ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Repressive political agenda of the “sexual harassment” campaign comes into the open

“பாலியல் துன்புறுத்தலுக்கு” எதிரான பிரச்சாரத்தின் பின்னால் உள்ள அடக்குமுறை அரசியல் நோக்கங்கள் பகிரங்கமாக வெளிவருகின்றன

By David Walsh
28 November 2017

பாலியல்ரீதியாக தவறாக நடந்துகொண்டதான புகார்கள் மற்றும் கண்டனங்கள் ஊடக ஆளுமைகள், ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது பொழிவது குறைவின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் உயர் நடுத்தர வர்க்கத்திற்கு இதனைத் தவிர்த்த வேறெதையும் -விளாடிமிர் புட்டின் விதிவிலக்கு- விடாப்பிடியாக பிடித்துக் கொள்ள ஒன்றுமில்லை போல் தெரிகிறது. இதனிடையே அமெரிக்காவின் பரந்த மக்கள் எண்ணிக்கையோ, பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற தமது சொந்த வாழ்க்கைகளை வாழ்கின்றனர்.

பெண்களை —அதிலும் குறிப்பாக தொழிலாள வர்க்கப் பெண்களை— குற்றவியல் வன்முறை மற்றும் பிற சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களுக்குக் கூட போக வேண்டாம், பாலியல் தொந்தரவுக்கு எதிராகக் கூட காப்பாற்றுவதற்கும் இந்தப் பிரச்சாரத்திற்கும் எந்த தொடர்புமில்லை. இப்போதைய ஊடக-பின்புலத்துடனான பிரச்சாரத்தின் பிற்போக்குத்தனமான, ஜனநாயக-விரோத மற்றும் சமூக மற்றும் அரசியல்ரீதியான ஒடுக்குமுறை திட்டநிரலானது நாளுக்குநாள் மேலும் மேலும் வெளிப்படையாகிக் கொண்டிருக்கிறது.

இதற்குள் இழுக்கப்படுகின்ற அளவுக்கு முட்டாள்தனமாக அல்லது அப்பாவித்தனமாக இருக்கின்ற எவரொருவரும், இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்ற அசிங்கங்களில் சிலவற்றின் மூலம் தங்களை கட்டாயம் நிதானநிலைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அவற்றில் இந்த ஞாயிறன்றான நியூயோர்க் டைம்ஸில் ஆண் கிளர்ச்சியுணர்வின் கொடூரத்தன்மை குறித்து ஸ்டீபன் மார்சே எழுதி வெளியாகியிருக்கும் கிறுக்கேற்படுத்துகின்ற கட்டுரையும் அடங்கும், சுய-காயடிப்பு என்பது இந்தப் பிரச்சினைக்கான தீர்வுகளில் ஒன்றாக இருக்கலாம் என்கிறது அந்தக் கட்டுரை.

தவறான பாலியல் நடத்தை பற்றிய இந்தப் பிரச்சாரமானது ஹார்வி வைன்ஸ்டீன் இன் தவறான செயல்களாகச் சொல்லப்படுவது குறித்த டைம்ஸ் மற்றும் நியூயோர்க்கர் செய்திகளில் ஆரம்பித்தது. அந்த பருமனான ஹாலிவுட் அதிபரை வெறுப்பதற்கு ஒவ்வொருவருமே தூண்டப்பட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் இது வெறுமனே திசைதிருப்பும் நிகழ்முறைக்கும், மக்களை கருத்துக்களால் மூழ்கடிப்பதற்குமான ஒரு வழிவகையாக இருக்கின்றது.

இந்த தர்மயுத்தம் முன்னினும் திட்டவட்டமான பிற்போக்குத்தனம் மற்றும் ஒடுக்குமுறையை வெளிப்படுத்துகின்ற ஒரு பகிரங்கமான வலது-சாரி நடவடிக்கையாக ஆகியிருக்கிறது. சற்று அசாதாரணமான விதத்தில், பொழுதுபோக்குத் துறையில் நடக்கும் நிகழ்வுகள், பாலியல் செயல்பாடுகள் மீது இறுக்கமான கட்டுப்பாடுகளை மீட்சி செய்வதற்கான ஒரு அழைப்பாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

