Print Version|Feedback
Munich Security Conference signals a new arms race
மூனிச் பாதுகாப்பு மாநாடு ஒரு புதிய ஆயுதப் போட்டிக்கு சமிக்கையளிக்கிறது
By Ulrich Rippert
22 February 2017
சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று முடிவடைந்த மூனிச் பாதுகாப்பு மாநாடு, போர்க்கூச்சல் மற்றும் ஆயுதபாணியாக்கல்-ஆதரவு பிரச்சாரம் ஆகியவற்றின் ஒரு சூழலில் நடந்தேறியது. முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய கூட்டாளிகள் தமது இராணுவச் செலவினங்களை கணிசமாக அதிகரிக்காவிட்டால் நேட்டோவில் இருந்து விலகப் போவதாக அச்சுறுத்தியிருந்தார்.
தொலைநோக்கில் அமெரிக்காவை நம்ப முடியாது என்ற எச்சரிக்கையை கொண்டு ஐரோப்பிய அரசாங்கப் பிரதிநிதிகள் இதற்கு பதிலிறுப்பு செய்தனர். வருங்காலத்தில், ஐரோப்பா தனது பாதுகாப்பை தனது சொந்தக் கரங்களில் கொள்ள வேண்டும் என்றனர். ஆகவே ஒழுங்குமுறையாக இராணுவத்தை மேம்படுத்துவது கட்டாயம் என்றனர். பாதுகாப்பு மாநாடு தொடங்குவதன் முன்னதாக, ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சரான ஊர்சுலா வொன் டெர் லையன் “நாங்கள் புரிந்து கொண்டோம்” என்ற தலைப்பிலான ஒரு ஆவணத்தில் இராணுவப் படைகளின் ஒரு பாரிய மறுஆயுதபாணியாக்கலை அறிவித்தார்.
உலகெங்கிலும் இருந்து 25க்கும் அதிகமான அரசாங்கத் தலைவர்கள், 80 வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் 500க்கும் அதிகமான பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். வொன் டெர் லையன் முன்னதாக Süddeutsche Zeitung இல் எழுதியிருந்ததையே திரும்பவும் கூறினார்: “ஜேர்மானியர்களாகிய நாங்களும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் எங்களது பாதுகாப்பிற்கு நீண்ட நெடுங்காலமாய் அமெரிக்காவின் பரந்த தோள்களையே நம்பியிருந்து வந்திருக்கிறோம். ஆம், பொதுவான அட்லாண்டிக் பாதுகாப்பின் சுமையில் இன்னும் பெரிய மற்றும் நியாயமான பங்கினை நாங்கள் சுமக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிகிறோம்.”
ஐரோப்பாவில் அவ்வாறு செய்வதற்கான விருப்பம் “முன்னெப்போதினும் மிகப்பெரும் அளவில்” இருப்பதாக அவர் தெரிவித்தார். ஐரோப்பிய இராணுவப் படைகள் “சமீப தசாப்தங்களில் நடந்த எண்ணற்ற கூட்டு நடவடிக்கைகளில் இராணுவத் திறன்களைக் கற்றிருந்தன என்பதுடன் மற்றவர்களது தேர்ந்தெடுத்த நம்பிக்கையையும் பெற்றன.”
சான்சலர் அங்கேலா மேர்க்கெல் பேசுகையில் ஜேர்மனி தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றும், நேட்டோ மற்றும் மறுஆயுதபாணியாக்கலில் கூடுதலான பணம் செலவிடும் என்று கூறினார். நேட்டோவின் உறுப்பு நாடுகள் இராணுவச் செலவினத்திற்கு தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்பதான நிர்ணயஅவசியத்தைக் குறிப்பிட்ட அவர், “நாங்கள் இரண்டு சதவீத இலக்கை எட்ட உறுதியுடன் இருக்கிறோம்” என்றார். “அதைச் சாதிக்கத் தேவையான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் எடுப்போம்” என்றார் அவர். இப்போது ஜேர்மனி தனது இராணுவ நிதிநிலைக்கு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதத்தை ஒதுக்குகிறது. “பாதுகாப்புக் கொள்கைக்கும் நாங்கள் கணிசமாய் செய்வோம்” என்று மேர்க்கெல் வலியுறுத்தினார்.
