ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump browbeats Australian “ally”

ட்ரம்ப் ஆஸ்திரேலிய "கூட்டாளியை" கடுஞ்சொற்களால் பயமுறுத்துகிறார்

Mike Head
4 February 2017

இவ்வாரம் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்ட ஆஸ்திரேலிய பிரதம மந்திரி மால்க்கம் டர்ன்புல் உடனான அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் மிரட்டும் தொலைபேசி அழைப்பு, புதிய நிர்வாகத்தின் அடாவடித்தன குணத்தையும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தித்தின் கொடூர முகத்தைத்தையும் மேற்கொண்டும் அம்பலப்படுத்தி உள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த அந்த தொலைபேசி அழைப்பின் போது, ஒபாமா நிர்வாகத்தில் பேரம்பேசப்பட்டிருந்த அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கை குறித்து டர்ன்புல்லை திட்டித்தீர்த்த ட்ரம்ப், பின்னர் 25 நிமிடங்களிலேயே அந்த உரையாடலை திடீரென துண்டித்து கொண்டார்.

“அமெரிக்காவை மீண்டும் தலையாயதாக ஆக்குவது" என்பதன் அர்த்தம், அமெரிக்கா அதன் கூட்டாளிகள் மற்றும் எதிரிகளுக்கு ஒருபோல சட்டத்தை அமைக்கும் என்றவொரு தவறுக்கிடமற்ற சேதியை அனுப்புவதற்கே இது உத்தேசிக்கப்பட்டிருந்தது.

வாஷிங்டனின் மிக நெருக்கமான இராணுவ பங்காளி அரசுகளில் ஒன்றுக்கு தலைமை கொடுக்கும் டர்ன்புல்லிடம் ட்ரம்ப் அவர் தொலைபேசி அழைப்பைத் துண்டிப்பதற்கு முன்னதாக தெரிவிக்கையில், இந்த தொலைபேசி உரையாடல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உட்பட அன்றைய தினம் நடந்த ஏனைய ஐந்து உலக தலைவர்களுடனான உரையாடல்களிலேயே "மிகவும் மோசமாக" இருந்ததாக தெரிவித்தார். 

பதவிக்கு வந்து வெறும் இரண்டே வாரங்களில், ட்ரம்பின் ஆக்ரோஷமான "முதலிடத்தில் அமெரிக்கா" பொருளாதார தேசியவாதம் மற்றும் இராணுவவாதம் உலகெங்கிலும் அரசியல் அதிர்வலைகளை அனுப்பி வருகிறது. புதிய ஜனாதிபதி, ஐரோப்பா, மெக்சிகோ, ஈரான் மற்றும் சீனாவிற்கு எதிராக மட்டும் ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை தொடுக்கவில்லை, அவர் —நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும், மற்றும் ஆசிய பசிபிக்கில் ஜப்பான், தென் கொரியா மற்றும் இப்போது ஆஸ்திரேலியா உடனும்— வாஷிங்டனின் பல முக்கிய பங்காண்மைகள் மீதும் திட்டமிட்டு கேள்விக்குறியை நிறுத்தி உள்ளார்.

அவருக்கு முன்பிருந்தவரால் அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனுடன் சேர்ந்து தொடங்கப்பட்டதும், சீனாவை ஆசியாவில் எதிர்கொள்வதற்கான அமெரிக்காவின் இராணுவ மற்றும் மூலோபாய "முன்னெடுப்பு", சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க தவறிவிட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மூலோபாய இடத்தில் அமைந்திருப்பதால், அது அந்த "முன்னெடுப்பின்" ஒரு முக்கிய கூறுபாடாகவும், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் திட்டங்களுக்கு ஒரு அடித்தளமாகவும் மாறியுள்ளது. மத்திய ஆஸ்திரேலியாவின் பைன் கேப்பில் (Pine Gap) உள்ள செயற்கைகோள் உளவுபார்ப்பு அமைப்பு மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் வந்து செல்வது அதிகரித்து வரும் டார்வின் வடக்கு துறைமுகம் போன்ற பல முக்கிய இராணுவ தளங்களை அது கொண்டுள்ளது.

ட்ரம்ப் உம் மற்றும் புதிதாக உறுதி செய்யப்பட்ட அவரது வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சனும், தென் சீனக் கடலில் சீனா கட்டுப்பாட்டில் கொண்டுள்ள தீவுதிட்டுக்களை அணுகவிடாமல் செய்ய அச்சுறுத்தி உள்ளனர், இது ஒரு போர் நடவடிக்கையாக மாறக்கூடியதாகும். ஆஸ்திரேலிய பெருநிறுவனம் மற்றும் நிதியியல் நலன்களுக்கு பேரழிவுகரமாக இருக்கக்கூடிய அதுபோன்றவொரு மோதல், துரிதமாக ஓர் அணுஆயுத போராக தீவிரமடைந்து விடக்கூடும்.

