Print Version|Feedback
Opposition mounts to sexual harassment witch-hunt
பாலியல் முறைகேடு மீதான வேட்டையாடலுக்கு எதிர்ப்பு அதிகரிக்கின்றது
Joseph Kishore
16 December 2017
பாலியல் ஒழுக்கக்கேடு மீது குற்றச்சாட்டும் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், இதில் என்ன சம்பந்தப்பட்டுள்ளதோ அது ஆரம்பத்தில் வெளிப்பட்டதை விட —அதாவது ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வைன்ஸ்டீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விட— மிகப் பெரியளவிலானவை சம்பந்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. ஆரம்ப அதிர்ச்சி குறைய தொடங்கி உள்ள நிலையில், இலக்கில் வைக்கப்பட்ட சிலரிடம் இருந்து எதிர்ப்பு மேலெழுந்து வருகிறது.
பெயர் வெளியிடாமலும் மற்றும் குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிட்டு கூறாமலும் புதனன்று விசாரணையின்றி தற்காலிக பதவிநீக்கம் செய்யப்பட்ட பொது ஒலி/ஒளிபரப்பு சேவையின் (PBS) பிரபலம் டாவிஸ் ஸ்மைலி, அவரை தொடர்பு கொள்ளாமலேயே "விசாரணை எனப்படும்" ஒன்றை தொடங்கியதற்காக PBS ஐ கண்டித்து கொந்தளிப்போடு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கவலை தொனிக்கும் நண்பர்களின் அழைப்புகள் மூலமாக ஸ்மைலி கேட்கப்பட்ட விசாரணை கேள்விகள் குறித்து அறிந்த பின்னர், குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென கோருவதற்காக வழக்கு தொடுக்க இருப்பதாக அச்சுறுத்தினார்.
“பல ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடன் வேலை செய்த ஒருவருடன் மனமுவந்து நான் உறவு வைத்திருந்தாலும் கூட, அது இவ்விதத்தில் பொதுவாக அவமானப்படுத்துவதற்கும் தனிப்பட்டரீதியில் சீரழிப்பதற்கும் எடுத்துச் செல்லக்கூடிய விடயமா, ஆண்டவனே நமக்கு உதவ வேண்டும்,” என்று ஸ்மைலி எழுதினார். “PBS விசாரணையாளர்கள் எனது எந்தவொரு தனிப்பட்ட ஆவணங்களையும் மீளாய்வு செய்ய மறுத்ததுடன், குற்றஞ்சுமத்தியவர்களின் யாரொருவரின் பெயரையும் வழங்க மறுத்தனர், எனது இப்போதைய பணியாளர்களுடன் பேசுவதற்கும் கூட மறுத்தனர், யாரென்றே தெரியாத இந்த ஆதாரநபர்களிடம் இருந்து வரும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக என்னை நானே பாதுகாத்துக் கொள்ள விசாரணை வழிமுறைகளுக்கு சமாந்தரமான எந்தவொரு வழிமுறையையும் எனக்கு வழங்குவதற்கு மறுத்தனர்,” என்றார்.
“இது மிகவும் நீண்டு செல்கிறது,” “மேலும் நான், எனக்காக, திரும்பி போராட உத்தேசித்துள்ளேன்,” என்று அவர் நிறைவு செய்தார்.
ஸ்மைலியின் ஜனநாயக உரிமைகளைப் புறக்கணித்து, மில்ஸ் என்டர்டைன்மென்ட் நேற்று அறிவிக்கையில், மார்டின் லூதர் கிங் ஜூனியரின் வாழ்வின் கடைசி ஆண்டு குறித்து 40 நகரங்களில் அவர் நடத்தவிருந்த அரங்க நாடகத்திற்கு அது வழங்குவதாக இருந்த ஆதரவை இரத்து செய்து கொள்வதாக அறிவித்தது. மார்டின் லூதர் கிங் ஜூனியரே கூட, FBI முடுக்கிவிட்ட "இயல்புக்கு மாறான" மற்றும் "வழமைக்கு மாறான" பாலியல் நடத்தை பிரச்சாரம் ஒன்றின் இலக்கில் வைக்கப்பட்டவர் ஆவார்.
