Print Version|Feedback
French authorities step up financial probe of conservative presidential candidate François Fillon
பிரெஞ்சு அதிகாரிகள் பழைமைவாத ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஃபிய்யோன் மீதான நிதித்துறை விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர்
By Stéphane Hugues and Alex Lantier
17 February 2017
பிரான்சின் தேசிய நிதிப்பிரிவு வழக்காடுநர் அலுவலகம் (PNF) பழமைவாத குடியரசுக் கட்சியின் (LR) ஜனாதிபதி வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோன் மீதான தமது விசாரணைகளை தொடரவிருப்பதாக நேற்று அறிவித்தது. தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பெயரளவில் மட்டுமான வேலைகளை உருவாக்கிக் கொடுத்து மொத்தமாய் சுமார் ஒரு மில்லியன் யூரோக்கள் வரையிலும் சுருட்டியிருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டி மூன்று வாரங்களுக்கு முன்பாக Canard Enchaîné வார இதழில் ஒரு கட்டுரை வெளியானதில் இருந்தே ஃபிய்யோன் வாக்கெடுப்புகளில் நிலை குலைந்திருப்பதோடு தீவிரமான அழுத்தத்தின் கீழ் வந்திருக்கிறார்.
“ஏற்கனவே திரட்டப்பட்டிருக்கின்ற ஏராளமான ஆதாரங்கள், விசாரணையை முடிவுக்குக் கொண்டு வருகின்ற சாத்தியத்தை பரிசீலிக்க இப்போது எங்களை அனுமதிக்கவில்லை என்பதை, குற்றச்சாட்டுகளை முன்னெடுக்கும் கடமை கொண்ட அதிகாரியாக, உறுதிப்பட தெரிவிப்பது என்னுடைய கடமையாக இருக்கிறது” என்று அரசாங்க வழக்கறிஞரான எலியான் உலெட்ற் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஃபிய்யோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்னெடுப்பதை அல்லது ஒரு நெடிய நீதித்துறை யுத்தத்திற்கு மேடையமைக்கும் விதமாக ஒரு சிறப்பு விசாரணை நீதிபதியிடம் இந்த வழக்கை ஒப்படைப்பதை PNF பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
ஃபிய்யோனின் சட்ட அணி, “மூன்று வார கால விசாரணைகள் மற்றும் ஏராளமான குறுக்குவிசாரணைகளுக்கு பின்னர், குற்றச்சாட்டுகளை முன்னெடுப்பதற்குப் போதுமான அளவுக்கு ஆதாரங்கள் இல்லை” என அறிவிக்கின்ற ஒரு அறிக்கையை விடுத்திருந்த நிலையில், ஃபிய்யோன், “இதுமுதலாய் வாக்குமன்றத்தின் தீர்ப்பின்மீதே” தான் நம்பிக்கை கொள்ளவிருப்பதாய் தெரிவித்தார்.
