Print Version|Feedback
Behind the Flynn resignation and Trump crisis: A bitter conflict over imperialist policy
ஃபிளின் இராஜினாமாவிற்கு பின்னால் இருப்பதும், ட்ரம்ப் நெருக்கடியும்: ஏகாதிபத்திய கொள்கை மீதான ஒரு கடுமையான மோதல்
Patrick Martin
15 February 2017
திங்களன்று மாலை தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் இன் இராஜினாமாவிற்குப் பின்னர், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு தீவிர அரசியல் நெருக்கடியை முகங்கொடுத்து வருகிறது. ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னரே ரஷ்யா உடனான ஃபிளினின் தொடர்புகள் குறித்து காங்கிரஸ் விசாரிக்க வேண்டுமென ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளும் அதிகரித்தளவில் முறையிட்டு வருகின்றன என்பதோடு, அந்த தொடர்புகள் குறித்து ட்ரம்ப் என்ன அறிந்திருந்தார் என்பதையும், அவருக்கு தெரிந்தும் மற்றும் அவரது ஒப்புதலுடனும் தான் ஃபிளின் அவ்வாறு செயல்பட்டிருந்தாரா என்பதை ட்ரம்ப் விளக்க வேண்டுமென்றும் அவை கோருகின்றன.
வாஷிங்டனுக்கான ரஷ்ய தூதர் சேர்ஜி கிஸ்லியாக் (Sergey Kislyak) உடன் டிசம்பர் 29, 2016 இல் ஃபிளின் தொலைபேசியில் உரையாடியது குறித்து ட்ரம்ப் பதவியேற்றதற்கு பின்னர் உடனடியாக FBI ஃபிளினை விசாரித்ததாகவும், அந்த உரையாடலை NSA இரகசியமாக கண்காணித்து, பதிவு செய்ததாகவும் செவ்வாயன்று மதியம் செய்திகள் வெளியாயின.
ரஷ்யா மீதான அமெரிக்க தடையாணைகள் குறித்து ஃபிளின் அத்தூதருடன் விவாதித்திருந்ததாகவும், அந்த உண்மையை அவர் தொடர்ந்து மறுத்து வருவது பொய்யானது என்றும் நீதித்துறை அதிகாரிகள் பல வாரங்களுக்கு முன்னரே வெள்ளை மாளிகைக்கு தகவல் அளித்திருந்ததை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது. ஃபிளின்- கிஸ்லியாக் உரையாடலின் எழுத்துப் பிரதி வாஷிங்டனின் உயர்மட்ட அதிகாரிகளிடையே சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய புலனாய்வு முகமை (CIA) மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை (NSA) வழங்கிய ஆணவங்களுக்கு வடிகாலாக பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான ஊடகங்களில் சேவையாற்றும் பல விமர்சகர்கள், பதவி நீக்க குற்றவிசாரணை எனும் ஆபத்தையோ அல்லது நிக்சன்-பாணியில் பலவந்தமான இராஜினாமாவையோ மேலுயர்த்த தொடங்கி உள்ளனர்.
அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் சீறிக் கொண்டிருக்கும் மோதல், அமெரிக்க அரசியல் வாழ்வின் மேற்புறத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. இந்த சண்டையில், வெள்ளை மாளிகை, மத்திய புலனாய்வு முகமை (CIA), தேசிய பாதுகாப்பு ஆணையம் (NSA) கூட்டரசு புலனாய்வு அமைப்பு (FBI) மற்றும் பென்டகன் என முதலாளித்துவ அரசின் பிரதான அமைப்புகளும், அத்துடன் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என இரண்டு கட்சிகளது தலைமைகளும் சம்பந்தப்பட்டுள்ளன. வெளியுறவு கொள்கை மீதான பிளவுகளும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் போதுமானளவிற்கு ஆக்ரோஷமான போக்கை எடுக்கவில்லை என்ற இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்குள் நிலவும் கவலைகளுமே இந்த மோதலின் மையத்தில் உள்ளன.
