Print Version|Feedback
America’s latest “Scarlet Letter” moment
அமெரிக்காவின் சமீபத்திய ‘ஸ்கார்லெட் லெட்டர்’ தருணம்
David North
9 December 2017
திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீதான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு செய்திகளை முதன்முதலில் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டது முதலான இரண்டு மாதங்களாக, அமெரிக்க அரசியல், பொழுதுபோக்கு, மற்றும் ஊடக ஸ்தாபகங்கள் அபரிமிதமான பாலியல் அசுத்தம் மற்றும் துன்புறுத்தல் வாக்குமூலங்களால் சூழப்பட்டிருக்கின்றன.
அமெரிக்கா இன்னுமொரு “ஸ்கார்லெட் லெட்டர்” (குற்ற எழுத்து) தருணத்தைக் கடந்து கொண்டிருக்கிறது, விபச்சாரி (வேசி) என்பதைக் குறிக்கும் “A” (adulteress) என்ற எழுத்துக்கு பதிலாக வேட்டையாடுபவர் (Predator) என்பதைக் குறிக்கும் ”P" என்ற எழுத்து பிரதியிடப்படுகிறது. இன்று நடக்கும் எதுவும் அந்த புதினத்தை எழுதிய நதானியல் ஹவ்தோர்ன்க்கு ஆச்சரியமளித்திருக்காது, ஏனென்றால் அவர் தனது இன்னொருமொரு புதினத்தில் (The House of the Seven Gables), “செல்வாக்கான வர்க்கங்களும், அத்துடன் தங்களை மக்களின் தலைவர்களாக கருதிக்கொள்பவர்ளும், கிறுக்குத்தனமான கும்பல்களின் எப்போதுமான குணாம்சமாக இருந்து வந்திருக்கக் கூடிய உணர்ச்சிகர தவறுக்கு முழுக்க கடன்பட்டிருப்பார்கள்” என்று எச்சரித்தார்.
”தேசிய கணக்குத் தீர்ப்பு” அல்லது “தேசிய உரையாடல்” என்று அதன் உற்சாகமூட்டுபவர்களால் விவரிக்கப்படும் “Me too" இயக்கமானது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பலியை எடுத்துக் கொண்டிருக்கிறது. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் நடந்திருக்கக் கூடிய ஒரு அத்துமீறலும் கூட இப்போது நினைவுகூரப்பட்டு அது கொடூரமான தண்டனைக்குரியதாக முன்வைக்கப்படுகிறது. குற்றச்சாட்டுகள் மற்றும் பரிதாபகரமான மன்னிப்பு கோரல்களது வெட்கக்கேடான சம்பிரதாயங்கள் நடத்தப்படுகின்றன. நீண்டகால தொழில் வாழ்க்கைகள் ஒரு சில நிமிடங்களில் நாசம் செய்யப்படுகின்றன. பலசமயங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவர்களது எழுபதுகளின் மத்தியில் அல்லது பின்பகுதியில் இருப்பவர்களாய் இருக்கின்றனர், இவர்களில் சிலர் கலைத் துறையில் பல தசாப்த காலம் தனித்துவமான பங்களிப்பு செய்து வந்தவர்களாய் இருந்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்படுகின்ற வரையில், அது குறித்து தெரிவிக்கவும் கூட படுவதில்லை. குற்றம்சாட்டுபவரது கூற்றின் உண்மைத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தக் கேட்பதே “வன்புணர்வு மன்னிப்பு”க்கான அல்லது முற்றுமுழுதான குற்றவுணர்ச்சிக்கான ஆதாரமாய் காட்டப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியில் இருந்து வந்த கடுமையான அழுத்தத்தின் கீழ் செனட்டர் அல் ஃபிராங்கன் வியாழனன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். செனட்டர் ஜோசப் மெக்கார்த்தியின் கம்யூனிச-விரோத சூனிய வேட்டை அரசியல்சட்டத்தை மீறியதாக இருந்த போதும், அது நூற்றுக்கணக்கானோரை பலி கொண்டது என்றபோதும் கூட அவர் செனட்டை விட்டு வெளியில் தள்ளப்பட்டதில்லை. மெக்கார்த்தியின் குற்றங்களுக்காக அவரைக் கண்டனம் செய்யும் அசாதாரணமான முடிவை செனட் எடுத்தது என்றாலும் கூட, இந்த விஸ்கான்சின் குடியரசுக் கட்சிக்காரரை 1957 இல் அவர் இறக்கும் வரையிலும் அவரது பதவியில் விட்டுவைத்தது.
