Print Version|Feedback
Far-right Front National surges in French presidential election polls
பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்புகளில் தீவிர-வலது தேசிய முன்னணி மேலெழுகிறது
By Kumaran Ira and Alex Lantier
25 February 2017
ஏப்ரல் 23 இன் முதல் சுற்று பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்பது வாரங்களுக்குச் சற்று குறைந்த நாட்களுக்கு முன்னதாக, நவ-பாசிசவாத தேசிய முன்னணி (FN) வேட்பாளர் மரீன் லு பென் அவரது பிரதான போட்டியாளர்களை விட முன்னிலை பெற்று வருகிறார். அவர் மே 7 ஆம் தேதி இரண்டாம் சுற்று தேர்தலுக்கு மிக சுலபமாக தகுதி பெற்று, பெரும்பாலும் அனேகமாக En Marche இன் இமானுவெல் மாக்ரோன் அல்லது வலதுசாரி குடியரசு கட்சி (LR) வேட்பாளர் பிரான்சுவா ஃபிய்யோனை எதிர்கொள்ளக் கூடும் என்று சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் பரந்த மக்கள் எதிர்ப்பிற்கு இடையிலும் இறுதியில் டொனால்ட் ட்ரம்ப் ஒரு சாத்தியமான, வெற்றிகரமான வேட்பாளர் ஆனதைப் போல, லு பென்னும் அவரின் எதிர்பாளர்களான குறிப்பாக சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்திற்கு எதிரான வெடிப்பார்ந்த சமூக கோபத்தின் காரணமாக, 2017 தேர்தல்களில் வெற்றி பெறலாம். முதல் சுற்றில் ஃபிய்யோன் (20 சதவீதம்) மற்றும் மாக்ரோனை (17 சதவீதம்) விட அதிகமாக அவருக்கு 27 சதவீத வாக்குகள் கிடைக்கக்கூடுமென புதனன்று BFMTV க்கான Elabe கருத்துக்கணிப்பு கண்டறிந்தது.
வலது சாரி Mouvement Démocrate (MoDem) இன் தலைவர் பிரான்சுவா பேய்ரூ (François Bayrou), அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்றும், மாக்ரோனை அங்கீகரிப்பதாகவும் புதனன்று அறிவித்த பின்னரும் கூட, லு பென் இன்னமும் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளார். பேய்ரூ இன் ஆதரவளிப்புக்குப் பின்னர் நடத்தப்பட்ட Ifop-Fiducial கருத்துக்கணிப்பு ஒன்று, மாக்ரோன் 22 சதவீத வாக்குகள் பெறுவார் என்று அறிவித்தது. இரண்டாம் சுற்றில் அவர் [மாக்ரோன்] லு பென்னின் 39 சதவீதத்தைக் காட்டிலும் 61 சதவீதம் பெற்று ஜெயிக்கக்கூடும் என்று அதே கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. இந்த லு பென்னின் 39 சதவீதம் என்பது, முன்னர் ஒரு முறை இரண்டாம் சுற்று தேர்விற்கு தேசிய முன்னணி முன்னேறி இருந்த 2002 ஜனாதிபதி தேர்தலில் அவரது தந்தை ஜோன்-மரி பெற்ற 18 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
ஜனாதிபதி பதவியை லு பென் இப்போது பெறத் தவறினாலும் கூட, அவர் இரண்டாம் சுற்றுக்கான கருத்துக்கணிப்புகளில் அவரது எண்ணிக்கையை ஒரேசீராக அதிகரித்து கொண்டிருக்கிறார், கடந்த முறை கருத்துக்கணிப்புக்குப் பின்னரில் இருந்து, அக்கட்சி 1.5 இல் இருந்து 2 சதவீதமாக உயர்ந்துள்ளது. 53 சதவீத வாக்காளர்கள் இன்னமும் முடிவெடுக்காத நிலையில், லு பென்னுக்கு சாதகமான இறுதி-நிமிட மாற்றத்தையும் ஒதுக்கிவிட முடியாது.