புதிய நிர்வாகத்தை விட, ட்ரம்ப் க்கு எதிரான பிரச்சாரம், பிற்போக்குத்தனத்திலும் இராணுவவாதத்திலும் குறைந்ததல்ல. ஒரு தீர்க்கமான தர்க்கத்தை கொண்டுள்ள இது, ஒட்டுமொத்த உலகிற்கும் சாத்தியமானளவிற்கு பேரழிவுகரமான விளைவுகளோடு, ரஷ்யாவுடனான அரசியல் மற்றும் இராணுவ மோதலின் ஒரு தீவிரப்பாட்டுக்கு இட்டுச் செல்கிறது.
இந்த பிரச்சாரம் தான் ஜனநாயகக் கட்சியினது முன்னீடுபாட்டின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 2016 தேர்தலின் இறுதி மாதங்கள் முழுவதும், ஹிலாரி கிளிண்டன் மீண்டும் மீண்டும் ட்ரம்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஓர் அரசியல் கையாள் என்று தாக்கினார், அதேவேளையில் அவர் தன்னைத்தானே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகவும் நம்பகமான பாதுகாவலாக சித்தரித்து கொண்டார்.
இந்த பிரச்சினை பின்னர் மீண்டும் தேர்தலுக்குப் பிந்தைய இடைமருவு காலத்தில், ட்ரம்பின் ஆச்சரியமான வெற்றிக்கு "ரஷ்ய இணைய ஊடுருவல்" தான் காரணம் என்ற வாதங்களுடன், உயர்த்தப்பட்டது. ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பின்னர், காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் செனட் குடியரசு கட்சியினரது ஒரு பிரிவினர் சிஐஏ மற்றும் பென்டகனின் அரசியல் தாக்குமுகப்பாக செயல்பட்ட நிலையில், இந்த கருத்துரு மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர், வாட்டர்கேட் சகாப்த கேள்வியான, “ஜனாதிபதிக்கு அது குறித்து என்ன தெரியும், அவருக்கு எப்போது தெரிய வந்தது?” என்பதை உயர்த்துவதற்கு ஃபிளினின் இராஜினாமாவை பற்றிக் கொண்டனர். டிசம்பர் 29 இல் கிஸ்லியாக்கிற்கு ஃபிளின் தொலைபேசியில் அழைத்த அன்றைய தினம்தான் ஜனாதிபதி ஒபாமா ரஷ்யா மீது புதிய தடையாணைகளை விதித்தார் என்ற நிலையில், ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நுழைந்ததும் அந்த தடையாணைகள் தளர்த்தப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும் என்பதற்கு ஃபிளின் அப்போது உத்தரவாதங்கள் வழங்கினார் என்பதே அவர்களின் வாதமாகும்.
மிகவும் கடுமையான கருத்துக்கள், பிரதிநிதிகள் சபையின் உளவுத்துறைக்கான தேர்வு கமிட்டியின் ஓர் அங்கத்தவரான கலிபோர்னியாவின் எரிக் ஸ்வல்வெல்லிடம் (Eric Swalwell) இருந்து வந்தன. ட்ரம்ப் ஆதரவாளர்கள் "ரஷ்யாவுடன் முறையற்ற உறவுகளைக் கொண்டுள்ளனர்" மற்றும் இதற்கு ட்ரம்பே கூட உடந்தையாய் இருக்கிறார் என்று அவர் அறிவித்தார். “காங்கிரஸில் குடியரசுக் கட்சியினருக்கு பெரும்பான்மைகள் இருக்கலாம் மற்றும் அவர்களது வேட்பாளர்கள் வெள்ளை மாளிகையில் ஜெயித்து வந்திருக்கலாம், ஆனால் [ஜனநாயகக் கட்சியினர்] ஒன்றும் நிராதரவானவர்கள் கிடையாது,” என்றார். “எங்களோடும் அமெரிக்க மக்கள் இருக்கிறார்கள், ஜனாதிபதி நம்மோடு இருக்கிறாரா இல்லை ரஷ்யர்களோடு இருக்கிறாரா என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளும் வரையில் அமெரிக்க மக்கள் திருப்தி அடையப் போவதில்லை,” என்றார்.
