Print Version|Feedback
Sri Lanka Tamil parties attempt to form a new alliance
இலங்கை தமிழ் கட்சிகள் புதிய கூட்டணியை அமைக்க முயற்சிக்கின்றன
By Subash Somachandran
29 November 2017
இலங்கையின் வடக்கினைத் தளமாக கொண்டு செயற்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (த.தே.ம.மு.) ஆகிய இரு தேசியவாத கட்சிகளும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேரத்தல்களில் போட்டியிடுவதற்காக ஒரு கூட்டணியை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளன.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். மற்றும் த.தே.ம.முன்னணியும், கொழும்பு அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிக் கூட்டமைப்புக்கும் எதிராக அதிருப்தியடைந்துள்ள தமிழ் மக்களுக்கு மற்றொரு பிற்போக்கு தேசியவாத பொறியை அமைப்பதற்கு முயற்சி செய்கின்றன.
தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டிணைவான தமிழ் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஒரு பங்காளி ஆகும். பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியில் இருந்தபோதிலும், தமிழ் கூட்டமைப்பானது அமெரிக்க-சார்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பிரதான எடுபிடியாக செயற்பட்டுவருகின்றது. தமிழ் கூட்டமைப்பின் வகிபாகம், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் பூவிசார் அரசியல் நலனுக்கு ஆதரவளிப்பதன் பாகமாகும்.
தேல்தல் தோல்விப் பீதியினால், ஜனநாயக-விரோத நடவடிக்கை ஒன்றை எடுத்த கொழும்பு அரசாங்கம், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்ககளை மீண்டும் மீண்டும் ஒத்தி வைத்தது. ஜனவரியில் தேர்தல்களை நடத்துவதாக அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை விடுத்த போதிலும், புதிய தேர்தல் தொகுதிகளை இரத்துச் செய்யும் ஒரு நீதிமன்ற உத்தரவினை அரச சார்பு பங்காளிகள் எதிர்பார்த்துள்ளதால், தேர்தல் நிச்சயமின்மையில் உள்ளது.
நவம்பர் 12 அன்று த.தே.கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் வடக்குமாகாண சபையின் முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரன் தலமையில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவைத் தலைவர்களுடனான கூட்டத்தின் பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எஃப். மற்றும் த.தே.ம.மு. தலைவர்கள் தங்களின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தினார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையில், தனது கட்சி தமிழ் கூட்டமைப்பில் இருந்து வெளியேறப்போவதில்லை ஆனாலும் தேர்தலில் போட்டியிடுவதற்காக த.தே.ம.முன்னணியுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார். அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கையில், “சமஸ்டி முறை, வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளடக்கப்படாமல்” இருப்பதையும் மற்றும் “பௌத்த மதத்திற்கு முன்னுரிமை” கொடுக்கப்பட்டுள்ளதையும் கூட்டமைப்பு ஆதரிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் கூட்டமைப்பின் பிரதான பங்காளியான இலங்கை தமிழரசுக் கட்சி, அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது, என பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார். கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டபோது, சுயநிர்ணய உரிமையின் அடிப்டையில் வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது, என அவர் மேலும் கூறினார். இப்போது “தமிழரசுக் கட்சி இந்த கருத்துக்கு எதிராக வேலை செய்கின்றது,” என பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.
இதனையே பிரதிபலித்த த.தே.ம.மு. தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் அமைப்பு முன்மொழிவுகளை நிராகரிக்குமாறு பிரச்சாரம் செய்யப்போவதாக கூறினார். “நாங்கள் இந்த தேர்தலை ஒரு கருத்துக்கணிப்பாக மாற்ற முயற்சிக்கப் போவதாக (அரசியலமைப்புக்கு எதிராக)” எச்சரிக்கை செய்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். மற்றும் த.தே.ம.மு., இந்த தேர்தல் பிரச்சாரத்தின் ஊடாக தமிழ் இனவாத பிரச்சாரத்தினை தீவிரமாக்குவதற்கு முயற்சி செய்கின்றன. தமிழ் தொழிலாளர்கள், வறிய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வளர்ந்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் இவர்கள் இந்தப் பிரச்சாரத்தினை முன்னெடுக்கப்போகின்றனர். “நல்லிணக்கத்தை” ஏற்படுத்துவதாகவும் சுமார் 30 ஆண்டுகள் நீடித்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் பேரழிவுகளுக்கு தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தே சிறிசேன 2015 ஜனவரியில் ஆட்சிக்கு வந்தார்.
