Print Version|Feedback
வடக்கில் மாவீரர் தினம்: திவாலாகிப் போன தமிழ் தேசியவாதத்திற்கு புத்தூயிரூட்ட முயற்சி
Subash Somachandran and Saman Gunadasa
17 December 2017
வட இலங்கையில் நவம்பர் 27 அன்று பல பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் “மாவீரர் தின” கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டனர்.
மாவீரர் தினம் என்பது, இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால், மோதலின் போது இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலைப் புலி போராளிகளை நினைவுகூருவதற்காக பிரகடனப்படுத்தப்பட்ட நாள் ஆகும்.
பிரபாகரன் அவரது காலத்தில், புலிகளின் பிரிவினைவாத பிரச்சாரத்தினை ஊக்குவிப்பதற்காக சர்வதேச சக்திகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு விண்ணப்பிப்பதற்காக இந்த நாளினைப் பயன்படுத்திக் கொண்டார். 2009 மே மாத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஆதரவுடன், அரசாங்கப்படைகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த வருடாந்த நிகழ்வு குறைந்திருந்தது.
நவர்பர் 27 அன்று கோப்பாய், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களில் இருந்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மோதலின் போது கொல்லப்பட்ட புலி போராளிகளின் மயானத்தில் ஒன்று கூடினார்கள்.
சாதாரண மக்கள் யுத்தத்தினால் கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவதற்காக மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை, மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்பதியையும் வெளிப்படுத்தினார்கள். இதற்கு நேர் மாறாக, இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள், திவாலாகிப்போன தமிழ் தேசியவாத்தினை ஊக்குவிப்பதற்கு அவற்றை சுரண்டிக்கொண்டனர்.
அரசாங்கம், மக்களை அச்சுறுத்துவதற்காக பொலிசாரின் விடுமுறைகளை இரத்துச் செய்து, இராணுவத்தினையும் தயார் நிலையில் வைத்திருந்தது. குறிப்பாக கோப்பாயில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்புக்கு இறக்கப்பட்டிருந்தனர். அவர்கள், நிகழ்வில் பங்குபற்றியவர்களை வீடியோ மற்றும் நிழற்படங்களை எடுத்தனர்.
2015 ஜனாதிபதித் தேர்தலில், சிறிசேன, இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொடூர ஒடுக்குமுறைகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டு “நல்லிணக்கம்” போன்ற வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கியது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தகால நீண்ட யுத்தத்தின் போது அழிக்கப்பட்ட சமூக மற்றும் வாழ்கை நிலமைகளை மேம்படுத்துவதாகவும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருவதாகவும் கூட அது வாக்குறுதியளித்தது. சிறிசேனவின் இந்த உறுதிமொழிகள் பாசாங்குத்தனமானவையாகும். அவர் ராஜபக்ஷ உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சராக இருந்தபோது, இந்த ஒடுக்குமுறைகளுக்கு பொறுப்பாளியாகும்.
உண்மையில், இந்தியாவின் உதவியுடன் கொழும்பில் அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையை மூடிமறைக்கும் நோக்கத்துடன், இந்த வாக்குறுதிகள் நாட்டின் பல பாகங்களிலும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்த ஆட்சி மாற்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவி இறக்கப்பட்டு மைத்ரிபால சிறிசேன அதிகாரத்தில் நியமிக்கப்பட்டார். இந்த சக்திகள் ராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சியை எதிர்க்கவில்லை. மாறாக அவை சீனாவுடன் அவர் கொண்டிருந்த உறவுகளை எதிர்த்தன. தமிழ் கூட்டமைப்பு, அமெரிக்க நடவடிக்கையை ஆதரித்ததன் மூலம் அதன் சீனாவுக்கு எதிரான இராணுவ நகர்வுகள் மற்றும் பூகோள அரசியல் நடவடிக்கைகளின் பின்னால் அணிதிரண்டுள்ளது.
எவ்வாறாயினும், சிறிசேன ஜனாதிபதியாக வந்து மூன்று வருடங்கள் கடந்த பின்னும் வடக்கு மற்றும் கிழக்கில் நிழல் இராணுவ நிர்வாகமாக இராணுவ ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன மற்றும் யுத்தகாலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் இன்னமும் மீளக் கையளிக்கப்படவில்லை. வாஷிங்டன் மற்றும் ஏனைய வல்லரசுகளின் ஆதரவுடன், இலங்கை அரசாங்கத்தினால் யுத்தக் குற்ற விசாரணைகளை நசுக்குவதற்கு முடிந்துள்ளது.
தங்கள் வீடுகளை இழந்த ஆயிரக் கணக்கானவர்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்ற தற்காலிக குடிசைகளில் வாழந்து வருகின்றனர். “புலிகள் மீண்டும் மீளெழுகின்றார்கள்” என்னும் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டு, தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஒரு வருட காலத்தில் 4 தமிழ் இளைஞர்கள் பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் சிறைகளில் வாடுகின்றனர்.