மத்திய புலனாய்வு முகமையும் (CIA), தேசிய பாதுகாப்பு முகமையும் (NSA) மற்றும் பென்டகனின் பெரும்பான்மையினரும், ரஷ்யாவுடனான போர் தயாரிப்புகளில் பாரியளவில் மூலோபாய முதலீடுகளைச் செய்துள்ள அரசு எந்திரத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளும், ஜனநாயகக் கட்சியினருக்கு பின்னால் இருப்பதால் அவர்கள் ஒன்றும் "நிராதரவானவர்கள் இல்லை" என்று அவர் கூறியிருந்தால், ஸ்வல்வெல் இன்னும் உண்மையானவராக இருந்திருப்பார்.
ட்ரம்பின் மந்திரிசபை நியமனங்கள் குறித்தும், அவர் வழங்கிய ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்பு விரோத உத்தரவாணைகளை குறித்தும், ஜனநாயக கட்சி சுயதிருப்தியோடு முடங்கி கொள்கிறது. இது ஏனென்றால், ட்ரம்ப் கொள்கையின் இத்தகைய கூறுபாடுகள் மீதான அவர்களது தந்திரோபாய விமர்சனங்கள் என்னவாக இருந்தாலும், இவ்விரு கட்சிகளும் பிரதிநிதித்துவம் செய்யும் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த அதிகார அடுக்கின் நலன்களுடன் அவை பொருந்துகின்றன. ஆனால் ட்ரம்ப் ஒரு ரஷ்ய கையாள் என்று வாதிட்டு ஒரு மெக்கார்த்திய பாணியிலான பிரச்சாரத்தை நடத்த வாய்ப்பு கிடைக்கையில், அவர்கள் வாயில் வந்ததைப் பேசி சண்டையில் இறங்குகிறார்கள்.
காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சியினரின் பிரிவுகளும், அத்துடன் ஜனநாயகக் கட்சியினரும், இந்த பிரச்சினையில் ட்ரம்பிடம் இருந்து தங்களைத்தாங்களே விலக்கி கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வெறுமனே ஜோன் மெக்கெயின் மற்றும் லிண்ட்செ கிரஹாம் போன்றவர்கள் மட்டுமல்ல. அமெரிக்க தேர்தல்களில் ரஷ்ய தலையீடு குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவும் மற்றும் அந்த விசாரணை வரம்பிற்குள் ரஷ்யாவுடனான ஃபிளினின் தொடர்புகளை உள்ளடக்கவும், செனட் குடியரசு கட்சி தலைமை உடன்பட்டுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் சவாலுக்கிடமற்ற உலகளாவிய இராணுவ மேலாதிக்கத்தை கையிலெடுப்பன் மூலமாக, அதன் வீழ்ச்சியடைந்துவரும் உலக பொருளாதார இடத்தை எதிர்கொள்ளள முனைகிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய அணுஆயுத தளவாடங்களைக் கொண்டுள்ளதும், எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மிகப் பெரிய வளங்களைக் கொண்டுள்ளதும், புவியியல்ரீதியில் யுரேஷியா பெருநிலத்தின் மையத்தில் ஒரு முக்கிய இடத்தில் அமைந்துள்ளதுமான ரஷ்யாவினது இப்போதும் குறிப்பிடத்தக்க பலத்தையும், மற்றும் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் இராணுவ பலத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்க நோக்கிற்கான பாதையில் உள்ள பிரதான தடைகளாக காண்கிறது.