2009ல் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட யுத்தத்தின் இறுதி மாதத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கானவர்கள் இன்னமும் சிறையில் உள்ளனர். பத்தாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்ற தற்காலிக முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
சிறிசேன ஆட்சிக்கு வந்தால் “தீர்வுகள்” கிடைக்கும் என வாக்குறுதி கொடுத்து தமிழ் கூட்டமைப்பும் மற்றைய கட்சிகளும் அவருக்கு ஆதரவு கொடுத்தன. அரசியல் கைதிகளை விடுதலை செய், யுத்தகாலத்தில் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீள ஒப்படை மற்றும் யுத்த காலத்தில் காணமல்போனவர்கள் பற்றிய தகவர்களை வழங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தினமும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
“புலிப் பயங்கரவாதம்” மீண்டும் தலைதூக்குகிறது எனக் கூறிக்கொண்டு கொழும்பு அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலமையிலான கூட்டு எதிர்க்கட்சி மற்றும் சிங்கள் இனவாதக் குழுக்கள், இராணுவம் மற்றும் பொலிசும் தமிழர்-விரோத பிரச்சாரத்தினை தீவிரப்படுத்தியுள்ளன. தென்பகுதியில் அபிவிருத்தியாகும் சமூக அமைதியின்மைக்கு சமமான சூழ்நிலை வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்தியடைகின்ற நிலைமைகளின் மத்தியில், தொழிலாள வர்க்கத்தை இனவாத வழியில் பிளவுபடுத்துவதற்கே இந்த பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மக்களை கோபத்துக்குள்ளாக்கியிருக்கும் சிக்கன நடவடிக்கைகளையும் பொலிஸ் மற்றும் இராணுவ ஒடுக்குமுறைகளையும் திணிக்கும் கொழும்பு அரசாங்கத்தின் ஏறத்தாழ ஒரு பங்காளியாகவே கூட்டமைப்பு செயற்படுகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். மற்றும் த.தே.ம.மு. அமைக்கவுள்ள கூட்டணி, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கு எதுவுமே செய்யப்போவதில்லை. இந்த நடவடிக்கை இரண்டு பிரதான நோக்கங்களைக் கொண்டது.
முதலாவது, மக்கள் மத்தியில் தமிழ் கட்சிகளுக்கு எதிராக வளர்ந்துவரும் எதிர்ப்புக்களை இனவாத பாதையில் திசை திருப்புவது.
இரண்டாவது, தமிழ் உயர் தட்டுக்களுக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு அரசாங்கத்தின் மீது அழுத்த்தினைக் கொடுப்பற்கு இந்தக் கட்சிகள் முயற்சிசெய்கின்றன. தமிழர் தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கோரிக்கைகள், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதற்காக கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பகிர்வை கோரும் தமிழ் உயர்தட்டினரின் அக்கறையையே பிரதிநிதித்துவம் செய்கின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக ஒரு மாற்றீட்டினை நோக்கித் திரும்பும் மக்களை தடுத்து, தேசியவாத துரோகத்துக்குள் தொழிலாளர் மற்றும் ஏழைகளை சிக்கவைக்கவே அவர்களின் தலையீடு அமைந்துள்ளது.
தமிழர்களின் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று கூறிக் கொண்டு, கடந்த மூன்று வருடங்களாக, பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் உட்பட தமிழ் தலைவர்கள், அரசாங்கத்தையும் தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனையும் எம்.ஏ. சுமந்திரனையும் “விமர்சித்தார்கள்”. மக்களின் கோபத்தினை தடம்புரட்டுவதற்காக, விக்னேஸ்வரன் தலமையிலான ஒரு பிரிவு தமிழ் மக்கள் பேரவையை ஸ்தாபித்தது. அவர்கள் “எழுக தமிழ்” என்னும் இனவாத பிரச்சாரத்தினை வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுத்தார்கள்.
