Print Version|Feedback
Militarism and crackdown on refugees dominate EU summit
ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் இராணுவவாதமும், அகதிகள் மீதான ஒடுக்குமுறையும் மேலாதிக்கம் செலுத்துகின்றன
By Peter Schwarz
15 December 2017
புரூசெல்ஸில் விழானன்று தொடங்கி, நடந்து முடிந்த இந்தாண்டின் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு, அரசுகளது அணிசேர்க்கைக்கு அடையாளப்படுத்தலாக உள்ளது. சமூக மற்றும் தேசிய முரண்பாடுகளால் பிளவுபடுத்தப்பட்டும் அரசியல் பதட்டங்களால் முடக்கப்பட்டும் உள்ள இந்த 28 நாடுகளது அரசு தலைவர்கள், இராணுவவாதத்தைப் பெருமளவில் தீவிரப்படுத்துவது என்ற ஒரேயொரு ஒரு விடயத்தில் உடன்படுகின்றனர்.
ஐரோப்பிய இராணுவ ஒன்றியம் வேகமாக முன்நகர்த்தப்பட்ட அளவுக்கு சமீபத்திய மாதங்களில் இந்தளவுக்கு வேகமாக வேறெந்த பிரதான அரசியல் திட்டமும் முன்நகர்த்தப்பட்டிருக்கவில்லை. திங்களன்று, அதில் பங்கு பெற்ற 25 நாடுகளது வெளியுறவுத்துறை அமைச்சர்கள், நிரந்தர கட்டமைப்புக்கான கூட்டுறவின் (Permanent Structured Cooperation - Pesco) கீழ் முதல் 17 திட்டங்களை முன்னெடுக்க ஒப்புதல் வழங்கினர். நீண்ட கால அடிப்படையில் அமெரிக்காவிடமிருந்து அதிக சுதந்திரமான ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். அந்த உச்சி மாநாட்டில் Pesco புகழ்ந்து பாராட்டப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க், உச்சி மாநாட்டுக்கான அவரது வரவேற்புரையில், “கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒற்றுமை பேணுவது சாத்தியமே என்பதற்கு … சிறந்த எடுத்துக்காட்டு,” என்பதாக Pesco ஐ வர்ணித்தார். அவர் எழுதினார், “25 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் —அனைத்து ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் சம்மதத்துடன், தற்போதைய உடன்படிக்கையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு— ஒரு புதிய துறையில் கூட்டுறவை தொடங்குகின்றன. நடைமுறையில் ஒற்றுமைக்கான இந்த எடுத்துக்காட்டு நம் எல்லோருக்கும் ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டும், நம்பத்தகுந்த வகையில் ஏனைய முக்கிய முடிவுகளுக்கும் இதுவொரு நல்ல அறிகுறியாக இருக்கிறது,” என்றார்.
உண்மையில், அந்த உச்சி மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் தோற்றப்பாட்டளவில் மற்ற ஒவ்வொரு பிரச்சினைகள் மீதும் பிளவுபட்டுள்ளன. இது, உச்சி மாநாட்டின் திட்ட நிரலில் இருந்த இரண்டாவது தலைப்பான, அகதிகள் கொள்கைக்கும் பொருந்துகிறது.
அனைத்து ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளும் கண்டத்தை அடைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதன் மீது உடன்படுகின்றன. இது வரையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியம் பால்கன் பாதையை அடைத்து, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுடன் ஒரு அருவருக்கத்தக்க உடன்படிக்கைக்குள் நுழைந்தது, அவர் பணத்திற்கு கைமாறாக எந்தவொரு அகதிகளும் ஏகியன் கடன் வழியாக கிரீஸை அடைய முடியாமல் இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.
லிபியாவில், இத்தாலியும் ஐரோப்பிய ஒன்றியமும் கடல் ரோந்துப்படை எனப்படுவதையும் மற்றும் பிற போராளிகள் குழுக்களையும் ஆயுதமயப்படுத்தி வருகின்றன, இவை அகதிகள் மத்திய தரைக்கடலைக் கடந்து பயணிப்பதிலிருந்து அவர்களைப் பலவந்தமாக தடுத்து, கைது செய்து, சித்திரவதை செய்கின்றன, சில சமயங்களில் அவர்களை அவை அடிமைகளாக விற்கின்றன. இந்த சக்திகள், இஸ்லாமியவாதிகள் மற்றும் கடத்தல் குழுக்கள் உட்பட, உள்நாட்டு போரின் முன்னாள் போராளி குழுக்களில் இருந்து ஆட்களை நியமித்துள்ளது.
