Print Version|Feedback
Is the United States on the brink of nuclear war?
அமெரிக்கா அணுஆயுத போரின் விளிம்பில் உள்ளதா?
Andre Damon
11 December 2017
வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணை ஒன்றை வட கொரியா பரிசோதித்து பதிமூன்று நாட்களுக்குப் பின்னர், அமெரிக்கா அதன் போர் அச்சுறுத்தல்களைக் கூடுதலாக தீவிரப்படுத்தி உள்ளது.
• வியாழனன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே குறிப்பிடுகையில், தென் கொரியாவில் நடக்கவுள்ள 2018 குளிர்கால ஒலிம்பிக்ஸ் இல் பங்கேற்க அமெரிக்கா விளையாட்டு வீரர்களை அனுப்பாமல் போகலாம், ஏனெனில் ஒரு போர் சமயத்தில் அங்கே அவர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இருக்காது என்று எச்சரித்தார்.
• கடந்த ஞாயிறன்று, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச். ஆர். மெக்மாஸ்டர், அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான போர் அச்சுறுத்தல் "ஒவ்வொரு நாளும் அதிகரித்து" வருகிறது என்று எச்சரித்தார்.
• அதே நாள், தென் கரோலினாவின் குடியரசு கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம், அமெரிக்கா வட கொரியாவுடன் "ஓர் இராணுவ மோதலுக்கு நெருக்கத்தில் சென்று" கொண்டிருக்கிறது என்று எச்சரித்ததுடன், தென் கொரியாவிலிருந்து அமெரிக்க சிப்பாய்களின் குடும்பங்களை வெளியேற்றுமாறு இராணுவத்தை வலியுறுத்தினார்.
இந்த அபிவிருத்திகள், அமெரிக்க வெளியுறவுத்துறை ஸ்தாபகத்திற்குள்ளும் அத்துடன் சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் எச்சரிக்கை ஒலியைச் சந்தித்தன.
• வாஷிங்டன் போஸ்ட், வெள்ளியன்று, "வட கொரியா உடனான அணுஆயுத போர் இவ்வாறு தான் கட்டவிழும்" என்று தலைப்பிட்டு சர்வதேச ஆய்வுகளுக்கான மிட்டில்பர்ரி பயிலகத்தின் ஒரு சிந்தனையாளர் ஜெஃப்ரி லீவிஸ் இன் நடுங்க வைக்கும் புனைவு வர்ணனை ஒன்றை பிரசுரித்தது. ஒரு சூழலின் மயிர் கூச்செறியும் விபரங்களை குறிப்பிடும் லீவிஸ், அதில் "அண்மித்து 2 மில்லியன் அமெரிக்கர்கள், தென் கொரியர்கள் மற்றும் ஜப்பானியர்கள் முற்றிலும் தவிர்க்கக்கூடிய 2019 அணுஆயுதப் போரில் கொல்லப்படுகிறார்கள்” என்று விவரிக்கிறார்.
• வட கொரியா குறித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் வாய்சவடால் அதிகரித்தளவில் ஈராக் படையெடுப்புக்கு முன்னர் புஷ் நிர்வாகத்தின் ஒன்றுடன் ஒத்துள்ளதாக சனிக்கிழமை நியூ யோர்க் டைம்ஸ் எச்சரித்தது. “ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள் வெற்றுத்தனமானவை அல்ல, அதிகாரிகள் வட கொரியாவையும் அதன் அணுஆயுதங்கள் மற்றும் ஏவுகணை தளவாடங்களையும் தாக்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள் என்று வெளியில் உள்ள வல்லுனர்கள் அதிகரித்தளவில் தீர்மானித்து வருகிறார்கள்,” என்பதையும் அப்பத்திரிகை சேர்த்துக் கொண்டது,
• வட கொரிய தலைவர்களுடனான விவாதத்திற்குப் பின்னர், “தற்போதைய நிலைமை இன்றைய உலகில் மிகவும் பதட்டமான மற்றும் அபாயகரமான, சமாதான மற்றும் பாதுகாப்பு பிரச்சினையாக இருப்பதை" ஐ.நா. சபையும் வட கொரியாவும் தீர்மானித்திருந்ததாக அறிவித்து, அதே நாளில் ஐ.நா. தூதர் ஜெஃப்ரீ பெல்ட்மன் ஓர் அறிக்கை வெளியிட்டதுடன், “நேரம் இன்றியமையாததாக உள்ளது,” என்று எச்சரித்தார்.
• அணுஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரச்சாரத்திற்காக, அமைதிக்கான நோபல் விருது வழங்கும் ஒரு விழாவில், ஞாயிறன்று, அக்குழுவின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே "பரஸ்பர அழிவு" “ஒரேயொரு உணர்ச்சிவயப்பட்ட தூண்டுதலில் தொக்கி நிற்கிறது" என்று எச்சரித்தனர்.
• வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்க தாக்குதல் அந்நாட்டை சர்வதேச சட்டமீறலில் கொண்டு நிறுத்துமென ஞாயிறன்று பழமைவாத கட்டுரையாளர் ஜோர்ஜ் வில் (George Will) குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டினார், “சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள்" தான் நாஜி போர் குற்றங்களுக்கான நூரெம்பேர்க் தீர்ப்பாயத்தின் அடித்தளமாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டினார். “1946 நூரெம்பேர்க் விசாரணைகளில் முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் முதல் இரண்டு புள்ளிகள், 'ஆக்ரோஷமான போர்' நடத்தியதைக் கவனத்தில் கொண்டிருந்தது,” என்று வில் நிறைவு செய்திருந்தார்.
வட கொரியாவுடன் சாத்தியமான ஒரு போரைக் காண்கின்ற, அமெரிக்க மற்றும் சர்வதேச வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தின் பெரும் பிரிவுகளிடையே ஆழ்ந்த கவலைகளும் அமைதியின்மையும் நிலவுவதையே இதுபோன்ற கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அடுத்தடுத்த போர்களுக்கு எதிர்முரணாக, வட கொரியாவுக்கு எதிரான ஒரு சாத்தியமான போரில் அமெரிக்காவிற்கு சர்வதேச ஆதரவாளர்கள் இல்லை. அது ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகள் மற்றும் சமீபத்தில் வரையில் அதன் கூட்டாளிகளாக இருந்த நாடுகளுடனான கருத்து ஒருமைப்பாடுகளை வெளிப்படையாக அலட்சியப்படுத்தி, அதிகரித்தளவில் சர்வதேச சட்டத்தின் கட்டமைப்புக்கு வெளியே செயல்பட்டு வருகிறது.
வட கொரியாவுக்கு எதிரான ஒரு போரானது, வட கொரிய எல்லையின் இருதரப்பிலும் குறைந்தபட்சம் நூறாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுடன், கருதத்தக்க வகையில் ஒவ்வொரு சூழலிலும் அமெரிக்காவுக்கு அளவிட முடியாத ஒரு பேரழிவாக இருக்கும். இதுபோன்றவொரு போர் அமெரிக்காவை சர்வதேச அரங்கில் அன்னியப்படுத்தி, வாஷிங்டனின் அந்தஸ்தில் என்ன எஞ்சியிருக்கிறதோ அதையும் தகர்த்தெறியும்.
ஈராக் படையெடுப்பைக் காட்டிலும் மிக பேரழிவுகரமான ஒரு போராக சுற்றிச்சூழ அச்சுறுத்துகின்ற, வட கொரியாவை நோக்கிய இந்த அதிகரித்தளவிலான போர்வெறி கொண்ட நிலைப்பாடு, ஒரு வெள்ளை மாளிகை அரண்மனை சதியின் சாத்தியப்பாடு மீதான ஊகங்களுக்கு உந்துசக்தியாக உள்ளது.
Foreign Affairs இதழின் சமீபத்திய பதிப்பில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், Scott D. Sagan, வட கொரியா உடனான சாத்தியமான ஒரு பேரழிவுகரமான போரைத் தவிர்ப்பது, இராணுவத்தின் பிரிவுகளால் ட்ரம்பைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான கணிசமான தூண்டுதலை முன்வைக்கக்கூடுமென எச்சரிக்கிறார்.
வட கொரியா உடனான அமெரிக்காவின் விட்டுக்கொடுப்பற்ற நிலை, சில விதத்தில், கியூப ஏவுகணை நெருக்கடியை விடவும் மிக அபாயகரமானதென சாகன் குறிப்பிடுகிறார், அப்போது "உறுதியான படைத்துறைசாரா தலைவர்கள் அமெரிக்க இராணுவத்தின் அபாயகரமான போர்வெறி உணர்வை எதிர்த்தனர்.” ஆனால் இப்போதோ, “அமெரிக்காவில் உள்ள மூத்த அரசியல் தலைமையே பொறுப்பற்ற அச்சுறுத்தல்களை விடுக்கிறது, மேலும் (ஒரு முன்னாள் தளபதியான) பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளின் குரல்களே அச்சுறுத்த சேவையாற்றுகின்றன.”