நீதித்துறையானது, சோசலிஸ்ட் கட்சி (PS) நிர்வாகத்தின் உன்னிப்பான பார்வையின் கீழ் குடியரசுக் கட்சியின் (LR) பிரச்சாரத்திற்கு எதிராக ஒரு சீர்குலைக்கும் தாக்குதலை முன்வைக்கும் நிலையில், இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது பிரெஞ்சு ஆளும் உயரடுக்கிற்குள்ளான ஒரு நச்சுத்தனமான கன்னை மோதலாகும். ஃபிய்யோன், வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் அவரது ரஷ்ய-ஆதரவு கண்ணோட்டத்தில் ஓரளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டவராய் இருக்கின்ற நிலையில், இப்போது அவர் நேட்டோ கூட்டணிக்குள்ளாக ரஷ்யாவுடனான உறவுகள் குறித்த கொந்தளிப்பான மோதல்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த பிரச்சாரம் ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராய் இருந்த மைக்கல் ஃபிளின்னை காவுகொண்டு விட்டது, ரஷ்யா மீதான அமெரிக்கத் தடைகள் குறித்து பொருத்தமற்ற வகையில் அவர் ரஷ்ய அதிகாரிகளுடன் விவாதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
ஃபிய்யோன் தனது குடும்பத்தை வேலையில் அமர்த்திக் கொள்வதற்கான உரிமை தனக்கு இருந்தது என்றும் ஏனென்றால் அது பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் சட்டபூர்வமான ஒன்றேயாகும் என்றும் கூறி பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்குவதற்கு முடியாதிருப்பதால், அவரது பிரச்சாரம் மோசமாக சேதமடைந்துள்ளது. ஆயினும் அந்த வேலைகள் நடவடிக்கைகளின் பதிவுக்கு அவசியமற்றவையாக இருந்தன என்ற சட்டவிரோதம் குறித்து அவர் பேச மறுத்தார். இந்த செய்தி வெளியாகி ஒரு வார காலத்திற்குப் பின்னர்தான், அவர் இறுதியில், தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தான் கொடுத்திருந்த வேலைகளை அவர்கள் செய்து முடித்திருந்தார்களா என்பதை தன்னால் தான் தீர்மானிக்க முடியுமே தவிர வேறொருவராலும் அல்ல என்று மட்டுமே கூற முடிந்திருந்தது.
LR பிரச்சாரத்தின் மீதான இடைவிடாத ஊடக மற்றும் நீதித்துறை தாக்குதல்கள் தொடர்ந்து செல்கின்றன, தீவிரப்பட்டு செல்கின்றன, ஃபிய்யோனை கடந்தும் நீண்டு செல்கின்றன. PNF ஃபிய்யோன் குறித்த தனது அறிக்கையை வெளியிடுவதற்கு முந்தைய நாளில், ஃபிய்யோன் பிரச்சாரத்தின் செய்தித் தொடர்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தியரி சொலெர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டை சுமத்தும் இன்னுமொரு கட்டுரை Canard Enchaîné இல் வெளியாகியிருந்தது.
இதுதவிர, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மீது “தேர்தல் பிரச்சாரத்தில் சட்டவிரோத நிதியாதாரம் திரட்டியது” தொடர்பாக சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2012 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் 22.5 மில்லியன் யூரோ என்ற சட்டபூர்வ வரம்பைத் தாண்டி 20 மில்லியன் யூரோக்களை அவரது பிரச்சாரம் கூடுதலாய் செலவிட்டிருந்தது. மற்ற ஊழல்மோசடிகளின் ஒரு நீண்ட வரிசையிலும் சார்க்கோசி விசாரணைகளுக்கு முகம்கொடுத்திருக்கிறார், இவர் தனது 2007 பிரச்சாரத்திற்கு லிபியாவின் மறைந்த அரசுத் தலைவரான மும்மார் கடாபியிடம் —2011 லிபியப் போரின் முடிவில் இவரை ஃபிரான்சும் நேட்டோ படைகளும் கொலைசெய்திருந்தன— இருந்து நிதியாதாரம் பெற்றிருந்ததான குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும்.
சமீப தசாப்தங்களில் ஏராளமான ஊழல்மோசடிகளைத் தூண்டியிருக்கும் LR இன் நிதிவிவகாரங்கள் ஊழலடைந்து இருந்தன என்பதில் சந்தேகமில்லை. சென்ற ஆண்டின் LR ஜனாதிபதி முதனிலைத் தேர்தலில் ஃபிய்யோன் மற்றும் சார்க்கோசியுடன் சேர்ந்து முக்கிய இறுதி வேட்பாளராய் இருந்த அலென் ஜூப்பே, ஏற்கனவே 2004 இல், ஜாக் சிராக் ஜனாதிபதி பதவிக்காலத்தில் பாரிஸ் மேயராக செயல்பதிவுகளற்ற வேலைகளை உருவாக்கிய விவகாரத்தில் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டவராக இருந்தார். ஆயினும் இப்போதைய குற்றச்சாட்டுகளின் பின்னால் இயக்கும் சக்தியாக இது இருக்கவில்லை.