”பாலியல் குறித்து மறுபடிசிந்திக்கலாம்” என்ற ஒரு குறிப்பிடத்தக்க வாஷிங்டன் போஸ்ட் பத்தியில் கிறிஸ்டின் எம்பா என்ற பெண்மணி, பொதுவாய் தவறாய் புரிந்து கொள்ளப்படுகின்ற ஒன்றாக அவர் கருதுகின்ற ஒன்றை, தனது வாசகர்களுக்கு இவ்வாறு விளக்குகிறார்: “பாலியலில் நாம் பெற வேண்டிய அளவு அல்லது குறைந்தபட்சம் பெற அனுமதிக்கப்படுவதற்கு சில அடிப்படை அளவு இருக்கிறது. அதிலிருந்து வருகின்ற அனுமானம், நமது பாலியல் விருப்பங்களை பின்தொடர்வதற்கும் பூர்த்தி செய்வதற்குமான தகமை மிக முக்கியமானதாகும்.”


Cotton Mather

எம்பா தொடர்ந்து விளக்குகிறார், “நமது இப்போதைய பாலியல் நெறிகளது அதீதங்கள், அவற்றின் பின்விளைவுகளுக்கு எதிராக வருகின்றன என்பதால், சில அசவுகரியமான மறுதிருத்தங்கள் நிகழ்வேண்டியது அவசியமாக இருக்கின்றது. இந்த புதிய புரிதலுக்கேற்ப சற்று திருத்திக் கொள்வது என்பது சிலருக்கு குறைந்த பாலியல் உறவு என்று ஆகலாம், சற்று காலத்திற்கு, பலருக்கு கூடுதல் அச்சமூட்டுவது என்றாகலாம். கஷ்டம் தான்.” அப்பெண்மணி இவ்வாறு முடிவுரைக்கிறார், “குறைந்த பாலியல் உறவு வைத்துக் கொள்வதால் நாம் சாகப் போவதில்லை (இதுவரை எவரும் அதுபோல் செத்ததில்லை). எப்படியாயினும், மனிதர்கள் அப்போதும் சந்திப்பதற்கும், புணர்வதற்கும், இனவிருத்தி செய்வதற்குமான வழிகளைக் கண்டுபிடித்துக் கொண்டு தான் இருப்பார்கள். நீங்கள் ஒரு கண்ணியமான மனிதராக இருக்கும் பட்சத்தில், ஒரு தெளிவான, கூடுதல் கட்டுப்படுத்தப்பட்ட பாலியல் நெறி உங்களை பயமுறுத்தக் கூடாது.”

பாலியல் ஒடுக்குமுறை “ஒருபோதும் யாரையும் கொன்றதில்லை”, உண்மையில் அது ஒரு சாதகமான நன்மையாக ஆகலாம் என்பதான வாதம், காட்டன் மாத்தர் (Cotton Mather) சொன்னதை நினைவுகூரத்தக்கது. நியூ இங்கிலாந்தின் இந்த புயூரிட்டன் அமைச்சர் இளைஞர்களும் வயதுவந்தவர்களும் பாலியல் தூண்டுதலை தவிர்க்கவும் “உங்கள் இதயத்தில் ஒளிந்திருக்கின்ற” இச்சைகளை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

ஒரு வலது-சாரி வெளியீடான தி நியூ கிரைடீரியன் இல் விமர்சனத் துறையினால் நடாத்தப்படும் “ஹில்டன் கிராமர் ஃபெல்லோவை” பின்தொடர்பவரும், தி நேஷனல் ரிவ்யூவிலும் எழுதுபவரும், எம்பாவை (Emba) அமெரிக்காவின் பாலியல் பாதுகாவலராக யார் நியமித்தது என்று நாம் கேட்கலாம். அவருடைய பரிதாபகரமான அறநெறிப் பரிந்துரைகளுக்கும் “கண்ணியம்” குறித்த வரையறைகளுக்கும் ஒருவர் சிறிதும் ஏன் கவனம் செலுத்த வேண்டும்? தேவைவரும்போது பிரயோகிக்கத்தக்க வகையில் எம்பா நிறைய கரும்சிகப்பு "அசுத்தமானவற்றை" ("A") கையில் வைத்திருப்பதாகவே ஒருவர் அனுமானிக்க முடியும்.