ஃபிராங்கனின் இராஜினாமா சுய-வாழ்த்துக் கருத்துரைகளின் ஒரு வரிசைக்கு தூண்டுதலளித்திருந்தது, திகைப்பூட்டும் விதத்தில் அவற்றில் ஜனநாயக நனவு கொஞ்சமும் இல்லாதிருந்தது.
“அல் பிராங்கனுக்கு உரிய வழக்குநடைமுறைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. இந்த பிரபல ஆண்கள் எவருக்குமேயும்” என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட்டின் அனா மாரி காக்ஸ் டிசம்பர் 7 அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
”குற்றம் அல்லது குற்றமற்றதன்மை பிரகடனம் செய்வதிலுள்ள அபாயங்கள் குறித்து நாம் நடுங்க வேண்டாம்” என்று எழுதும் அவர், குற்றம் செய்தவர்கள், அதற்கு உடந்தையாயிருந்தவர்கள், அல்லது அரசியல் வலது-சாரிகள் மட்டுமே உரிய நடைமுறைகள் மீறப்படுவதான கூற்றுகளின் பின்னால் ஒளிகிறார்கள் என்று வாதிடுகிறார்.
நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர் குழு வியாழனன்று மாலை இவ்வாறு எழுதி ஃபிராங்கெனின் இராஜினாமாவைக் கொண்டாடியது: “நாம் ஒரு மலைப்பூட்டுகின்ற மற்றும் வரவேற்கத்தக்கதொரு கலாச்சார மாற்றத்தின் மத்தியில் இருக்கிறோம்... உண்மையான மாற்றத்தை கொண்டுவரத்தக்க நீண்டகாலமாக நிலுவையில் இருக்கின்ற ஒரு அறநெறி கணக்குத்தீர்ப்பை நாம் துணிந்து நம்புகிறோமா? - நாம் கண்ணுற்றுக் கொண்டிருக்கிறோம்.”
”தங்களையும் தங்களைத் துன்புறுத்தியவர்களையும அடையாளம் காட்டி ஆதாரங்களை வழங்குவதற்காக” பெண்களை டைம்ஸ் பாராட்டியது. உண்மை என்னவென்றால் குற்றம்சாட்டும் பலரும் தங்களை அடையாளம் காட்டுவதுமில்லை அல்லது பெரும்பாலும் பல வருடங்களுக்கு முன் அல்லது பல தசாப்தங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளுக்கு அவர்களது சொந்த சாட்சியத்தைத் தாண்டி வேறெந்த ஆதாரத்தையும் வழங்குவதுமில்லை. அதெல்லாமும் பிரச்சினையில்லை, நாடாளுமன்றம் “அல் ஃபிராங்கெனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று டைம்ஸ் வலியுறுத்துகிறது, அத்துடன் “வேட்டையாடுபவர்களை அதிகாரத்தில் அமர்த்தியிருக்கும் பொறிமுறைகள் மற்றும் மனப்பாங்கினை” உடைத்தெறிவதற்கு கூடுதல் இராஜினாமாக்களுக்கும் அழைப்புவிடுக்கின்றது.