கடந்த கால்-நூற்றாண்டுகளுக்கும் அதிகமாக, அமெரிக்க நிர்வாகங்கள் அமெரிக்காவின் பொருளாதார சரிவை இராணுவ பலத்தைக் கொண்டு எதிர்கொள்ளும் ஒரு முயற்சியில் முடிவில்லாமல் தொடர்ச்சியாக போர்களைத் தொடங்கி உள்ளனர். ட்ரம்ப் அரசாங்கம் பண்புரீதியில் இந்த நிகழ்வுபோக்கின் ஒரு புதிய கட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. டர்ன்புல் உடனான அவர் தொலைபேசி அழைப்பு கான்பெர்ராவை முடுக்கி விடுவதை நோக்கம் கொண்டதாகும்—ட்ரம்ப் நிர்வாகம் அதன் பிரதான இலக்குகளுக்கு எதிராக, முதலும் முக்கியமுமாக சீனாவிற்கு எதிராக, போருக்குத் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில் எந்தவொரு திசை விலகலையும் ஏற்றுக் கொள்ளாது என்பதையே இது தெளிவுபடுத்துகிறது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் அதிகரித்துவரும் செல்வாக்கை ஏற்றுக் கொள்வதற்கு வாஷிங்டன் சிறிது இடமளிக்க வேண்டுமென 2010 இன் மத்தியில் ஆஸ்திரேலிய தொழிற்கட்சி பிரதம மந்திரி கெவின் ரூட் அறிவுறுத்தியதும், அவர் தற்போதைய தொழிற்கட்சி தலைவர் பில் ஷார்டன் உட்பட அமெரிக்க தூதரகத்திற்கு நெருக்கமானவர்களால் பின்புலத்தில் தூண்டிவிடப்பட்ட ஒரு தொழிற்கட்சி பதவிக்கவிழ்ப்பு மூலமாக நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் வடக்கில் டார்வினில் மூலோபாயரீதியில் முக்கியத்துவமான வர்த்தக துறைமுகத்தை நிர்வகிக்க ஒரு சீன பெருநிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் ஒப்பந்தத்திற்கு விடுவதற்கு முன்னதாக, டர்ன்புல் வாஷிங்டனுடன் கலந்தாலோசிக்க தவறியதற்காக ஒபாமாவே தனிப்பட்டரீதியில் டர்ன்புல்லைக் கடுமையாக கண்டித்திருந்தார் என்ற உண்மையைக் கடந்த நவம்பரில் ஒபாமா வேண்டுமென்றே கசியவிட்டார்.

ஆஸ்திரேலியா அதன் பிரதான வர்த்தக பங்காளியான சீனாவுடனான அதன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் கடந்த காலத்தில் "முன்னெடுப்பு" மீது டர்ன்புல் ஆட்சேபணைகளைக் கொண்டிருந்தார் என்பது ட்ரம்புக்கும் அவர் ஆலோசகர்களுக்கும் நன்கு தெரியும். “கடற்போக்குவரத்து சுதந்திரத்தைப்" பாதுகாப்பதற்காக என்ற பொய் சாக்குபோக்கின் கீழ் அமெரிக்கா சீனாவின் தென் சீனக் கடல் தீவுத்திட்டுக்களைச் சுற்றியுள்ள கடல்எல்லை பிரதேசங்களுக்குள் அதன் போர்விமானங்களையும் போர்க்கப்பல்களையும் அனுப்பி உள்ள நிலையில், டர்ன்புல் அரசாங்கமோ, இதுவரையில், "முன்னெடுப்பின்" பிரதான அடிச்சுவட்டைக் கவனமாக பின்தொடர்ந்தாலும் கூட, அந்த நடவடிக்கையைப் பின்தொடர்வதைத் தவிர்த்து கொண்டுள்ளது.

வாஷிங்டன் மிக துரிதமாக ஆட்சியை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி பதவியிலிருந்து நீக்கவிடும் என்பது 2010 க்குப் பின்னர் இருந்து ஒவ்வொரு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் தெரியும். டர்ன்புல்லை நோக்கிய மிக பகிரங்கமான ட்ரம்பின் கோபம், ஆஸ்திரேலியாவின் மற்றும் உலகின் ஏனைய எல்லா இடங்களின் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகம் முழுவதிலும் எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்துள்ளது.

ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவ்யூ இல் சனியன்று வெளியான தலையங்கம் இவ்வாறு தொடங்கியது: “பூகோளமயமாக்கலில் இருந்து உலகம் பின்வாங்குவதற்கும் மற்றும் அதை ஒருபுதிய குறுகிய தேசியவாதத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கும் டொனால்டு ட்ரம்ப் அருவருக்கத்தக்க முகமாக உள்ளார். இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இருந்து சமாதானம் மற்றும் பாதுகாப்பில் ஆஸ்திரேலியாவின் வளத்திற்கு அடித்தளமாக இருந்த பன்முக வர்த்தக ஏற்பாட்டு முறைகள் மற்றும் இராணுவ கூட்டணிகளுடன் போருக்குள் இறங்க புதிய அமெரிக்க ஜனாதிபதி, வேலையில் அமர்ந்து இரண்டே வாரங்களில், சிறிதும் நேரத்தை வீணாக்கவில்லை.”

அமெரிக்காவிற்குள்ளேயே கூட, குடியரசு கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ஜோன் மெக்கெயின் போன்ற அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் கூறுபாடுகள் டர்ன்புல் மீதான ட்ரம்பின் கோபத்தை விமர்சித்துள்ளதுடன், ஆஸ்திரேலியா அமெரிக்க இராணுவ மற்றும் மூலோபாய வலையமைப்பின் இன்றியமையா பாகமாக இருக்கின்றது என்று ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு உறுதி வழங்க விரைந்தனர். ட்ரம்ப் மந்திரிசபை அங்கத்தவர்களில் சிலரும் கூட பாதிப்பைக் கட்டுப்பாட்டில் எடுக்க கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தனர்.

பாதுகாப்பு செயலரும், ஒரு முன்னாள் தளபதியுமான "போர்வெறியர்" (Mad Dog) ஜேம்ஸ் மாட்டிஸ் கூறுகையில், ஆஸ்திரேலியா தொடர்ந்து "வாஷிங்டனில் குரலைக்" கொண்டிருப்பதை அவர் உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார். இவற்றிற்கு விடையிறுப்பாக, ட்ரம்ப் தாம் டர்ன்புல்லை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளவில்லை என்றும், “நமது மிகவும்  கண்ணியமான உரையாடல் மீது இந்த பொய் செய்தி ஊடகங்கள் பொய்யுரைத்ததைக் குறித்து உண்மையை கூறியதற்கு" அவருக்கு நன்றி தெரிவித்தும் நேற்று ட்வீட் செய்தார்.

இதுபோன்ற உத்திகள், ட்ரம்ப் நிர்வாகத்தினது குண்டர்-பாணியிலான வழமையான வழிமுறையின் பாகமாக மாறியுள்ளன. ஆனால் ஆளும் வட்டாரங்களுக்குள் என்ன தான் பிளவுகள் இருந்தாலும், அதற்கு அடியிலிருக்கும் போக்கு அதிகரித்தளவில் தெளிவடைந்து வருகிறது: அதாவது, வாஷிங்டன் போர் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதாகும்.

ஐரோப்பாவை போலவே, ஆஸ்திரேலியாவிலும், பிரபல ஊடக விமர்சகர்கள், பசுமை கட்சியினர் மற்றும் பல்வேறு போலி-இடது குழுக்களுடன் சேர்ந்து, ட்ரம்ப் கொள்கைகளுக்கு இருக்கும் பரந்த மக்கள் கோபத்தை "முதலிடத்தில் ஆஸ்திரேலியா" எனும் ஒரு தேசியவாத திசையில் திருப்புவதற்கு முனைந்துள்ளனர். இப்போது வரையில் சீனாவை எதிர்கொள்வதற்கு ஒரு பரம ஆதரவாளராக உள்ள Fairfax Media இன் அரசியல் எழுத்தாளர் பீட்டர் ஹார்ட்சர், இது “ஆஸ்திரேலியா, விழித்தெழுவதற்கான!” நேரம் என்று அறிவித்து, இன்னும் "சுதந்திரமான" வெளியுறவு கொள்கைக்கு நேற்று அழைப்புவிடுத்தார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இராணுவ செலவுகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளுடன் பிணைந்துள்ள இதுபோன்ற முறையீடுகள், ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இலாபகர நலன்களுக்கு அடிபணிய வைப்பதற்கும் மற்றும் தேசிய ஆளும் உயரடுக்கின் போர் தயாரிப்புகளுக்கும் மற்றும் சர்வதேசரீதியில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தை எதிரெதிராக நிறுத்துவதற்கும் மட்டுமே சேவையாற்றுகின்றன.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் சீனா உட்பட ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் போருக்கு மூலக்காரணமான முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேசரீதியில் அவர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டியதன் அவசியத்தை முகங்கொடுக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழிலாளர்கள், அவர்களது வேலைகள், சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களுடன் சேர்ந்து,  இராணுவ மோதல் எனும் ஒரே அச்சுறுத்தலை முகங்கொடுக்கிறார்கள், இதற்கு ஓர் அனைத்துலகவாத, முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஓர் உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே பதிலளிக்க முடியும்.