இந்த குப்பை எங்கிருந்து வருகிறது? இந்தப் பிற்போக்குத்தனத்தில் இருந்து தான் சிலருக்கு அதிர்ச்சியூட்டும் வகையிலும் சிலருக்கு அதிருப்தியூட்டும் வகையிலும் திருமணபந்தத்திற்கு வெளியிலான பாலுறவு, அல்லது எம்பா குறிப்பிடுவதைப் போல ”கள்ளத் தொடர்பு” (fornication), ஓர்பால் விருப்பினர் திருமணம் மற்றும் நவ விக்டோரியர்களால் ஏற்கப்படாத மற்ற பாலியல் விருப்ப வடிவங்கள் உள்ளிட அத்தனை வகையான பாலியல் செயல்களையும் சட்டவிரோதமாக்குவதற்கான முயற்சிகள் எழும்.

விடயங்களை சற்று வித்தியாசமான ஒரு கோணத்தில் அணுக எண்ணி, கனடாவின் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்துடன் நன்கு தொடர்புகள் கொண்ட டொரொன்டோவை அடிப்படையாகக் கொண்ட ஒரு எழுத்தாளரான மார்சே எழுதி வெளியாகியிருக்கும் சண்டே டைம்ஸ் பத்தி (”ஆண் பாலிச்சையின் ஆராயப்படாத மிருகத்தனம்”) சாதாரணமான மனோவியாதியைப்போல் இருக்கிறது.


ஓரிகென்

”பொதுவாக ஆண்களின் குணம்”, “அவர்களது பாலியல்விருப்பத்தின் அருவருப்பான தன்மை”, ”ஆணின் பாலிச்சையின் அவலட்சணமான மற்றும் அபாயமான தன்மை”, மற்றும் “ஆண் பாலுணர்வின் உட்பொதிந்த மிருகத்தனம்” பற்றியெல்லாம் குறிப்பிடும் மார்சே “ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வன்முறை இல்லாத பாலுறவு நடைபெற வேண்டியிருந்தால் அது ஒரு விறைக்காத ஆணுறுப்புடனான பாலுறவாகத் தான் இருந்தது” என்ற மிகப் பிற்போக்கான “தீவிரப்பட்ட பெண்ணியவாதி” ஆண்ட்ரியா டுவோர்கின் இன் வாதத்தை மேற்கோளிடுகிறார். “தன்னைத் தானே காயடித்துக் கொண்ட” கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த “மாபெரும் கத்தோலிக்க இறையியலாளர் ஓரிகென்” இன் உதாரணத்தை அதன் பொருத்தத்தை ஏற்கும்விதமாய் எடுத்துவைக்கும் அளவுக்கு மார்சே செல்கிறார்.

அங்கிருந்து புராணக் கதைகளுக்கும் விசித்திரக் கதைகளுக்கும் அவற்றின் “ஆண் பாலிச்சை குறித்த அச்சத்திற்கும்” மார்சே முன்னேறி செல்கின்றார், “இளம் சதையில் தணியாத வேட்கை கொண்ட ஒரு புராதன மற்றும் சக்திவாய்ந்த மனிதனாக இரத்தக் காட்டேரி இருக்கிறான்” என்று விளக்கும் அவர், “ஓநாய்மனிதர்கள் தங்களது மிருகக் குணத்தின் மீதான கட்டுப்பாட்டை தொடர்ச்சியாய் தொலைப்பவர்களாய் இருக்கிறார்கள்” என்று சேர்த்துக் கொள்கிறார்.

பாலியல் ஒரு வியாதியாக உட்குறிப்பு காட்டும் மார்சே, “மனித இச்சைக்கு எந்த மருந்தும் இல்லை” என்று திட்டவட்டம் செய்கிறார். அப்படியானால், இதற்கு என்ன செய்ய வேண்டுமாம்? ஃபிராய்டைக் குறிப்பிட்டு அவர் எழுதுகிறார்: “Oedipus complex (குழந்தைகள் தமது எதிர்ப்பால் பெற்றோரின் மீது நனவற்றைமுறையில் விருப்பம்கொண்டிருப்பது என்ற சிக்மொன்ட் ஃபிராய்ட்டின் கருத்து) சிந்தனையானது மோசமான ஒடுக்குமுறையின் தேவைகளுக்கான ஒரு மறைமுகமான வழக்காக இருந்தது: ஆண் பிள்ளைகளை ஆண் பிள்ளைகளாக இருக்க விட்டீர்கள் என்றால், அவர்கள் தங்கள் அப்பாவைக் கொன்று அவர்களது அம்மாவுடன் படுப்பார்கள்.”