“Me Too” பிரச்சாரம் அடிஆழம் வரையிலும் பிற்போக்குத்தனமானதாகும். அதில் எந்த முற்போக்கு உள்ளடக்கமும் இல்லை. எரிச்சலூட்டுவதில் தொடங்கி சட்டரீதியான நடவடிக்கைக்குரியது மற்றும் முற்றிலும் குற்றவியல்தன்மையானது வரையில் பாலியல் துன்புறுத்தலில் பல வடிவங்கள் இருக்கின்றன. ஆனால், மனித உணர்வுப்பரிவர்த்தனைகளிலான குழப்பங்கள் மற்றும் சிக்கல்களைப் பிரதிபலிக்கின்ற பல உட்பட, பல்தரப்பட்ட நடவடிக்கைகளும், தீங்கானதாகவும் இன்னும் குற்றவியல்தனமானதாகவும் கூட விவரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
”பாலியல் துன்புறுத்தல்” என்ற பிரயோகத்தை அத்தனையையும் உள்ளடக்கியதாய் பொறுப்பற்ற விதத்தில் பயன்படுத்துவதானது “விருப்பமில்லாதவரிடம் நெருங்கப்பார்ப்பது” (ஒரு சந்திப்புக்கு அழைப்பது, இன்னொருவரது அழகைப் புகழ்வது, பின் பாலியல் விருப்பத்தை சுட்டிக்காட்டுவது) என்ற பல ரூபங்களைக் கொண்ட ஒரு செயலுக்கும் உடல்ரீதியான வன் தாக்குதலுக்கும் இடையிலான வித்தியாசத்தை மழுங்கடிக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது. பாரிஸ் ரிவ்யூவின் நீண்ட கால ஆசிரியரது இராஜினாமாவைக் குறித்து செய்தியளிக்கும் நியூயோர்க் டைம்ஸ், லோரின் ஸ்டீன் “பலருடன் தொடர்புகொண்டவராக” கிசுகிசுக்கப்பட்டவர் என்றும் “பெண்களுடனான திரு. ஸ்டீனின் உறவுகள் குறித்த கிசுகிசுப்புகள் பல வருடங்கள் சுற்றிவந்தன” என்றும் தனது வாசகர்களுக்கு தெரிவிக்கிறது. ஸ்டேன் செய்த மற்ற தகாத செயல்களாக டைம்ஸ் தெரிவித்ததில் அவர் “அடிக்கடி இளம் பெண்களிடம் அவர்களது தோற்றம் குறித்து புகழ்வதுண்டு” மற்றும் ”கலகலப்பு விருந்துகளை” நடத்தினார் ஆகியவையும் அடங்கும்.
முற்போக்கு சமூக இயக்கங்கள் சில அடிப்படையான குணாம்சங்களை கொண்டிருக்கின்றன, அவற்றில் பரந்த சமத்துவ மற்றும் ஜனநாயக உள்ளடக்கம் மிக முக்கியமானது. நவீன உலகத்தில், அவை முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துடன் மாற்றமின்றியும் பிரிக்கவியலாமலும் பிணைக்கப்பட்டிருக்கின்றன. முற்போக்கு இயக்கங்கள் வெகுஜன நனவை, பலவீனப்படுத்துவதைக் காட்டிலும், அவற்றை மேலுயர்த்துவதற்கே பாடுபடுகின்றன. அநீதிக்கு எதிராகப் போராடும்போது, அவை அதன் கீழமைந்திருக்கும் சமூகக் காரணங்களை நோக்கி கவனத்தைச் செலுத்துகின்றன.
“Me Too” இயக்கமானது இந்தக் குணாம்சங்களில் எதுவொன்றையும் வெளிப்படுத்தவில்லை. அதன் சமூக அடித்தளமாக தொழிலாள வர்க்கம் அல்ல, மாறாக நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளே இருக்கின்றன. உலக சோசலிச வலைத் தளம் அடிக்கடி விளக்கியிருப்பதைப் போல, செல்வம் மேல்நிலையில் பங்கிடப்பட்டிருக்கும் விதம் குறித்து இந்த அடுக்குகளுக்குள்ளாக அதிருப்தி நிலவுகிறது. சலுகைகளுக்கும் செல்வத்துக்குமான அணுகலை விரும்பும் இவர்கள், அதனைப் பெறுவதற்கு எந்த வழியையும் பயன்படுத்துவதற்குத் தயாராய் இருக்கின்றனர். இதுவே போஸ்ட், டைம்ஸ் மற்றும் இந்தப் பிரச்சாரத்தின் தலைவர்களது வசனங்களில் வெளிப்பாடு காண்கிற அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான அலட்சியம் மற்றும் வெறும் பழிவாங்கும்குணம் ஆகியவற்றுக்கான காரணமாகும்.