ரூபேர்ட் முர்டொச்சின் Daily Telegraph ஆஸ்திரேலிய நடிகர் ஜெஃப்ரி ரஷ்ஷை "பாலியல் வேட்டைக்காரர்" என்று அசிங்கப்படுத்தும் ஒரு பிரச்சாரத்தில் அவரை இலக்காக்கியதும், அவர் "எனது நிலைமையைச் சுற்றி அவர்கள் உருவாக்கி உள்ள களங்கங்கள், மறைமுகமான அவதூறு மற்றும் மிகைப்படுத்தல்களைச் சரி செய்ய" அப்பத்திரிகைக்கு எதிராக அவர் வழக்கு தொடுக்க போவதாக அறிவித்து வெறும் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் ஸ்மைலியின் அறிக்கை வந்தது. “இந்நிலைமையைச் சகித்துக் கொள்ள முடியாது, நீதிமன்றங்கள் மூலமாக எனது நற்பெயரை இப்போது நான் நிரூபிக்க முயல வேண்டும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
இத்தகைய எதிர்ப்பின் அறிகுறிகளுக்கு இடையிலும், அப்பிரச்சாரமோ முன்பினும் அதிகமாக விரிவடைந்து தனிநபர்கள் மற்றும் நடவடிக்கைகளை வரிசையாக சிக்க வைக்க பரவி வருகிறது. வெள்ளியன்று, இலக்கில் வைக்கப்பட்ட முதல் பெண்மணியான கன்சாஸ் ஜனநாயகக் கட்சியின் ஆண்ட்ரியா ரேம்சே, காங்கிரஸிற்கான அவர் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். ரேம்சேயின் பாலியல் அறிவுரைகளை நிராகரித்ததற்காக தன்னை ரேம்சே பணியிலிருந்து நீக்கியதாக குற்றஞ்சாட்டிய ஒரு முன்னாள் பணியாளர் தொடுத்த வழக்கை அவர் செயலாற்றி வந்த நிறுவனம் முடித்து வைத்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன. அந்த குற்றச்சாட்டுகள் குறித்த செய்திகளுக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சி தலைமை அவருக்கான ஆதரவை நிறுத்திக் கொண்டது, ஆனால் ரேம்சே அக்குற்றச்சாட்டுக்களைப் பொய் என்று வலியுறுத்துகிறார்.
“பாலியல் முறைகேடு" என்ற வரம்பற்ற வகைப்பாட்டின் கீழ், ஒருவர் உடனான ஒருவரது வழமையான உறவுகளின் வடிவத்தையும் உள்ளடக்கிய முற்றிலும் பரந்த பல நடவடிக்கைகள், நடைமுறையளவில் குற்றகரமாக்கப்பட்டு, கற்பழிப்பின் கொடூரமான குற்றத்துடன் இணைத்துக் காட்டப்பட்டு வருகிறது. தோற்றப்பாட்டளவில் எவர் ஒருவரையும் குறி வைத்து மற்றும் ஒரு "பாலியல் வேட்டைக்காரர்" என்று குற்றஞ்சாட்டி அசிங்கப்படுத்தக்கூடிய ஒரு நிலைமையை உருவாக்குவது நடைமுறையாகி உள்ளது.