சோசலிஸ்ட் கட்சியினது சிக்கன நடவடிக்கைகள் மீதான பரந்த கோபத்திற்கு இடையே, உடலுழைப்பு தொழிலாளர்களிடையே தேசிய முன்னணி வளர்ந்து வருகிறது: இடது முன்னணி வேட்பாளர் ஜோன்-லூக் மெலென்சோன் (17 சதவீதம்), மாக்ரோன் (15 சதவீதம்), சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பெனுவா அமோன் (12 சதவீதம்) மற்றும் ஃபிய்யோன் (7 சதவீதம்) ஆகியோருடன் ஒப்பிடுகையில் 44 சதவீத உடலுழைப்பு தொழிலாளர்கள் லு பென்னுக்கு வாக்களிக்க விரும்புகின்றனர். புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் தொழிலாளர் போராட்டம் (LO) ஆகியவை 2002 இல் மொத்த வாக்குகளில் அண்மித்து 10 சதவீதம் பெற்ற உடலுழைப்பு தொழிலாளர்கள் மத்தியில் முறையே 3 மற்றும் 2 சதவீதம் மட்டுமே பெறக்கூடுமென கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதிகாரத்திற்கான ஒரு பலமான போட்டியாளராக தேசிய முன்னணியின் வளர்ச்சியானது, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அமெரிக்க மேலாதிக்கத்திலான உலக ஒழுங்கமைப்பின் ஒரு சர்வதேச பொறிவின் பாகமாகும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) வெளியேறுவதென்று கடந்த ஆண்டு பிரிட்டன் வாக்களித்த பின்னர், ட்ரம்ப் பதவியேற்றதும் நேட்டோ கூட்டணியை "வழக்கற்றுப்போன" ஒன்றாக நிராகரித்ததோடு, ரஷ்யாவிற்கு ஆதரவை சமிக்ஞை செய்து, ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மனியின் ஒரு கருவியென்று தாக்கினார். ஐரோப்பிய முதலாளித்துவ அரசியலின் சர்வதேச கட்டமைப்பு, உடைந்து வருகிறது.
லு பென்னுக்கு ஊடகங்களில் இடம் வழங்கப்பட்டு அவர் ஒரு மரியாதைக்குரிய வேட்பாளராக கையாளப்படுகிறார் என்றால், இது பிரெஞ்சு நிதியியல் செல்வந்த அடுக்கு எவ்வாறு அதன் நலன்களை இப்போது பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பாக நிலவும் ஆழ்ந்த பிளவுகளின் காரணத்தினால் ஆகும். சோசலிஸ்ட் கட்சியும் மற்றும் முன்னாள் சோசலிஸ்ட் கட்சி பொருளாதார மந்திரியுமான மாக்ரோனின் பிரச்சாரம் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவின் போர் உந்துதலையும் மற்றும் பேர்லின் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத் திட்டங்களையும் ஆதரிக்கிறது. அவர்கள், அமெரிக்க ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது ட்ரம்புக்கு விரோதமாக இருந்தார்கள்.
ஆனால் தேசிய முன்னணியோ யூரோ, ஜேர்மன் மீள்ஆயுதமயமாதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மன் பொருளாதார மேலாதிக்கத்தால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக உணரும் ஒரு பிரிவுக்காக பேசுவதுடன், பேர்லினுக்கு எதிராக மாஸ்கோ உடனான பிரான்சின் பாரம்பரிய கூட்டணியைப் பகுதியாக மீட்டமைக்க விரும்புகிறது. ட்ரம்பின் தேசியவாத வெளியுறவு கொள்கை போன்றதையே எதிரொலிக்கும் லு பென், ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒரு "புதிய உலகத்தின்" தொடக்கம் என்பதாக வரவேற்றது. பிரிட்டன் வெளியேற்றத்தையும் பாராட்டிய அப்பெண்மணி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவிலிருந்து பிரான்ஸ் வெளியேறி ஒரு பிரெஞ்சு தேசிய நாணயமான பிரான்க்கிற்கு (franc) திரும்ப வேண்டுமென அழைப்புவிடுத்தார்.