இன்னும் இருக்கிறது. “வைன்ஸ்டீனுக்குப்-பிந்தைய சகாப்தமானது பாலின அவநம்பிக்கையின் ஒரு சகாப்தமாக இருக்கும்” ஏனென்றால் “பாலின சமத்துவத்தின் பிரகாசமான தெளிவான இலட்சியங்களுக்கும் மனித ஆசையின் பொறிமுறைகளுக்கும் எந்த நல்லிணக்கமும்” சாத்தியமில்லாமல் போகக் கூடும். எம்பா சென்ற அதே இடத்திற்கு வேறு வழியில் வந்துசேரும் மார்சே, “தாராளவாதிகளால் நீண்டகாலமாக எதிர்க்கப்பட்டு வந்திருக்கின்ற பாலியல் அறநெறி, பழிதீர்க்கும் உணர்வுடன் திரும்பி வந்திருக்கிறது” என்று வெற்றிக்களிப்புடன் பிரகடனம் செய்கிறார், அத்துடன் வெளிப்படையான திருப்தியுடன் அவர், “பாலியல் கட்டுப்பாட்டில் நமது ஆரம்பநிலை சமூக வடிவத்திற்கு நாம் அவமானகரமாக திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்று சுட்டிக் காட்டுகிறார்.

மார்சே கிட்டத்தட்ட இவ்வாறு முடிக்கிறார்: “நீங்கள் ஒரு நாகரிகமடைந்த மனிதனாக இருக்க விரும்பினால், நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் பரிசீலித்தாக வேண்டும். வேறு ஏதோவொன்றாக, நீங்கள் விரும்பி கற்பனை செய்கின்ற ஏதோவொன்றாக நடிப்பது உதவாது. நமது அறநெறி அல்ல மாறாக கலாச்சாரம் —நமது அரக்கத்தனத்தை ஒப்புக் கொள்வது, அதனை கணக்கிலெடுத்து வாழ்வது— மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்.” இந்த பாவமன்னிப்பு வசனமானது துறவிகள் தங்களைத் தாங்களேயும் மற்றும் ஒருவருக்கொருவரையும் சவுக்கால் அடித்துக் கொள்வது, குளிரும் பனிநீரில் மூழ்கியிருப்பது மற்றும் பிற அத்தனை வகையான சுய-முடக்க வடிவங்களிலும் ஈடுபடுகின்ற சித்திரங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஆணின் பாலியல் உணர்ச்சியை ஒடுக்குவதுதான் பிரச்சினை என்று மார்சே வெளிப்படையாக வாதிடுகிறார்.

அவருடைய சுயவெறுப்பு சித்திரம், பாலினத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் அரசியல் கூட்டத்துக்கு ஒத்தூதும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறதா, அல்லது அது உண்மையானது தானா? திரு.மார்சே மட்டும் தான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல இயலும். ஆனால் பதில் என்னவாக இருந்தபோதிலும், அவரது நோய்பீடித்த அழுகிப் போன சிந்தனைகள் நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரம் செய்யப்படுகின்றன. ஒரு ஆழமான பிற்போக்குத்தனமுடைய அரசியல் திட்டநிரல் மட்டுமே இத்தகைய மாசடைந்த கருத்தாக்கங்களைப் பயன்படுத்தும்.

பாலியல் தொந்தரவுப் பிரச்சாரத்தில் ஜனநாயக உரிமைகளுக்கான அலட்சியம் மேலும் மேலும் தெளிவாய் வெளிவருகிறது.

குற்றம்சாட்டப்படுபவர்களின் குற்றமற்றதன்மை அல்லது குற்றம் பற்றி தங்களுக்கு அக்கறையில்லை என்பதை வருணனையாளர்கள் பகட்டாய் காட்டுவதும் அதிகரித்துச் செல்கிறது.

டீன் வாக் இன் பத்தியாளரான எமிலி லிண்டன் ட்விட்டரில் இவ்வாறு விளக்கினார்: “பாலியல் தாக்குதல் அல்லது தொந்தரவின் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் அப்பாவி ஆண்கள் தங்கள் வேலைகளை இழப்பது பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை”, பின் “ஆணாதிக்கத்தை ஒழிக்கும் நிகழ்ச்சிப்போக்கில் சில அப்பாவி ஆண்களின் மரியாதைகள் அடிவாங்க வேண்டியிருக்கும் என்றால், அப்படியானதொரு விலையைக் கொடுப்பதற்கு நிச்சயம் எனக்கு விருப்பமிருக்கும்.”