பொன்னம்பலத்தின் அரசியல் பாதை குறிப்பாக பிசுபிசுத்துப்போனதாகும். முன்னர், கூட்டமைப்பின் பங்காளியாக இருந்து, 2010ல் த.தே.ம.முன்னணியை ஸ்தாபிக்கும் வரையும் அவர் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். யுத்தகாலத்தில் அவர்கள் புலிகளின் ஆதரவாளராக இருந்து கொண்டு, சர்வதேச ஆதரவுக்காக விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்கள். அது அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியத்துக்கான ஆதரவாகும். த.தே.ம.மு. பிரிவினைவாதத்தை வலியுறுத்துகின்றது. அது 2015ல் சிறிசேன ஆட்சிக்குவருவதற்கு ஆதரவு கொடுத்தது.
புதன்கிழமை (நவம்பர் 22), தமிழ் நெற் பொன்னம்பலத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தமிழ் கைதிகளை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் யு.என்.எச்.ஆர்.சி. மற்றும் அதன் அமெரிக்க நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கும் அனுப்பிய ஒரு கடிதம் பற்றி அந்த அறிக்கை புகழ்ந்திருந்தது. இந்த இரண்டு கடிதங்களிலும், யுத்த காலத்தில் காவலில் வைக்கப்பட்ட தமிழ் கைதிகளை, “ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் யுத்தக் கைதிகளின் சர்வதேச உரிமைகளுக்கு” உரித்துடைய அரசியல் கைதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே மாணவர் சங்கத்தின் வேண்டுகோளாகும்.
இந்தக் கைதிகள் நிச்சயமாக அரசியல் கைதிகளாக இருக்கின்ற போதிலும், அவர்கள் “பயங்கரவாத குற்ற நடவடிக்கைகளில்” ஈடுபட்டதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவே அரசாங்கம் கூறுகின்றது. அவர்களில் பலர் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றியே பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், என்று மாணவர் ஒன்றியம் அமெரிக்க வதிவிடப் பிரிதிநிதிக்கான கடிதத்தில் கூறியுள்ளது. பொன்னம்பலமும், தமிழ் உயர் அடுக்கின் ஒரு பிரிவு மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே மாணவர் அமைப்புக்களால் யு.என.எச்.ஆர்.சி. பிரதம அதிகாரிக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் நம்பிக்கை இழந்த நிலையிலேயே மேற்கத்தைய சக்திகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் தொடர்புகளை ஆரம்பித்துள்ளார்கள். தமிழ் தலைவர்களின் ஒரு பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்கள் அமெரிக்கா, இந்தியா மற்றும் யு.என.எச்.ஆர்.சி. என்பன கொழும்பு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதையிட்டு கவலையடைந்துள்ள தமிழ் தலைவர்களின் பகுதியினரையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
பிரேமச்சந்திரனும் அவரது கட்சியும், பேரழிவுகரமான ஜனநாயக-விரோத வரலாற்றைக் கொண்டுள்ளார்கள். புலிகளைப் போலவே, தனி அரசுக்கான ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்., தமிழ் இளைஞர்களின் தீவிரத் தன்மையை சுரண்டிக் கொள்வதற்காக சோசலிச-சார்பு பாசாங்கும் காட்டியது. இந்த தமிழ் குழுக்கள், இந்திய ஆளும் தட்டுக்களுடன் குறிப்பாக தமிழ்நாட்டு ஆளும் தட்டுக்களுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தன.
கொழும்பு அரசாங்கத்தினை நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக புதுடில்லி 1987ல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஒன்றினைக் கைச்சாத்திட்டது. தமிழ் தட்டுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொடுத்து, தமிழ் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களையும் களையும் இந்த உடன்படிக்கையை, புலிகள் உட்பட தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தபோது, இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஒரு கொடூரமான யுத்தத்தினை கட்டவிழ்த்துவிட்டது.
