Print Version|Feedback
A third of UK children in poverty, with rate set to rise
இங்கிலாந்தில் அதிகரித்துச்செல்லும் விகிதத்தில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் வறுமையில் இருக்கின்றனர்
By Margot Miller
20 November 2017
நிதி ஆய்வு நிறுவனத்தின் (Institute for Fiscal Studies - IFS) சமீபத்திய அறிக்கையின்படி, அடுத்த நான்கு ஆண்டுகளில், இங்கிலாந்தில் 37 சதவிகித குழந்தைகள் ஒப்பீட்டளவில் வறுமையில் வாழ்வார்கள்.
ஜோசப் ரௌண்ட்ரி அறக்கட்டளை (Joseph Rowntree Foundation) மற்றும் பொருளாதார மற்றும் சமூக ஆய்வு சபை (Economic and Social Research Council) ஆகியவை இணைந்து நிதியளித்த, “இங்கிலாந்தில் நிலவும் வாழ்க்கைத் தரங்கள், வறுமை மற்றும் சமத்துவமின்மை: 2017,” என்ற அறிக்கை, வறுமையில் வாழும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளில் 4 சதவிகிதம் தேசிய அளவில் அதிகரிப்பு இருக்குமென முன்கணிப்பு செய்கிறது. அதாவது சராசரியை விட 60 சதவிகிதம் அல்லது அதற்கு குறைவாக வருவாய் கொண்ட குடும்பங்களில் வறுமையில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 400,000 க்கு உயரும் என்பதாகும்.
இது 2022 க்குள் வறுமையில் வாழும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையை ஒரு மோசமான அளவான 5.2 மில்லியனுக்கு கொண்டுவரும். 1961 ல் பதிவுகள் தொடங்கப்பட்ட போது, குழந்தை ஒப்பீட்டு வறுமை 13 சதவிகிதமாக இருந்ததில் இருந்து இது மிக உயர்ந்த சதவிகிதமாக இருக்கும்.
347 பவுண்டுகள் அல்லது அதற்கு குறைவான வீட்டு செலவினங்கள் போக, வாராந்திர வருமானத்தில் இரு குழந்தைகளுடன் வாழும் ஒரு ஜோடியைக் கொண்டிருக்கும் குடும்பங்களைத்தான் இந்த அறிக்கை ஒப்பீட்டு வறுமையில் வாழ்வதாக வரையறுக்கிறது. 144 பவுண்டுகளை வருவாயாகக் கொண்டிருக்கும் ஒரு தனிமனிதன் ஏழையாக மதிப்பிடப்படுகிறான்.
வழமையாக வறியவர்களாக இருக்கும், ஓய்வூதியம் பெறுவோர் சமூகநலன்புரி அரசின் வரலாற்றுரீதியான சலுகைகளால் நீண்ட காலம் வாழ்பவர்களாக இருப்பதால் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அவர்களால் உருவானதல்ல. வறுமையில் உள்ள மிகப்பெரிய மக்கள்தொகையில் ஓய்வூதியம் பெறுவோரின் தொகை, குறைந்து விட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது. உண்மையில், தொழிற் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி சார்ந்த அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இங்கிலாந்தை ஒரு குறைவூதிய, மலிவு உழைப்பு மேடையாக மாற்றிவிட்டதாக அதன் கண்டுபிடிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
தற்போது ஒப்பீட்டு வறுமையில் வாழும் மிகப்பெரிய குழுவாக “உழைக்கும் ஏழைகள்” தான் உள்ளனர். வறுமையில் வாழ்வதை விட ஐந்து மடங்கு அதிகமான கஷ்டத்தில், ஒருவரும் பணிபுரியாத வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் வாழ்கின்ற போதிலும், ஏழைக் குழந்தைகளின் மிகப்பெரிய விகிதத்தினர் தற்போது ஒற்றை ஊதிய வருவாய் கொண்ட குடும்பங்களில் வாழ்வதைத்தான் குறைவூதிய பொருளாதாரம் என்பது அர்த்தப்படுத்துகின்றது.
2015-2016 இல், முழு வறுமையில் வாழ்ந்த மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட குழந்தைகள் உழைக்கும் குடும்பங்களில் வாழ்ந்தனர்.
