Print Version|Feedback
ශ්රී ලංකාවේ දේශපාලන අර්බුදය තුල කම්කරු පන්තිය කම්කරු-ගොවි ආන්ඩුවකට සටන් වැදිය යුතුය
இலங்கை அரசியல் நெருக்கடிக்குள் உழைக்கும் வர்க்கம் தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்துக்காக போராட வேண்டும்
Statement by Socialist Equality Party (Sri Lanka)
9 December 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது பிரதான எதிரியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுடன் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்காக நடத்திய பேச்சுவார்த்தை முறிந்து போனதாக கடந்த வாரக் கடைசியில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தேசிய ஐக்கிய அரசாங்கம் வெடித்துச் சிதறும் அளவில் அதன் பங்காளிகளான சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (ஸ்ரீ.ல.சு.க.) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (ஐ.தே.க.) இடையில் நீண்டகாலமாக உக்கிரமடைந்து வந்த முரண்பாடுகள் சமநிலைப்படுத்தப்பட்டு கட்சிகள் இரண்டும் சேர்ந்து செயற்படுவதற்கு முடிவெடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அரசியல் பத்தி எழுத்தாளர், டிசம்பர் 3 வெளியீட்டில் எழுதிய கட்டுரையில், சிறிசேன மற்றும் இராஜபக்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடல் கவிழ்ந்தது பற்றி பின்வருமாறு எழுதியிருந்தார்: “ஸ்ரீ.ல.சு.க. எதிர் கன்னை (அதாவது இராஜபக்ஷ குழு), சிறிசேனவின் திடீர் பின்வாங்கலுக்கும் கலந்துரையாடல்களில் இருந்து விலகியதற்குமான காரணத்தை புரிந்துகொள்வதற்கு முடியாமல் இருந்தது. இதற்கு காரணம் தேசிய அழுத்தமா அல்லது வெளிநாட்டு அழுத்தமா, அல்லது அது இரண்டுமா.” அதிகம் எழுதியிருக்காவிட்டாலும் டைம்ஸ் எழுத்தாளர், சிறிசேனவுக்கு வரக்கூடிய அழுத்தம் பற்றி சமிக்ஞை செய்துள்ளார்.
ஸ்ரீ.ல.சு.க.யின் முன்னணி அமைச்சர்கள் ஊடாக இடம்பெற்ற சிறிசேனவுக்கும் இராஜபக்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் முறிந்துபோனதற்கு காரணம் என்ன என்பது முழுமையாக அம்பலப்படவில்லை. ஆயினும் தமது தலையீட்டில் மேற்கொண்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிகாரத்தில் அமர்த்திய சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பிளவடையாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், ஆட்சியில் இருந்து இறக்கப்பட்ட இராஜபக்ஷவுடன் மீண்டும் சேர்வதற்கான பேச்சுவார்த்தைகளை இரத்துச் செய்யவும் திரைக்குப் பின்னால் அமெரிக்காவும் இந்தியாவும் செயற்பட்டுள்ளன என கணித்துக்கொள்வது கடினம் அல்ல.
இராஜபக்ஷ ஆட்சியில் முன்வரிசை முகவராக இருந்த சிறிசேன, அவருக்கு எதிராகப் போட்டியிடுவதற்கு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நவம்பர் 21 அன்று நடந்த ஸ்ரீ.ல.சு.க. மத்திய குழு கூட்டத்தில் பின்வருமாறு கூறினார்: “பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றாக வேலை செய்ததன் காரணமாகவே சர்வதேச ரீதியில் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமருக்கு அரசாங்கத்தில் இருந்து விலகவேண்டிய அவசியம் கிடையாது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.” (சண்டே டைம்ஸ், நவம்பர் 26). சிறிசேன “சர்வதேசம்” என குறிப்பிடுவது, அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளையும் இந்தியாவையும் பற்றியே ஆகும். அவர், இவ்வாறு கூறுவதன் மூலம், அமெரிக்கா உட்பட சக்திகளுக்கு தான் அடிமைத்தனமாக கட்டுண்டு இருப்பதையும் ஆளும் கூட்டணியை நீண்ட கலத்திற்கு பேணிக்காக்கும் உறுதிப்பாட்டையும் சமிக்ஞை செய்துள்ளார்.
சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு, 2015 தேர்தலில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தலையிட்டதன் நோக்கம், இராஜபக்ஷ ஆட்சி பெய்ஜிங்குடன் முன்னெடுத்த பொருளாதார உறவுகளை நிறுத்தி, சீனாவுக்கு எதிரான “ஆசியாவில் முன்னிலை” வேலைத் திட்டத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டு வந்த மூலோபாய இராணுவத் திட்டங்களுடன் இலங்கையை இணைத்துக்கொள்வதே ஆகும். இராஜபக்ஷ அராசங்கத்துக்கு எதராக வளர்ச்சியடைந்து வந்த வெகுஜன எதிர்ப்பு வெடித்துக் கிளம்புவதை தடுப்பதும் இந்த தலையீட்டின் ஒரு நோக்கமாக இருந்தது.
சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு போலி இடதுகளும் கல்வியாளர்களும் கூட்டுச் சேர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டுடன் மேற்கொண்ட ஆட்சி மாற்றத்தின் பிற்போக்கு அர்த்தத்தை தெளிவுபடுத்தியது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.
கொழும்பில் ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), போலி இடது கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் குழுவும் உடந்தையாக இருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்துழைப்புடன் சிறிசேன உடனடியாக அமெரிக்கச் சார்பு வெளியுறவு கொள்கைக்கு மாறி, அதன் மூலோபாயத்துடன் நாட்டை இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலின் பின்னர், முதலாளித்துவ வர்க்கத்தின் பதிலீட்டுக் கட்சிகள் இரண்டும், 1948 “சுதந்திரத்தின்” பின்னர் முதல் முறையாக தேசிய ஐக்கிய அரசாங்கம் எனப்படுவதை உருவாக்கிக்கொண்டது, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கே ஆகும். இவை அனைத்தும் அமெரிக்காவினதும் புது டில்லியினதும் ஆசீர்வாதத்துடனேயே இடம்பெற்றன.
ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சார்ந்த அமைச்சர்கள் பலருடன் சேர்ந்து, “கூட்டு எதிர்க் கட்சியாக” பொதுஜனக் கட்சி என்ற பெயரில் இராஜபக்ஷ புதிய கட்சியொன்றை உருவாக்கிக்கொண்டுள்ளார். இராஜபக்ஷ அதிகாரத்தில் இருந்தபோது, ஜனநாயக உரிமைகளை நசுக்கி முன்னெடுத்த ஆட்சியை அமெரிக்காவும் புது டில்லியும் எந்த வகையிலும் எதிர்க்கவில்லை. அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிரியும் அல்ல. எனினும், இராஜபக்ஷவை அகற்றுவதற்கு உந்திய காரணிகளின் காரணமாக இப்போது அவரை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதற்கு இந்த சக்திகள் இடம் கொடுக்கப் போவதில்லை.
அக்டோபர் மாதத்தில் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதர் அதுல் கெஷாப், இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் எஸ். ஜெயசங்கருடன் இலங்கை மற்றும் மாலை தீவு அரசியல் சூழ்நிலைகள் பற்றியும், விசேடமாக சீனாவுடனான அரசியல் உறவுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடியமை, இந்த இரு நாடுகளும் அவர்களது கண்காணிப்பில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுவதாக அமைகின்றது. அவ்வாறு, இலங்கையின் கொள்கைகளை தீர்மானிக்கும் சக்திகளாக, வாஷிங்டனும் புது டில்லியும் மற்றும் சர்வதேச நாணய நிதியமும் தலையீடு செய்துவருகின்றன. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தற்போதைய இலங்கை அரசாங்கம், சீனாவிடம் கடன் பெற்றுக்கொள்வதே இந்த சக்திகளின் கவலைக்கு காரணமாகி இருக்கின்றது.
இராஜபக்ஷ தரப்பை சேர்த்துக்கொண்டு, “பரந்த கூட்டணி” ஒன்றை அமைத்து, அதன் ஊடாக தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக, அரசாங்கத்தின் கையைப் பலப்படுத்திக்கொள்வதற்கே சிறிசேன முயற்சித்தார். எனினும், தனது குழு ஸ்ரீ.ல.சு.க.யில் இணைய வேண்டுமெனில், அரசாங்கத்தில் இருந்து ஐ.தே.க. அகற்றப்பட வேண்டும், அல்லது அதில் இருந்து ஸ்ரீ.ல.சு.க. வெளியேறுவது அவசியம் என்ற இராஜபக்ஷவின் நிபந்தனைகளை சிறிசேன நிராகரித்தார்.