“யூரோ நமது பொருளாதார அபிவிருத்திக்கு ஒரு பிரதான தடையாகும்,” என்றார். அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகளையும் மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்தும் வகையில் ஓர் ஐரோப்பிய உச்சிமாநாட்டை ஒழுங்குபடுத்துவது உட்பட அப்பெண்மணி பல அதிர்ச்சிகரமான முன்மொழிவுகளைச் சூளுரைத்துள்ளார். பிரெஞ்சு தொழில்துறைக்குப் புத்துயிரூட்ட நாணய மறுமதிப்பீடு செய்ய விரும்புவதாக மீண்டும் மீண்டும் கூறி வரும் அவர், அதுபோன்றவொரு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், யூரோ செலாவணியிலிருந்து பிரான்ஸ் வெளியேறுவது மீது ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவர் பரிந்துரைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணி பதவிக்கு வந்தால், அது முதலாளித்துவ ஐரோப்பாவின் அரசியல் உருக்குலைவை பரந்தளவில் தீவிரப்படுத்தும் ஒரு போர் மற்றும் ஆழ்ந்த சமூக பிற்போக்குத்தன ஆட்சியை முன்னெடுக்கும். அனைத்திற்கும் மேலாக ஜேர்மனியை இலக்கில் வைத்து போட்டித்தன்மை மிக்க நாணய மறுமதிப்பீட்டு கொள்கை ஒன்றுடன் தொழிலாளர்களின் நுகர்வு சக்தியை குறைக்கும் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு, அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதல்களும் அதன் அறிவிக்கப்பட்ட கொள்கைகளில் உள்ளடங்கும். சோசலிஸ்ட் கட்சியின் அவசரகால நெருக்கடி நிலையால் பொலிஸ் நடைமுறையளவில் ஏதேச்சதிகார அதிகாரங்களைப் பெற்றுள்ள நிலையில், மக்கள் எதிர்ப்பை நசுக்கும் முயற்சியில் அது பொலிஸில் உள்ள தேசிய முன்னணிக்கான பரந்த ஆதரவை சார்ந்திருக்கும்.
ஐரோப்பா எங்கிலும் உள்ள அதி-வலது கட்சிகளைப் போலவே, தேசிய முன்னணியும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் ஓர் இராணுவவாத சூழலை உருவாக்கவும் புலம்பெயர்ந்தோர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத விஷமப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட திட்டமிடுகிறது. அது ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்ற மற்றும் புலம்பெயர்வோருக்கான உள்நுழைவு அனுமதியைக் குறைக்க மற்றும் பிரெஞ்சு குடியுரிமைப் பெறுவதன் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடுகிறது. “நீங்கள் எங்கள் நாட்டுக்கு வருவதானால், உங்கள் குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைக்கும், நல்ல முறையில் கவனித்துக் கொள்ளப்படுவீர்கள் என்றோ, கையாளப்படுவீர்கள் என்றோ எதிர்பார்க்காதீர்கள், அதெல்லாம் முடிந்துவிட்டது, அந்த விளையாட்டெல்லாம் முடிந்துவிட்டது!” என்று அறிவித்து, வெளிநாட்டு குழந்தைகளுக்கான இலவச கல்வியை நிறுத்துவதற்கு அவர் உறுதியளித்துள்ளார்.
தேசிய முன்னணியின் திட்டநிரலுக்கு மக்களிடையே, அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தில், ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. பிரான்சில் ட்ரம்புக்கான எதிர்ப்பு, 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதே; தேசிய முன்னணியின் தீவிர-வலது தேசியவாத வேலைத்திட்டத்திற்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்ற கருத்தை வழங்குகிறது.