ஃபிய்யோனின் பிரச்சாரத்தை சீர்குலைப்பதற்கான முயற்சியானது ஃபிய்யோனின் வேலைத்திட்டத்திற்கான, அதிலும் குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சியை நோக்கிய அவரது வெளியுறவுக் கொள்கை நோக்குநிலைக்கான எதிர்ப்பின் அடிப்படையிலானதாகும். ஃபிய்யோனின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு வேலை கொடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்தது குறித்த வெளிக்கொணரல்கள், அவர் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெலை சந்திக்க ஜேர்மன் பயணம் செய்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஜேர்மனி மற்றும் ரஷ்யாவுடன் இணைந்த ஒரு கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்குப் பிந்தைய ஒரு வார காலத்திற்குள்ளாக வந்துசேர்ந்திருந்தன.
இந்த பயணம், வாஷிங்டனில் இருந்த வலிமைவாய்ந்த சக்திகளை மட்டுமன்றி, PS அரசாங்கத்தையும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுக்கு நெருக்கமான வேட்பாளரும், ஓரளவுக்கு சுதந்திரமான வங்கியாளரும், ஜேர்மனி மற்றும் அமெரிக்காவுடனான நெருக்கமான உறவுகளை பிரான்சு தொடர்வதற்கு அழைப்பு விடுத்திருப்பவருமான இமானுவல் மக்ரோனையும் இடையூறு செய்தது.
ஃபிய்யோனை அம்பலப்படுத்தி Canard Enchaîné வெளியிட்ட விடயங்கள், சென்ற மாதத்தில் அதன் குற்றச்சாட்டுகளுக்கு பரவலான ஊடக வெளிச்சம் கொடுக்கப்படத் தொடங்கின எனினும், அவை வெகுமுன்பே தயாரிக்கப்பட்டு விட்டிருந்தன என்பதாகவே தெரிகிறது.
Canard Enchaîné இன் கட்டுரையில் இடம்பெற்றிருந்த கூறுகளை, அதாவது, பிரெஞ்சு நிதி அதிகாரிகளால் நீதித்துறையிடம் ஒரு உத்தியோகபூர்வ புகார் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை, மீடியாபார்ட் என்ற பிரெஞ்சு புலனாய்வு பத்திரிகை வலைத் தளம் ஒன்று சென்ற செப்டம்பரில் ஏற்கனவே வெளிக்கொண்டு வந்திருந்தது. அச்சமயத்தில் எந்த விபரங்களும் இல்லாதிருந்தது. ஆயினும், இந்த புகார் முதலில் ஒரு சுதந்திரமான அமைப்பான வரிக் குற்றங்களது ஆணையத்தின் பரிசீலனையைக் கடக்க வேண்டியிருந்தது, இது 2016 கோடையில் நடந்தேறியது. இவ்வாறாக, இந்த நிகழ்முறை ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த ஒன்று என்பதுடன் குறைந்தபட்சம் 2016 செப்டம்பர் முதலாகவே இது தொடர்பான விடயங்கள் முக்கிய அதிகாரிகளுக்கு தெரிந்த ஒன்றாகவே இருந்தது.
ஆயினும், ஃபிய்யோன் ஜேர்மனி பயணம் சென்றதை ஒட்டியே, இந்த விடயங்கள் திடீரென Canard Enchaîné இல் இடம்பிடித்து, ஜனாதிபதி வேட்பாளரை மதிப்பிழக்கச் செய்யும் நோக்குடனான ஒரு ஊடகப் பிரச்சாரத்தின் கவனப்புள்ளியாக ஆகியது.