இங்கிலாந்து தொழிலாளர் சந்தையின் ஒரு அம்சம், கிக் பொருளாதாரத்தில் (gig economy), குறைந்த ஊதியம் கொண்ட மற்றும் மிகவும் பாதுகாப்பற்ற 5 மில்லியன் வேலைகளையும், அத்துடன் பூஜ்ஜிய மணிநேர ஒப்பந்தங்களையும் உருவாக்குவதாக இருந்து வருகிறது. ஊதியங்கள் இன்னும் மந்த நிலையில் தான் உள்ளன; அதிலும் சராசரி ஊதியம், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 11 சதவிகிதம் குறைவாகவே இன்னமும் உள்ளது. இது எந்தவொரு சிறப்பையும் பெறுமென எதிர்பார்க்கப்படவில்லை.
IFS இன் மூத்த பொருளாதார ஆராய்ச்சி நிபுணரும், அறிக்கை ஆசிரியருமான ஆண்ட்ரூ ஹூட் ஐ பொறுத்தவரை: “அடுத்த சில ஆண்டுகளில் சராசரி வீட்டு வருவாய் வளர்ச்சி மிகவும் மந்தமாக இருக்கும் வாய்ப்புள்ளது.
“வரவு-செலவு பொறுப்பு அலுவலகம் (Office for Budget Responsibility-OBR) எதிர்பார்த்தது போல, தொழிலாளர்கள் வருவாய் வளர்ந்துவிட்டால், சராசரி வருமானம் என்பது அடுத்த நான்கு ஆண்டுகளில் வெறும் 4 சதவிகிதம் உயருமென கணிக்கப்படுகிறது. … முன்கணிப்பு மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருந்ததாக அவர்கள் இப்போது நினைப்பதை OBR ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது.”
உழைப்பு வயது சலுகைகளில் வெட்டுக்களினாலும், சலுகைகளின் சீர்திருத்தங்களின் தாக்கங்களினாலும், பிரெக்ஸிட் வாக்கை தொடர்ந்து ஸ்டேர்லிங்கின் மதிப்பு குறைந்ததில் இருந்து உண்மையான ஊதியத்தின் மதிப்பில் வீழ்ச்சி காணப்பட்டு பணவீக்கம் உயர்ந்து வருவதால், “அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைவான வருவாய் வளர்ச்சியே” இருக்குமென இந்த அறிக்கை கணிக்கின்றது.
“தொடர்ச்சியான வேலையின்மையை (ஒரு சாத்தியமான விளைவு அல்லாத!) நீக்குவதனால், தொடர்ச்சியாகவுள்ள வறுமையும் பாதியளவாக குறைக்கப்படும்” என இது நிறைவு செய்கிறது.
2016 இல் முதலாவதாக கன்சர்வேட்டிவ் கட்சி பிரதம மந்திரியாக தெரசா மே ஆன போது, “குடும்பங்களை நிர்வகிப்பது பற்றி” அவர் பின்வருமாறு வாக்குறுதி அளித்தார்.
“நீங்கள் நாள் முழுவதும் உழைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன், உங்களால் முடிந்தவரை சிறப்பாக செயலாற்றுகிறீர்கள் என்பதையும் நான் அறிவேன், மேலும் சில நேரங்களில் வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கலாம் என்பதும் எனக்கு தெரியும். நான் வழிநடத்தும் இந்த அரசாங்கம் சலுகை பெற்ற சிலரது நலன்களால் உந்தப்படாது, மாறாக உங்களால் உந்தப்படும்.”
ஆனால் இதற்கு மாறாக, ஏழைகளின் மீதான போர்தான் விரைவாக தொடரப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு வேலை வரி கடன், குழந்தை வரி கடன் மற்றும் வீட்டு நலன் உள்ளிட்ட அனைத்து முந்தைய நலன்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு அனைத்துக்குமான கடனை (Universal Credit-UC) தற்போது அரசாங்கம் முதல்தடவையாக அறிமுகப்படுத்துகிறது. அக்டோபரில், 610,000 நலன்களை உரிமை கோருபவர்கள் அனைத்துக்குமான கடனுக்கு மாற்றப்பட்டனர், அவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானோர் பணிபுரிபவர்களாக இருந்தனர்.
