ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Further signs of looming US war with North Korea

வட கொரியா உடனான அமெரிக்கப் போருக்கு அச்சுறுத்தும் கூடுதல் அறிகுறிகள்

By Peter Symonds
9 December 2017

வட கொரியாவுக்கு எதிரான போர் குறித்த அமெரிக்காவின் முன்னேறிய தயாரிப்புக்களின் மற்றொரு அறிகுறியாக, பிப்ரவரியில் தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அமெரிக்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதனன்று ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி Fox News இல் பேசுகையில், அமெரிக்க அணியினரின் பங்கேற்பு என்பது “வெளிப்படையாகவே ஒரு கேள்விக்குறியாக” உள்ளது என்று தெரிவித்தார். அதேவேளையில், அவர் எதையும் உறுதியாக கேட்டிருக்கவில்லை என்று ஹேலி மறுத்ததோடு, அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்பு பற்றி, அதாவது “அது ஜெருசெலம் பற்றியதா அல்லது வட கொரியா பற்றியதா” என்பதை குறிப்பிடாமல், “தினமும் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்து கொண்டிருப்பதாக” மட்டும் அவர் தெரிவித்தார்.

இந்த பிரச்சினையை தெளிவுபடுத்துவதற்கு அப்பாற்பட்டு, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா போட்டியிடுமா என்பது பற்றி “எந்தவித உத்தியோகபூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதில் பன்மடங்கு முகவர்கள் ஈடுபடுவர், அதுவரை ஒரு முடிவையும் எடுக்க முடியாது, “ஆனால், இறுதியாக ஜனாதிபதி இது குறித்து நிச்சயமாக பரிசீலிப்பார் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் கூறினார்.

சில நிமிடங்களுக்கு பின்னர், சாண்டர்ஸ் இந்த பிரச்சினையை குறைத்துக் காட்டுவதற்கு முனைந்து, “குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா காத்திருக்கிறது” என்று ட்வீட் செய்தார். யதார்த்தத்தில், ஹேலி கருத்து தெரிவிப்பதற்கு முன்னர், அமெரிக்கா போட்டியிடாது என எவரும் கூறாத நிலையில், நிச்சயமாக எழுப்பப்பட்ட கேள்விக்கான கடினமான பதிலிறுப்பாகவே சாண்டர்ஸின் ட்வீட் உள்ளது.

அவர்களாகவே விடுத்த கருத்துக்களாக இருப்பதால் அவை தீங்கற்றதாக தோன்றக்கூடும். இருப்பினும், வட கொரியாவிற்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் வகையிலான அச்சுறுத்தல்களால் கொரிய தீபகற்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள தீவிர பதட்டங்களுக்கு மத்தியில், வெள்ளை மாளிகையில் போர் குறித்து தினமும் விவாதிக்கப்பட்டு வருகின்ற ஒரு கொதிப்பான சூழல் நிலவுவதை இந்த கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்காவை சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு அணுசக்தி ஏவுகணையை வட கொரியா கட்டமைப்பதை அவர் அனுமதிக்க மாட்டார் என்று ட்ரம்ப் மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளார். ஆனபோதிலும், அந்தளவிலான தொலைதூர மட்டத்திற்கு சென்று தாக்கும் சாத்தியமுள்ள தொலைதூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத்தான் தற்போது பியோங்யாங் சோதித்துள்ளது.

வட கொரியாவின் வரையறுக்கப்பட்ட அணுசக்தி ஆயுதங்களின் நிலைத்தன்மை பற்றி இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் கூட, இதிலிருந்து பின்வாங்குவது என்பது அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கும், உலகின் முன்னிலையில் அமெரிக்க தரத்திற்கும் சேதம் விளைவிக்குமோ என்றெண்ணி ட்ரம்ப் இந்த சூழ்நிலைகளை உருவாக்கி கொண்டுள்ளார்.

செவ்வாய் அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் பான் கி-மூன் இன் உரையாசிரியர் மார்க் செடன் Guardian இல் எழுதிய ஒரு கட்டுரைக்கு, “வட கொரியா மீதான அமெரிக்க தாக்குதலை தவிர்க்க வெறும் மூன்று மாத கால அவகாசம் மட்டும் தான் எங்களுக்கு இருக்கிறதா?” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

வட கொரியாவினால் கடந்த வாரம் நடத்தப்பட்ட மிக சமீபத்திய ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) சோதனையைத் தொடர்ந்து, “பேரழிவுகர விளைவுகளுடன் விரைவாக பரவக்கூடிய வட கொரியா மீதான ஒரு சாத்தியமுள்ள பேரழிவுகரமான போருக்கான முழக்கம் உரக்க வளர்ந்துள்ளது” குறித்து செடன் எச்சரித்தார்.