“Me Too” இயக்கமானது அது மிகவும் கவனம் குவிக்கும் பிரச்சினையான பாலியல் என்ற பிரச்சினையிலும் கூட சமூக விழிப்புணர்வின் மிகக்கீழ் மட்டத்திற்கே இலக்கு வைத்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும், பாலியல் குறித்த மர்மக்கதைகளை அகற்றுவதற்கும் பாலியல் நடத்தையை மதிப்பீடு செய்வதன் மீதான மத தப்பெண்ணங்களது கொடுமையான சுமையை அகற்றுவதிலும் ஒரு இடைவிடாத முயற்சி இருந்தது. இயல்பிலிருந்து விலகிய மற்றும் வன்முறையான பாலியல் நடத்தையும் கூட விஞ்ஞானபூர்வமான ஆய்வுக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் தகுதியான ஒரு சமூக மற்றும் உளவியல் நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. சிறிதும் மனவருத்தமின்றியும் மனிதத்தன்மையின்றியும் கொடுக்கப்படும் தண்டனையானது கடுமையான பழிவாங்கும் உணர்வுக்கன்றி வேறெதற்கும் உதவுவதில்லை.
“Me Too” இயக்கமானது பாலியல் பற்றிய விவாதத்திற்கு இம்மியளவும் புத்திஜீவித்தன உரையாடலைக் கொண்டுவரவில்லை. மனித உறவுகளுக்குள் முடிந்த அளவுக்கு அவநம்பிக்கையையும் அச்சத்தையும் அறிமுகம் செய்யும் தீர்மானத்துடன், “பொதுவாக ஆண்களை”யும் —”வேட்டைக்காரர்கள்”— அவர்களது பொங்கிவருகின்ற மற்றும் கட்டுப்படுத்த முடியாத மிருகம் போன்ற உணர்வுகளையும் முட்டாள்தனமாகவும் தீய எண்ணத்துடனும் கண்டனம் செய்வதற்கு மட்டுமே அது முன்வருகிறது. அற்பத்தனமான வலது-சாரி பெண்ணிய பத்தியாளர்களது எழுத்துக்கள் அமெரிக்காவின் அரதப் பழைய பூரிட்டன்வாதத்துடன், “ஆண்களுக்கு எப்போதும் என்ன வேண்டும்?” என்பது குறித்து முதலாளித்துவ சமூகத்தின் தாய்கள் மகள்களுக்கு தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வந்திருந்த விக்டோரியக் கால புத்திமதி சரக்குகளை ஒன்றுகலக்கிறது.