ஒலிவியா கோல்ட்ஹில் குவார்ட்ஸ் இதழின் தனது கட்டுரைக்கு தலைப்பிட்டிருந்தார்: “பெண் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களது பெயர்களை ஆன்லைனில் வெளியிடுவது “சட்டத்தை தமது கைகளில் எடுத்துக்கொண்ட கும்பல்களால் வழங்கப்படும் நீதி”யாக இருக்கலாம், ஆயினும் அது ”நீதி”யே. அது நீதியே அல்ல என்பதைக் குறிப்பிடுவதற்காகத் தான் “சட்டத்தை தமது கைகளில் எடுத்துக்கொண்ட கும்பல்களால் வழங்கப்படும் நீதி” என்ற வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது என்பதை கோல்ட்ஹில் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.


Roxane Gay (Photo credit: Slowking4)

மெக்கார்த்திய கண்டனங்களுக்கு எதிரான எதிர்ப்புகள் விடயத்தில், ரோக்ஸான் கேய் (Roxane Gay) நியூயோர்க் டைம்ஸில், ”பெயர்கூறாமல் வெளிப்படுத்துவதிலான அவதூறு மற்றும் அறநெறி குறித்து நிறைய கை பிசையப்படுகின்றது” என்று கடுமையாகப் புகார்கூறினார்.

”#MeToo சமூக ஊடகப் பிரச்சாரத்தில் வாழ்வின் அத்தனை பிரிவுகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் குறித்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், பொய்க் குற்றச்சாட்டுகள் என்ற கருத்தையும் கூட கொண்டுவருவதென்பது காலப்பொருத்தமற்றதாகவும் முரட்டுத்தனமானதாகவும் தெரிகிறது” என்று ஸ்பிள்ண்டர்நியூஸ் (Splinternews) இல் இஷா அரான் புகாரிட்டார்.

மீண்டும், இவை அனைத்துமே, தம்மால் கூறப்படும் இந்த சித்தரவதையான சூழ்நிலைமைகள் குறித்த விவரிப்புகளை தமக்கு இன்னும் அதிக செல்வத்தை சேர்ப்பதற்கான நெம்புகோலாக பயன்படுத்த விரும்புகின்ற, மக்களின் ஒரு வசதியான பிரிவில் இருந்தே வருகின்றன.

இந்த பிற்போக்கான கருத்துகளின் பின்னால் பல தசாப்த கால சித்தாந்த மற்றும் அரசியல் பிற்போக்குத்தனம் ஒளிந்திருக்கிறது, அதனுடன் பொறாமையின் பெரும் அளவும் கூட.


Jill Filipovic (Photo credit: Jim Miles)

NBC செய்தி வலைத் தளத்தில் வழக்கறிஞரும் எழுத்தாளருமான ஜில் ஃபிலிபோவிக் விளக்கியவாறாக, “கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழிற்துறையிலும் தலைமையில் இருக்கும் ஆண்களின் பல இடங்களில் பெண்கள் அமர்வதன் மூலமாக, நாம் உண்மையான பெண்களது அதிகாரத்துக்கு நெருக்குதலளிப்பது அவசியம். அது தகாதசெயல்களை முற்றிலுமாய் தடுத்து விடாது, ஆனால் நிச்சயமாகக் குறைக்கும்.”

இந்த சொத்துகளை பாதுகாப்பதும் சேர்ப்பதும் முதலாளித்துவ சட்டம்ஒழுங்கு பராமரிக்கப்படுகின்ற மட்டத்திற்கும், அரசியல் எதிர்ப்பானது திசைதிருப்பப்படுகின்ற அல்லது மட்டுப்படுத்தப்படுகின்ற மட்டத்திற்குமே நடக்க முடியும். இது ஒடுக்குமுறையை பொதுமைப்படுத்தும் பாதைகளில் ஒன்றாகும்.