ஆளும் வர்க்கத்தினுள் உள்ள ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள், புட்டின் ஆட்சியைப் பலவீனப்படுத்தும் அல்லது அதை தூக்கிவீசும் நோக்கில், அமெரிக்க வெளியுறவு கொள்கையை ரஷ்யாவை நோக்கி இலக்கில் வைக்க வேண்டுமென வலியுறுத்துகிறார்கள். இது, சீனா முன்னிறுத்துகின்ற சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு முன்நிபந்தனையாக கருதப்படுகிறது.
எண்ணற்ற வாஷிங்டன் சிந்தனை குழாம்கள், மத்திய கிழக்கிலும், உக்ரேனிலும், பால்டிக் நாடுகளிலும் மற்றும் இணையவழியிலும் ரஷ்ய படைகளுடனான இராணுவ மோதல்களுக்குரிய சூழல்களை அபிவிருத்தி செய்துள்ளன. முதலில் சீனா மீது ஒருங்குவிவதற்காக, தற்போதைக்கு ரஷ்யாவுடனான பதட்டங்களை குறைக்கும் நோக்கில் ட்ரம்ப் முன்மொழியும் போக்குகளை ஒட்டி, ரஷ்யாவுடனான நேரடி மோதல் கொள்கையிலிருந்து நோக்குநிலையை விலக்கிக் கொள்ளும் மாற்றைத்தை ஏற்பதற்கு தேசிய பாதுகாப்பு உயரடுக்கு தயாராக இல்லை.
ஆளும் வர்க்கத்திற்குள் மற்றும் முதலாளித்துவ அரசுக்குள் மோதல் கொந்தளிப்பாக இருக்கின்ற அதேவேளையில், ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதல்கள் முன்பில்லாத அளவிற்கு மக்கள் எதிர்ப்பை வெளிக்கொணர தூண்டுதலாக உள்ளது. மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களும் இளைஞர்களும், உள்ளூரில் பிறந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களும், புதிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் பங்குபற்றி வருகின்றனர். ஆனால் இந்த பரந்த சமூக இயக்கமானது, இன்னமும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களை வரையறுக்கும் ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தையோ அல்லது ஒரு புரட்சிகர சோசலிச தலைமையையோ எடுக்கவில்லை.
இந்நிலைமை மரணகதியிலான அபாயங்களை முன்னிறுத்துகிறது. பிரதானமாக ஜனநாயகக் கட்சி மூலமாக செயல்பட்டு வரும் உளவுத்துறை முகமைகள், அதிகரித்து வரும் சமூக மற்றும் பொருளாதார மனக்குமுறல்களுக்கான எரிப்பிழம்புகளாக, வெளி எதிரிகள் என்று கூறப்படுவதைப் பயன்படுத்தி, பாரிய எதிர்ப்பை ட்ரம்பை நோக்கி கொண்டு செல்லவும் மற்றும் நேரடியாக ரஷ்யாவிற்கு எதிராகவோ அல்லது சீனாவிற்கு எதிராகவோ திருப்பி விடப்பட்ட அவர்களது போர் திட்டங்களுக்குப் பின்னால் திசைதிருப்பவும் முயன்று வருகின்றன.
தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆளும் உயரடுக்கின் எந்தவொரு கன்னைக்குப் பின்னாலும் அணி வகுக்கக்கூடாது. இரண்டு கட்சிகளுமே அமெரிக்க பெருநிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாப்பதற்காக புதிய இராணுவ இரத்தஆற்றுக்கு தயாரிப்பு செய்து வருகின்றன. அவை, தந்திரோபாயங்கள் மற்றும் இலக்குகளை வரிசைப்படுத்துவதன் மீது சண்டையிட்டு கொள்கின்றனவே தவிர, ஏகாதிபத்திய போர்களில் கொல்வதற்கோ அல்லது கொல்லப்படுவதற்கோ அமெரிக்க இளைஞர்களை அனுப்புவதா வேண்டாமா என்பதில் அவற்றிற்கிடையே எந்த சண்டையும் இல்லை.
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, பெருவணிகத்தின் இரட்டை கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டினோடும் முழுமையாக உடைத்துக் கொண்டு, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் ஒரு பாரிய சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியாகும்.