ஐ.நா வுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் ஜோன் போல்டன் கடந்த வாரம் பிரிட்டனுக்கு விஜயம் செய்ததை ஒரு கட்டுரை குறிப்பிட்டு, “வட கொரியாவின் ICBM திட்டத்தை நிறுத்துவதற்கு அவர் கொண்டுள்ள “மூன்று-மாத கால அவகாசத்திற்குள்” செயலாற்ற வேண்டியிருப்பதாக டொனால்ட் ட்ரம்பிடம் மத்திய உளவுத்துறை தலைவர்கள் (CIA chiefs) தெரிவித்ததாக அவர் கூறியதன் நோக்கம் உத்தியோகபூர்வமானதா இல்லையா” என்று கேள்வி எழுப்புகின்றது.

“வெளிப்படையான இந்த மார்ச் மாத காலக்கெடு என்பது ஒரு முன்முடிவு செய்யப்பட்ட தாக்குதலை குறிப்பதாக மட்டுமே இருப்பதாக, தென் பகுதியிலிருந்து வட பகுதியை பிரிக்கும் கொரியாவின் படைகளகற்றப்பட்ட பகுதியான பன்முஞ்சோமில் சில நாட்களுக்கு முன்பு ஒரு மூத்த அமெரிக்க தளபதி ஒரு முன்னாள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரிவித்ததை அது குறிப்பிடுகின்றது” என்று செடன் தொடர்ந்து தெரிவித்தார்.

கடந்த வாரம் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, “போர் நிகழ்ந்தால், தவறேதுமின்றி, வட கொரிய ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும்” என்று எச்சரிக்கை விடுப்பதன் மூலம் வட கொரியாவின் ICBM சோதிப்புக்கு பதிலிறுத்தார். இத்தகைய அச்சுறுத்தல், வட கொரியாவின் இராணுவம், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சமநிலைப்படுத்துவதில் ஈடுபடவும், மேலும் வழமையான ஆயுதங்களையோ அல்லது அணுவாயுதங்களையோ அல்லது இரண்டையும் பிரயோகித்து மில்லியன் கணக்கான மக்களை கொன்று குவிக்கும் ஒரு கொடூரமான குற்றத்திற்கு அமெரிக்கா தயாரிப்பு செய்து வருவதை மட்டுமே அர்த்தப்படுத்துகின்றது.

அமெரிக்க இராணுவம், கிட்டத்தட்ட 230 போர் விமானங்கள் மற்றும் 12,000 இராணுவ சிப்பாய்களையும் ஈடுபடுத்தி தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் மற்றுமொரு முக்கிய கூட்டு போர் பயிற்சிகளை தற்போது தான் நடத்தி முடித்துள்ளது. மின்னல் வேகத்தில் தாக்கும் அமெரிக்க போர்விமானங்கள், F-22 ரக வேட்டையாடும் விமானங்கள், அத்துடன் F-35 போன்ற ஏனைய உயர்தொழில்நுட்ப விமானங்கள் ஆகியவை உள்ளிட்ட சமீபத்திய அமெரிக்க இராணுவ பிரசன்னம், வட கொரியாவிற்கு எதிரான ஒட்டுமொத்த போருக்கான ஒரு ஒத்திகை தான் என்பதாக இந்த போர் பயிற்சிகளின் நோக்கத்தை அடிக்கோடிட்டுக்காட்டுகின்றது.

பெரிய வகையிலான இந்தப் பயிற்சியில், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் B-1B சூப்பர்சோனிக் மூலோபாய குண்டுவீச்சு விமானங்களையும் இடம்பெறச் செய்தது. குவாமில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து தென் கொரியாவில் நடைபெறும் குண்டுவீச்சு ஒத்திகையில் இடம்பெறுவதற்கு 30 டன்களுக்கும் மேற்பட்ட கனமான பொருளை சுமந்து செல்லக்கூடிய இரண்டு B-1B ரக போர் விமானங்கள் பறந்து சென்றன. ஜப்பானிய மற்றும் தென் கொரிய ஜெட் போர் விமானங்களும் இந்த பயிற்சிகளில் பங்கேற்றுள்ளன.