அதேசமயத்தில், நேட்டோவில் இருந்து விலகுவதற்கு எதிராக அமெரிக்காவை அவர் எச்சரித்தார். உலகத்தின் பிரச்சினைகளை ஒற்றையாளாக யாரும் கையாண்டு விட முடியாது என்றார் சான்சலர். ட்ரம்ப் மற்றும் அவரது நேட்டோ-விரோத வசனங்கள் மீதான ஒரு விமர்சனமாக இது புரிந்துகொள்ளப்பட்டது.
பாதுகாப்பு மாநாட்டின் தலைவரான வொல்ஃப்காங் இஷிங்கர் இன்னும் வெளிப்படையாகப் பேசினார். நேர்காணல்களில், அவர் புதிய அமெரிக்க ஜனாதிபதியை கூர்மையாகத் தாக்கினார். முன்னாளில் அமெரிக்காவுக்கான ஜேர்மன் தூதராக பணியாற்றிய இவர் Berliner Tagesspiegel இடம் கூறினார்: “அமெரிக்கா இனியும் மேற்கில் அரசியல்-தார்மீக தலைமை அடையாளமாக கணக்கில் கொள்ளப்படுவதில்லை”. ஆகவே இதனால் விளைந்த வெற்றிடத்தை நிரப்புவதும் கூடுதல் தலைமைப் பொறுப்புகளை ஏற்பதும் ஐரோப்பாவுக்கு அவசியமாகி இருந்தது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசியவாத மற்றும் இனவாத கொள்கைகளுக்கு எழுந்திருக்கும் பரவலான எதிர்ப்பை, ஜேர்மன் அரசாங்கம் ஐரோப்பிய மறுஆயுதபாணியாகலுக்கான தனது சொந்த திட்டங்களை முன்னெடுப்பதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் மூனிச் பாதுகாப்பு மாநாடு ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றியது.
மூன்றாண்டுகளுக்கு முன்பாக, இதே மாநாட்டில், ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இராணுவரீதியான ஒதுங்கியிருப்பு முடிவுக்கு வந்ததை அறிவித்தனர். இப்போது, ஐரோப்பியர்கள் தங்களது பாதுகாப்புக்கு இன்னும் அதிகமான சிரமமெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் புதிய நிர்வாகம் கோருவது இராணுவப் பெருக்கத்தை முன்னெடுப்பதற்கான ஒரு வரவேற்கத்தக்க சாக்காக சேவைசெய்கிறது.
மாநாட்டின் தொடக்கத்தில், ”ஜேர்மனியின் புதிய பொறுப்பு” என்ற தலைப்பின் கீழ் உயர்நிலை அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் பங்களிப்புடனான ஒரு கருத்து திரட்டை இஷிங்கர் வெளியிட்டார். அறிமுகப் பகுதியில், அவர் “ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு நிதிநிலை ஒதுக்கீடுகளில் இன்னும் நெருக்கமான திட்டமிடலுக்கும் ஒருங்கிணைப்புக்கும்” அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவால் கோரப்பட்டு 2014 இல் நேட்டோ உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறாக, பாதுகாப்புச் செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான இரண்டு சதவீதத்திற்கு அதிகரிப்பது என்பது, இஷிங்கர் ஐ பொறுத்தவரை மிகச் சிறிய அதிகரிப்பாகும். குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் அவசியமென்கிறார். இதனை எட்டுவதற்கு, நெருக்கடி தவிர்ப்பு, அபிவிருத்தி உதவி, இராஜதந்திரத் துறை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான நிதிநிலை விடயங்கள் மறுஒழுங்குபடுத்தப்பட்டு ஒரு இராணுவப் பெருக்கத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என்கிறார்.
இதன் பொருள், இப்போது 37 பில்லியன் யூரோக்களாக இருக்கும் ஜேர்மன் பாதுகாப்பு ஒதுக்கீட்டை கிட்டத்தட்ட 100 பில்லியன் யூரோக்களாக உயர்த்துவது என்பதாகும். இராணுவ செலவினங்களில் இத்தகையதொரு பிரம்மாண்ட அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமென்றால், சமூக செலவினத்தின் அத்தனை பிரிவுகளிலும் பாரிய வெட்டுகள் அவசியமாகும், அது மக்களின் பெரும்பான்மையினரின் கடும் எதிர்ப்புக்கு இலக்காகும்.