மக்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலமைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் கிடையாது. இந்த நிலமைகளின் உச்ச கட்டமாக, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் அடிப்படையில், அரசாங்கத்தினால் நாடு பூராவும் திணிக்கப்படும் சிக்கன திட்டத்தின் சுமைகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் தமிழ் கூட்டமைப்பும் நேரடி பொறுப்பாளியாகும்.
தமிழ் கூட்டமைப்பின் ஒரு தலைவரான வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நினைவுநாளில் ஊடகங்களுக்கு வஞ்சத்தனமான கருத்துக்களை தெரிவித்தார். “தமிழ் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்காக அரசாங்கத்தின் பற்றாக்குறையான தீர்வுகளுடன் சென்று கொண்டிருப்பதனால், விடுதலை வீரர்களின் நினைவுகளைக் கொண்டாடுவதன் மூலம் தங்களின் மன நிலையை திருப்திப்படுத்திக் கொள்கின்றார்கள்," என அவர் கூறினார். அதே மூச்சில் அவர், மக்கள் துயிலும் இல்லங்களில் ஒன்று கூடினார்கள், ஆயினும் ஒரு சில அச்சுறுத்தல்களே இருந்தன, எனக் கூறி அரசாங்கத்தையும் நியாயப்படுத்தினார்.
மக்கள் மத்தியில் அமைதியின்மை அதிகரித்து வருகின்ற நிலைமையில், கூட்டமைப்பின் பங்காளியான டெலோ, கஜந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் இன்னும் பல சிவில் சமூக அமைப்புகளுடன் சேர்ந்து, விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்றை ஸ்தாபித்தார். வடக்கு மற்றும் கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளும் முற்றிலும் அவப்பேறு பெற்றுள்ளதால், மக்களின் எதிர்ப்பை தமிழ் தேசியவாதத்துக்குள் இறுக்கி வைத்திருக்கும் இன்னொரு அமைப்பே தமிழ் மக்கள் பேரவையாகும்.
தமிழ் ஊடகங்கள் பிரபாகரனையும் புலி போராளிகளையும் பாராட்டி பல கட்டுரைகளை தாங்கி வந்தன. அவை வேண்டுமென்றே தீவிரமாகிவரும் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தமிழ் தேசியவாதத்துக்குள் திருப்பிவிட எதிர்பார்க்கின்றன.
இந்தப் பிரச்சாரத்தின் போது டெலோவின் தலைவர் எம.கே. சிவாஜிலிங்கம் மிகவும் உக்கிரமாக இருந்தார். பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையில் ஒரு நிகழ்வை நடத்திய அவர், " ‘தமிழர்களைக் காப்போம் தமிழ் தாயகத்தை மீட்போம்’ என்ற கோரிக்கைகளுடன் போராடி உயிரிழந்த அந்த மாவீரர்களுக்கு நாம் தலைவணங்குகிறோம்" என்றார். "தமிழ் தேசியவாதம் மற்றும் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வே தமிழ் மக்களுக்கு தேவை" என அவர் மேலும் கூறினார்.
இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் வங்குரோத்தானதாகவும் பிற்போக்கானதாகவும் நிரூபிக்கப்பட்ட ஒரு ‘தீர்வையே’ சிவாஜிலிங்கம் மீண்டும் முன்வைக்கின்றார். அரசாங்கத்துக்கு நேரடியாக ஆதரவு கொடுப்பதனால் தமிழ் கூட்டமைப்பு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மதிப்பிழந்து வரும் நிலைமையில் சிவாஜிலிங்கம், கஜேந்திர குமார் பொன்னம்பலம், சில கல்வியாளர்கள் மற்றும் மாணவர் தலைவர்களும் வங்குரோத்தான தமிழ் தேசியவாதத்தை தூக்கிப் பிடிக்க ஏக்கத்துடன் முயற்சிக்கின்றனர். தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் தலைவர்களைப் போல், இவர்களும் இன வேறுபாடுகளைக் கடந்து தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுவதற்கான புற நிலைமைகள் அபிவிருத்தியடைவதையிட்டு பீதியடைந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையிலேயே, கொழும்பில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும் இராஜபக்ஷ தலைமையிலான எதிர்க் கன்னையும் மற்றும் பௌத்த உயர் பீடத்தினரும் சிங்கள-பௌத்த பேரினவாதத்தை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். அரசாங்கம் பொலிஸ்-அரச வழிமுறைகளை முன்னிலைப்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற அதே வேளை, இராஜபக்ஷ குழுவானது தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்காக பேரினவாதத்தை கிளறிவிட்டு அதிகாரத்திற்கு வருவதற்காக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றது.