இந்தப் பிரச்சாரத்தை ஒரு பாலியல் சிக்கவைப்பு வேட்டை என்று கூறுவது, அந்த வரையறைகளின் அரசியல்-சட்ட அர்த்தத்தில் முற்றிலும் பொருத்தமானதாகும். சிக்கவைப்பு-வேட்டை (witch-hunt) என்பது பிரிட்டிஷ் வழக்காற்றில் “பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதான சாக்கில் அதிருப்தியாளர்களை சுற்றிவளைப்பது அல்லது அம்பலப்படுத்துவதற்கான ஒரு கடுமையான பிரச்சாரம்” என்றும் அமெரிக்க வழக்காற்றில் “துரோகம், அரசியல் சதி நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்றவன்றை வெளிக்கொண்டு வருவதற்காக வெளிப்பட நடத்தப்படுகின்ற ஒரு விசாரணை, இது பொதுவாக பெரும் விளம்பரத்துடன் நடத்தப்படுகிறது என்பதுடன் பெரும்பாலும் முடிவுக்குவரவியலாத ஆதாரங்களை நம்பியிருக்கிறது அத்துடன் பிரபலமற்ற அபிப்பிராயங்கள் குறித்த மக்களின் அச்சத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது” என்றும் கோலின்ஸ் (Collins) இணைய அகராதி வரையறுக்கிறது.

அரசியல் சதிகளுக்கு எதிரான தாக்குதல் இன்னும் தொடங்கியிருக்கவில்லை என்று கருதினால், அதற்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்!

முதலிடத்தில் பல்வேறு வகையான பாலியல் மற்றும் சமூக விரோத நடத்தைகளைக் பற்றி குறிப்பிடும் 1934 ஜூலை 1 அன்று கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்ட ஹாலிவுட்டின் தயாரிப்புத் துறை சட்டம், ஒரேதடவை கூட அரசியல் அல்லது வர்க்கப் போராட்டம் குறித்து குறிப்பிட்டது கிடையாது. அந்த ஆண்டு, இடது-சாரி சோசலிஸ்டுகள், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களின் தலைமையில் டொலீடோ ஆட்டோ-லைட் வேலைநிறுத்தம் (Toledo Auto-Lite strike), மினியாப்பொலிஸ் டிரக் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆகிய மூன்று பரவலான ஆதரவைப் பெற்ற வேலைநிறுத்தங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு அசாதாரண வெடிப்பான ஆண்டாக இருந்தது.

பொருளாதார மந்தநிலையின் மத்தியில் இந்த சட்டத்தை அமல்படுத்தியமையானது சந்தேகத்திற்கிடமின்றி, அத்தனை வகையான அறநெறி மற்றும் சமூகக் கற்பிதங்களின் பொறிவு மற்றும் அத்தகையதொரு பொறிவின் நீண்டகாலப் பின்விளைவுகள் ஆகியவை குறித்து ஆளும் வர்க்கத்திற்குள் உருவாகியிருந்த ஒரு பொதுவான மற்றும் நியாயமான பதட்டத்தைப் பிரதிபலித்தது. சில சமயத்திற்கு முன் நாம் குறிப்பிட்டதைப் போல, “தயாரிப்புச் சட்டத்தின் அமலாக்கமானது துல்லியமாய், மந்தநிலையின் எதார்த்தங்கள் திரையில் பிரதிபலிப்பைக் கண்டுவிடக் கூடாது என்பதை உறுதி செய்து கொள்வதற்காக திரைத் துறையினர் மற்றும் அதன் மேற்பார்வையாளர்கள் மேற்கொண்ட வழிவகைகளில் ஒன்றாக இருந்தது.”

பாலியல் துர்நடத்தை பிரச்சாரமானது பல வழிகளிலும் நேர்மையற்றதாக இருக்கிறது. உதாரணமாக, ஹாலிவுட் அல்லது பொழுதுபோக்குத்துறை தான் பொதுவாக அமெரிக்காவில் பாலியல் மற்றும் வேலையிட உறவுகளின் அளவுகோல் போன்று இதற்கான கேலிக்குரிய சாக்கு அமைந்திருக்கிறது. 2014 இல் நடத்தப்பட்ட பொது சமூக கணக்கெடுப்பில், அமெரிக்கர்களது எதேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதிரியிடம் “கடந்த 12 மாதங்களில், நீங்கள் வேலையில் இருக்கும்போது நீங்கள் எவர் மூலமாவது பாலியல் தொந்தரவை சந்தித்திருக்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டது. 3.6 சதவீத பெண்கள் ஆம் என்று பதிலளித்தனர், இது 2002 இல் 6.1 ஆக இருந்ததில் இருந்து சரிந்திருந்தது. இது ஒரு முடிவுக்கு வரச் செய்கின்ற புள்ளிவிவரம் இல்லை தான், ஆயினும் பல்வேறு பத்தியாளர்களும் அறிவாளிகளும் விவரிப்பதைப் போல “முற்றுகை நிலை”யின் ஒரு சுட்டிக்காட்டலாக இல்லை.