பிரிட்டனின் வலது சாரி Spectator பத்திரிகையின் ஒரு கட்டுரையாளர் சமீபத்தில், தேசிய முன்னணி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தினுள் தூண்டிவிடக்கூடிய எதிர்ப்பு தொடர்பான முதலாளித்துவ வர்க்கத்தின் அச்சங்களுக்கு குரல் கொடுத்து எழுதுகையில், “அவர் ஜனாதிபதியானால், பிரான்ஸ் ஒரு அரை நூற்றாண்டில் மிக மோசமான, ஒரு உண்மையான நெருக்கடியை முகங்கொடுக்கும். பாசிசவாதத்திற்கு எதிராக குடியரசைப் பாதுகாப்பதாக தங்களைத்தாங்களே காணுபவர்களிடம் இருந்து நிச்சயமாக அங்கே வேலைநிறுத்தங்களும் மற்றும் வன்முறை ஆர்ப்பாட்டங்களும் இருக்கும். அவர் எவ்வாறு ஒரு உயிர்பிழைத்து இருக்கக்கூடிய அரசாங்கத்தை உருவாக்குவார் அல்லது நாடாளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையைப் பெறுவார் என்பது தெளிவின்று உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
மாக்ரோன், சோசலிஸ்ட் கட்சி, அல்லது சோசலிஸ்ட் கட்சியின் பல்வேறு துணை அமைப்புகளான இடது முன்னணி, NPA அல்லது LO ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலமாக, தொழிலாள வர்க்கம், தேசிய முன்னணி முன்னிறுத்தும் அச்சுறுத்தல்களுக்கு முடிவு கட்ட முடியாது. இந்த அமைப்புகள் அனைத்தும் தான், நவ-பாசிசவாதிகள் உருவாவதற்கு வழி வகுத்துக் கொடுத்தவை. நிரந்தரமாக அவசரகால நெருக்கடி நிலையைப் புதுப்பித்தும் மற்றும் மதிப்பளிப்பதற்கான ஒரு அறிகுறியாக லு பென்னை எலிசே மாளிகைக்கு வரவேற்றும், சோசலிஸ்ட் கட்சி, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும், அதன் சிக்கன கொள்கைகள் மற்றும் போர்களையும் வடிவமைக்க முயன்ற போது இதே அமைப்புகள் சோசலிஸ்ட் கட்சியை ஆதரித்தன.
மிக அடிப்படையாக, இவர்கள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் உலகளாவிய முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் தோல்வியால் மதிப்பிழந்துள்ளனர். நிதியியல் தினசரி Les Echos இல் அவரது பொருளாதார பரிந்துரைகளை நேற்று பட்டியலிட்ட மாக்ரோன், பொது செலவுகளில் 25 பில்லியன் யூரோ உட்பட 60 பில்லியன் யூரோ [$63.5 பில்லியன்] கடுமையான செலவின வெட்டுக்களுக்கும் மற்றும் அரசுத்துறையில் 125,000 வேலை வெட்டுகளுக்கும் அழைப்புவிடுத்தார். அதேநேரத்தில் இன்னும் அனுகூலமான கொள்கைகளைப் பெறுவதற்காக, "வெளிப்படையான மற்றும் அவசியமான" பேரம்பேசல்களைக் கோரி அவர் பேர்லினை அச்சுறுத்தினார்.
முற்றான சீர்குலைவு நிலவிவரும் சோசலிஸ்ட் கட்சிக்குள், லு பென்னின் வெற்றி தவிர்க்கவியலாதது என்ற கருத்து வெற்றிபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. “மரீன் லு பென் ஜெயிப்பாரென சோசலிஸ்ட் கட்சி ஏன் நம்புகிறது,” என்று தலைப்பிட்ட பெப்ரவரி 16 கட்டுரையில், “பூமியின் மாற்றங்கள் ஒருபோதும் மரீன் லு பென்னுக்கு இந்தளவிற்கு சாதகமாக இருந்திருக்காது,” என்று கூறிய சோசலிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் உட்பட உயர்மட்ட சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகளை Le Point மேற்கோளிட்டது.
லு பென் ஏன் ஜெயிக்கக்கூடும் என்பதற்கு, பிரிட்டன் வெளியேறுவது, ட்ரம்ப் தேர்வானமை மற்றும் பிரான்சில் சாத்தியமான புதிய பயங்கரவாத தாக்குதல்களின் பாதிப்பு உட்பட 10 காரணங்களை அது பட்டியலிடுகிறது. இதழாளர் எரிக் சிமோர் மற்றும் எழுத்தாளர் மிஷேல் ஒன்பிரே (Michel Onfray) போன்ற தேசிய முன்னணி ஆதரவு புத்திஜீவிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் நவ-பாசிசவாதிகள், சிந்தனைகளின் "கலாச்சார சண்டையில் ஜெயித்து" உள்ளார்கள் என்பதும் அந்த காரணங்களில் குறிப்பிடத்தக்க ஒரு காரணமாகும். பிரான்சில் ஒரு முன்னணி தாராளவாத பதிப்பின் இந்த கருத்துரை, ஆளும் வர்க்கத்தின் சொந்த வரலாற்று திவால்நிலைமைக்கு அதுவே ஒரு நாசகரமான சுய-குற்றப்பத்திரிகை வழங்குவதாக உள்ளது.