இதற்கிடையில், மத்திய வங்கியில் பிணை முறி வெளியிட்டதில் நடந்த பெரும் மோசடியை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக் குழுவிற்கு பிரதமர் விக்கிரமசிங்கவை அழைத்தமை, ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க. இடையிலான முரண்பாட்டை தீவிரமாக்கியது. அதற்கு முன்னர், இந்த மோசடிகளில் தொடர்புபட்ட நிதி நிறுவனத்துடன் கொண்டிருந்த உறவு அம்பலப்பட்டதனால், ஐ.தே.க. தலைவர்களில் ஒருவரான முன்னாள் நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியை இராஜனாமாச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். ஐ.தே.க.வை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதற்காகவே சிறிசேனவினால் இந்த ஆணைக் குழு நியமிக்கப்பட்டது என குற்றச் சாட்டுக்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று, தமது கட்சியின் சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. விக்ரமசிங்க இந்தக் கோரிக்கையை நிராகரித்து, ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் என கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்டளை இட்டு, ஆளும் கூட்டணியை பேணிக்கொள்வதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.
சிறிசேன, விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷவின் அகநிலை தேவைகள் என்னவாக இருந்தாலும், அரசாங்கத்தின் முரண்பாடுகள் மற்றும் எதிர்க் கன்னை உடனான சிறிசேனவின் இரகசிய பேச்சுவார்த்தைகள் மூலம், இங்கையில் ஆளும் வர்க்கமும் அரசாங்கமும் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடியையே அம்பலத்துக்கு கொண்டுவந்துள்ளது.
இராஜபக்ஷ ஆட்சியைத் தூக்கியெறிந்த பின்னர், மெல்லியதாகிப் போனதாக கருத்தப்பட்ட உழைக்கும் மக்களின் கிளர்ச்சி, முதிர்ந்து வெடித்துச் சிதறும் நிலைமை உருவாகியிருப்பதையிட்டு, ஆளும் வர்க்கத்தின் அனைத்து தரப்பினரும் பீதியடைந்துள்ளனர். சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவந்த இயக்கம், நல்லாட்சி ஒன்று ஏற்படுத்தப்படும் என ஆரவாரம் செய்தது. இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சியையும் மோசடிகளையும் சுட்டிக் காட்டியவாறே அதிகாரத்துக்கு வந்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், இராஜபக்ஷ நிறுத்திய இடத்தில் இருந்து, இன்னும் அப்பால் சென்று, ஜனநாயக உரிமைகளை நசுக்கி, சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி வருவதுடன் ஏகாதிபத்திய போர் திட்டங்களுக்கு இலங்கையை பிணைத்து விட்டுள்ளது.
பத்தாயிரக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றிய இலவசக் கல்வியை பாதுகாகாக்கும் போராட்டம், கடந்த மாத ஆரம்பத்தில், ஜே.வி.பி. மற்றும் அதன் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், முன்னிலை சோலிசக் கட்சியினால் இயக்கப்படும் மாணவர் ஒன்றியத்தினால் காட்டிக் கொடுக்கப்படபட்டது. ஆயினும், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் கொந்தளிப்பை அந்த போராட்டம் வெளிப்படுத்தியிருந்தது. கடந்த பல மாதங்களாக மின்சாரம், எரிபொருள், துறைமுகம், சுகாதாரம், தபால், பெருந்தோட்டங்கள் போன்ற பல துறைகளிலும் தொழிலாளர்களின் பல போராட்டங்கள் வெடித்தன. வடக்கு கிழக்கிலும், கிராமப்புறங்களிலும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு வளர்ச்சியடைந்துள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தீவரமயமாதலின் ஒரு பாகமாகவே இலங்கையின் உழைக்கும் மக்களின் போராட்டம் வளர்ச்சியடைந்து வருகின்றது.
பூகோள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழ், இலங்கை பொரளாதார வளர்ச்சியானது சரிவையும் ஆழமடைந்து வரும் கடன் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களின் ஒத்துழைப்புடன், சமூக வெடிப்புகளை நசுக்கித் தள்ளி, இந்த நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது திணிக்கும் முயற்சியில், எதேச்சதிகார ஆட்சி ஒன்றை ஸ்தாபிப்பதற்கே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது, என சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் எச்சரிக்கின்றது. 2008 நிதிப் பொறிவில் சமிக்ஞை செய்யப்பட்டுள்ள, உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் மத்தியில், அனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களும் ஆட்சிகளும், மேலும் மேலும் வலது பக்கம் சென்று, தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதை இலக்காகக் கொண்ட பொலிஸ்-அரசுகளை ஸ்தாபிப்பதற்கு வேகமாக முன்நகர்ந்து வருகின்றன. இலங்கையிலும் இந்த முன்னெடுப்புகள் தலைதூக்கியுள்ளன.