ஆகவே தான், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய மறுஆயுதபாணியாகலை தீவிரப்படுத்தும் முடிவை மூனிச் பாதுகாப்பு மாநாடு மறுஉறுதி செய்ததுடன் கைகோர்த்து, ஊடகங்களில் இருந்தான கல்மனதான போர்க்கூச்சலும் நடந்திருக்கிறது. ட்ரம்ப்பை தேர்ந்தெடுத்ததன் மூலம், அமெரிக்கா மேற்கத்திய கூட்டணியிலான தனது தலைமைப் பாத்திரத்தை கைவிட்டு விட்டிருக்கிறது என்பது தான் அவற்றின் தாரக மந்திரமாக இருக்கிறது. ஜேர்மனி இதனை ஒரு உறக்கத்திலிருந்து எழுப்பும் ஒலியாகவும், சந்தர்ப்பமாகவும் புரிந்து கொண்டாக வேண்டுமாம்.
செய்தி வார இதழான Der Spiegel இன் தலைப்புக் கட்டுரையாக “நேட்டோவிற்கு அப்பால்” என்ற ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. “டொனால்ட் ட்ரம்ப் கூறுவதே சரி” என்ற வாசகத்துடன் அக்கட்டுரை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பா தன் சொந்தப் பாதுகாப்புப் பொறுப்பை தானே ஏற்றாக வேண்டும். ஒரு கூட்டாளியாக அமெரிக்காவை உதாசீனம் செய்வது என்பது “முதிர்ச்சியின்மையாக” இருக்கும் என்ற அதேநேரத்தில், ஐரோப்பா இனியும் “அமெரிக்காவை நிபந்தனையின்றி நம்பியிருக்க முடியாது” என்ற உண்மைக்கு தன்னை அது ஒழுங்கமைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் அதுவும் “பொறுப்பற்றதாகவும் அப்பாவித்தனமானதாகவும் இருக்கும்”.
அதன்பின் இந்த மறக்கமுடியாத வாசகம் வருகிறது: “’இளைய பங்காளி’ என்ற விவரிப்பு இறுதியாக வரலாற்றின் குப்பைக்கூளத்திற்காய் ஒதுக்கப்பட்டு விடலாம்.” இப்போதுவரை, அதி-வலது குழுக்கள் மட்டுமே அமெரிக்க மேலாதிக்கத்தில் இருந்தும் அதன் பெரியண்ணன் மனோபாவத்தில் இருந்தும் ஜேர்மனி தன்னை விடுவித்துக் கொள்வதற்கும் அதன் இறையாண்மையை செயலாக்குவதற்கும் பேசி வந்திருந்தனர்.
“ஜேர்மனியே, விழித்தெழு!” என்ற பல்லவியைக் கொண்ட “Sturmlied” என்ற நாஜிக்களின் கீதத்திற்குப் பின்னர் இப்படியானதொரு தேசியவாத வசைமழை ஒருபோதும் கேட்டதில்லை. ட்ரம்ப்பின் “முதலில் அமெரிக்கா” சுலோகமானது சுதந்திரத்திற்கு விழுந்த அடியாக ஜேர்மனியின் ஆசிரியர் குழுக்களிலும் கட்சி அலுவலகங்களிலும் கருதப்படுகிறது. இறுதியாக, அத்தனை தயக்கங்களில் இருந்தும் விடுதலை பெறுவதான ஒரு உணர்வு அங்கே தோன்றியிருக்கிறது. ஆயுதபாணியாக்கலுக்கான அழைப்பை பழைய பேரினவாத சுலோகங்களுடன் இணைத்துப் பார்க்கலாம்.
Der Spiegel முன்பக்கக் கட்டுரையின் ஆசிரியரான கிறிஸ்டியான் ஹோஃப்மான் சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்றப் பிரதிநிதியும் பேர்லினில் முன்னாளில் தூதராக இருந்திருந்தவருமான டிம் குல்டிமானை திருமணம் செய்திருக்கிறார். அவரது கட்டுரையில் முன்னிலை இராஜதந்திர வட்டாரங்களுக்குள்ளாக முன்னெப்போதினும் பகிரங்கமாக விவாதிக்கப்படுவதாய் இருக்கின்ற கண்ணோட்டங்களைக் குறித்து அவர் எடுத்துரைக்கிறார்.