வியாழனன்று வியன்னாவில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன் உடனான ஒரு சந்திப்பின் போது, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், அமெரிக்க இராணுவ பயிற்சிகள் கொரிய தீபகற்பத்தின் மீதான பதட்டங்களை அதிகரித்து வந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் குறித்த எந்தவொரு நகர்வையும் வலுவிழக்கச் செய்ததாகவும் எச்சரித்தார். பாதுகாப்புக்கான உத்திரவாதங்களை அமெரிக்கா வழங்கியிருக்கும் பட்சத்தில் வாஷிங்டன் உடனான நேரடி பேச்சுவார்த்தைக்கு பியோங்யாங் தயாராக இருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனையை ரஷ்ய கண்டனம் செய்துள்ளது, என்றாலும் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் அமெரிக்காவை குற்றம்சாட்டியது என்று லாவ்ரோவ் குறிப்பிட்டார், மேலும் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை எடுக்க பியோங்யாங்கை தூண்டுவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் விரும்பியதாகவும் அவர் கூறினார். செப்டம்பரில் வட கொரியா நடத்திய அணுவாயுத சோதனையைத் தொடர்ந்து, “ஒரு புதிய அபாயகரமான துணிகர முயற்சிகளை எடுக்க அவர்களை (பியோங்யாங்) தூண்டிவிட விரும்பிய வகையில் அமெரிக்கா செயல்பட்டது. அதனால் அவர்களும் அதன்படி செய்தனர்” என்று அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க, வட கொரியா ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகளை நிறுத்துமானால், அதற்கு பதிலாக அமெரிக்க-தென் கொரிய போர் பயிற்சிகள் நிறுத்தப்படும் என்பதான, நிறுத்தினால்-நிறுத்தப்படும் (freeze-for-freeze) என்றழைக்கப்படும் உடன்பாட்டிற்கு ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளும் வலியுறுத்தின. எனினும், வாஷிங்டன் இந்த முன்மொழிவை மீண்டும் மீண்டும் நிராகரித்துவிட்டது. பதட்டங்களை குறைப்பதற்கு மாறாக, தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் சாங் யங்-மூ இந்த வாரம், இந்த கூட்டு பயிற்சிகள் “மாதத்திற்கு இரண்டு மூன்று முறை” நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஒப்பீட்டளவில் ஒரு மிகச்சிறிய சம்பவமோ அல்லது தவறான கணிப்போ கூட, கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் மற்றும் ஏனைய சக்திகளையும் உள்ளிழுக்கும் ஒரு மோதலை தூண்டக்கூடிய வகையில் கொரிய தீபகற்பத்தின் மீதான ஒரு மாபெரும் அழுத்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளது. சீனா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கூட, அவர்களது நுழைவாயில்களில் ஒரு பேரழிவுகரமான போரை அமெரிக்கா தூண்டும் என்ற ஆழ்ந்த கவலையில் உள்ளன.

தென் கொரியாவில் நடைபெற்று வரும் கூட்டு அமெரிக்க பயிற்சிகளுக்கு மத்தியில், சீன கடற்படையும் விமானப்படையும் அவற்றின் சொந்த இராணுவ பயிற்சிகளை நடத்தி வருகின்றன. திங்களன்று, விமானப்படை செய்தித் தொடர்பாளர் சென் ஜிங்கே, “முன்னர் ஒருபோதும் விமானங்கள் பறந்து செல்லாத வழிகளையும் பகுதிகளையும்” பயன்படுத்தி கொரிய தீபகற்பத்திற்கு அருகே மஞ்சள் மற்றும் கிழக்கு சீன கடல்களின் மீது சமீபத்தில் சீன விமானப்படை பயிற்சிகளை நடத்தியதாக அறிவித்தார்.

வியாழக்கிழமை அன்று கிழக்கு சீன கடற்பகுதியில் நடைபெற்ற ஒரு முக்கிய பயிற்சியில் சீன கடற்படையில் இருந்து 40 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் பங்கேற்றதாக South China Morning Post செய்தித்தாள் தெரிவித்தது. சீனாவின் வட கடல், கிழக்கு கடல் மற்றும் தென் கடல் கடற்படைகளைச் சேர்ந்த போர்க்கப்பல்கள், “அனைத்து காலநிலை சூழ்நிலைகளிலும்” கடற்படையின் வளர்ந்து வரும் ஏவுகணை எதிர்ப்பு மற்றும் அவசரகால பதிலடி கொடுக்கும் திறன்களை நிரூபித்துக் காட்டின.