இதற்கிடையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிதறத் தொடங்கியுள்ளமை ஆளும் வர்க்கத்தின் நெருக்கடியின் ஒரு பாகமாகும். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) மற்றும் தமிழ் ஈழ விடுதலை அமைப்பும் (TELO) தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கு தீர்மானித்தன. அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் தமிழ் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, போரின் அழிவுடன் மேலும் மேலும் சுமைகள் திணிக்கப்படும் நிலைமயின் கீழ் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் அமைதியின்மையை சுரண்டிக்கொண்டு, தமது வரப்பிரசாதங்களைப் பெறுவதற்கான அழுத்தத்தை அதிகரிக்க முடியும் என, இந்த தமிழ் தேசியவாத கட்சிகள் கணக்கிடுகின்றன.
அரசாங்கம், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கட்டுப்படுத்துவதற்கு போலி இடதுகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் அதே வேளை, அந்தப் போராட்டங்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் பொலிஸை கட்டவிழ்த்துவிட்டது. இந்த சந்தர்ப்பவாதிகளின் துரோக நடவடிக்கைகளினால் நன்மை அடைவது அரசாங்கமே ஆகும்.
இராஜபக்ஷவுடன் கூட்டு எதிர்க் கட்சியும் தமது பக்கத்தில் வலதுசாரி சக்திகளை வளர்த்து வருகின்றது. பிற்போக்கு பௌத்த பிக்குகள் கும்பலை சேர்த்துக் கொண்டு, அவர் உழைக்கும் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பை, தமிழர் விரோத பிரச்சாரத்தின் அடிப்படையில் திசை திருப்பிவிட்டு நசுக்கித் தள்ளுவதற்கே முயற்சிக்கின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களை ஒடுக்கும் போரை கொடூரமாக முன்னெடுத்த இராஜபக்ஷ, அதன் பின்னர் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களை ஒடுக்குவதற்காக, இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்தியதில் பேர் போனவர் ஆவார். ட்ரம்ப் ஜனாதிபதி ஆன உடனேயே, இராஜபக்ஷ அவரது உதவியைக் கோரி வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதன் மூலம் தான் வாஷங்டனின் தேவைக்கு ஏற்ப சேவை செய்யத் தயார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
அரசாங்கம் பௌத்த பிக்குகள் குழு உட்பட இனவாதிகளுக்கு கொடுக்கும் உறுதிமொழிகள் மூலம் பாசிச கும்பல்களை ஊக்குவிக்கின்றது. கடந்த மாதம் காலி கிந்தொட்ட பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து, அவர்களது வீடுகள் மற்றும் சொத்துக்களை இந்த கும்பல்கள் அழித்தன. தேவைப்படும் போது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நசுக்குவதற்காப் பயன்படுத்துவதற்கே அரசாங்கமும் இராஜபக்ஷவும் இந்த கும்பல்கள் பலம்பெறுவதற்கு இடம் கொடுத்துள்ளனர். கடந்த காலத்தில் போலவே தற்காலத்திலும் சிறிசேன-விக்கிரமசிங்க மற்றும் இராஜபக்ஷவும், தொழிலாளர்களை இனவாத வழியில் பிளவுபடுத்துவதை தமது பிற்போக்கு வேலைத் திட்டத்தின் ஆயுதமாக கருதுகின்றனர்.
ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளும், உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கித் தள்ளுகின்ற ஜனநாயக-விரோத ஆட்சிக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள விதம், கடந்த மாதம் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட போலி அரசியலமைப்பு சபை கூட்டங்களில் வெளிப்பட்டது. பிரதமர் விக்கிரமசிங்கவும் இராஜபக்ஷகவும் ஒற்றை ஆட்சிக்கும் பௌத்த மதத்துக்கும் மற்றும் சிங்கள மொழிக்கும் முதலிடம் கொடுக்கும் ஒரு அரசியலமைப்புக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக காட்டிக்கொள்வதற்காக போட்டிப் போட்டுக்கொண்டனர். இரு தரப்பினரும் பயங்கரவாத தடைச் சட்டம், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை அப்படியே பேணி வரும் ஒடுக்குமுறை அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதில் முற்றிலும் உடன்பட்டுள்ளனர்.