இத்துடன் சேர்ந்து, இக்கருத்துருக்களை சட்டத்திற்குள் உள்ளடக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாரம் நியூ யோர்க் டைம்ஸிற்கு எழுதிய ஒரு கடிதத்தில், மனித உரிமைகளுக்கான நியூ யோர்க் நகர ஆணையத்தின் பெண் தலைவர் Carmelyn Malalis, நியூ யோர்க் நகரின் சட்ட விதிகளை ஏற்றுக் கொண்டரீதியில் மேற்கோளிட்டார், அவை "அருவருக்கத்தக்க பார்வைகள் மற்றும் அற்பத்தனமான அசௌகரியங்களை ஏற்படுத்துதல்" ஆகியவற்றிற்கு அதிகமான எந்தவொரு துஷ்பிரயோகத்தைக் குறித்த வரையறைகளையும் உள்ளடக்கி உள்ளன, இதன் அர்த்தம் Malalis இன் வார்த்தைகளில், “பாலியல்ரீதியில் பேசுவது அல்லது நகைச்சுவைகள், சைகைகள், தொடுதல், எழுத்துக்கள் அல்லது ஒரு வெறுப்பான வேலையிட சூழலை உருவாக்குகின்ற மின்னஞ்சல்கள் உட்பட, விரும்பத்தகாத எந்தவொரு பாலியல் நடவடிக்கையையும்" அதில் உள்ளடக்குகிறது.
தவறான பொருள் பொதிந்த வார்த்தை அல்லது சைகை, இவை வேலையிலிருந்து நீக்குவது மற்றும் கரும்புள்ளி குத்துவதில் போய் முடியும் என்பதே இதன் அர்த்தம். இது பேச்சு சுதந்திரத்திற்கான முதல் அரசியலமைப்பு சட்டத்திருத்த பாதுகாப்புக்குக் கடுமையாக குழிபறிக்கும் அளவுக்கு நீண்டதூரம் செல்கிறது.
ட்ரம்ப் ஜனாதிபதி காலம் தொடங்கியதில் இருந்து, ஜனநாயகக் கட்சியினர், நிர்வாகத்தின் மீதான மக்கள் எதிர்ப்பை இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் சக்தி வாய்ந்த கன்னைகளது கோரிக்கைகளின் அடிப்படையில் அமைந்த ஒரு வலதுசாரி திட்டநிரலுக்குப் பின்னால் திசைதிருப்ப முனைந்துள்ளனர். இதன் காரணமாய் தான், “போலி செய்திகள்”, ரஷ்ய ஊடுருவல், இப்போது பாலியல் முறைகேடு மீதான பிரச்சாரம் ஆகியவை.
இவ்வாரம் பிரசுரமான ஒரு கட்டுரையில் (“The Politics of #HimToo”) Thomas Edsall, இப்பிரச்சாரம் பெரிதும் அரசியலைக் கவனத்தில் கொண்டு உந்தப்பட்டிருப்பதாக ஒப்புக் கொள்கிறார். பாலியல் வேட்டையாடலைப் பின்தொடர்ந்து வருவதில் முன்னணி குரலாக ஒலிக்கும் நியூ யோர்க் டைம்ஸ் இல் அக்கட்டுரை வெளியாகி இருப்பது அனைத்தினும் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
“ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து மற்றும் குடியரசுக் கட்சி குறித்து பேசுவதில், பாலியல் ஒழுக்கக்கேடு பிரச்சினை ஜனநாயகக் கட்சியின் மூலோபாயத்தின் மையத்தில் இடம் பெற்றுள்ளது,” என்று Edsall எழுதுகிறார். “நிர்வாகத்துடனான தங்களின் மோதலை இழுத்துச் செல்வதற்கு போராடி வந்துள்ள, ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த வரையில், குற்றச்சாட்டுக்கள் வெளிப்பட்டிருப்பது ட்ரம்ப் மீது கவனத்தைக் குவிக்க ஒரு வழியைத் திறந்து விட்டுள்ளது—இந்த அபிவிருத்தி பெரிதும் மூர் தோல்வியால் விரிவடைந்தது.” இரண்டாவதாக குறிப்பிடப்பட்டதானது, இவ்வாரம் அலபாமா செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வலதுசாரி Doug Jones ஆல் குடியரசு கட்சியின் பாசிசவாத ரோய் மூர் தோற்கடிக்கப்பட்டதைக் குறித்த ஒரு குறிப்பாகும்.