“Me Too” இயக்கமானது, பிற்போக்குத்தனத்தில் அதற்குக் கொஞ்சமும் சளைக்காத அதன் முன்னோடியான “கறுப்பினத்தவரின் வாழ்க்கைகளும் முக்கியமே” (Black Lives Matter) இயக்க புரளியைப் போலவே, அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் சர்வதேச அளவிலும் உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களது பரந்த எண்ணிக்கையினரது உண்மையான சமூக கவலைகள் மற்றும் அக்கறைகளுக்கு ஆர்வமற்றும், இன்னும் சொன்னால் அலட்சியமும் கூட, கொண்டிருக்கிறது என்பது மிகவும் கவனத்துக்குரியது ஆகும். ஏகாதிபத்தியப் போர்கள் குறித்தோ, ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவது குறித்தோ வறுமை குறித்தோ அது சொல்வதற்கு எதுவொன்றுமில்லை. எப்போதாவது மற்றும் விருப்பமில்லாமல் உழைக்கும் பெண்களை அது குறிப்பிடுவது தவிர்த்து, “Me Too” இயக்கத்தின் அக்கறை தொழிற்சாலை தளத்தில் நடப்பதைக் குறித்து அல்ல, நிர்வாகக் குழுவின் அதிகார அரசியல் குறித்து தான் இருக்கிறது. கார்டியனின் ஹாட்லி ஃப்ரீமேன் சமீபத்தில் அறிவித்ததைப் போல, “அல்லது, ஹேய், இன்னுமொரு யோசனை இருக்கிறது! அடுத்த ஒரு 1,000 நாட்கள் என்று வைத்துக் கொள்வோம், பெண்கள் மட்டுமே பெரிய உயர்ந்த வேலைகளை பெற முடியும் என்றால் எப்படி இருக்கும்?”.
உழைக்கும் பெண்களது கவலைகளைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது? ஆரோக்கிய பராமரிப்புக்கும் கருக்கலைப்புக்குமான அணுகல், குழந்தை பராமரிப்பு மையங்கள், கண்ணியமான பள்ளிகள், கட்டுபடியாகின்ற வீட்டுவசதி, பாதுகாப்பான குடியிருப்பு பகுதிகள், ஒருநாட்டிலிருந்து திருப்பியனுப்பப்படுவதில் இருந்தான சுதந்திரம்? இந்தப் பிரச்சினைகள் “Me Too” ஊழலின் முதலாளித்துவ-ஆதரவுத் திட்டநிரலுக்கு குறுக்கே வரக் கூடியவை என்பதால் அவை உதாசீனப்படுத்தப்படுகின்றன.
வலது-சாரி முதலாளித்துவ பெண்ணிய இயக்கத்திற்கு அடித்தளத்தில், ஆண்கள், அதிலும் குறிப்பாக “வெள்ளை” ஆண்கள், சிறப்புச்சலுகைகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதான மோசடியான கூற்று அமைந்திருக்கிறது.
2016 இல் வலிமருந்து மிகைபயன்பாட்டின் மூலம் கிட்டத்தட்ட 40,000 ஆண்கள், அதாவது இதுவரை மொத்தமாய் அதற்குப் பலியானவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு மடங்கு பேர், இறந்தனர் என்ற உண்மைக்கு “Me Too” இயக்கம் கவனம் கொடுத்ததாய் தெரியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஆண்கள் சிறையில் இருக்கிறார்கள், அங்கிருக்கும் எண்ணிலடங்காதோர் பாலியல் வன்முறைக்கும் பிற துன்புறுத்தல் வடிவங்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். மொத்த புலம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் கொண்ட ஆண்கள் குடியேற்றத்தினருக்கான சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, 2009 இல் இருந்தான ICE புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் எந்த நாள் இரவிலும் சுமார் 553,000 பேர் வீடின்றி இருக்கின்றனர், இதில் மிகப் பெரும்பான்மையானோர் ஆண்கள். லிபியாவில் ஒபாமா நிர்வாகம் நடத்திய குண்டுவீச்சுப் பிரச்சாரத்திற்கு -துவக்கமளித்தவர் ஹிலாரி கிளிண்டன், வலது-சாரி முதலாளித்துவ பெண்ணியத்து உதாரண மங்கை- பிந்தைய காலத்தில், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த ஆண்கள் ஆளுக்கு ஒரு சில நூறு டாலர்களுக்கு அடிமைத்தனத்துக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பாலியல் துன்புறுத்தலைக் கண்டு உண்மையான கோபம் கொள்கின்ற, “Me Too” இயக்கமானது உண்மையாகவே நல்ல விடயம் என்று நம்புகின்ற நல்ல நோக்கமுடைய மனிதர்களும் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மையே. இன்னும் சற்று விவரம் பெற வேண்டிய நிலையில் இருக்கும் சிலர், இந்தப் பிரச்சாரம் ஒரு “புரட்சி”யின் பகுதி என்ற கூற்றையும் கூட ஏற்றுக் கொள்கிறார்கள்.