இந்த குற்றகரமான கொள்கை இன்றியமையாத ரீதியில் சவாலுக்கிடமின்றி இருக்கின்ற நிலையில், அங்கே அகதிகளை ஏற்பதில் ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளுக்கு இடையே கடுமையான விவாதங்கள் உள்ளன. 2015 இல், கிரீஸ் மற்றும் இத்தாலியை வந்தடைந்த அகதிகளில் சிலரை ஒரு கட்டாய கடமைப்பாட்டுக்கு உட்பட்ட பங்கீட்டு முறையின்படி பிற ஐரோப்பிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதென பெரும்பான்மையுடன் ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்தது. இந்த முடிவு பெரிதும் செயல்படுத்தப்படவில்லை. போலாந்து, செக் குடியரசு மற்றும் ஹங்கேரி போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எந்தவொரு அகதிகளையும் ஏற்றுக் கொள்ள இந்நாள் வரையில் தொடர்ந்து மறுத்து வருகின்றன.
போலாந்தில் இருந்து வந்துள்ள டஸ்க், இதனால் தான், உச்சி மாநாட்டுக்கு சமர்பித்த அவர் ஆவணத்தில், பங்கீட்டு முறை பிளவுகளை உருவாக்குவதுடன் நடைமுறைக்கு உதவாதவையாக நிரூபணமாகி உள்ளதால் அவற்றைக் கைவிட வேண்டுமென முன்மொழிந்தார். இது கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.
டஸ்கின் கருத்துடன் உடன்பாடு இல்லை என்றும், அகதிகளைப் பகிர்ந்து கொள்வது தவிர்க்கவியலாதது என்றும் ஜேர்மன் அரசாங்கம் குறிப்பிட்டது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் துணை தலைவர், பிரான்ஸ் ரிம்மர்மான்ஸ் கூறுகையில், “புலம்பெயர்வு மீதான சவாலுக்கு நாம் ஒரு ஐரோப்பிய தீர்வைக் காண வேண்டும், இல்லையென்றால் அங்கே எந்த தீர்வும் இருக்காது,” என்றார். ஒவ்வொரு அங்கத்துவ நாடும் அதன் பங்கிற்கு செயல்பட வேண்டுமென அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாராளவாத கட்சி மற்றும் பசுமை கட்சியின் நாடாளுமன்ற தலைவர்கள் டஸ்க் உடன் முரண்பட்டனர். “டஸ்கின் ஆவணத்தால் நான் முற்றிலும் அதிர்ச்சி அடைந்தேன்,” என்று தாராளவாத கட்சியின் Guy Verhofstadt தெரிவித்தார். பசுமை கட்சியின் Ska Keller, “அவர் போலாந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு போன்ற ஆட்சேபகர்களின் கரங்களைப் பலப்படுத்துகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது,” என்றவர் சீறினார்.
வியாழனன்று மாலை விவாதத்திற்கான மற்றொரு தலைப்பாக வெளியுறவு கொள்கை இருந்தது. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் உக்ரேனில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்ஸ்க் சமாதான உடன்படிக்கை மீதான ஒரு மதிப்பீட்டை வழங்கினர். அதை தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக ஆறு மாதங்களுக்கு தடையாணைகளை நீடிப்பதற்கு உச்சி மாநாடு உடன்பட்டது. இவற்றிற்கு கூடுதலாக, அதில் பங்கெடுத்தவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த முடிவைக் குறித்து விவாதித்தனர்.
உச்சி மாநாட்டில் பங்கெடுத்தவர்கள், இன்று, யூரோ மண்டலத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பர். ஆனால், பெரிதும் சச்சரவுக்குரிய பிரச்சினை மீது எந்த முடிவுகளும் எடுக்க முடியாது. ஜேர்மனில் காபந்து அரசாங்கம் மட்டுமே உள்ளதால், பேர்லின் இதில் எந்த நிலைப்பாடும் எடுக்க முடியாது உள்ளது.