இம்மாத தொடக்கத்தில், பிரதிநிதிகள் சபையில் சிறுபான்மை குழுவின் தலைவர் நான்சி பெலோசி உட்பட முன்னணி ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்பின் பாசிசவாத மற்றும் இனவாத கொள்கைகளின் அடிப்படையில் அவர் மீது குற்றஞ்சுமத்தும் ஒரு தீர்மானத்தை எதிர்த்தனர். ஆனால் இப்போதோ, டைம்ஸ் இன் மற்றொரு கட்டுரையின் படி, “மதிப்பிற்குரிய பெலோசி ஜனாதிபதிக்கு எதிரான பாலியல் ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுகள் மீது புதிய விசாரணைகள் மேற்கொள்ள பலமாக ஒப்புதல் அளிக்கிறார்.”
பாலியல் முறைகேடு பிரச்சாரத்தின் பாதிப்புகள் மீது கவலைகளை எழுப்பி உள்ள பலருடைய கருத்துக்களை Edsall மேற்கோளிடுகிறார். Politico இல் Emily Yoffe, “நீதி விசாரணையானது, அவசியம் மற்றும் நீதியின் அடியில் பொதிந்திருக்கும் ஒன்று என்று பார்க்கப்படுவதை விட ஒரு தடையாக பார்க்கப்பட்டால், “அனைத்து குற்றச்சாட்டுக்களும் நம்பிக்கையின் அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட்டால்,” இந்த "அற்புதமான தருணம்" "தடம் புரண்டு" போய்விடுமோ என்று கவலைப்படுகிறார். “ஏறத்தாழ நிச்சயமாக வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகரித்தளவில் இருண்டு தெரியக்கூடிய, ஒழுக்க நிலைப்பாட்டைத் தாக்குவதற்காக, நீதி விசாரணையை சீக்கிரம் முடிக்க, ஜனநாயகக் கட்சியினர் நீதிக்காக விரைவுபடுத்துவதாக" Salon இல் Paul Rosenberg எச்சரிக்கிறார். ஹார்வார்ட் சட்ட பயிலகத்தின் பேராசிரியரான எலிசபெத் பார்தோலெட், அப்பிரச்சாரத்தை "பைத்தியக்காரத்தனம் மற்றும் பாலியல் ஸ்தம்பிப்பால் குணாம்சப்பட்ட ஒரு தருணத்தை நாம் திரும்பி பார்க்க வேண்டியிருக்கும் மற்றொரு தருணமாக" எழுதுகிறார்.
எவ்வாறிருப்பினும், Edsall நிறைவு செய்கையில், இதுபோன்ற பரிசீலனைகள் 2020 தேர்தல்களுக்கு முன்னதாக #Me Too பிரச்சாரத்திற்கு அடியிலிருக்கும் அரசியல் நடவடிக்கை மீது எந்த தாக்கமும் கொண்டிருக்காது என்றார்.
ட்ரம்ப் நிர்வாகத்தை நோக்கிய ஜனநாயகக் கட்சியின் மூலோபாயம் ஒரு நீடித்த அரசியல் மற்றும் சமூக நிகழ்ச்சிப்போக்குடன் பிணைந்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகள் செல்வவளத்தின் பாரபட்சமான திரட்சியைக் கண்டுள்ளன. இது, அமெரிக்க பில்லியனர்கள் பாரியளவிலான செல்வங்களைக் குவித்துக் கொண்டதை மட்டும் அல்ல —இவர்களில் மூவர் இப்போது மொத்த மக்களில் பாதிக்கும் அதிகமானவர்களை விட அதிகமாக செல்வத்தைச் சொந்தமாக்கி உள்ளனர்— மாறாக மக்களில் உயர்மட்ட ஐந்து அல்லது பத்து சதவீதத்தினருக்கும், உயர்மட்ட நடுத்தர வர்க்கம் மற்றும் அடிமட்டத்திலிருக்கும் 90 சதவீதத்தினருக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. இந்த அடுக்கின் நலன்களும் கவலைகளும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு விரோதமானதும், அவற்றிலிருந்து வேறுபட்டதுமாகும்.