இந்தப் பிரச்சாரமானது சமீப ஆண்டுகளில் முக்கிய சர்வதேச நெருக்கடிகளின் சமயத்தில் ஃபிய்யோன் தொடர்ந்து எடுத்திருந்த சர்ச்சைக்குரிய ரஷ்ய-ஆதரவு நிலைப்பாடுகள் தொடர்பாக, நேட்டோ கூட்டணிக்குள் நிலவும் ஆழமான பதட்டங்களையே பிரதிபலிக்கிறது.
2010 குளிர்காலத்தில், கிரேக்க கடன் நெருக்கடி தொடர்பாக பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் உண்டான மோதலின் ஆரம்ப கட்டங்களில், பிரான்ஸ் ரஷ்யாவுக்கு நான்கு மிஸ்ட்ரால்-தர ஹெலிகாப்டர் காவி போர்க்கப்பல்களை விற்பனை செய்ய முடிவெடுத்த சமயத்தில், சார்க்கோசியின் ஜனாதிபதிப் பதவியின் கீழ் ஃபிய்யோன் தான் பிரதமராய் இருந்தார். இது ரஷ்யாவில் அரசியல் மற்றும் வர்த்தக செல்வாக்குக்கான போட்டியில் ஜேர்மனியுடன் போட்டியிடுவதற்காய் முயற்சிசெய்கின்ற மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருந்தது; ஜேர்மன் அதிகாரிகள் இந்த விற்பனைக்கு திரைமறைவில் கடுமையாக ஆட்சேபித்தனர். ஜேர்மனி மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த கடுமையான அழுத்தத்தால் இந்த விற்பனை அதன்பின் இரத்துசெய்யப்பட்டது; பின்னர் ஹாலண்ட் அந்த போர்க்கப்பல்களை எகிப்துக்கு விற்றார்.
2013 செப்டம்பரில் ஒபாமா, சிரிய போரில் இருந்து பின்வாங்கியதன் மூலம், போருக்கு மூர்க்கமாக நெருக்குதலளித்திருந்த ஹாலண்ட் அரசாங்கத்திற்கு சங்கடத்தை உருவாக்கியிருந்த நேரத்தில், ஃபிய்யோன் நேரடியாக ரஷ்யா பறந்து சிரிய ஆட்சியின் முக்கிய கூட்டாளியான புட்டின் உடன் சந்தித்து வந்ததன் மூலம் பதிலிறுப்பு செய்திருந்தார். “அன்புமிக்க விளாடிமிர்” என்று அவர் குறிப்பிட்ட புட்டின் உடன் இணைந்து Valdai Club இல் பேசிய ஃபிய்யோன் அமெரிக்காவின் பின்னால் ஹாலண்ட் நிற்பதை பின்வருமாறு விமர்சனம் செய்தார்: “இந்தப் பிரச்சினையில் பிரான்ஸ் அதன் சுயாதீனமான மற்றும் சுதந்திரமான முடிவெடுப்பு மற்றும் நடவடிக்கை நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன், அது மட்டுமே இந்த நெருக்கடியில் அதற்கான தார்மீக அதிகாரத்தை வழங்குவதாக இருக்கும்.”
சென்ற நவம்பரில் ஃபிய்யோன் LR இன் ஜனாதிபதி தேர்வில் வென்றிருந்த பின்னர், Canard Enchaîné உள்ளிட்ட பத்திரிகைகள், ஃபிய்யோனின் 2F (François Fillon) ஆலோசனை நிறுவனம் ரஷ்ய நிதிகளை பெற்றிருந்ததை குறித்த செய்திகளை ஏற்கனவே புலனாய்வு செய்துகொண்டிருந்தன. Canard Enchaîné இன் ஆரம்பகட்ட செய்தியின் படி, இந்த புலனாய்வுதான் சென்ற மாதத்தில் ஃபிய்யோனின் மனைவி மற்றும் குழந்தைகள் தொடர்பான அதன் முதல் கட்டுரையை வெளியிடுவதற்கு இட்டுச் சென்றிருந்தது.