Süddeutsche Zeitung மூனிச் பாதுகாப்பு மாநாடு குறித்த தனது தலையங்கக் கருத்துக்கான தலைப்பை “தன்னம்பிக்கை கொள்ள தள்ளப்பட்டநிலை” என்று வைத்திருந்தது. அந்த கருத்துரை தெரிவிக்கிறது: “ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தட்டியெழுப்பும் அழைப்பைப் பெற்றிருக்கிறது. அடிப்படையாக இது ஒரு வாய்ப்பாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.” ஐரோப்பியக் கூட்டாளிகள் தங்களுக்காய் இன்னும் அதிகமாய் பங்களிப்பு தர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி கருதுகிறார். ”அவரது துணை ஜனாதிபதி இந்த சூத்திரத்தை அலங்கரிக்கிறார்: எங்களுக்காய் நீங்கள் வரக் கூடிய பட்சத்தில் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.” இந்த நிபந்தனைத்தன்மை புதியது. இது ஐரோப்பியர்களை அவர்களது இலக்குகளில் உடன்படுவதற்கு நிர்ப்பந்திக்கிறது.
அரசியல் வார இதழான Die Zeit தனது சமீபத்திய பதிப்பில் “ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெடிகுண்டு அவசியமா?” என்ற கேள்வியைக் கேட்கிறது. ஜேர்மனியில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க அணு ஆயுதங்களை ஜேர்மனி “தன் விருப்பப்படி பயன்படுத்த முடியாது”, “அமெரிக்கா பச்சைக் கொடி காட்டினால் மட்டுமே...அவற்றை பயன்படுத்த அது அனுமதிக்கப்படுகிறது” என்ற உண்மையைக் குறித்து அது வருந்தியது. சில ஐரோப்பிய நாடுகள் இப்போது, “அமெரிக்காவில் இருந்து சுயாதீனப்பட்டு தங்களது சொந்த தடுப்பைக் கற்பனை செய்யக் கூடும்.”
Die Zeit குறிப்பாக ஜேர்மனியின் ஒரு அணு குண்டையே குறிப்பிடுகிறது என்பது அடுத்த சில பத்திகளில் தெளிவாகி விடுகிறது. ஒரு அவசரகாலத்தின் சமயத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான கூட்டான முடிவெடுப்பு அதிகாரத்தை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய ஐரோப்பாவின் இரண்டு அணுஆயுத சக்திகள் ஜேர்மன் அரசாங்கத்துக்கு வழங்குமா என்ற சந்தேகத்தை கட்டுரையாசிரியர்கள் எழுப்புகின்றனர். பிரிட்டிஷ் பிரதமர் இந்த அதிகாரத்தை எங்ஙனம் அவர் பயன்படுத்த விரும்புகிறார் என்பதை -அதாவது ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்ஸிட் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு துருப்புச்சீட்டாக- ஏற்கனவே தெளிவாக்கி விட்டிருக்கிறார். பிரான்சில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் யார் இதற்கான தொனியை அமைப்பார்கள் என்பது இப்போது முழுமையாக திறந்த நிலையில் இருக்கிறது.
Die Zeit கட்டுரையின் ஆசிரியர்கள், ஜேர்மனி ஒரு “அமைதிவாத நாடாக” இருக்கிறது என்ற உண்மையை கொண்டு ரொம்பவே வருந்துகிறார்கள். “அணுஆயுதரீதியாக எவ்வாறு சிந்திப்பது என்பதையே” ஜேர்மனியர்கள் மறந்து விட்டிருப்பதாக Die Zeit கூறுகிறது. வேறுவார்த்தைகளில் சொல்வதானால், மில்லியன் கணக்கான மனித உயிர்களை அழிப்பது ரீதியாக எப்படி சிந்திப்பது என்பதை அவர்கள் “மறந்து விட்டிருக்கின்றனர்”. வெளிப்படையாக, அவர்களுக்கு அதை மீண்டும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது!