ஒரு மில்லியனுக்கு அதிகமான உழைக்கும் குடும்பங்கள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 2,300 பவுண்டுகளை இழக்க நேரிடும் அதேவேளையில், இந்த புதிய நிலைமையின் கீழ், வேலைபார்க்கும் குடும்பங்களில் 2.1 மில்லியன் பேர் ஒரு வருடத்திற்கு சராசரியாக 1,600 பவுண்டுகளை இழப்பார்கள் என்று IFS மதிப்பிடுகிறது.
அரசாங்க நலன்புரி சீர்திருத்தங்கள் குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களை பொருத்தமற்ற விகிதத்தில் தண்டிக்கின்றன. இந்த அறிக்கை பின்வருமாறு விவரிக்கிறது: “வருமானத்தில் பாரிய பல்வேறு மாற்றங்களை வெவ்வேறு வீடுகளும் அனுபவிக்கும் என்ற உண்மையை சராசரி வருமானமும், வறுமை விகிதமும் தவற விடுகின்றன.”
2020 ஆம் ஆண்டிற்குள், மூன்று குழந்தைகளை கொண்ட ஒரு குடும்பம் ஒரு வாரத்திற்கு 58.93 பவுண்டுகளை இழக்கும் என்றும், அதேவேளையில் ஐந்து குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம் 90.98 பவுண்டுகளை வாராந்திர இழப்பாக கொண்டதொரு சாத்தியத்தை எதிர்கொள்ளும் என்றும் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. ஏனென்றால், இந்த சலுகைகள் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு கிடையாது.
UC சலுகை கோருபவர்கள் இந்த ஆண்டு குறிப்பாக இருண்ட கிறிஸ்துமஸை எதிர்கொள்வர். “நல்லெண்ணத்தின் பருவகாலமாக” ஐந்து ஊதிய நாட்கள் கொண்ட ஒரு நீண்ட மாதமாக டிசம்பர் இருப்பதனால், அதாவது வேலையின் மூலம் அவர்கள் பெறும் வருமானம் தகுதிக்கு ஏற்றவாறே மிக உயர்ந்ததாக இருக்கும் என்பதால், முழுமையாக 67,000 பணியிலுள்ள சலுகை பெறுவோர்களும் அம்மாதத்தில் எந்தவித நன்மையையும் பெறமாட்டார்கள், இந்நிலையில் பலரும் மீண்டும் உதவிக்கு விண்ணப்பிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
முதல் முறையாக அனைத்துக்குமான கடன் கோருபவர்கள் இந்த வாரத்தில் எதையும் பெறமுடியாது, அதாவது பண்டிகைக் காலம் முடியும் வரையிலும் என்பதாகும், ஏனென்றால் உதவிகள் கிடைக்க தொடங்கும் முன்னர் ஆறு வாரம் காத்திருக்க வேண்டும். இது Peabody Trust இன் ஆய்வின்படி, 40,000 க்கும் அதிகமான குழந்தைகளைக் கொண்ட 60,000 குடும்பங்களைப் பாதிக்கும்.
அதிகரித்துவரும் கடன் சுமையுடன் கூடிய, உணவு வங்கிகளின் பயன்பாட்டை நாட வேண்டியிருக்கின்ற, மேலும் பாரிய வாடகை பாக்கிகளை சேர்த்து வருகின்ற, வெளியேற்றங்களுக்கு வழிவகுக்கின்ற மற்றும் அனைத்துக்குமான கடன் சலுகை கோருபவர்களுக்கு நில உரிமையாளர்கள் வாடகைக்கு வாழ்விடங்களை தர மறுக்கின்ற புதிய முறையின் கீழ், ஏற்கனவே சலுகை கோருபவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
பெயரளவிலான இடதுசாரி தலைவரான ஜெர்மி கோர்பினின் கீழான தொழிற்கட்சியின் எதிர்ப்பு, கொள்கை ரீதியாக அனைத்துக்குமான கடனை எதிர்க்கவில்லை, மாறாக சிரமங்களைக் களைவதற்கு ஆறு மாதங்களுக்கு வெறுமனே இடைநிறுத்தப்பட வேண்டுமென்றே அழைப்பு விடுக்கிறது. இது, தொழிற் சங்கங்களின் ஆதரவுடனான டோனி பிளேயரின் தொழிற் கட்சி அரசாங்கம், வரிக் கடன் சட்டம் 2002 (Tax Credit Act 2002) இன் மூலம் வரிக் கடன்களை அறிமுகப்படுத்தியதுடன் இங்கிலாந்தை ஒரு குறைந்த ஊதிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதற்கு வழிவகை செய்தது. வறுமையிலிருந்து வறிய குடும்பங்களை மேலேதூக்கிவிடுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், மற்ற தொழிலாளர்களால் ஊதிய மானியம் செலுத்தப்படுவது போல வரிக் கடன்கள் செயல்பட்டமை, வேலை வழங்குநர்கள் தொடர்ந்து குறைந்த ஊதியம் வழங்கக்கூடியதாக ஆக்கியது.