அவர் இதையும் சேர்த்துக் கொள்கிறார், “ட்ரம்ப் தடுக்கப்படுவதாக ஏதேனும் தருணத்தில் மூத்த இராணுவ தலைவர்கள் நம்புகையில், அவர்கள் மாட்டீஸைத் தொடர்பு கொள்ள கடமைப்பட்டுள்ளனர், பின்னர் இவர் ட்ரம்ப் ஆல் 'அவர் பதவியின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற' இயலவில்லையா, 25 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைப் பயன்படுத்தலாமா வேண்டாமா" என்பதை தீர்மானிக்க அவசரகால மந்திரிசபை கூட்ட அழைப்பு விடுக்க வேண்டும்.”
அமெரிக்க இராணுவ தலைமை பசிபிக்கில் ட்ரம்ப் நிர்வாகத்தின் போர் முனைவைத் தடுக்க ஏதேனும் விதத்தில் சேவையாற்றும் என்று நினைப்பது விரும்பத்தக்க சிந்தனையாக இருந்தாலும், இதுபோன்றவொரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அபாயம் குறித்து யாரும் குறைமதிப்பீடு செய்துவிட முடியாது. பாதுகாப்புத்துறை செயலர் "போர் வெறியர்" மாட்டீஸ், ஒரு போர் "அதன் [வட கொரியாவின்] மக்களை நிர்மூலமாக்க" இட்டுச் செல்லும் என்று எச்சரித்து, வட கொரியாவுக்கு எதிராக மனிதயினப் படுகொலையைக் கொண்டு அச்சுறுத்தி உள்ளார். தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எச். ஆர். மெக்மாஸ்டரும் இதே போல, அமெரிக்கா வட கொரியாவுக்கு எதிராக ஒரு "முன்கூட்டிய", அதாவது தூண்டுதலற்ற, போரைத் தொடங்க தயாரிப்பு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முன்னொரு போதும் இல்லாதளவில் அதிவிரைவாக இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அதன் மேலாதிக்கம் உடைந்து வருவதை முகங்கொடுக்கின்ற நிலையில், அது ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களை நிரூபித்து காட்டுவதற்காகவே கூட போரில் இறங்கலாம்.
இதற்கிடையே, பதவி நீக்க குற்றவிசாரணை மூலமாக ட்ரம்பை நீக்குவது, இராஜினாமா செய்ய நிர்பந்திப்பது அல்லது 25 ஆம் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்துவது என இவற்றின் மீது அதிகரித்து வரும் பேச்சுக்கள், அமெரிக்காவைப் பீடித்து வருகின்ற உள்நாட்டு அரசியல் நெருக்கடியைப் போரைக் கொண்டு தீர்க்க முனைய நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது.
இவை அனைத்துமே அமெரிக்க அணுஆயுத விட்டுக்கொடுப்பற்ற நிலையால் முன்னிறுத்தப்பட்ட ஆழ்ந்த அபாயத்தை அடிக்கோடிடுகின்றன. வட கொரியா உடனான ஒரு போரின் அவசியம் குறித்து அமெரிக்க ஆளும் உயரடுக்கின் வெவ்வேறு கன்னைகளுக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவினாலும், அங்கே ஆளும் உயரடுக்கிற்குள் போர் எதிர்ப்பு கன்னை எதுவும் இல்லை. ட்ரம்பை எதிர்க்கும் கன்னைகள் கோருகின்ற கொள்கை—அதாவது, ரஷ்யாவுடனான மோதலைத் தீவிரப்படுத்த வேண்டுமென்பது—முற்றுமுழுமையான உலக போருக்குள் தீவிரப்படுத்தும் அதன் சொந்த அபாயத்தைக் கொண்டுள்ளது.
அதிகரித்து வரும் போர் அபாயத்தைக் குறித்து எச்சரிப்பதற்கு பதிலாக, ஜனநாயக கட்சி கடந்த இரண்டு வாரங்களாக ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்யாவுடன் நயவஞ்சகமாக கூட்டு வைத்திருந்தது என்று கூறப்படுவதன் மீதான அதன் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துவதில் செலவிட்டுள்ளது. அதே நேரத்தில் அது, ட்ரம்ப் நிர்வாகத்துடனான அதன் மோதலுக்காக உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்கை அணித்திரட்டும் நோக்கில், ஹாலிவுட்டில் மற்றும் கேப்பிட்டல் ஹில் மீதும் "பாலியல் முறைகேடுக்கு" எதிரான அதன் வேட்டையாடலுடன் பொதுமக்களின் நனவை சிதைக்கவும் செயல்பட்டு வருகிறது.
பேரழிவுகரமான மூன்றாம் உலக போர் ஒன்றை தடுக்கும் தகைமை கொண்ட ஒரே சமூக சக்தி, சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். இந்த சமூக சக்தி, போருக்கும் மற்றும் அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் முடிவு கட்டும் நோக்கில், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு பாரிய சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்திற்குள் அணித்திரட்டப்பட வேண்டும்.