூலமாக இந்த ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை கொண்டிருப்பதற்கு மோடி அரசாங்கம் ஊக்கப்படுத்தப்பட்டு வந்துள்ளது. வாஷிங்டன் புது தில்லி உடனான தனது மூலோபாய கூட்டுக்கள் மீதான மதிப்பை நிரூபிக்கும் ஆர்வத்துடன், ஒபாமா நிர்வாகம், முதலில் மறைமுகமாகவும், பின்னர் பகிரங்கமாகவும், பாகிஸ்தான் உள்ளே இந்தியாவின் சட்டவிரோத மற்றும் மிகுந்த ஆத்திரமூட்டும் வகையிலான "நுட்பமான தாக்குதல்களுக்கு" ஆதரவளித்தது.
மாட்டிஸ் அவரது இந்திய சமதரப்பான பாரிக்கரை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு முன்பு கூட, ட்ரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுடன் கடும் போக்கினை மேற்கொள்ள எதிர்நோக்கியுள்ளதை எப்படி தனக்குச் சாதகமாக சுரண்டிக் கொள்வது என்று புது தில்லி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது, இதில் இதனால் பாக்கிஸ்தானுக்குள்ளே தாலிபனின் பாதுகாப்பான புகலிடங்களை அகற்றுவதற்கு இன்னும் தீவிரமாக செயல்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று திரும்ப திரும்ப வாஷிங்டன் அதனை விமர்சித்து வருகின்றது. உண்மையில், இஸ்லாமாபாத் அல்லது குறைந்தபட்சம் பாகிஸ்தானின் இராணுவ உளவுத்துறை அமைப்புக்களின் பிரிவுகள், தாலிபனின் சில பிரிவுகளுடனான கூட்டுக்களை பராமரித்துவருவது தான் இந்திய அமெரிக்க கூட்டணியின் தாக்கத்திற்கு எதிரான இழப்பை ஈடுசெய்யும் செயலாக உள்ளது. மேலும் இது பாகிஸ்தான் மற்றும், அதைப்போன்று ஆறு மடங்கு அளவிலான பெரும் மக்கள் தொகை மற்றும் எட்டு மடங்கு அளவிலான பெரும் பொருளாதாரம் கொண்ட ஒரு நாடான இந்தியாவிற்கும் இடையே மூலோபாய சமநிலையற்ற தன்மையை கடுமையாக அதிகரித்துவருகிறது.
வளர்ந்துவரும் இந்திய அமெரிக்க உறவுகளுக்கு பாகிஸ்தானின் முதன்மையான இராணுவ மூலோபாய விடையிறுப்பாக பெய்ஜிங் உடனான அதன் நீண்டகால கூட்டணியை ஆழப்படுத்தும் முயற்சியில் இருந்து வந்தது. இந்த முறை பெய்ஜிங் மற்றும் புது தில்லி இடையே இன்னும் அழுத்தங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
கடந்த வாரம் இந்திய பாராளுமன்றத்தின் ஒரு அறிக்கையில், பாகிஸ்தான், காஷ்மீர் கிளர்ச்சிக்கு அது அளித்துவரும் எந்தவித பொருள் உதவியினையும் நிறுத்தும் வரை, அதனுடனான எல்லாவித தொடர்புகளையும் மறுத்துவருகின்ற மோடி அரசாங்கத்தின் கடுமையான கொள்கையை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் வலியுறுத்தினார். "சமாதானம் ஏற்படும்வரை, எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை" என்ற இந்தியாவின் கொள்கையை ஸ்வராஜ் பிரகடனப்படுத்தியதுடன், இஸ்லாமாபாத் இன் வளர்ந்துவரும் இராஜதந்திர தனிமைப்படுத்துதல் குறித்தும் ஊக்கமளித்தார்.
2015 வரையிலும், ஒரு கடுமையான எதிர்விளைவு திருப்பித்தாக்கும் விளைவுகளை கொண்டிருக்கும் என்பதும், மேலும் வாஷிங்டன் உடனான புது தில்லியின் நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் சீனா, இந்திய-அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டணியை பொறுத்து ஒரு எச்சரிக்கையுடனான அணுகுமுறையை மேற்கொண்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, சீனா அதன் One Belt, One Road என்ற முன்முயற்சியின் அடிக்கல்லாக 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் சீன-பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதற்கான அதன் முடிவில் எடுத்துக்காட்டுவது போல, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்ஜிங் அதிகரித்த அளவில் இந்தியாவுடன் மோதல் நிலைப்பாட்டை எடுத்துவந்துள்ளது.
குறிப்பிடத்தக்கவாறு, பெய்ஜிங் இன் முக்கிய மூலோபாய கவலைகளின் பட்டியலில் அதிக எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ளது என்று ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பெய்ஜிங் அறிக்கையாக அளித்துவருகிறது. ட்ரம்பின் ஒரு ஆலோசகரும், சீன நிபுணருமான மைக்கல் பில்ஸ்பரியை பொறுத்தவரையில், தாய்வான்; ஒரே சீன கொள்கை; தெற்கு கொரியாவில் வாஷிங்டன் கட்டியெழுப்பிவரும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு (THAAD); இந்தியாவுக்கான அமெரிக்க ஆயுத விற்பனை; சீன இந்திய எல்லை சச்சரவு; இந்தியாவில் அமைந்துள்ள புலம்பெயர் திபெத்திய அரசாங்கத்திலிருந்து வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்துள்ள தலாய் லாமா; போன்ற ஆறு உயர் "உணர்திறன்மிக்க" விடயங்களை பெய்ஜிங் பட்டியலிட்டுள்ளது.
மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சார்ட் வேர்மா, தெற்கு திபெத் என்று சீனா உரிமைகோரும் பிரதேசமான, அருணாச்சல பிரதேசத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு உயர் மட்ட விஜயத்தினை மேற்கொண்டார். கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு கீழ் நிலை அமெரிக்க தூதரக அதிகாரி இதேபோன்று விஜயம் செய்தபோது, அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு மறுக்கமுடியாத அங்கமாக வாஷிங்டன் கருதுவதாக தெரிவித்தார்.