IFS அறிக்கை, “வருமான சமத்துவமின்மை அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கின்ற போதிலும், அது, மக்கள்தொகையில் முதல் 1 சதவிகிதத்தினர் பெறும் வருமானம் பற்றி சிறிது குறிப்பிடவேண்டும், காரணம் என்னவென்றால், “பெரும் செல்வந்தர்களின் வீட்டு வருமானங்கள் எப்படி மாறி வருகின்றன என்பதைக் கண்காணிப்பது கடினமாக உள்ளது.”
அறிக்கை அவ்வாறு கூறவில்லை என்றாலும், முதல் 1 சதவிகிதத்தினரின் வருமானமும் செல்வமும் பெரும்பாலும் கடல்தாண்டிய வரிசெலுத்தா இடங்களில் மறைத்து வைக்கப்படுகின்றது, அல்லது எந்த வரியும் செலுத்தாத செயலற்ற நிறுவனங்களாக விட்டுவிடப்படுகின்றது. முன்னர் பனாமா ஆவணங்களில் இருந்தும், தற்போது பாரடைஸ் ஆவணங்களில் இருந்தும் வெளியான சமீபத்திய தகவல் கசிவினைப் போல, பெரும் செல்வந்தர்களால் செய்யப்படும் வரி ஏய்ப்பும், அதேபோல அவர்கள் நிறுவனங்களில் செய்யும் மூதலீடும் நிரந்தரமான விகிதங்களை அடைந்துள்ளன.
IFS அறிக்கை, ஏழைகள் உழைக்க மனமில்லாதவர்களாக இருப்பதாக குற்றம்சாட்டுவதைத் தவிர குழந்தை தொழிலாளர் முறைக்கு எந்தவித தீர்வையும் வழங்கவில்லை. ஒற்றை ஊதிய குடும்பங்களில் இரண்டாவது வயது வந்தோரின் 12 சதவிகிதத்தினர் மட்டுமே வேலை தேடி வருகின்றனர் என்ற உண்மை குறித்து புலம்புகின்ற நிலையில், ஒற்றை ஊதிய குடும்பங்களில் வருமானங்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை “சவாலானது” என விவரிக்கின்றது. “(ஒற்றை ஊதிய குடும்பங்களில்) அதிகரித்துவரும் நன்மைகள் வேலை தேடும் இரண்டாவது வயதுவந்தோருக்கான நிதிச் சலுகைகளை பலவீனப்படுத்துகின்றது” எனவும் இது எச்சரிக்கின்றது.
சலுகைகளை வழங்கும் முறை, குறைந்த ஊதியம் வழங்குவதன் மூலம் மக்களை தண்டிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது அதனால் பாதிக்கப்படுகின்ற அனைவருக்கும் இரகசியமானதொன்றும் இல்லை. இளம் குழந்தைகளுடன் வாழும் தாய்மார்களும், நோய்வாய்பட்டோரும், குழந்தை பராமரிப்பிற்கு பணம் செலுத்த எந்தவொரு வழியும் இல்லாத, அல்லது வெறுமனே வேலை தேட முடியாத பெற்றோர்களும் உட்பட, வேலை செய்யாத எவரும் வேலை செய்ய முடியும் என்ற இந்த மூடிமறைப்பான வலியுறுத்தலானது அதே மாதிரியான ஒன்றிற்கான ஒரு செய்முறையாகும்.