அரசியல்ரீதியில், ஜனநாயகக் கட்சி அது முன்னர் சம்பந்தப்பட்டிருந்த சமூக சீர்திருத்தத்திலிருந்து துண்டித்துக் கொண்டுள்ளது. இக்கட்சி, வோல் ஸ்ட்ரீட், இராணுவம்/உளவுத்துறை எந்திரம் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் கட்சியாக, அடையாள அரசியலின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது கிளிண்டன் பிரச்சாரத்தில் உச்சத்தை அடைந்தது, அப்பிரச்சாரம் சமூக சமத்துவமின்மை மற்றும் போர் போன்ற பிரச்சினைகளை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர் புரோக் டர்னெர் வழக்கின் மீது கடும் தண்டனைக்கான சட்ட-ஒழுங்கு கோரிக்கையாக ஊக்குவித்து, போர் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கான பாரிய எதிர்ப்பை திசைதிருப்ப முயன்றது. ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்தை ஆதரிக்காத தொழிலாளர்களை அவமானப்படுத்துவதுடன் இணைந்திருந்த இது, வெள்ளை இன ஆண்களின் "தனிச்சலுகை" என்று கூறப்பட்டன. இப்பிரச்சாரத்தின் பிற்போக்குத்தனமான மூலோபாயம், இப்போது ட்ரம்ப் நிர்வாக உள்ளடக்கத்தில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றது.
பாலியல் ஒழுக்கக்கேடு என்று கூறப்படுவதன் மீதான பிரச்சாரம், ஓர் அணுஆயுத பேரழிவுவைக் கட்டவிழ்த்து விடக் கூடிய அதிகரித்து வரும் போர் அச்சுறுத்தல்களின் பின்புலத்தில் கட்டவிழ்ந்து வருகிறது. பணக்காரர்களுக்கு ஒரு பாரிய வரி வெட்டு செய்ய காங்கிரஸ் துரிதமாக நகர்ந்து வருகின்ற நிலையில், ஒரு கண்ணியமான வேலைக்கான எந்த சாத்தியக்கூறும் இன்றி மலைப்பூட்டும் வறுமை மட்டங்களை எதிர்கொண்டு வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. வேலை சம்பந்தமான விபத்துக்கள் மற்றும் நோய்களால் ஒவ்வொரு நாளும் 115 தொழிலாளர்கள் உயிரிழக்கிறார்கள். இணைய நடுநிலையைக் கைவிடுவது என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவால் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, ஆளும் வர்க்கம் ஜனநாயக உரிமைகள் மற்றும் இணைய வழி சுதந்திர பேச்சுரிமையை அழிப்பதற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.
இவை அனைத்தும் பாலியல் முறைகேடு மீதான பிரச்சாரத்தில் கைவிடப்பட்டு வருகின்றன. பெண்களின் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமல், எல்லா பெண்களும் ஆண்களால் ஒடுக்கப்படும் ஒரே மாதிரியான "அனுபவத்தை" பகிர்ந்து கொள்வதாகவும், ஆண்கள், அதுவும் குறிப்பாக வெள்ளை இன ஆண்கள், “தனிச்சலுகையின்" ஆதாயத்தை அனுபவிப்பதாகவும் கூறப்படும் வாதங்களுக்கு அடியில் வர்க்கப் பிளவுகள் மூடிமறைக்கப்படுகின்றன.
பாலியல் முறைகேடு பிரச்சாரமானது, வலதுசாரி, ஜனநாயக விரோத மற்றும் அரசியல்ரீதியில் பிற்போக்குத்தனமான பிரச்சாரமாகும். இதற்கும், ஆண் ஆகட்டும் அல்லது பெண் ஆகட்டும், தொழிலாளர்களின் நலன்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிரான எதிர்ப்பானது முதலாளித்துவத்திற்கு எதிராக மற்றும் இந்த அமைப்புமுறை கொண்டு வருகின்ற கொடூரங்களுக்கு எதிராக நனவுப்பூர்வமாக திருப்பி விடப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.