இந்திய இராணுவத்தினால் கொடூரமாக நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கொலைகள், சொத்துக்கள் அழிப்பு மற்றும் பத்தாயிக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டதையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். மற்றும் பல ஆயுதக் குழுக்களும் ஆதரித்தன. இந்த ஆயுதக் குழுக்கள், முதலில் இந்திய இராணுவத்துடனும், பின்னர் இலங்கை இராணுவத்துடனும் கூலிப்படைகளாக வேலைசெய்து, புலி உறுப்பினர்களையும் மற்றும் யுத்த்தினை எதிர்த்த மக்களையும் வேட்டையாடின. 2001ல், ஈ.ஆர்.எல்.எஃப். மற்றைய கட்சிகளுடன் இணைந்து தமிழ் கூட்டமைப்பினை ஸ்தாபித்து, புலிகளின் பராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்டது.
ஈ.ஆர்.எல்.எஃப், 2015ல் சிறிசேன ஆட்சிக்கு வருவதை ஆதரித்தது. பிரேமச்சந்திரன், தனது கட்சியின் அடித்தளத்தினைப் பலப்படுத்துவதற்கும் மற்றும் மக்கள் மத்தியில் வரும் எதிர்ப்பினை திசை திருப்பவுமே தமிழரசுக் கட்சியை விமர்சிக்கின்றார்.
தமிழ் ஊடகங்களும் மற்றும் உயர்தட்டுக்களின் ஒரு பிரிவினரும் தமிழ் கூட்டமைப்புக்குள் வரும் பிளவினை எதிர்க்கின்றார்கள். தமிழ் தினசரியான வீரகேசரி கருத்தாளரான திருமலை நவம் எழுதிய கருத்துரையில், “வெண்ணெய் திரண்டுவருகின்ற வேளையில் தாழியை உடைத்த கதை போல் இல்லாமல் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டிய இறுதிச் சந்தர்ப்பத்தில் தமிழர்களும் அவர்களது தலைமைகளும் உள்ளன,” என்றார். அவர் மேலும் கூறும்போது, “ஒன்றுபட்ட பேரணியில் கைகோர்த்து தமிழ் மக்களுக்கான உரிமையை வென்றெடுக்க வேண்டிய இறுதி எல்லையில் நின்றுகொண்டிருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், சில அரசியல் சலுகைகளை பெற்றும் சாத்தியத்தைப் பற்றியே அவர் எழுதுகின்றார்.
நவம்பர் 11, மன்னாரில் பிரதான கத்தோலிக்க மதகுருவின் ஏற்பாட்டில் கட்சியின் ஐக்கியத்தினை வலியுறுத்தி, தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
அவர்களது பிரதான கவலை, மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் அல்ல மாறாக தமிழ் உயர்தட்டுக்களின் சலுகைகள் பற்றியதாகும். தங்களுடைய பூகோள அரசியல் நலனுக்கு சேவையாற்றும் வகையில், இந்தியாவும் அமெரிக்காவும் கொழும்பு அரசாங்கத்தினை ஆதரிக்குமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளன.
தொழிலாளர்கள் மற்றும் மாணவர் உட்பட இளைஞர்கள் சகலரும் தமிழ் முதலாளித்துவத்தின் சகல பிரிவினரையும் நிராகரிக்குமாறும், நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்டையில் அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் பக்கம் திரும்புமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். சிங்கள ஆளும் வர்க்கத்தின் மீதும், அதன் கொழும்பு அரசாங்கத்தின் மீதும் எள்ளவும் நம்பிக்கை வைக்க முடியாது. சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே, வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுமாறும், சட்ட மற்றும் இன ரீதியான ஒடுக்குமுறைகள், மொழி மற்றும் மத ரீதியிலான பாகுபாடுகள் சகலதையும் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றது. இந்த உரிமைகளை தெற்காசிய மற்றும் சர்வதேச சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியங்களின் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுவதன் மூலமே ஸ்தாபிக்க முடியும். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.