அரசியல் நிலைமையின் இத்தகைய கடும் ஆட்டங்கண்ட நிலைமை, முதலாளித்துவ வர்க்கத்தின் முதிர்ந்த நெருக்கடியையே காட்டுகின்றது. அதே போல், கடும் வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கும் கால கட்டம் தோன்றுவதையே சுட்டிக்காட்டுகின்றது. முதலாளித்துவத்தின் அனைத்து கன்னைகளிலும் இருந்து பிரிந்து, தொழிலாள வர்க்கம் தமது சுயாதீன, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இந்த நெருக்கடிக்குள் பலம் வாய்ந்த முறையில் தலையீடு செய்வது இன்றியமையாததாகும்.
தொழிலாள வர்க்கம், ஜனநயாக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தின் தலைமைத்துவத்தை எடுக்க வேண்டும். ஜனநாயக உரிமைகளுக்காப் போராடும் போது, அது புதிய அரசியலமைப்பை வரைவதற்காக மக்களால் நேரடியாக தேர்வு செய்துகொள்ளப்படும் அரசியலமைப்புச் சபையை நியமிக்கும் வாக்கடுப்பு ஒன்றை நடத்த வேண்டும். புதிய அரசியலமைப்பானது மதம், மொழி, சாதி மற்றும் பால் அடிப்படையிலான வேறுபாடுகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும், ஒடுக்குமுறை சட்டங்களும் விதிமுறைகளும் தூக்கிய எறியப்பட வேண்டும் என்றும், தொழிலாள வர்க்கம் குரல் எழுப்ப வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கும் ஒன்றிணைப்பதற்கும், வேலைத் தளங்களில், தொழிலாளர் வாழும் பிரதேசங்களில் மற்றும் பெருந்தோட்டங்களிலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைப்பது அத்தியாவசியமானதாகும். ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரதும் கிராமப்புற ஏழைகளதும் மற்றும் இளைஞர்களினதும் ஒத்துழைப்பை வென்றெடுத்துக் கொண்டால் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் வாழ்க்கை மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும். இதற்கு தொழிற்சங்க விலங்குகளை உடைத்துக்கொண்டு சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைப்பது அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பின் பேரில் ஹட்டன் பிரதேசத்தில் இரண்டு தோட்டங்களில் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை அமைப்பதற்கு முன் வந்தமை, இதற்கான அவகாசம் திறந்து விடப்பட்டுள்ளதை காட்டுகின்றது.
சீனாவுக்கு எதிராக தெற்காசியாவின் ஆளும் வர்க்கங்களை அணிதிரட்டிக்கொள்ளும் போர் திட்டங்களின் முதிர்ந்த கட்டத்தையே இலங்கையில் அரசியல் நெருக்கடிக்குள் வாஷிங்டனின் தலையீடு காட்டுகின்றது. சோசலிச கொள்கையின் அடிப்படையிலான போர் எதிர்ப்பு இயக்கம் ஒன்றைக் கட்டயெழுப்புவதற்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் போராடுகின்றன. தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த வேலைத் திட்டத்துடன் இணையவேண்டியது தீர்க்கமானதாக ஆகியுள்ளது.
பொருளாதாரத்தை இலாபத்துக்காக அன்றி, சமூகத்தின் பெரும்பான்மையினரின் அவசியங்களுக்காக மறு ஒழுங்கு செய்வதன் மூலம் மட்டுமே, அரசாங்கத்தினதும் ஆளும் வர்க்கத்தினதும் தாக்குதல்களில் இருந்து சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பாதுகாக்க முடியும். தோட்டங்கள், வங்கிகள் மற்றும் பிரதான தொழிற்துறைகள் மற்றும் வர்த்தகங்களையும் தொழிலாளர் கட்டுப்பட்டின் கீழ் மக்கள் மயப்படுத்தும் சோசலிச வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, வெளிநாட்டு கடனைத் திருப்பிக் கொடுப்பதை நிராகரிப்பது மற்றும் விவசாயிகளின் கடன்களை இரத்துச் செய்வதும் அந்த போராட்டத்தின் இன்றியமையாத நடவடிக்கைகளாகும். சலுகை வெட்டுக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் வறியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் வேலை கோரிப் போராடும் இளைஞர்களையும் கிராமப்புற வறியவர்களையும் தம்மைச் சூழ அணிதிரட்டிக் கொண்டு, உழைக்கும் மக்கள் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்காப் போராட வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக இந்த வேலைத் திட்டத்தை முன் வைக்கின்றது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் இந்த வேலைத் திட்டத்தில் இணைந்து புரட்சிகர கட்சியை கட்டியெழுப்ப ஒத்துழைக்குமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.