இத்திட்டநிரலின் இறுதி விடயம் பிரிட்டன் வெளியேற்றம் மீதான பேச்சுவார்த்தைகளாக இருக்கும். பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரெசா மே ஐரோப்பாவிலிருந்து வெளியேறுவதற்கான பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்க பரிந்துரைக்கும், இது பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான எதிர்கால உறவுகளைக் கையாளும். இதற்கு உச்சி மாநாட்டில் எந்த எதிர்ப்பும் இருக்காதென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இது எந்த விதத்திலும் இந்த பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதில்லை. “முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைவதே துரிதமில்லா நிகழ்முறையாக நடக்கிறது, இடைமருவு காலகட்டத்தை தீர்மானிப்பதற்கும் இங்கிலாந்துடனான நமது எதிர்கால உறவுகளைத் தீர்மானிப்பதற்கும் நமக்கு வெறும் பத்தே மாதங்களே உள்ளன,” என்று உச்சி மாநாட்டுக்கான அவரின் வரவேற்புரையில் டஸ்க் தெரிவித்தார். “இதில் நேரத்திற்கு எதிராக வெறியோடு ஓட வேண்டியதாக இருக்கும்,” என்றார்.
அந்த உச்ச மாநாட்டில் கலந்து கொண்டவர்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நிலவும் ஒற்றுமையின்மை, பலவீனம் மற்றும் பிளவின் ஓர் உணர்வை அளவிட முடியும். அது ஓர் உலக சக்தியின் படைத்துறை அதிகாரிகளின் கூட்டம் என்பதைக் காட்டிலும் அதிகமாக ஓர் இராணுவ மருத்துவமனைக்கு ஒத்திருந்தது. அங்கே இருந்தவர்களில் எவரொருவரும் அழுத்தத்தின் கீழ் இல்லாமல் இல்லை என்ற நிலையில், அவர்களின் சொந்த நாட்டில் அவர்கள் அரசியல் உயிர்பிழைப்புக்கு போராடி கொண்டுள்ளனர் என்பதோடு, மக்களிடையே ஆழமாக மதிப்பிழந்துள்ளனர். போலாந்து மற்றும் செக் பிரதம மந்திரிகள் இவ்வாரம் தான் அதிகாரத்திற்கு வந்திருந்தனர், ஆஸ்திரிய பிரதம மந்திரி அடுத்த வாரம் பதவியிலிருந்து வெளியேற உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தை ஐயுறவாதம் அல்லது முற்றுமுதலான எதிர்ப்புடன் பார்க்கும் தேசியவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதிக காலம் சேவையாற்றிய ஐரோப்பிய அரசாங்க தலைவராக 12 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளவரும், ஜேர்மனியின் பொருளாதார பலத்தின் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் நீண்டகாலமாக அதிகாரம் செலுத்தி உள்ளவருமான ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், தற்போது வெறுமனே ஒரு காபந்து சான்சிலராக உள்ளதால், எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது உள்ளார். அந்த அரசாங்க நெருக்கடி இன்னும் பல மாதங்களுக்கு இழுபறியில் செல்லக்கூடும் என்பதோடு, புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டால், அது மேர்க்கெல் வெளியேற்றப்படுவதில் கூட போய் முடியலாம்.
இந்தாண்டு தொடக்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளுடன் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை வென்ற இமானுவல் மக்ரோன், பிரெஞ்சு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் சற்று அதிகமானவர்களால் மட்டுமே இப்போது நம்பிக்கையோடு பார்க்கப்படுகின்ற நிலையில், தொடர்ந்து ஆதரவை இழந்து வருகிறார். நவபாசிசவாத தேசிய முன்னணிக்கு அப்பாற்பட்டு, பலமான முதலாளித்துவ எதிர்கட்சியான குடியரசு கட்சி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைப் புகழ்ந்துரைப்பவரும், ஒரு பலமான ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மக்ரோனின் இலக்கை வெளிப்படையாக எதிர்க்கும் ஒரு தலைவரான லோரோன் வோக்கியே (Laurent Vauquiez) ஐ தேர்தெடுத்துள்ளது.