"தாய் நாட்டை மீட்டல்" மற்றும் சுயநிர்ணய உரிமை என்ற இனவாத பிரச்சாரங்களை கிளறிவிடுவதானது கொழும்பு ஆளும் வர்க்கத்தின் இனவாத பாரபட்சங்கள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்பார்க்க வேண்டிய "தீர்வுக்கு" நேர் எதிரானதாகும். அவ்வாறு செய்வதன் மூலம், புலிகளின் பிரிவினைவாத பிரச்சாரத்தின் தோல்வியில் இருந்து தொழிலாளர்களும் இளைஞர்களும் படிப்பினைகளைப் பெறுவதில் இருந்து அவர்களைத் தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியை அடுத்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வெளியீடான உலக சோசலிச வலைத் தளம் (WSWS), எழுதியதாவது: "தமிழ் மக்களின் பயங்கரமான துன்பம் மற்றும் புலி போராளிகளின் கொடூரமான தலைவிதி பற்றிய அனுதாபத்தில், பெறவேண்டிய அடிப்படைப் படிப்பினைகளை தவிர்த்துவிடக் கூடாது.
"அரசாங்க ஆதரவிலான தமிழர் விரோத பாரபட்சங்களுக்கான பதில், இலங்கை என்ற சிறிய தீவின் ஒரு பகுதியில் தமிழ் சிறுபான்மையினருக்கு இனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனியான அரசை உருவாக்கிக்கொள்வதே, என்ற எந்தவொரு முற்போக்கான பொருளாதார அல்லது அரசியல் பகுத்தறிவும் அற்ற ஒரு முன்நோக்கின் விளைவே புலிகளின் தோல்வியானது ஆகும்." (இலங்கை: புலிகளின் தோல்வியும் தேசியவாதத்தின் முட்டுச் சந்தும் -21 மே 2009, wsws.org)
உலக சோசலிச வலைத் தளம் மேலும் கூறியதாவது: "இந்த (பிரிவினைவாத) இயக்கமானது, சிங்கள தொழிலாளர்களுக்கு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அறைகூவலை விடுப்பதற்கோ அல்லது தமிழர்-விரோத பேரினவாதத்தை கிளறிவிடுவதற்கான சிங்கள முதலாளித்துவத்தின் இடைவிடாத முயற்சிகளை எதிர்ப்பதற்கோ முற்றிலும் இலாயக்கற்றது." அதன் பிரிவினைவாத கொள்கையின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்பு, இனவாத பாரபட்சங்கள் மற்றும் யுத்தத்துக்கு எதிராக தெற்கில், இந்தியாவில் அல்லது சர்வதேச ரீதியில் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு கூட அழைப்பு விடுக்கவில்லை. மாறாக அது, இந்திய ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளில் தங்கியிருந்தது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும் அதன் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியாலும் (சோ.ச.க.) மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தாலும் அபிவிருத்தி செய்யப்பட்ட முன்னோக்கு மட்டுமே பொருத்தமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிரான இனப் பாகுபாடுகளையும் போரையும் எதிர்க்கும் சோ.ச.க. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை துருப்புக்கள் நிபந்தனையின்றி வெளியேற வேண்டும் எனக் கோருகின்றது. தேசியவாத பிரிவினைவாத வேலைத் திட்டமானது தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களை சுரண்டுவதற்காக தனியான ஒரு அரசை ஸ்தாபித்துக்கொள்ளும் நோக்கத்தைக் கொண்ட ஒரு முதலாளித்துவ வேலைத்திட்டம் என்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது. சோ.ச.க. தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தை அதன் பொது எதிரியான முதலாளித்துவத்துக்கு எதிராகப் போராடுவதற்காக ஐக்கியப்படுத்துவதற்கும், உலகம் முழுதும் மற்றும் தெற்காசியாவிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்காகவும் போராடுகின்றது.
புலிகளின் தோல்வியின் பின்னரான காலகட்டம், இன வேறுபாடுகளுக்கு குறுக்காக தொழிலாள வர்க்கத்துக்கு உள்ள ஒரே தீர்வு இந்த வேலைத் திட்டம் மட்டுமே என்பதையும் அதற்காகப் போராட வேண்டிய அவசியத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. கொழும்பு ஆளும் கும்பல் அமெரிக்க யுத்த திட்டங்களையும் சர்வதேச நிதி மூலதனத்தையும் ஒருங்கிணைத்துக்கொண்டு இன்னும் வலது பக்கம் நகர்ந்துள்ளது. தமிழ் முதலாளித்துவம் தனது சொந்த நலன்களுடன் இதே பாதையைப் பின்பற்றுகின்றது.
நாம் சோசலிச முன்நோக்குக்காகப் போராடுவதற்காக சோ.ச.க. மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.