உண்மையான புரட்சிகள் நியூயோர்க் டைம்ஸால் தொடக்கப்படுவதாய் இருக்காது, ஜனநாயகக் கட்சியால் ஆதரிக்கப்படுவதாய் இருக்காது, டைம் இதழால் மரியாதையளிக்கப்படுவதாய் இருக்காது. அதேபோல அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதை அவை நியாயப்படுத்தவும் செய்யாது.
பல தசாப்த கால அடையாள அரசியல் சமூக சிந்தனையை நோக்குநிலை பிறழச் செய்திருக்கிறது ஊழலடையச் செய்திருக்கிறது. சமூகத்தை வர்க்கத்தின் அடிப்படையில் அறிவியல்ரீதியாக மதிப்பீடு செய்வதானது பாலினம் மற்றும் நிறம் ஆகிய ஏமாற்றுகளைக் கொண்டு இடம்பெயர்த்தப்பட்டதானது சமூக நனவைக் கீழிறக்கியிருக்கிறது. குறிப்பாக “படித்த” உயர்-நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் நிகழ்வுகளை வரலாற்று-அறிவுடனான அரசியல் உள்ளடக்கத்தில் வைத்துப் பார்ப்பதற்கான திறனின்மையும் -விருப்பமின்மையும் கூட- இருக்கிறது. “Me Too” பிரச்சாரமானது ஜனநாயகக் கட்சியின் அடையாள அரசியல் மூலோபாயத்தில் பொதிந்ததாய் இருக்கிறது என்ற கிட்டத்தட்ட பட்டவர்த்தனமான ஒரு அம்சம் ஏனோ கவனிக்கப்படாமலிருக்கிறது. “பொய்ச் செய்தி” பிரச்சாரம், ரஷ்ய-விரோத வெறிக்கூச்சல் மற்றும் இணையத் தணிக்கைக்கான அழைப்புகள் ஆகியவற்றுடனான தொடர்பு தவறவிடப்படுகிறது. ஜோடிக்கப்பட்ட வன்புணர்வு குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துகின்ற ஒரு பொறி அமைப்புக்குப் பலியான ஜூலியன் அசாஞ்சின் கதி கிட்டத்தட்ட மறக்கப்பட்டிருக்கிறது. வன்புணர்வு குறித்த போலியான குற்றச்சாட்டுகளுக்கு பல உதாரணங்கள் இருந்தும் கூட, குற்றம் சாட்டப்படும் பெண் எப்போதும் நம்பப்பட வேண்டும் என்பதான அபத்தமான கூற்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேல், கால் நூற்றாண்டு காலப் போர், ஜனநாயக உரிமைகள் மீது விரிவடைந்து செல்லும் தாக்குதல் மற்றும் சமூக சமத்துவமின்மையின் மலைப்பூட்டும் மட்டங்கள் ஆகியவற்றின் விரிந்த உள்ளடக்கத்திற்கு வெளியில் வைத்து இந்தப் பிரச்சாரம் பார்க்கப்படும்போது குழப்பமே அதிகரிக்கிறது.
பாலியல் துன்புறுத்தலின் உண்மையான நிகழ்வுகள் மற்றும் மனித-விரோத கொடூரம் மற்றும் சுரண்டலின் அத்தனை வடிவங்களுக்குமான எதிர்ப்பு என்பது, முதலாளித்துவத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலை அவசியமாக்குகின்ற ஒரு வர்க்கப் பிரச்சினை ஆகும். “Me Too” அல்ல “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்பதே மனித முன்னேற்றத்திற்கான போராட்டத்திற்கு உயிர்கொடுக்கின்ற இலட்சிய வாசகம் ஆகும்.