இவர்கள் அமெரிக்க மற்றும் உலக மக்களின் மிகப்பரந்த எண்ணிக்கையிலானோரது, - அவர்கள் ஆணோ பெண்ணோ- நிலைமைகள் குறித்து சிறிதும் அக்கறை காட்டியது கிடையாது. வறுமை, ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு உதவிகளின் அழிப்பு, கருக்கலைப்பு உரிமைகள் மோசமான முறையில் திரும்பப் பெறப்படுவது, அமெரிக்காவின் இலாபநோக்கற்ற பாலியல் சுகாதார சேவை வழங்கும் Planned Parenthood மற்றும் பிற மிகமுக்கியமான பெண்களது சுகாதாரத் திட்டங்களின் மீதான தாக்குதல், வீடின்மை, வலிமருந்து (opioid) நெருக்கடி மற்றும் தற்கொலை விகிதத்திலான அதிகரிப்பு ஆகியவையெல்லாம் அவர்களைக் கொஞ்சமும் கூட அசைப்பதில்லை. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பாரிய படுகொலைகள் குறித்த, சட்டவிரோத ஆளில்லா விமானத் தாக்குதல்கள்கள் மற்றும் “கொலைப் பட்டியல்கள்” குறித்த அவர்களது எதிர்ப்புகள் எங்கே போயின?

குறிப்பாக, ஜனநாயகக் கட்சி பாலியல் குற்றங்கள் வியாபாரத்தில் ஆழமாய் மூழ்கியிருக்கிறது. 2016 தேர்தலில், ஹிலாரி கிளிண்டனின் வெற்றிக்கான மூலோபாயமானது, ஸ்டான்ஃபோர்ட் பிராக் டர்னர் வழக்கு (Brock Turner case), திருநங்கைகளுக்கு குளியலறை அணுகல், மற்றும் “வெள்ளை சிறப்புரிமை” ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஜனநாயகக் கட்சியினர் இவை அத்தனையிலும் பிரம்மாண்ட முதலீடு செய்தனர், அது தோற்றது. இப்போது அவர்கள் பணயத்தை இரட்டிப்பாக்குகிறார்கள். “வெள்ளை சிறப்புரிமை”, “ஆண் பாலியல்குணம்” கொண்டு துணையளிக்கப்படுகிறது. இது மக்களின் ஒரு வரம்புபட்ட, சலுகையுடைய பிரிவிடம் தங்கியிருக்கிறது.

பெப்ரவரி 1692 இற்கும் மே 1693 இற்கும் இடையில் மாஸாசூசெட்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சேலம் (Salem) சூனிய விசாரணைகள் வழக்கைப் படிக்கும் எவரொருவரும் அது வெறுமனே மக்களது வெறிக்கூச்சலால் மட்டும் நடக்கவில்லை, திட்டவட்டமான பொருளாதார மற்றும் சமூக நிகழ்முறைகளும் அதில் பங்களித்திருந்தன என்ற முடிவுக்கே வருவார்கள். ஆர்தர் மில்லரின் தி க்ரூசிபிள் (The Crucible) அறிமுகத்தில் கிறிஸ்டோபர் பிக்ஸ்பி குறிப்பிடுவதைப் போல, “1692 இல் சேலம் கொந்தளிப்பாக இருந்தது. அரச சாசனம் திரும்பப் பெறப்பட்டிருந்தது. நில உரிமைகள் ஏற்கனவே இருந்தவை இரத்து செய்யப்பட்டிருந்தன, மற்றவர்களுக்கு இன்னும் வந்துசேர்ந்திருக்கவில்லை. இடம்பெயர்க்கப்படலாம் என்ற பயத்தில் ஒவ்வொருவரும் அக்கம்பக்கம் வசிப்பவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். அது விரிசல்கள் நிரம்பியிருந்த ஒரு சமூகமாக இருந்தது.....”

இப்போதைய பாலியல் வெறிக்கூச்சல் குறித்து கவனமாக ஆராயும் எவரொருவரும் இன்றைய அமெரிக்காவின் தோலுக்குக் அடியில் சென்று பார்த்து, அதன் தனி வகை “கொந்தளிப்பை” புரிந்து கொள்வது அவசியமாயிருக்கும்.