செக் குடியரசில் இருந்து வந்துள்ள Andrej Babis முதல்முறையாக ஓர் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். செக் நாட்டின் ட்ரம்ப் என்றும் குறிப்பிடப்படும் இந்த வலதுசாரி வெகுஜனவாத பில்லியனர், புதனன்று தான் பதவியேற்றார். அவர் ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்கு தலைமை கொடுக்கிறார். மில்லியன் கணக்கான ஐரோப்பிய ஒன்றிய நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியதற்காக அவர் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை முகங்கொடுத்து வருவதால், நாடாளுமன்றம் ஜனவரியில் அதன் நம்பிக்கை வாக்குகளை அவருக்கு வழங்குமா என்பதே ஐயத்திற்கிடமாக உள்ளது.
இதற்கு எதிர்விதமாக, ஆஸ்திரியாவின் கிறிஸ்டியன் கெர்னுக்கு இதுவே கடைசி ஐரோப்பிய ஒன்றிய மாநாடாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தல்களில் சமூக ஜனநாயக கட்சி தோற்றதைத் தொடர்ந்து, பழமைவாத மக்கள் கட்சி (ÖVP) மற்றும் அதிதீவிர வலதுசாரி சுதந்திர கட்சியின் (FPÖ) ஒரு கூட்டணி அடுத்த வாரம் பதவியேற்க உள்ளது. ஆஸ்திரியா அதையடுத்து போலாந்து, செக் குடியரசு, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய ஐயுறவுவாத வைஸ்கார்ட் நாடுகளுடன் நெருக்கமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலாந்து பிரதம மந்திரி Mateusz Morawiecki உம் பதவிக்கு புதிது. அவருக்கு முன்பிருந்த Beata Szydlo போலவே, இவரும் ஆளும் சட்டம் மற்றும் நீதி கட்சி (PiS) இன் தலைவர் Jaroslav Kaczynski இன் நம்பிக்கையைப் பெற்றுள்ளார், இவர் தான் திரைக்குப் பின்னால் இருந்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார். Szydlo க்கு எதிர்விதமாக, Morawiecki ஒரு நிதியியல் வல்லுனர் ஆவார். இவர் சர்வதேச நிதிய மூலதனத்தின் நம்பிக்கையைத் திரும்ப வென்றெடுப்பார் என்று கருதப்படுகிறது.
ஓராண்டுக்கு முன்னர் மத்தேயோ ரென்சியைப் பிரதியீடு செய்த இத்தாலிய பிரதம மந்திரி பாவுலோ ஜென்ரிலோனி, ஒருபோதும் தேர்தலைச் சந்திக்கவே இல்லை. ஜென்ரிலோனி மற்றும் ரென்சியின் ஜனநாயக கட்சி (PD) கருத்துக்கணிப்புகளில் மிகவும் மோசமான முடிவுகளைப் பெற்று, சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையிலான ஒரு வலதுசாரி கூட்டணி மற்றும் நகைச்சுவையாளர் பெப்பே கிறில்லோ (Beppe Grillo) இன் ஐந்து நட்சத்திர இயக்கத்தை விட மிகவும் பின்தங்கி உள்ளது. மார்ச்சில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல்களுக்குப் பின்னர் ரோமில் ஐரோப்பிய-ஒன்றியத்தின் மீது ஐயறவு கொண்ட ஓர் அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பானிய பிரதம மந்திரி மரீனோ ரஹோய் மட்டுமே பதவியில் தங்கியுள்ளார், இதற்கு சமூக ஜனநாயக கட்சியின் ஆதரவுக்குத் தான் நன்றி கூற வேண்டும். சமீபத்திய கட்டலான் சர்வஜன வாக்கெடுப்பு எடுத்துக்காட்டியதைப் போல, அதிகாரத்தில் இருப்பதற்காக அவர் பிரான்கோ சர்வாதிகாரத்தை நினைவூட்டும் எதேச்சதிகார ஆட்சி முறைகளில் தஞ்சமடைந்து வருகிறார்.
கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் தொழிலாள வர்க்கத்தின் பாரிய எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறார். புரூசெல்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கெடுத்திருந்த போதே, அவர் அரசாங்கத்தின் சமூக செலவின குறைப்பு கொள்கைகள் மற்றும் ஒரு புதிய வேலைநிறுத்த-விரோத சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கிரீஸில் 24 மணி நேர பொது வேலைநிறுத்தம் நடந்தது. ஏதென்ஸில் மட்டும், 20,000 பேர் வீதிகளில் இறங்கியதாக பொலிஸ் குறிப்பிட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வாதிகார சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்ததாலேயே சிப்ராஸ் 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஏழு ஆண்டுகளாக கிரேக்க தொழிலாளர்கள் தங்களின் வருமானத்தில் 40 சதவீதம் அளவுக்கு இழந்து, சமூக அமைப்புமுறை பொறிந்து போயுள்ள விளைவுகளோடு சேர்ந்து, பிரதம மந்திரியானதும் அவர் சிக்கன கொள்கைகளை இன்னும் தீவிரப்படுத்தினார். 18,000 மருத்துவர்களும் இன்னும் பலரும் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
முதலாளித்துவ பத்திரிக்கைகள் குறிப்பிடுவதற்கு எதிர்முரணாக, ஐரோப்பிய ஒன்றியமும் அதற்கு முன்பிருந்த அமைப்புகளும் ஒருபோதும் ஐரோப்பாவின் ஐக்கியத்தின் உருவடிவமாக இருக்கவில்லை. அவை எப்போதுமே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது நலன்களைப் பின்தொடரும் ஆளும் வர்க்கத்தின் கருவிகளாகவே இருந்தன. அவை பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அவற்றின் நலன்களுக்காக அக்கண்டத்தை ஒழுங்கமைக்க உதவின.
ஆனால் சமூக பதட்டங்களும் சர்வதேச மோதல்களும், குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு பலமாக விளங்கிய அமெரிக்காவுடன் அதிகரிக்கின்ற நிலையில், கடந்த நூற்றாண்டில் இரண்டு முறை ஐரோப்பாவை போர்க்களமாக மாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிளவுகள் மீண்டுமொரு முறை மேற்பரப்புக்கு வந்து கொண்டிருக்கின்றன.
சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு, ஒருபோதும் முடிவில்லாத சமூக வெட்டுக்கள், தொழில் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவை பாரம்பரிய கட்சிகள் மீதான நம்பிக்கையையும், இந்த நிகழ்வுபோக்கிற்கு பிரதான பொறுப்பைத் தாங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான நம்பிக்கையையும் அழித்துவிட்டுள்ளது. சமூக ஜனநாயக கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவையும் பசுமை கட்சி மற்றும் சிரிசா போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகளும் ஐயத்திற்கிடமின்றி இத்தகைய தாக்குதல்களையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஆதரிப்பதால், எதிர்ப்பிலிருந்து இப்போதைக்கு வலதுசாரிகளும், தேசியவாத மற்றும் நவ-பாசிசவாத கட்சிகளும் கூட பிரதானமாக ஆதாயமடைகின்றன.
ஆனால் இது நீடிக்காது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இடதுசாரி உணர்வு மேலோங்கி உள்ளது. பலரும் வலதுசாரி கட்சிகளை வெறுப்பதுடன், இராணுவவாதம் மற்றும் முதலாளித்துவத்தை எதிர்க்கின்றனர். இந்த உணர்வுகளுக்கு ஓர் அரசியல் நோக்குநிலை தேவை. உலகெங்கிலும் போர் தொடுப்பதற்காக, ஒடுக்குமுறை அரசு எந்திரத்தைப் பலப்படுத்துவதற்காக மற்றும் சமூக வெட்டுக்களை ஒழுங்கமைப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை ஓர் இராணுவ கூட்டணியாக மாற்றுவதற்கு ஒரு பதில், தேசிய அரசுக்குள் திரும்புவதில்லை. அதற்கு மாறாக, அது ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளாக ஆக்கப்பட வேண்டும்.
ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஒருங்கிணைந்து, இராணுவவாதம், ஒடுக்குமுறை மற்றும் வலதின் வளர்ச்சிக்கு எதிரான எதிர்ப்பை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து, ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட வேண்டும். இது நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் மற்றும் அதன் ஐரோப்பிய பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் வேலைத்திட்டமாகும்.