பழமைவாத Frankfurter Allgemeine Zeitung இல் Jan Techau எழுதியிருப்பது இன்னும் மிக வெளிப்படையானதாக இருக்கிறது. ஜேர்மனியில் வெளியுறவுக் கொள்கை விவாதத்தின் ஊடாக ஓடக்கூடிய ஒவ்வொரு முன்முயற்சிக்கு பின்னரும் ‘தார்மீகரீதியாக பரிசுத்தமாக’ தொடர்ந்தும் நிற்பதற்கான முயற்சியை “நடுக்கமளிப்பதாய்” இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். “நடத்தையை அளவிடுவதற்கு மிதமிஞ்சிய தார்மீக நிர்ணயம்” இருப்பதானது ஒரு “தனிமைப்படுத்தும் நடுக்கநோய்”க்கு கொண்டுசென்று விடுகிறது.
பேர்லினில் அமெரிக்க அகாதமியில் இருக்கும் ரிச்சார்ட் சி.ஹொல்புரூக் மன்றத்தின் இயக்குநர், இந்த தார்மீக நடுக்கநோய்க்கான மூலத்தை, “இரண்டாம் உலகப் போரின் முடிவில், தனது அத்தனை ஆற்றலும், அத்தனை சித்தாந்தங்களும், இல்லாமையில் துன்புறுவதற்கான ஆயத்தமும், அதன் அபிலாசையும், அதன் படைப்புத்திறனும், அதன் ஒழுக்கமும் மனிதத் திட்டங்களிலேயே மிகப் பயங்கரமான ஒன்றிற்குள் பாய்ந்து விட்டிருந்ததை” கண்ட ஒரு ”சமூகத்தின் கூட்டு அதிர்ச்சி”யில் தேடுகிறார்.
என்ன அருமையான சூத்திரப்படுத்தல்! ஹில்டரைப் பின்பற்றியவர்கள் அவரை சித்தாந்த அடிப்படையிலேயே ஆதரித்தார்கள் என்றும், போரின் முடிவில்தான் அவர் ஒரு குற்றவாளியாக இருந்ததை அவர்கள் கண்டுகொண்டார்கள் என்றும் நாம் நம்ப வேண்டும் என்று உண்மையாகவே Techau கருதுகிறாரா?
எப்படியிருந்த போதும், தார்மீக மனஉளைச்சல்களை எல்லாம் கடந்து சென்று, பாதுகாப்புக் கொள்கை மீதான விவாதத்தை “ஒருவரின் தார்மீக அவசியங்களை பூர்த்திசெய்வதை” காட்டிலும் “அரசியல் நலன்கள் மற்றும் பொறுப்பின்” அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் ஆவேசத்துடன் ஆலோசனைவைக்கிறார்.
“வெளியுறவுக் கொள்கை”யானது Techau கூறுகிறார், “எப்போதுமே தார்மீகரீதியாய் கணக்கில் வராத ஒருபகுதியில் நடந்தேறுகிறது, அதில் ஒருவர் நடவடிக்கைத் திறத்துடன் திகழ வேண்டுமென்றால், அவர் தனது சொந்த தார்மீக பலவீனத்தில் வலிமிகுந்த சமரசங்களை மேற்கொள்ளத் தள்ளப்படுகிறார்.”
இராணுவத்தை “வெளியுறவுக் கொள்கையின் தலைமையிலுள்ள ஒழுங்கு” என்று அவர் குறிப்பிடுகிறார். அவர் அறிவிக்கிறார், “இராணுவரீதியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான விருப்பம்” என்பதே ”ஐரோப்பாவில் புதிய மூலோபாய நிச்சயமற்ற காலத்தில், வேறெந்த காரணியை விடவும் அதிகமாய், ஒரு நாடு நம்பகமான கூட்டாளியாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது... ஆகவே ஒருவரின் தார்மீக பலவீனத்தையே பிரதான தேசிய நலனாக ஆக்குவதன் அரசியல் விலைகள் மிகப் பிரம்மாண்டமானதாய் ஆகி விடக் கூடும்.”
ஜேர்மனிக்கு அதன் சொந்த அணு ஆயுதங்கள் தேவையாக இருக்கிறதா என்ற கேள்வியையும் Techau எழுப்புகிறார். பின்வரும் அச்சுறுத்தலுடன் அவர் நிறைவுசெய்கிறார், “வரவிருக்கும் ஆண்டுகளில், நாடு இன்று கனவில் கூட கண்டிராத -அதன் கொடுங்கனவுகளில் கூட கண்டிராதவையாகவும் கூட இருக்கலாம்- வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு சவால்களுக்கு முகம்கொடுக்கும்.”